American- black race struggle | ரஸ்டின்- கருப்பர் இனப் போராட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை ஓப்பன்ஹைமர் படத்தில் நடித்த சிலியன் முர்ஃபி பெற்றார். அந்த விருதின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் மற்றொரு நடிகரின் பெயரும் இருந்தது. அவர் பெயர் கோல்மன் டோமிங்கோ. அவர் நடித்து ஆஸ்கர் பரிந்துரையில் இருந்த படத்தின் பெயர் ரஸ்டின். விருதுபெறாவிட்டாலும், இப்படம் மிகமிக முக்கியமான படம் என்பேன். விருது பெறாமல் போனதாலேயே அதிகம் பேசப்படாமல் போவது வருத்தத்தைத் தருகிறது. அதனால், அத்திரைப்படம், அதில் வரும் கதாப்பாத்திரங்கள், அவற்றின் வரலாறு ஆகியவற்றை முடிந்தவரை சுருக்கமாக இங்கே எழுத முயற்சி செய்கிறேன். அவசியம் வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.Rustin star Colman Domingo: 'I think Bayard would like to be remembered as a Black, sexy leader'

ஆட்சியாளர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் சாதகமான சட்டங்கள் நிறைவேற்றப்படுகிறபோதெல்லாம், எவ்விதத் தடையுமில்லாமல் அச்சட்டங்கள் முழுமையாக அப்படியே அமல்படுத்தப்படும். உதாரணத்திற்கு, மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் சட்டம் போடப்பட்டால், அதை அப்படியே கொஞ்சமும் மாறாமல் அமல்படுத்துவார்கள். அதுவே, ஏழைகளுக்கு ஒரு சலுகை அளிக்கும் திட்டம் கொண்டுவந்தால், மக்கள் கொஞ்சம் ஏமாந்தால் போதும். அது பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் காற்றில் விடப்படும். யாருக்குமே உபயோகப்படாத ரே…மர் கோவிலைக் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை எல்லாம் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுப்போம் என்பதையோ, பத்து கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்பதையோ, கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 இலட்சம் கொடுப்போம் என்பதையோ ஒருபோதும் நிறைவேற்றவே மாட்டார்கள். அதனால், ஆட்சியாளர்களிடம் வாக்குறுதிகளைப் பெறுவதோடு நின்றுவிடாமல், அவை நிறைவேற்றப்படும் வரையிலும் மக்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அப்படித்தான் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கருப்பின மக்களின் மிகநீண்ட போராடங்களுக்குப் பிறகு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதாக அமெரிக்க அரசாலேயே அறிவிக்க வைத்தனர் மக்கள். காலங்காலமாகவும் பரம்பரை பரம்பையாகவும் வெள்ளையர்களின் வீடுகளிலேயே கருப்பின மக்கள் அடிமைகளாக இருந்துவந்ததை மாற்றி அவர்களும் மனிதர்கள்தான் என்று சட்டமியற்றப்பட்டது. நிறவேறுபாடு பார்க்காமல் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம் என அனைத்திலும் அனைவரும் சமம் என்று சட்டப்பூர்வமாக 1865 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால்…

எழுத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களெல்லாம் ஆண்டுகள் கடந்தபின்னரும் சமூகத்தில் அமலாகவில்லை. அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதாகப் போடப்பட்ட சட்டங்களில் பல ஓட்டைகளைக் கண்டுபிடித்தோ உருவாக்கியோ, கருப்பின மக்கள் தொடர்ச்சியாக அடிமைகளாகவே நடத்தப்படும் சூழல் உருவானது. கருப்பின மக்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடிக்கொண்டே இருந்தனர். இருப்பினும் அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்தின் வீரியம் இப்புதிய போராட்டங்களில் இல்லை. அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபிறகு அமெரிக்க அரசு, ஆட்சி அதிகாரத்தில் கருப்பின மக்களில் ஓரிருவருக்கு ஆங்காங்கே கொடுக்கப்பட்ட சில உப்புசப்பில்லாத பதவிகளும், பெரியளவிற்கான போராட்டங்களைத் தடுக்கத்தான் உதவியது. வெள்ளையின ஆதிக்கம் நிறைந்த அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உரையாடியும் பலவற்றை சாதித்துக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை கருப்பினத் தலைவர்களிடம் உருவாகியிருந்தது. கருப்பின மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட என்ஏஏசிபி என்கிற இயக்கமும்கூட அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மென்மையாகவே கோரிக்கைகளை வைத்து நகர்ந்துகொண்டிருந்தது.

ஜிம் கிரோ சட்டங்கள் என்கிற வகையிலான சட்டங்கள் அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களில் அமல்படுத்தப்பட்டன. கருப்பின மக்களுக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்ததைத் தடுப்பதே அச்சட்டங்களின் மைய நோக்கமாக இருந்தது. அதன்படி, படித்த, சொத்துகள் கொண்ட, வரி கட்டியவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அடிமைத்தனத்தில் இருந்து மிகச்சமீபத்தில்தான் கருப்பின மக்கள் விடுதலை ஆகியிருந்ததால், அவர்களிடம் சொத்தும் இல்லை, கல்வியறிவும் இல்லை. அதனால் ஏறத்தாழ கருப்பின மக்கள் அனைவருமே வாக்களிக்க முடியாத சூழல் உருவானது. இச்சட்டத்தின் மூலம் சொத்தும் கல்வியும் இல்லாத சில வெள்ளையின மக்களும் பாதிக்கப்பட்டனர். அதனைத் தடுப்பதற்காக அச்சட்டத்தில் ‘தாத்தா உட்பிரிவு’ கொண்டுவரப்பட்டது. அதாவது, ஒரு நபரின் தாத்தா காலத்தில் அக்குடும்பத்திற்கு ஓட்டு இருந்திருந்தால், பேரப்பிள்ளைகளுக்கும் உண்டு என்று சொல்லப்பட்டது. அதன்மூலம் சொத்தும் கல்வியும் இல்லாத வெள்ளையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. ஆக, அமெரிக்க ஜனநாயக உரிமைகளில் இருந்து கருப்பின மக்கள் முழுவதுமாக மீண்டும் புறக்கணிக்கப்பட்டனர்.

1955 ஆம் ஆண்டு வரையிலுமே பேருந்துகளில் வெள்ளையின மக்களுக்கு சமமாக கருப்பின மக்களுக்கு இருக்கையில் அமரக்கூட உரிமையில்லாமல் இருந்தது. அதனை எதிர்த்து ரோசா பார்க்ஸ் என்கிற பெண் துவங்கிய போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. எங்களுக்கு சமமாக உரிமை வழங்கப்படாத பேருந்தில் நாங்கள் ஏறப்போவதில்லை என்று பேருந்துகளைப் புறக்கணித்து நடந்தே போனார்கள், நடந்தே வந்தார்கள் கருப்பின மக்கள். அப்போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய மார்டின் லூதர் கிங் என்கிற ஒருவர் கருப்பினத்து மக்களின் நம்பிக்கை நாயகனாக உருவாகினார். அவருக்கு அப்போராட்டத்தின் நடுவே அதனை எப்படியான போராட்டமாக நடத்தவேண்டும் என்பதில் இருந்த குழப்பத்தினைப் போக்க ரஸ்டின் என்பவர் உதவினார். ரஸ்டின் ஒரு அமைதிவழிப் போராட்ட விரும்பி. காந்தியின் மீது பெரும்பற்று கொண்டவர். ஆகையால் மார்டின் லூதர் கிங்கையும் அவ்வாறே போராட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பேருந்து இருக்கைக்கான போராட்டம் வெற்றிபெற்றதும் கருப்பின மக்களிடையே புது உற்சாகம் கிடைத்திருந்தது என்றாலுமே, ஒவ்வொரு பிரச்சனைக்கும் தனித்தனியாகப் போராடிக்கொண்டே இருந்தால், எப்போதுதான் எல்லாவற்றிலும் முழுமையான சமத்துவம் உருவாகும் என்கிற கவலையும் இல்லாமல் இல்லை. கருப்பின மக்களுக்கான வேலைவாய்ப்புகளுக்கும் விடுதலைக்குமான ஒரு பெரிய போராட்டத்தைத் துவங்க வேண்டும் என்கிற எண்ணம் ரஸ்டினுக்கு இருந்தது. அவர் அப்போது என்ஏஏசிபி இயக்கத்தில் பணிபுரிந்துவந்தார். என்ஏஏசிபி இயக்கத்தின் தலைவர்களிடம் தன்னுடைய யோசனையை முன்வைக்கிறார். என்ஏஏசிபியில் முக்கியப் பொறுப்புவகித்துவந்தவரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான மார்டின் லூதர் கிங்கிடம் ஒரு பெரிய போராட்டம் குறித்து பேசி அவரிடமும் ஒப்புதல் வாங்குகிறார் ரஸ்டின். அதன்படி அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்க்டனை மையமாக வைத்து அப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்பதே ரஸ்டினின் திட்டமாக இருந்தது.

மார்டின் லூதர் கிங்கிடமே அனுமதி வாங்கியபின்னர், அதனைத் தடுப்பதற்கு யாராலும் முடியாது என்று ரஸ்டின் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பிரச்சனை வேறொரு வடிவில் வந்து சேர்கிறது. எப்படியாவது இப்போராட்டத்தைத் தடுத்த நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட அமெரிக்க அரசு, ஒரு ஆயுதத்தைக் கையிலெடுத்தது. அதுதான் தனிமனிதத் தாக்குதல். ரஸ்டின் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பது பலருக்கும் தெரிந்த இரகசியமாக இருந்துவந்தது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் தன்பாலின் ஈர்ப்பென்பது சட்டரீதியாகவும் சமூகரீதியாகவும் குற்றச்செயலாகப் பார்க்கப்பட்டிருந்தது. அதனால், ரஸ்டினை ஒரு குற்றவாளியைப் போல பொதுச்சமூகத்தில் காட்டுவதற்கு அமெரிக்க அரசு தயாராக இருந்தது. அத்துடன் நிற்காமல், ரஸ்டினுக்கும் மார்டின் லூதர் கிங்குக்கும் இடையில் ஓர்பாலின உறவு இருந்ததாகவும் அச்செய்தியைக் கசியவிடுவதற்கு அமெரிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ரஸ்டினை மிரட்டினார்கள். ரஸ்டின் அதற்கு அஞ்சமாட்டேன் என்கிறார். ஆனால் மார்டின் லூதர் கிங்குக்கோ அது பெரிய இழப்பைக் கொடுக்கும் என்று அவர் நினைத்தார். அமெரிக்க கருப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மார்டின் லூதர் கிங் அப்போதுதான் வளர்ந்துவந்துகொண்டிருந்தார். அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டால், கருப்பின மக்களின் போராட்டக்களமே ஆட்டங்கண்டுவிடக்கூடும். அதனால் ரஸ்டினுக்குக் கொடுத்த ஆதரவில் இருந்து மார்டின் லூதர் கிங் அமைதியாகப் பின்வாங்குகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஸ்டின் என்ஏஏசிபி இல் இருந்து வெளியேறுகிறார்.Bayard Rustin: Biography, Activist, 'Rustin' Movie Subject

கருப்பின மக்களுக்கான வேலையையும் விடுதலையும் கோரும் போராட்டத்தைத் துவங்க நினைத்த ரஸ்டின், தன்னுடைய வேலையையும் இழந்து, அடுத்ததாக என்ன செய்வதென்றே வழிதெரியாமல் இருந்தார். சில நாட்கள், சில மாதங்கள் என காலம் கடந்தபின்னரும் அவரால் அவருடைய கனவுப் போராட்ட முயற்சியை மறக்கவே முடியவில்லை. ஒருநாள், அலபாமாவின் பிர்மிங்கம் நகரில் கருப்பின மக்களின் வீடுகளில் அமெரிக்க காவல்துறையும் வெள்ளையின வெறி அமைப்புகளும் இணைந்து குண்டுவைத்து தகர்ப்பதும், அதனை எதிர்த்துப் போராடிய கருப்பின இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்குவதுமாக அநீதி நிகழ்த்தப்படுவதை தொலைக்காட்சியில் பார்க்கிறார் ரஸ்டின். மிகப்பெரிய எண்ணிக்கையிலான கருப்பின மக்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமானதொரு போராட்டத்தை நடத்திக்காட்டினால்தான், இந்த ஆட்சியாளர்கள் கொஞ்சமாவது பயப்படுவார்கள் என்று உணர்கிறார். தன்னுடைய பழைய போராட்டத் திட்டத்தை தூசுதட்ட நினைக்கிறார். என்ஏஏசிபின் அங்கீகாரத்திற்காகவும் அனுமதிக்காகவும் நாம் ஏன் காத்திருக்கவேண்டும் என்றும், புதிய இளைஞர் கூட்டத்தைத் திரட்டினால் மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றும் உறுதியாக நம்புகிறார்.

பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த சில இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஒரு அறையில் இருக்கவைத்து, தன்னுடைய குறிக்கோளை எடுத்துரைக்கிறார். அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனை சுமார் ஒரு இலட்சம் மக்களைத் திரட்டிக்கொண்டுபோய் ஒரு முற்றுகைப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்கிறார். எல்லோரும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் பார்க்கிறார்கள். ஏனெனில் அமெரிக்க வரலாற்றில் அத்தனை பெரிய எண்ணிக்கையில் ஓரிடத்தில் கருப்பின மக்கள் ஒன்றுகூடிப் போராடியதே இல்லை.

“இதெல்லாம் நடக்குமா? சாத்தியமா?” என்று கேட்கப்பட்ட கேள்வியை அப்படியே இடைமறிக்கிறார்.

“நம்முடைய கனவை எப்போதும் முளையிலேயே கிள்ளி எறியக்கூடாது. அதனை வளர்த்துப் பார்க்கவேண்டும். கனவை செயல்படுத்தமுடியுமா முடியாதா என்பதைப் பிறகு பார்க்கலாம்”

என்கிறார்.

உடனே, அங்கிருக்கும் அனைவரும் அவரவருக்கு தோன்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். வெறும் சொல்வதோடு நிறுத்தாமல், அவற்றை அங்கிருந்த பலகையில் எழுதவும் வரையவும் சொல்கிறார். தடைபோடாத கனவுகள் அருவியாய் கொட்டத்துவங்கின. ரஸ்டினின் திட்டம் மேலும் பிரம்மாண்டமானது. ஒரு இலட்சம் பேரை எப்படியாவது அழைத்துவந்து, அமெரிக்கத் தலைநகரை நிரப்பி, ஒரு பெரும்போராட்டத்தை நடத்துவதற்குத் தேவையான திட்டங்களை இளைஞர்களுடன் இணைந்து வகுத்தார் ரஸ்டின்.

திட்டம் தயாராகிவிட்டாலும், அதனை செயல்படுத்துவதற்கு சில தலைவர்களின் ஆதரவை நாடிப்பார்த்தார் ரஸ்டின். எவரும் உதவ முன்வரவில்லை. இறுதியாக ரான்டொல்ஃப் உதவுவதாக உறுதியளிக்கிறார். சோசலிசக் கருத்துகளை உள்வாங்கியவராக இருந்தபடியால், ரஸ்டினின் கனவுத் திட்டத்தை ரான்டொல்ஃபால் புரிந்துகொள்ளமுடிந்தது.

“யாருடைய உதவி இல்லையென்றாலும் பரவாயில்லை. ஆனால் மார்டின் லூதர் கிங்கின் உதவி இல்லாமல் எதையும் செய்யமுடியாது”
என்கிறார் ரான்டொல்ஃப்.

அதனால் மார்டினின் உதவியைப் பெறுவதற்காக, அவருடைய வீட்டிற்கே சென்று உரையாடுகிறார் ரஸ்டின். இனியும் பொறுத்திருப்பதோ அஞ்சிநடுங்குவதோ எதற்கும் பயன்படாது என்று முடிவெடுத்து ரஸ்டினுக்கு உதவுவதாக மார்டின் லூதர் கிங் வாக்களிக்கிறார். அங்கே மார்டினின் குழந்தைகளுடன் ஒரு குழந்தையாக மாறிப்போய், கருப்பின விடுதலைப் பாடல்களை அவர்களுடன் ஆடிப்பாடிக் கொண்டாடும் காட்சி மிகச்சிறப்பாக இருக்கும். போராட் என்பது ஏதோ கொடுமையானது என்பதாக அல்லாமல், அதற்குள்ளும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தையும் இணைப்பதுதான் வெற்றியை நோக்கி நம்மை அது வேகமாக நகர்த்தும் என்பது ரஸ்டின் உள்ளிட்ட பல வரலாற்று நாயகர்களிடம் இருந்து நாம் கற்கவேண்டியது.Bayard Rustin – WSB-TV Channel 2 - Atlanta

அதன்பிற்கு, ஒரு அலுவலகத்தை ஏற்பாடு செய்து, அங்கே இளைஞர் கூட்டத்தை அழைத்துச்சென்றுபோய் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளைப் பிரித்துக்கொடுக்கிறார் ரஸ்டின். ஒரு இலட்சம் பேரை வாஷிங்டன் நகருக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்றால் ஏராளமான பேருந்துகள், போராட்டத்தில் பங்கெடுப்போருக்கு பாதுகாப்பு வழங்க பாதுகாவலர்கள், குடிப்பதற்கு தண்ணீர், கழிவறை வசதி, தங்குவதற்கு கூடாரங்கள், ஒலிப்பெருக்கிகள், பிரச்சார உபகரணங்கள், இவை எல்லாவற்றுக்குமான நிதி என போராட்டத்திற்குத் தேவைப்படும் அனைத்தையும் ஏற்பாடு செய்வதே அந்த இளைஞர் படையின் பணியாக மாறியது. ஊர் ஊராகச் சென்று போராட்டத்தின் தேவையையும் மையக்காரணத்தையும் விளக்கி மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கும் ஒரு குழுவை அமைக்கிறார் ரஸ்டின். பிரச்சாரம் செய்துகொண்டே, மக்களை போராட்டத்திற்கு வரவைப்பதற்கான வேலையையும் நிதிதிரட்டலையும் இணைத்து ஒரேநேரத்தில் செய்கிறார்கள் அந்த இளைஞர்கள்.

போராட்ட நாள் நெருங்கிவந்துகொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அரசே அச்சம்கொள்ளத் துவங்கியது. எப்படியாவது இப்போராட்டத்தை நிறுத்தியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து, ஏற்கனவே தன்பாலின ஈர்ப்பாளர் என்கிற காரணத்தைக் காட்டி ரஸ்டினை ஒதுக்க முயற்சி செய்ததைப் போலவே இம்முறையும் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்தது அமெரிக்க அதிகார வர்க்கம். ஊடகங்கள் முழுக்கவே ரஸ்டினின் தன்பாலின் ஈர்ப்பு குறித்தே தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. அமெரிக்க சமூகத்திற்கும், கருப்பின மக்களுக்கும், கிருத்துவ மதத்திற்கும் அவர் ஒரு இழுக்கு என்று ஊடகங்கள் முத்திரை குத்தின. இளைஞர்கள் பணியாற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் அனுதினமும் தொலைபேசிவழியாக மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. வானொலியில் எப்போதும் ரஸ்டினை ஒரு கொடியவனாக சித்தரித்தே செய்திகள் சொல்லப்பட்டன.

அவற்றையெல்லாம் தூசியைப் போலத் தட்டிவிட்டு தன்னுடைய பணியில் அதிக கவனம் செலுத்தினார் ரஸ்டின்.Bayard Rustin | Biography & Facts | Britannica

அமெரிக்கக் காவல்துறையில் பணிபுரியும் கருப்பினக் காவலர்களை தனியாக அழைத்துவந்து அவர்களுடன் ஒரு உரையாடலை நடத்துகிறார் ரஸ்டின். போராட்ட ஊர்வலத்தின்போது அவர்கள்தான் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், அவர்கள் எவ்வித ஆயுதத்தையும் கொண்டுவரக்கூடாது என்றும், எல்லோரையும் வெள்ளை பட்டையொன்றை அணிந்து அமைதியை நிலைநாட்டுவதாகக் காட்டவேண்டும் என்றும் கோருகிறார் ரஸ்டின்.

ரஸ்டினின் திட்டப்படி நடத்தப்பட்ட பிரச்சாரங்களுக்கு பலன் கிடைக்கத் துவங்கியது. பல தொழிற்சங்கங்களும், ஊர்ப் பொதுநல சங்கங்களும் அவரவர் செலவில் பேருந்து ஏற்பாடு செய்துதருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்கள். அவர்களில் பல வெள்ளையின அமெரிக்கர்களும் இருந்தார்கள் என்பதையும் அப்பிரச்சாரத்தின் பெரிய வெற்றியாகப் பார்க்கலாம்.

மக்களிடையே அப்போராட்டத்திற்கான வரவேற்பு கூடிக்கொண்டே போவதைப் பார்த்து என்ஏஏசிபி தலைவர்களும் ரஸ்டினுக்கு ஆதரவு வழங்க முன்வந்தனர். முதலில் ஆறு முக்கியமான இயக்கங்களை இணைத்து பணியைத் துவங்கியதால் பிக்சிக்ஸ் (Big Six) என்று பெயர் சூட்டினர். ஆனால் இறுதியில் மேலும் சில இயக்கங்கள் இணைந்து அது பிக்டென் (Big Ten) ஆனது.

இப்படியாக போராட்டத்திற்கான முன்தயாரிப்புகள் எல்லாமும் சரியாகப் போவதைப் போல இருந்தாலும், அதனை நடக்கவிடாமல் தடுப்பதில் அமெரிக்க அரசு குறியாக இருந்தது. ரஸ்டினை அவமானப்படுத்துவதற்காக மற்றொரு பிரச்சனையை அமெரிக்க அரசும் அதிகாரத்தில் இருப்பவர்களும் கிளப்பிவிடுகிறார்கள். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் முன்னர் உறுப்பினராக இருந்ததாகவும், அமெரிக்காவில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்காகத்தான் கருப்பின மக்களைத் தூண்டி தலைநகரை நோக்கி படையெடுக்கப் பார்க்கிறார் என்றும் வதந்தி பரப்பப்பட்டது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் கம்யூனிசம் என்பது மிகமோசமான தத்துவம் என்பதாகவும், கம்யூனிஸ்ட்டுகள் என்றால் கொடிய பூதங்கள் என்பதாகவும் ஒரு பொதுக்கருத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அக்கருத்தின் ஒரு அங்கமாக, மக்களுக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ குரல் கொடுக்கிறார்களோ, அவர்களையெல்லாம் கம்யூனிச பூதத்தை அமெரிக்காவிற்குள் கொண்டுவருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி, ஒடுக்குவதையே அமெரிக்க ஆட்சியாளர்கள் கடந்த நூறாண்டுகளாக செய்துவருகிறார்கள். அப்படித்தான், ரஸ்டினை தன்பாலின ஈர்ப்பாளர் என்று அவரை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு ஓரங்கட்டப் பார்த்தார்கள். அதன்பின்னர், கம்யூனிஸ்ட் என்றார்கள். அவர் கருப்பின மக்களுடைய ஊர்வலத்தில் வெடிகுண்டு வீசி பயங்கரவாதம் செய்வார் என்றார்கள்.

இந்த ஊர்வலமும் போராட்டமும் தன்னால் நின்றுவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய முகத்தை கூட்டத்தின் பின்னால் கொண்டுபோனார். வாஷிங்க்டனை நோக்கிய அப்போராட்டத்திற்கு தலைமையேற்று முதல்வரிசையில் நின்று ஊர்வலத்தை வழிநடத்தாமல், ஓரமாக எல்லோரைப் போலவும் அமைதியாக நடந்துவரத் தயாராக இருப்பதாகவும், போராட்டம் வெற்றிபெற்ற பின்னர், அங்கு கீழே கிடக்கும் குப்பைகளை மகிழ்ச்சியாக அள்ளும் வாய்ப்பு கிடைத்தாலுமே போதும் என்கிறார் ரஸ்டின். அதன்பின்னர் அவருடைய பெயர் எங்கேயும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. ஆனால், தொடர்ச்சியாக போராட்டத்திற்கான பணிகளை ரஸ்டினும் அவரது அணியினரும் ஓய்வின்றி செய்துகொண்டே இருந்தனர்.

இறுதியாக போராட்ட நாளன்று வாஷிங்டன் நகரில் ரஸ்டன், மார்டின் லூதர் கிங் உள்ளிட்ட எண்ணற்ற பெருந்தலைவர்கள் கூடியிருந்தனர். அமெரிக்கா முழுவதிலிருந்தும் மக்கள் வெள்ளமென திரண்டு வந்துகொண்டிருந்தனர்.

மேடையில் பேசுவதற்காக மார்டின் லூதர் கிங் வந்தார். இலட்சக்கணக்கான மக்கள் தன்முன்னால் கூடியிருப்பதை அவரால் பார்க்க முடிந்தது. ஒரு இலட்சம் பேரைத் திரட்டுவதே சாத்தியமில்லாத ஒன்றாக சொல்லப்பட்ட நிலையில், ரஸ்டினின் கடும் உழைப்பின் காரணமாக, அங்கே மூன்று இலட்சம் மக்கள் போராட்டக் களத்தில் குதித்திருந்தனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர்வரையிலும் வெள்ளையின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பின மக்களின் விடுதலைக்காக வெள்ளையின மக்களையும் போராடுவதற்குத் திரட்டிக்காட்டியது அமெரிக்க ஆட்சியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.Bayard Rustin: Strategist, Organizer, Unifier

அன்று ‘எனக்கொரு கனவிருக்கிறது’ என்கிற தலைப்பில் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த ஒரு உரையை நிகழ்த்தினார். மனிதகுல வரலாற்றின் மிகமுக்கியமான பத்து உரைகளைப் பட்டியலிட்டால், அதில் இன்றைக்கும் மார்டின் லூதர் கிங் ஆற்றிய அன்றைய உரையும் நிச்சயமாக இடம்பெறும். அவர் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அந்த வேளையில், ஏதோவொரு மூலையில் நின்றுகொண்டிருந்தார் ரஸ்டின்.

அந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்க அரசுக்கு பெரிய நெருக்கடியைக் கொடுத்தது. போராட்டத்தின் முக்கியமான தலைவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிய அமெரிக்க அதிபர் கென்னடி அழைத்திருந்தார். இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிய ரஸ்டின்தான் அதிபரை சந்திக்கப்போகும் குழுவினரின் தலைவராக இருந்திருக்கவேண்டும். ஆனால், கம்யூனிஸ்ட் முத்திரை, தன்பாலின ஈர்ப்பாளர் முத்திரை போன்ற பலவற்றின் காரணமாக அவர் ஒதுங்கி நிற்கவேண்டி இருந்தது. இருப்பினும் அவரது உழைப்பினால்தான் அடுத்தடுத்து பல தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலான பல சட்டங்கள் போடப்பட்டன. கருப்பின மக்களுக்கான முழுமையான ஓட்டுரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பில் ஒரே இடத்தில் வெள்ளையின மக்களுடன் ஒன்றாக இணைந்து கருப்பின மக்களும் பணியாற்ற வழிவகுக்கும் சட்டங்கள் உருவாகின. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமிருந்தாலும், இன்றைக்கு அமெரிக்கா வந்துசேர்ந்திருக்கிற இடத்திற்கு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதியன்று மூன்று இலட்சம் மக்கள் கலந்துகொண்ட அந்த ஊர்வலமும் போராட்டமும் மிகமிக முக்கியமான காரணமாகும்.

மார்டின் லூதர் கிங்கின் உரை இன்றைக்கும் பலரால் உதாரணமாகக் காட்டப்படுகிறது. ஆனால், அவர் அந்த உரையை நிகழ்த்துவதற்குக் காரணமாக இருந்த ரஸ்டினை திட்டமிட்டே வரலாற்றில் மறைத்திருக்கிறார்கள். மார்டின் லூதர் கிங்கிற்கு இணையானதொரு மதிப்பைப் பெற்றிருக்கவேண்டியவர் ரஸ்டின். ஆனால் அதுநடக்காமல் போனதற்கு, அவரது கம்யூனிஸ, ஓர்பாலின ஈர்ப்புப் பின்னணிதான் காரணமென்கிறபோது, ‘ரஸ்டின்’ என்கிற பெயரை உரக்கச் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

 

எழுதியவர் 

 இ.பா.சிந்தன்

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *