இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது - தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு - www.bookday.in

இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது – தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு

இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது – தனிகா சர்க்கார்
| நேர்காணல்: அபிஷ் கே.போஸ்
| தமிழில்:மோசஸ் பிரபு

வரலாற்றாசிரியர் தனிகா சர்க்கார் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தின் விரிவாக்கம், அதன் சித்தாந்தம் மற்றும் இந்திய சமூகத்தில் அதன் தாக்கம் குறித்து ஒரு விமர்சன கண்ணோட்டத்தை முன்வைத்துள்ளார். தனிகா சர்க்கார் ஹரியானாவின் சோனேபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றுகிறார். ஏற்கனவே புது தில்லியில் உள்ள ஜே.என்.யுவில் நவீன வரலாற்று பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிகாகோ, யேல், கோட்டிங்கன் மற்றும் விட்வாட்டர் சாண்ட் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சர்க்கார் ஆறு விரிவான ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார் மற்றும் அரசியல் மற்றும் மத தேசியவாதம், சாதி, நகர்ப்புற வரலாறு மற்றும் நவீன காலத்தில் பாலினம் குறித்த ஏழு தொகுதிகள் கொண்ட புத்தகங்கள் தயாரிப்பு பணியில் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

கேள்வி-1: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்திய நிலப்பரப்பில் நிலவிய மதச்சார்பற்ற வரலாற்றை இருட்டடிப்பு செய்து எவ்வாறு இந்துத்துவா சித்தாந்தின் கீழ் மக்களைக் கவர்ந்திழுக்க முடிந்தது ?

ஆர்.எஸ்.எஸ் 1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஆண்டிலிருந்து 100 ஆண்டுகளாக களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அதற்கு முன்பு, இந்து மகாசபை உள்ளிட்ட ஒத்த சிந்தாந்த எண்ணம் கொண்ட பிற அமைப்புகளும் இணைந்து இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே உகந்த ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து செயல்பட்டு வந்த நிலையில் இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயலபட துவங்கியது. முஸ்லிம்கள் அனைவரும் நமது இந்திய நாட்டை படையெடுப்பின் மூலமாக வென்று நம்மை ஒடுக்கியவர்கள் என்றும் அவர்களின் வழித்தோன்றல்களாகிய முஸ்லிம்கள் தான் நாட்டின் பிரிவினைக்கு காரணமானவர்கள் எனவும் பிரச்சாரம் செய்தது முஸ்லிம்கள் அனைவருமே பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர்கள், சர்வதேச பயங்கரவாத சக்திகளால் ஆதரிக்கப்படுகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்தனர். மேலும் அனைத்து முஸ்லிம்களும் இந்து பெண்களைக் கடத்திச் செல்லவும் அல்லது கவர்ந்திழுக்கவும் முயற்சி செய்கிறார்கள் என்றும் தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்து மதமும் இந்திய தேசியமும் ஒன்றே. என கூறுகின்றனர், முஸ்லிகளுக்கு எதிரான பிரச்சாரம் நிறைய கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு பரப்பப்பட்டவை, சில பொய்கள் முஸ்லிம்களின் காலனித்துவ சூழலிருந்தும், சில வதந்திகள் தவறான தகவல்களிலிருந்தும், வகுப்புவாத புராணக்கதைகளிலிருந்தும் (எடுத்துக்காட்டாக பத்மினி-அலாவுதீன் கில்ஜி புராணக்கதை). பரப்பப்படுகின்றன, எனவே, அவர்கள் இவ்வாறு பிரச்சாரம் செய்வது புதிதல்ல, அவர்களின் பொய் பிரச்சாரம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நம் மன்னில் விதைக்கப்படுகிறது. மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் கூட இந்த கட்டுக்கதை சிலவற்றை அவ்வப்போது பரப்பியுள்ளனர். தற்போது அவர்கள் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்தில் கூடுதலாக மூன்று புதிய விஷயங்களை இணைத்துள்ளனர்.

ஒன்று சாவர்க்கரின் வெறுப்பு நிறைந்த எழுத்துகளை பரவலாக்கியது. ஆங்கிலம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் நிறைய எழுதிய சாவர்க்கர், ஒரு தேர்ந்த சொல்லாட்சியாளர், ஒரு தேசியவாத அடையாளமாக பரவலாக புகழ் பெற்றவர். அவரது மொழி வெகு மக்களை கவர்ந்தது, மக்களின் மனதில் வகுப்புவாத கருத்துக்களை அழிக்க முடியாத அளவிற்கு ஆழமாக விதைத்தது.

இரண்டாவதாக, சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் அவர்கள் செய்த தொடர்ச்சியா வேலைகள். போர் மற்றும் கருத்தியல் பயிற்சிக்காக தினசரி ஷாகாக்களை பல இடங்களில் தொடங்கி மாணவர்களின் தனித்திறமையை வளர்த்தனர், மேலும் அந்த ஷாக்காக்கள் தடைசெய்யப்பட்ட பிறகு, அவர்கள் பள்ளிக்கூடங்களை தொடங்கினர். மெதுவாக, தொடர் கடின முயற்சியின் மூலம், மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்கங்கள், பொழுதுபோக்கு தளங்கள், சமூக ஊடகங்கள், நலத்திட்டங்கள், மத அமைப்புகள், மகளிர் குழுக்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோரை உள்ளடக்கிய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் அவர்களின் சித்தாந்த அடிப்படையிலான பணிகள் பரவத் தொடங்கின. வலுவாக அமைப்பு கட்டுமானத்தை, உருவாக்குதல், தொண்டு பணிகளைச் செய்தல், ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்தல் போன்ற ஒரு மகத்தான ஊழியர் தளத்தை அவர்கள் வளர்த்துக் கொண்டே வந்தனர். அவர்களின் அயராத உழைப்பு பல சமூகப் பிரிவுகளில் அவர்களுக்கு நல்ல விளைவுகளை கொடுத்துள்ளது, இப்போது எந்த அரசியல் கட்சியும் ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் பலத்துடனும் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள வெகுமக்கள் ஆதரவு தளத்துடனும் போட்டியிட முடியாது. அவர்களின் நேரடி அரசியல் கட்சியான பாஜக ஒருவேளை வரும் தேர்தலில் தோல்வியடைந்தாலும், ஆர்.எஸ்.எஸ் முன்பிருந்ததைப் போலவே தொடர்ந்து தனது பணிகளை எந்த இடையூறுமின்றி மேற்கொள்ளும்.

மூன்றாவதாக, அவர்களின் நிர்வாகத் திறன். ஹெட்கேவார் தனது புத்தம் புதிய ஷாகாக்களுக்கு இளம் குழந்தைகளை எவ்வாறு ஈர்ப்பது என்பது குறித்து சில வழிமுறைகளை நடைமுறைப்படுத்தினார். உடற்பயிற்சி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுப்பது, புராணக் கதைகளை எளிமையான முறையில் சொல்வது, மற்றும் விளையாட்டுகளுடன் போர்ப் பயிற்சி, கருத்தியல் பாடங்களை திணிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். இதன் மூலம் ஷாகா உறுப்பினர்களிடையே ஒரு சமூக உணர்வை உருவாக்கினார்கள். ஆர்.எஸ்.எஸ் குடும்பத்தில் உள்ள அனைவரையும் முறையான உறுப்பினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்துத்துவத்திற்காக ஏதாவது ஒரு வகையில் செயல்பட வைப்பதில் கோல்வால்கர் குறிப்பாக திறமையானவர். அவர்கள் அடுக்கடுக்கான நிர்வாக கட்டமைப்பைக் கொண்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அதன் முக்கிய வெகுமக்கள் முன்னணிகளான பிஜேபி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு சித்தாந்த பயிற்சி அவ்வபோது அளிக்கப்படும். ஒவ்வொருவரும் அதன் துணை இணைப்பு கிளைகளை உருவாக்குவார்கள். இவ்வாறாக, பல அமைப்புகளிடையே தனித்தனியாக பொறுப்புகளை ஒப்படைத்து தனது பணிகளை மேற்கொள்கிறது இந்த வகையில் ஆர்.எஸ்.எஸ் ஒட்டுமொத்த சமூகத்திற்குள் ஆழமாக ஊடுறுவியுள்ளது

கேள்வி-2: இந்துத்துவா கருத்தியல் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, மாறிவரும் இந்தியாவில் தன்னை தகவமைத்துக்கொள்ள போராடுகிறது என கல்வியாளர் அஜய் குடவர்த்தியின் மதிப்பீட்டுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா..? அல்லது இது ஒருவிதமான வியூகமா..?

அது வீழ்ச்சியடைந்து வருகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் முன்பே கூறியது போல, பா.ஜ.க.வின் தேர்தல் தோல்வி ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவிதியை தீர்மானிக்காது. ஷாக்காக்கள் குறைந்து கொண்டே செல்கின்றன என்றால், பழங்குடியினர் மத்தியிலும் பள்ளிகள் வழியாகவும் அவர்களின் பணி முன்பிருந்ததைப் போலவே தொடரும். அவர்கள் தொடர்ந்து புதிய புதிய வெகுமக்கள் தளங்களை உருவாக்கி வருகின்றனர். அவர்களின் வேலை அமைதியாக நடைபெறும், பெரும்பாலான பொதுமக்களின் நேரடி பார்வைக்கு அப்பாற்பட்டு நடக்கும், அதன் வரம்பை அளவிட முடியாது. அவர்கள் மிகவும் திடமான மற்றும் லாபகரமான வகையில் சர்வதேச அளவிலான தங்களது இருப்பை வலுவாக அமைத்துக்கொண்டுள்ளனர்.

இந்திய சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆழமாக பரவியுள்ளது - தனிகா சர்க்கார் | நேர்காணல்: அபிஷ் கே.போஸ் | தமிழில்:மோசஸ் பிரபு - www.bookday.in
மே 18, 2014 அன்று புது தில்லியில் நடந்த ஒரு ஷாகாவில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள்.

கேள்வி-3: இத்தாலிய அறிஞர் மார்சியா கசோலாரியின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிற பாசிச இயக்கங்கள் அல்லது வெளிநாட்டு தேசியவாத சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது என்ற கூற்றுகளை நீங்கள் உறுதிப்படுத்த முடியுமா?

அவர்கள் இந்தியாவுக்கு வெளியே பல தீவிர வலதுசாரி கட்சிகளுடன் நெருக்கமாக வேலை செய்து வருகின்றனர். சர்வாதிகாரிகளும் வலதுசாரி சித்தாந்தவாதிகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அவர்கள் நிச்சயமாக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர், அவர்களிடமிருந்து நுட்பங்களை கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் 1930கள் மற்றும் 1940களிலிருந்து நாஜி மற்றும் பாசிசவாதிகளின் சில தந்திரங்களையும் அவர்களின் கருத்துக்களையும் பின்பற்றினர், இப்போது அவர்கள் இஸ்ரேலிய வலதுசாரிகளிடம் இருந்து கற்றுக்கொள்கின்றனர்.

கேள்வி-4: ஷ்யாம பிரசாத முகர்ஜியை தனது அமைச்சரவையில் சேர்த்ததன் மூலம், ஜவஹர்லால் நேரு புதிய வலதுசாரி இயக்கத்திற்கு அதிகாரம் அளித்தாரா, ஜனசங்கத்தின் எழுச்சிக்கும் அதன் பின்னர் பிஜேபியின் மாற்றத்திற்கும் ஒரு வளமான தளத்தை அவரை அறியாமாலேயே உருவாக்கினாரா?

பல இந்து தேசியவாதிகளை முக்கிய பதவிகளில் தக்க வைத்ததன் மூலம் வகுப்புவாத மனப்பான்மையை வளர்ப்பதில் காங்கிரஸ் அரசின் பொறுப்பு என்ன என்பதுதானே உங்கள் கேள்வி…? ஆம், வலதுசாரிகள் நேருவின் அமைச்சரவையில் ஒரு பகுதியாக இருந்தனர். நமது நாடு பரவலான வைதீக மற்றும் வகுப்புவாத சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு நாடு, அது மிகப் பெரிய அளவில் மக்களின் பொது புத்தியாக மாறிவிட்டது. இவர்களில் பலர் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியவர்கள். காங்கிரசில் இருந்த தாராளவாத சக்திகளைப் போலவே தவிர்க்க முடியாத சக்தியாக வலதுசாரிகளும் இருந்தனர். நேரு அவர்களை ஒதுக்கி வைத்திருக்க முடியாது, ஏனெனில் அவர் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசிய அரசாங்கத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது அது பலவிதமான அரசியல் கருத்துக்களை உள்ளடக்கிய முறையில் அமைய வேண்டிய ஒரு நிர்பந்தத்தில் இருந்தது. அந்த சூழ்நிலையில் அவருக்கு வேறு வழி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கலாச்சார மற்றும் அரசியல், கல்வித் துறையில், குறிப்பாக அடிமட்டத்தில் இந்த அரசாங்கம் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தது. இது மக்களின் சிந்தனையில் நீண்டகால மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கலாம். மதச்சார்பின்மை மற்றும் பன்மைத்துவம் பற்றி அவரே நன்றாக எழுதினார், ஆனால் அதை ஒருபோதும் வெகு மக்கள் மட்டத்தில் பயன்படுத்தவில்லை.

கேள்வி-5: ஆர்.எஸ்.எஸ் மர்மமான முகமூடியின் பின்னணியில் என்ன இருக்கிறது..? இந்தியாவின் கலாச்சார மற்றும் அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழிக்க முடியாத முத்திரையைப் பதிக்கும் ஒரு ஆழமான சமூக மாற்றத்தை ஒழுங்கமைக்க வேண்டிய வேலை திட்டம் இருப்பதால், இரகசியமான திட்டமிட்ட அணுகுமுறைகளை அதன் நடைமுறை உத்தியாக கையாள்கிறதா..?

ஆர்.எஸ்.எஸ் எப்போதுமே தனது சொற்பொழிவை நியாயமான மற்றும் மென்மையான வழியில் தொடங்குகிறது, பின்னர் படிப்படியாக அதன் வெறுப்பு பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் ஊழியர்கள் சிறப்பாக கற்றுக்கொள்ளும் ஒரு சொற்பொழிவு பாணி. இவ்வாறு பல முனைகளில் இயங்குகிறார்கள், எந்தப் பெயர்களில் இயங்குகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வதை அது விரும்பவில்லை, இதனால் அதன் பல நடவடிக்கைகளால் ஏற்படும் பிரச்சனைகளின் போது சாதாரணமாக அவை தன்னுடன் தொடர்புடையவை அல்ல என்று விலகி நின்றுவிடும். “எங்கள் காக்கி உடை மற்றும் காவிக் கொடிகள் (1993) என்ற புத்தகத்தில் இந்த நடைமுறை தந்திரத்தை “சிறிய கால்தடங்கள்” என விளக்கியுள்ளது, இவ்வாறு எல்லா இடங்களிலும் அவர்கள் கவனமாக செயல்படுகின்றனர், ஆனால் அவை பெரிய அளவில் கவனிக்கப்படாத அளவுக்கு உள்ளது.

கேள்வி-6: ராம ஜென்மபூமி இயக்கம் சாதி வேர்களைக் கடந்து நாடு தழுவிய ஆதரவைப் பெறுவதற்கும், அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளை மறைப்பதற்கும் என்ன காரணிகள் உதவியது?

இந்த இயக்கம் பல அடிமட்ட வேலைகளுடன் நடைபெற்றது, குறிப்பாக பழங்குடி மக்களிடையே பரவலான வெற்றி பெற்றது. மேலும், ராம் எல்லா இடங்களிலும், குறிப்பாக வட இந்தியா முழுவதும் பிரபலமான நபர். இந்த இயக்கத்திற்கு முன்னதாக ஓராண்டு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராமாயணத் தொடரும் அதன் பிரபலத்தை கூடுதலாக உருவாக்கியது.

கேள்வி-7: முஸ்லிம்கள் மீதான சங்பரிவாரின் வெறுப்பு, மற்ற குழுக்கள் மீதான அதன் முந்தைய முரண்பாடுகளுடன் ஒப்பிடும்போது ஏன் மிகவும் தீவிரமாகவும் சமரசமற்ற தன்மையுடனும் தோன்றுகிறது, தேர்தல் தேவையின் காரணமாக அவ்வாறு நடைபெறுகிறதா,,?

இந்து ஒற்றுமையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது, இது வர்க்கங்களையும் சாதியினரையும் சமூக நீதியை மறக்கடிக்க செய்யும். பல பாகுபாடு அடுக்குகள் நிரம்பிய சமத்துவமற்ற இந்து சமூகத்தில் ஒரு வெளிப்புற எதிரியை நிறுத்துவதன் மூலம் மட்டுமே அந்த இந்து ஒற்றுமையை அடைய முடியும் என்பதை உணர்ந்து, முஸ்லீம்களுக்கு எதிராக இருப்பதுதான் அனைத்து இந்து சமூகத்தின் நலனுக்கும் உகந்தது என்ற அவர்களின் பிரச்சாரம் எடுபடுகிறது இந்த யோசனையை நீண்ட காலமாக விடாமுயற்சியுடன் விதைத்துள்ளது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதாலும், தேசப்பிரிவினை மற்றும் பாகிஸ்தான் உருவானதன் காரணமாகவும் எளிதான இலக்காக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

கேள்வி-8: ஆர்.எஸ்.எஸ் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய முற்போக்கான கண்ணோட்டத்திற்கு மாறியுள்ளதா?

ஆர்.எஸ்.எஸ் பழமைவாத கருத்துகளை கொண்ட அமைப்பு கிட்டத்தட்ட அதே பழமைவாதம் பரவலாக அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களிடமும் உள்ளது. இதில் முக்கிய வேறுபாடு என்னவெனில் முஸ்லீம் ஆண்களின் இச்சைக்கு இந்து பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பிம்பத்தை வளர்க்க முயற்சிக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக முன்னெடுக்கிறது.

– ✍🏻 நேர்காணல்
அபிஷ் கே.போஸ்
தமிழில்:மோசஸ் பிரபு
ப்ரன்ட்லைன் இதழில் வெளியானது

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ச.லிங்கராசு

    இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அறிந்து கொள்ள
    வேண்டிய விடயத்தை, தமிழாக்கம் செய்து தந்த திரு
    மோசஸ் பிரபுவுக்கு பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *