இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் , மொழிபெயர்த்தவர் கழனியூரான். நெல்லையைச் சேர்ந்த இவர் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்து இருக்கிறார். தலைமை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். கவிதை, கதைகளை எழுதும் இவர் கி.ராவின் வழிகாட்டலில் நாட்டார் கதைகளையும் நம்பிக்கைகளையும் பழமொழிகளையும் மக்களிடம் உறவாடி சேகரித்து தொகுத்துள்ளார்.
நாட்டார் நம்பிக்கைகள் தொடர்பாக முப்பதுக்கும் மேலான நூல்களை வெளியிட்டுள்ளார் அந்த வரிசையில் ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளின் மொழிபெயர்ப்பும் செய்துள்ளார் .இதன் விலை 100 ரூபாய் முதலில் 2005இல் பூங்கொடி பதிப்பகம் பிரசுரம் செய்துள்ளதையடுத்து தற்போது 2017இல் பாரதி புத்தகாலயம் கொண்டு வந்துள்ளது
கதைகள் ஏதாவது ஒருவகையில் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் உலவிக் கொண்டுதானிருக்கின்றன. பெரும்பாலும் கதைகள் வாய்மொழியாக குழந்தைகளுக்கு சொல்லப்படுவதாகே அறிமுகம் செய்யப்படுகின்றன . கதைகள் கேட்டு , கதைகளைத் தாமே உருவாக்கி அல்லது கதைகளை சிந்தித்து வளராத குழந்தைகள் உலகத்தில் இருப்பது அரிது என்று நம்புகிறேன் அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்காக எளிய மொழிநடையில் சொல்லப்பட்டு இருந்தாலும் பெரியவர்களும் விரும்பி வாசிக்கும்படி அமைந்திருக்கின்றது .
தொலைக்காட்சிகளும் அலைபேசிகளில் செயலிகளும் மிகுந்து விட்ட இந்த காலகட்டத்தில் காட்சிகளாக பார்ப்பது மட்டுமான ஒரு உலகம் உருவாகி இருக்கிறது. அதையும் தாண்டி விருப்பமாக வாசிக்கக்கூடிய குழந்தைகளுக்கான கதை புத்தகமாக இதைப் பார்க்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு கதையும் கற்பனையைக் கிளறிவிடக் கூடியதாக இருக்கிறது. அறிவியல் சிந்தனையுடன் இந்தக் கதைகளை ஆய்வு செய்தால் அது பெரும்பாலும் ஏற்புடையதாக இருக்காது. ஏனென்றால் எல்லாமே கற்பனை, கற்பனைக்கு எட்டாத காட்சிகளாக புனையப்பட்டு இருக்கிறது. இது போன்ற கதைகள் தான் குழந்தைகளும் குழந்தைப்பருவத்தில் விரும்புவார்கள் இப்பொழுது நாம் படித்தாலும் நம் எல்லாரையும் நம்முடைய பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் செல்வதாக இந்த புத்தகம் இருக்கின்றது.
ஆனால் எல்லாக் கதைகளின் முடிவுகளும் நேர்மறை சிந்தனையைக் கொடுக்கக்கூடியதாக மாறிவிடுகிறது. ஒவ்வொன்றிலும் நீதிக் கருத்துக்களை நாம் எதிர்பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால் ஒவ்வொன்றிலும் ஒரு நீதி உள்ளது, நீதி என்பதை நாம் கீழ்வருமாறு எடுத்துக் கொள்ளலாம். நல்ல விஷயங்கள் வெற்றி பெறுகின்றன, கெட்ட எண்ணங்களும் கெட்ட செயல்களும் அடுத்தவர்களுக்குத் தீங்கு இழைக்கக் கூடிய ,கதைமாந்தர்கள், நிகழ்வுகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. இதிலிருந்து நாம் எல்லாக் கதைகளும் நேர்மறையாக இருப்பதே எண்ண முடிகிறது.
திருகு கல் என்ற கதையை எடுத்துக் கொண்டால் இதே போன்றதொரு கதையை எனது சிறிய வயதில் நானே கேட்டிருக்கிறேன் அதில் வரக்கூடிய சகோதரருக்கு பதிலாக, இந்தா பாட்டி – இல்லை பாட்டி என்று இரண்டு கதை மாந்தர்களாக நிற்பார்கள் .சுவாரசியமான பெரியாரைத் துணை கொள் என்ற கதையில் அவருடைய அனுபவம் எவ்வாறு மற்றவரை வழிநடத்துகிறது என்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செவலைப் பசு
குழந்தைகளுக்கு படிப்பதற்கு ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான உணர்வையும் கற்பனையையும் படிப்பதற்கு ஆர்வத்தையும் தூண்டுகின்றது .செவலைப் பசு என்ற கதையை எடுத்துக் கொண்டால் அது சின்ட்ரல்லாக் கதையைச் சற்று ஒத்துப் போகின்றது.இளம் பெண்ணும் நிலவும் மனிதனும் என்ற கதையில் மான்கள் பேசுகின்றன. ஒவ்வொரு கதையுமே விலங்குகள் பேசுவதாக இருக்கிறது விலங்குகள் பேசுவதாகவும் பொருள்கள் பேசுவதாகவும் இருக்கும்பொழுது குழந்தைகள் தானாகவே மிகவும் விரும்பிப் படிப்பார்கள். பெரும்பாலான கதைகளில் விலங்குகள்
மனிதர்களோடு பேசுகின்றன ,விலங்குகள் உதவி செய்கின்றன .குதிரைகள் நாய்கள் பறவைகள் நரி என்று மான்கள் எல்லா வகையான மிருகங்களின் பேச்சும் நம்மைக் கவர்வதாக கதைகள் எழுதப்பட்டுள்ளன .
காற்றின் கடவுள்
காற்றின் கடவுள் என்ற கதையில் ஒரு வயதான மூதாட்டி, அரக்கன் , காற்றுக் கடவுள் என்றெல்லாம் உருவகங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அங்கேயும் மற்றவர்களுக்கு உதவுவது கீழ்ப்படிதலும் அதனால் விளையும் நன்மைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. , இந்த இடத்தில் கீழ்ப்படிதல் என்ற சொல்லை , நாம் ஒழுக்கமாக சித்தரிக்காமல் பெரியோர் சொல்லக்கூடிய வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை புரிந்து கொண்டு அதன்படி நடந்தால் நல்லது நடக்கிறது நல்ல வாழ்க்கை அமைகிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
சில கதைகளில் கதைமாந்தர்களின் பெயர் மரியாவும் இவான் என்றே இருக்கின்றன . தங்க நிறக் கூந்தல் அழகி என்ற ஒரு கதைதான் கடைசி கதை …பூதம் குகை திருடன் அரசன் மன்னன் என்று பலவிதமான கதைமாந்தர்கள் எல்லா கதைகளிலும் வருகின்றனர் படிப்பதற்கு ஒரு இனிமையான புத்தகம் குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள் பெரியவர்களும் விரும்பி படிக்கலாம்.
இது போன்ற கதைகளை வாசிக்கும் போது நம்முடைய இளம் வயதிலும் படித்த ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மீட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இது ஒரு நல்ல புத்தகம் .
– உமா மகேஷ்வரி