போய் வா காதலே…
======== ========
தித்திக்கும் பரலோகமே
என் சிந்தை கொரிக்கும்
மூளைப்புழுவே
கந்தல்படும் என் கனாக் கிழிசலே
அம்போவெனப் போகும்
என் அகன்டாகரப் பிரியையே
உயிர் குரைக்கும் மனப்பேயே
அபாண்ட அழகே
மிகுமாயச் சொப்பனமே
சுயநலத்துயிலே
பிறப்புறுப்பின் வழியே எனை
பின்னோக்கி பறக்கத் தூண்டும்
ஹம்மிங் இன விசையே
மசி வழியும் கஸல் வலியே, வரியே
என் முதிராச்சவின் இறுதி ஊர்வலத்தில்
கெச்சட்டம் புரியும் பறை இசைக்கொலுவே
ஆசை நோய் வார்த்தவளே
போய் வா… என் முறிமருந்தே
போய்வா.
காதலறுத்து யாரோ ஒருவனின்
கட்டுக்கழுத்தியாய் வாழ்வாய்
இனி.
போய்வா..
சாலைகள் எனும் ஆதிசேஷன்
======== ====== ===========
எத்தனை தூரத்திற்கென
சோம்பளுருமளவு
வளைவு நெளிவுகளுடன்
உடலே வாலென
தொடுவானாய் நீள்கிறது
அதன் முதுகினில்
சலிக்காமல் பறந்துகொண்டிருக்கின்றன
பலசக்கர கழுகுகள்
தோல் உரித்து உரித்து
அந்தகாரத்தின் மசி குழைத்து
தன் உடலெங்கும் பூசி
மினுமினுத்தபடி
ஆறு, எட்டு என
தலைவிரித்து படமெடுத்துக்கொண்டிருக்கும்
கருநாகத்தின் தலையில்
நர்த்தனமிட பாதங்கள் ஊறத்தொடங்கியது
சமுதாய கவனமற்ற
பரமாத்மாவிற்கு
புது வாகனம் வாங்கும் யோகம் வாய்த்தவன் போல்
கபளீகர கங்கணத்தில்
காலத்திடம்
வினவுகிறார் ஆவலாக.
யாருடையது இந்த பூலோகத்தின்
ஆதிசேஷனென ?
பரமாத்மாவின்
இருப்பின்மையுற்ற ஆதுரம்
சகிக்காது
தன் ஆண்டையுடனான
பத்தாசனை அறுத்து
புறநிசியில்
சுருட்டிக்கிடந்த தன் படுக்கையை
உதறிக்கொண்டு புத்தனைத்தேடி சொர்க்கத்திற்கு
ஊர்ந்துகொண்டிருந்தது
வைகுண்டத்து ஆதிசேஷன்.
பதினைந்தாம் நாள் நிலவு
============ ==== =====
ஏகோபித்த உன் ஊன் அவயங்களில்
ஈகோபித்த உன் மார்புத்திமிரில்
சேயோடொத்ததொரு பசியினை எனக்கென சேகரித்தொழுகுவாயா
உன் தனங்கள் தலையசைத்துத்தரும்
மென் குளுங்கு சம்மதமிருக்கட்டும்
என்ன சொல்லவிருக்கிறாய்
உன் மெளனங்கள் அவிழ்த்து
எனதொரு நிர்வாண நீர்மைக்கு.
எனில்,
சமாதானமாகா பசிக்கு
உன் கச்சட்டையொட்டிய
கச்சைக்கூட்டிலிருந்து குனுகும்
கெச்சட்டப் புறாக்களை
கொஞ்சம் கொஞ்சத் திறந்துவிடு
தேனாடையில் பாலூரும்
ருசிகூட்டி நிணங்களை
கொழுத்த கனிகளாக்கு
சில்பத முலையின் மடல் கிள்ளி
என் சிறுகுடல் காமம் சிறுகத்தணி
விண்டுண்டு தீர்த்த மார்பில்
இன்னும் இன்னும்
உண்ணெனும் அழகை ஊட்டிவிடு
உனக்கென சுரக்கும் மோகமசியை
மொண்டெடுத்து சூலகம் நீராடு
என் மார்புக்கு உன்
நகக்கீரல்கள் ஈந்து
காமத்தின் ரோமக்கீற்றுக்கு
மயிரியம் தூண்டு.
சங்காத்தம் முற்றி
ஒரு மரக்குருதியொழுக
அல்குள் வனமெங்கும்
செம்புளச்சேறும் நீருமாக
செஞ்சோற்றுக் காதலின்
ஒரு வினைமுத்தமிடு
நெற்றியில் முற்றட்டும்
இடைகூடி வந்த நம்
பதினைந்தாம் நாள் நிலவு.
கருப்பு வெள்ளை புகைப்படம்
====== ======== =========
பேருந்து நிறுத்தத்தின்
நீண்ட இருக்கையில்
ஒரு திட்டாந்தர சடலம்போல்
உறங்கிக்கொண்டிருக்கும்
அனாதரவான அந்த முதியவளின்
ஞெகிழிப்பை மூட்டைக்கு
எந்த பாதுகாப்பும்
தேவையிறாது.
அப்படி என்ன
இருந்துவிடப்போகிறது?
நாளை காலை உண்பதற்கு
நேற்றிரவு யாரோ ஒருவர்
தானே முன்வந்தருகில்
வைத்துவிட்டுப்போன,
இதுவரையிலும்
பிரித்துக்கூட பார்த்திடாத
காலாதீதம் கடந்த
துர்வாசனை கவிந்த
யாசகப் பொட்டலமும்
யாரிடமும் கையேந்த விடாமல்
கவனித்துவந்த
காலமான அவள் கணவனின்
கருப்பு வெள்ளை
புகைப்படத்தையும் தவிர.
தட்டச்சுத் தேர்வு
======= ======
சில மணித்துளிகளுக்கு
பலத்த மழைப்பொழிந்தது
அத்தனைத்துளிகளும்
சிறு அச்சத்தோடு
அச்சத்தத்தில் வென்றிருப்போமென
உறுதியுடன் புறப்பட்டு நகர்ந்தது
ஒருநாள் முடிவு வந்தது
சில பல சத்தங்களைத்தவிர
அத்தனை பேரிச்சைச்சலும்
வென்றதாக தேர்ச்சி அறிக்கையை
அறிவித்தது
தட்டச்சு வானிலை.
பங்குகொண்டு நர்த்தனம் புரிந்த அத்தனை கைகளும்
தன் விரல்களுக்கு
முத்தமிட்டுக்கொண்டன.
◆◆◆◆◆◆◆
ச.அர்ஜூன்ராச் (ச.ராச் )

