ரஷ்ய நாட்டுப்புற கதை (Russian folk story) - வெள்ளைக் காகமும் துன்னெலியும் (Vellai Kakamum Thunneliyum) | விக்டர் வாழ்டாயேவ் | உதயசங்கர்

ரஷ்ய நாட்டுப்புற கதை: வெள்ளைக் காகமும் துன்னெலியும்

ரஷ்ய நாட்டுப்புற கதை: வெள்ளைக் காகமும் துன்னெலியும்

விக்டர் வாழ்டாயேவ்

தமிழில் – உதயசங்கர்

ஒரு நாள் வெள்ளைக் காகம் ஒன்று அதுவரை போயிராத காட்டுப்பகுதிக்குள் பறந்து சென்றது. மிகப் பரந்து விரிந்து உயரமாக இருந்த மரத்தைத் தேர்ந்தெடுத்தது. அதன் உச்சியில் கூடு கட்ட ஆரம்பித்தது.

கீழே நிலத்துக்குள்ளிருந்து ஒரு துன்னெலி (Mole rat) மேலே வந்தது. அது உயரே வெள்ளைக் காகம் கூடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. நின்று கவனித்தது. பிறகு பேசியது,

“ ஹாய்.. வெள்ளைக் காகம்! அந்த மரத்தில் கூடு கட்டாதே.. அது நல்ல மரம் இல்லை..”

வெள்ளைக் காகம் சிரித்தது. பிறகு காலை உதைத்தபடி,

“ என்னைத்தனியே விடு..”

என்று சொன்னது. துன்னெலி கொஞ்சநேரம் நின்று பார்த்தது. மறுபடியும் சொன்னது,

“ காகமே! அந்த மரத்தில் கூடு கட்டாதே.. அது மோசமான மரம்..”

காகம் மீண்டும் சிரித்தது.” ஏய்.. குருட்டுத்துன்னெலியே, கால்களில் மூளையை வைத்திருக்கும் உனக்கு என்னை விட எல்லாம் நன்றாகத் தெரியுமோ? நான் வானத்தில் பறக்கும்போது எல்லா மலைகளையும் சமவெளிகளையும் பார்ப்பேன்.. அப்போது நீ ஒரு புழுவைப் போல தரையைக் குடைந்து கொண்டிருப்பாய்.. இந்தக் காட்டிலேயே இந்த மரம் தான் வலிமையான பெரிய மரம்..”

வெள்ளைக் காகம் துன்னெலி (Mole rat)-யின் பேச்சைக் கேட்கவில்லை. அந்த உயரமான மரத்திலேயே கூடு கட்டியது. சீக்கிரமே முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தன.

சிறிது காலம் கடந்தது. சமவெளிகளிலிருந்து காற்று வேகமாகப் பாய்ந்து வந்தது. தன்னுடைய வலிமையான கரங்களால் மரங்களைப் பிடித்துக் கொண்டது காற்று. மரங்களை அங்குமிங்கும் ஆட்டிக்குலுக்கியது.

சீக்கிரத்திலேயே அந்தப் பெரிய மரத்தை நோக்கி வந்தது. அந்த மரத்தின் அடர்ந்த கிளைகளை வளைத்துக் குலுக்கியது. வேர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவை தரையிலிருந்து பிய்க்கப்பட்டன. அப்படியே கீழே சாய்ந்தது மரம்.

அந்த வெள்ளைக்காகமும் அதன் குஞ்சுகளும் மரத்தின் அடியில் மாட்டி நசுங்கிப் போயின.

துன்னெலி தரைக்குள்ளேயிருந்து வெளியே வந்தது.

“ மேலே உயரப் பறப்பதாலே உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டாய்.. நான் தரையில் வளைக்குள் இருந்தாலும் உன்னால் பார்க்க முடியாததை நான் பார்ப்பேன்.. அந்த மரத்தின் வேர்கள் அழுகிப் போய் இருந்தது எனக்குத் தெரியும்.. நான் சொன்னதை நீ கேட்டிருந்தால் நீ இப்போது உன்னுடைய கூட்டில் சௌகரியமாக உட்கார்ந்து இருப்பாய்..”

என்று சொன்னது துன்னெலி.

சில சமயம் நீங்கள் கீழே தரையில் நடப்பதையும் கவனிக்கவேண்டும். அப்போது தான் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்..

நன்றி: சோவியத் லிட்டெரேச்சர் 1979

வெள்ளைக் காகமும் துன்னெலியும் எழுதியவர் : 

– விக்டர் வாழ்டாயேவ்

தமிழில் – உதயசங்கர் (Udhayasankar)

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *