எஸ். காமராஜ் எழுதிய "லாஞ்சனை" சிறுகதை தொகுப்பு | S.Kamaraj's Laanchanai Tamil Short Stories Book Review | புதியமாதவி | www.bookday.in

எழுத்தாளர் எஸ். காமராஜ் எழுதிய “லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு – நூல் அறிமுகம்

“லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு – கிராமத்தின் உயிரோசை

– புதியமாதவி, மும்பை.

சாத்தூர் மற்றும் சிவகாசியைச் சுற்றியுள்ள கரிசல் மண்ணில் வாழும் மனிதர்களின் வெடிமருந்து வாசனையோடு கலந்திருக்கும் வாழ்வியலை தன் சிறுகதைகளின் ஊடாக ஒர் ஆவணமாக்கி இருக்கிறார் எஸ். காமராஜ்.

லாஞ்சனை சிறுகதை தொகுப்பில் 13 சிறுகதைகள். அவைகளை தொகுப்பாக வாசிக்கும்போது கிராம மனிதர்களின் உயிரோசை அதில் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வறுமையிலும் செம்மாந்த வாழ்க்கை , உடல் உழைப்பின் மரியாதைக்குரிய பக்கங்கள்,

குடிசைகளில் உயிர்ப்புடன் உலாவும் கேலியும் கிண்டலுமான வாழ்க்கை, கண்ணீரின் சுவடுகள்,   நினைவுகளின் நறுமணம் எல்லாமும் சேர்ந்து இந்த நிலப்பரப்பையும் தாண்டி மனிதர்களின் வாழ்வுக் காப்பகத்தை வாசகனின் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

இந்தக் கதைகளின் மிகப்பெரிய பலம் — “கதை சொல்லும் குரல்”.

எழுத்தாளர் எங்கும் “நான் உங்களுக்கு ஒரு கருத்து சொல்ல வருகிறேன்” என்று பேசவில்லை. மாறாக, ஊர் மடம், தெரு, பஸ்ஸ்டாண்ட், ரயில் பெட்டி, பயராவீஸ், இறப்புவீடு ஆகிய இடங்களில் வாழும் மனிதர்களை நம்முன் நிறுத்துகிறார். அந்த மனிதர்களே கதையாக மாறுகிறார்கள்.

“ஊர்ப்பொழுதுகள் தேங்கி நிற்பதில்லை”

இந்தக் கதையில் கிராமத்தின் கூட்டுணர்வு, நகைச்சுவை, அப்பாவித்தனம், “வெள்ளைக்காரனை” பார்த்து வியக்கும் மனநிலை எல்லாம் மிக உயிர்ப்புடன் காட்சிகளாக விரிகிறது.

ஆஸ்திரேலியன் டக்ளஸ், அவனை சுற்றிய ஊர் மக்கள், மொழிபெயர்க்கும் கல்லூரிப்பையன் — இந்த மூவரின் இடையேயான கலாச்சார மோதல் மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக:

ஊரார் டக்ளஸை “குரங்கு” போலப் பார்க்கிறார்கள்

டக்ளஸ் ஊராரை அதே வியப்பில் பார்க்கிறான்

ஆனால் முடிவில் கிராம உழைப்பின் உடல் வலிமைக்கு முன் அவனது “குங்க்ஃபூ” தோற்றுப்போகிறது.

டக்ளஸை விட இரண்டு மடங்கு அதிகமாக தாண்டிவிட்டு மம்பட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுகிறார் தங்கமாரியப்பன். அம்மாசிக்கிழவனும் அசால்டாக தாண்டினான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாக்கியக்கிழவி சேலையைக்கூட எடுத்துச்செருகாமல் எம்பிக் குதித்தாள்.

“இட்ஸ் ஹார்ரிபிள் என்று சொல்லிக்கொண்டே பாக்கியப்பாட்டியை பார்த்து தலைவணங்கினான் டக்லஸ்” என்று கதையை முடித்திருப்பார்.

மேற்கத்திய ஆளும் வர்க்கம் இந்திய மண்ணில் பாக்கியக்கிழவியிடமும் அம்மாசிக்கிழவனிடமும் தோற்றுப் போகிறார்கள் ! எதெல்லாம் மாபெரும் செயல் என்று மேற்கத்திய டக்ளஸ்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்களோ அதை எல்லாம் இந்திய சமூகம் அசால்டாக செய்துவிடும்.

இக்கதையை வாசித்து முடித்தவுடன் இந்திய நிலப்பரப்பு எங்கும் அம்மாசிக்கிழவனும் பாக்கியக்கிழவியும் எத்தனை விதம் விதமான அதிர்ச்சிதரும் “ஹார்ரிபிள்” காரியங்களை டக்ளஸ் வகையாறாக்களிடன் செய்திருப்பார்கள் என்ற காட்சி வாசகனுக்கு விரிகிறது.

எழுதிய கதை, கதை மாந்தர்களைத் தாண்டி இக்கதையின் கருவும் காட்சிகளும் எழுதாத பல அசால்டான நிகழ்வுகளை வாசகனுக்கு நினைவூட்டுகின்றன. அந்த வகையில் இக்கதை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இக்கதை ஒரு காட்சி ஊடகத்தின் கதை வடிவத்தைக் கொண்டிருப்பது இக்கதைக்கான வலு. கதையின் மொழியில் காமிராவின் பார்வை. வாசிக்கும்போது காட்சிகள் கண்முன் நகர்கின்றன. எந்த மொழி திரைப்படத்திலும் இயக்குநர்களுக்கு இக்காட்சிகள் அல்வா மாதிரி! இருக்கும்.

அம்மாசிக்கிழவன் பாக்கியக்கிழவியின் அசால்டுகளில் தலை நிமிர்ந்து  நடப்பது நாமும்தான்.

“லாஞ்சனை” —

என் வாசிப்பில் இத்தொகுப்பின் உச்சக்கதை .  மிக ஆழமான உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும் கதை.

ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை வெடிப்பில் காயமடைந்த அம்மா, அவளைப் பார்த்து கலங்கும் மகள் — இந்த மையம் சாதாரணமாகத் தோன்றினாலும், அதன் உள்ளே, தொழிலாளர் வாழ்க்கை , பெண் உடலின் மரியாதை, வறுமை, குடும்ப ;பொறுப்பைத்  தாங்கும் பெண்கள்

பெண்களின் மறைக்கப்பட்ட உழைப்பு எல்லாம் அடுக்கடுக்காக வருகிறது.

குறிப்பாக அம்மா என்ற ஒற்றைக் கதைப்பாத்திரத்தில் இத்தனை அடுக்குகளையும் அசாதாரணமாக கொண்டுவந்து விடுகிறார் எழுத்தாளர் எஸ் . காமராஜ்.

அம்மா : அவள் ஓயாமல் வேலை செய்கிறாள், யாரையும் குறை சொல்லவில்லை, குடும்பத்தைத் தாங்குகிறாள், குடிகார கணவனை பொறுத்துக்கொள்கிறாள், மகளை படிக்க வைக்கிறாள்,  மறுப்பேதும் சொல்லாமல் மகளை பைக் ஓட்ட அனுமதிக்கிறாள்.. எல்லாவற்றுக்கும் மேலாக ஆண் மகவைப் பெற்றெடுப்பதுதான் தாய்மைக்கு/  பெண்மைக்கு பெருமை என்று காலம் காலமாக சமூகம் பெண் மீதும் பெண்ணின் கருவறை மீதும் சுமத்தி இருக்கும் பாரத்தை சுக்கு நூறாக உடைக்கும் வல்லமைப் படைத்தவளாக இருக்கிறாள்.

“ ஆம்பளை  வாரிசு வேண்டாமா” என்று ஊர் கேட்டதாம். அதற்கு,

“இன்னொரு ஆம்பளையைப் பெத்து இன்னொரு ஊதாரியை, இன்னொரு குடிகாரனை இந்த ஊருக்கு கொடுக்கவா, அப்படி ஒரு அவசியமயிறும் எனக்கில்ல” (பக் 28) என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டவள்.

இத்துணை துணிச்சலும் சமூகத்தை அதன் கருத்துருவாக்கங்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் கொண்ட அதே அம்மாவும் ஒரு பெண். பெண்ணுடலின் நிர்வாணம் அவளையும் தலைகுனிய வைக்கிறது. தீக்காயத்துடன் மருத்துவமனையில் இருக்கும்போதும் காயத்தின் வலியை விட தன் உடலை ஆடையின்றி பார்க்கிறார்கள் என்ற வலியில் அவள் கண்களை மூடிக்கொள்கிறாள். அதை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. இந்த நுண்ணிய பெண் உணர்வை மிக இயல்பாக அக்கதைப் பாத்திரத்தில் கொண்டுவருகிறார் எழுத்தாளர். இந்தக் கதையில் பெண் சக்தி “கூச்சலாக” இல்லை. அது தினசரி உழைப்பாக வருகிறது. அதுவே இதன் இலக்கிய வலிமை.

அதிலும் மிகச் சக்திவாய்ந்த தருணம்:

“மாறாப்பும் ரவிக்கையும் இல்லாமல் ஊர் பாத்தது. இந்த ஆஸ்பத்திரி பாத்தது. இதுக்கு ஒரேயடியாய் போய் சேர்ந்திருக்கலாமடி” (பக் 31)

அம்மாவின் எதிரில்கூட

ஆடைமாற்றிக்கொள்ளக்

கூசியிருக்கிறேன்….

….. பேற்றின் வலியொடு 

அலறும் குரலில்

இணைந்தே ஒலிக்கிறது

என் நிர்வாணத்திற்கான

அழுகையும் –

அ.வெண்ணிலா (‘ஆதியில் சொற்கள் இருந்தன’-2002) கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“ஆசை நாயகியின் பேசரி மூக்குத்தி”

இந்தக் கதை முழுக்க நினைவுகளின் வாசம். ஒரு இறப்புவீடு — ஆனால் கதை மரணத்தைப் பற்றி அல்ல. அது: பாட்டிமார்களின் கிண்டல், குழந்தைப் பருவத்தில் கிண்டல்களைப் பற்றிய புரியாமை,  அவமானங்கள், கிண்டல்களின் ஊடாக வெளிப்படும் கிழவிகளின் பேரன்பு.. ஏழை மக்களின் கனவுகள்

“நம்ம பையன் கலெக்டர் ஆகணும்” என்ற ஏக்கம்..

கதையின் மிக அழகான அம்சம் — வயதான பெண்களின் குரல். அவர்கள் பேசும் வசனங்கள் முழுக்க உயிரோடு இருக்கின்றன.

“ ஏ அஞ்சனா , இந்தா வாரான் ஒம்பேரன்.”

“ வெளக்கமாத்துட்ட வெளுத்துப்பிடுவன், எம் பேரனில்ல, எம் புருஷன்”

“ அப்ப, கருப்பணக் கிழவன என்ன செய்ய”

“அவன திருப்பிக்கொண்டு போயி முருகாயிக்கெழவிட்ட விட்ரு”

(பக் 47)

அஞ்சனம்மா பாட்டிகள்  கதை  வாசிப்புக்குப் பிறகும் மனதில்  நிற்கிறார்கள். இறுதியில் பேசரி மூக்குத்தி கையில் கிடைக்கும் தருணம் — அது வெறும் ஆபரணம் அல்ல; ஒரு தலைமுறையின் நினைவாக வாசிப்பவரின் நினைவுகளிலும் தங்கி விடுகிறது.

“பயணிகளின் கனிவான கவனத்திற்கு”

இந்தக் கதை நகரும் இந்தியாவைப் பற்றியது. இரயில் பயணம் இங்கே ஒரு சமூக வரைபடமாக மாறுகிறது.

கதையில்:

டிக்கெட் பிரச்சினை

அரசியல் பயணம்

ரயில் நட்பு

திருநங்கைகள்

குடிகாரர்கள்

குழந்தை பிச்சைக்காரர்கள்

எல்லோரும் வருகின்றனர்.

மிகவும் தாக்கம் தருவது — பிச்சை எடுக்கும் சிறுவன் தன் தங்கையிடம் காட்டும் கடுமை. அவனும் குழந்தைதான்; ஆனால் வறுமை அவனை “பெரியவனாக” மாற்றிவிட்டது.

இந்தக் கதை மனிதாபிமானத்தைப் பற்றிய கேள்வியை வாசகர்மேல் திணிக்கிறது.

ஒட்டுமொத்த இந்திய சமூகத்தைப் பிரதிபலிக்க இரயில் மாந்தர்களும் இரயில் பயணங்களும் மிகச்சிறந்த களமாக ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அமைகின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட மனிதர்களைப் பற்றியதாக மட்டுமின்றி இந்திய வரைபடத்தை தன் கதை மாந்தர்களின் ஊடாக கொண்டுவருகிறார் எழுத்தாளர் எஸ் காமராஜ்

இச்சிறுகதை  தொகுப்பின் மிகப் பெரிய சாதனை — எழுத்தாளர் கையாண்டிருக்கும் மொழி.

இது “எழுத்து தமிழ்” அல்ல.!  சாத்தூர் வட்டார பேச்சு மொழி.

தொழிலாளர் மொழி, கிராம பெண்களின் குரல், அன்பு கலந்த கிண்டல்,

வறுமையை தங்கள் கிண்டல்களில் மறைத்திருக்கும் சிரிப்பு

இவற்றால் கட்டப்பட்ட மொழி.

தன் மொழி மேதாவித்தனத்தை வெளிப்படுத்த எந்த வகையிலும்  எழுத்தாளர் “அலங்காரம்” செய்யவில்லை. இயல்பாக விட்டிருக்கிறார். அதனால்தான்  கதைகள் நிஜத்திற்கு மிகவும் நெருக்கமாக தெரிகின்றன. வட்டாரமொழி என்றாலும் இந்த நெருக்கம் வட்டாரமொழியைத் தாண்டி வாசிப்பில் நெருக்கம் தருகிறது.

கதை மாந்தர்கள் வாசிப்பவர்களுக்கு அன்னியப்படாமல் இருக்கிறார்கள்.

இந்தக் கதைகள் பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்களின் மரபை நினைவூட்டுகின்றன:

கிராம மனிதர்களின் உயிரோட்டத்தில் — கி.ராஜநாராயணன்

தொழிலாளர் வாழ்க்கை உண்மையில் — பூமணி

கேலியும் கிண்டலுமாக வாழும் நம் மனிதர்களில் – நாஞ்சில் நாடன்

பெண்மொழியும் பெண்ணுடலும் கலந்த பெண்ணிய எழுத்துகள் என்று பலரின் வரிசையில் இக்கதைகளும் தனக்கான இட்த்தை உறுதி செய்து கொள்கின்றன. எனினும்,  இக்கதைகளுக்கு தனித்தன்மையும் உள்ளது. குறிப்பாக தென் தமிழ்நாட்டு தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வட்டாரப் பேச்சை இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்திருப்பது இக்கதைகளின் தனித்துவம்.

லாஞ்சனை தொகுப்பின் கதைகள் வாசித்து முடித்தப் பிறகு “கதை படித்த உணர்வு”வோடு சேர்ந்து, அந்தஊர்   நம்முள் குடியேறிவிடும். அம்மாவின் காயம், பாட்டியின் பேசரி மூக்குத்தி, ரயிலில் பசி தாங்கும் குழந்தை, ஊர் மக்கள் சிரிப்பு — இவை எல்லாம் மனதில் நீண்ட நேரம் தங்கும். கதைப் பாத்திரங்களின் ஊடாக இக்கதைகள் தன் நிலப்பரப்பையும் நம் நினைவுகளில் பதித்துவிடுகின்றன.

எஸ் காமராஜின் எழுத்து மனிதர்களை நேசிக்கும் எழுத்து. வறுமையை ரொமான்ஸ் செய்யாமல், அதன் மரியாதையை காக்கும் எழுத்து. லாஞ்சனைக்கும் லாஞ்சனையை தமிழ் வாசகர்களுக்காக கொடுத்திருக்கும் எழுத்தாளருக்கும் யாவரும் பதிப்பகத்தாருக்கும் எம் வாழ்த்துகள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“லாஞ்சனை” சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்:​எஸ். காமராஜ்
வெளியீடு:
யாவரும் பதிப்பகம்
விலை: 
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 புதியமாதவி, மும்பை.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *