நூல் : விசாரணைக் கமிஷன்
ஆசிரியர் : சா. கந்தசாமி
வெளியீடு : கவிதா வெளியீடு
பக்கங்கள் : 320
விலை : ரூ. 150
1998 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் சா.கந்தசாமியின் விசாரணைக் கமிஷன் என்ற இந்நூல். 1940 இல் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 2020 சூலை 31 -இல் இறந்தார்.
தங்கராசு – ருக்குமணி என்ற கணவன் மனைவியின் வாழ்க்கையே விசாரணைக் கமிஷன் நாவலின் கதைக்களம். தங்கராசு யாருடைய வம்பு தும்புக்கும் போகாத தான் உண்டு தன் வேலையுண்டு என வாழும் போக்குவரத்துத் துறை ஊழியர் – நடத்துனர். ருக்குமணி – பள்ளிக்கூட ஆசிரியை. கதை 1970-80 களில் நடப்பதுபோல் அமைந்துள்ளது.
கதையில் பெரிய அளவிலான திருப்பங்களோ, திடுக்கிடல்களோ ஏதுமில்லை. ஆயினும், கதைமாந்தர்களுக்கிடையிலான உரையாடல்களின் வாயிலாக நாவலினை சலிப்பூட்டாமல் நகர்த்திச் செல்கிறார். மனிதர்களின் மன இயல்புகளையும், தேவை கருதியே நட்பு பாராட்டும் உறவுகளையும், ஆபத்திற்கு உதவும் தோழமைகளையும் அடையாளம் காட்டுகிறார்.
நாவலின் மையப்புள்ளியாக தங்கராசு-ருக்குமணிக்கு அடுத்தபடியாக அக்கால அரசியலும் இடம்பெறுகிறது. மும்மொழிக் கொள்கை, தமிழகத்தில் திராவிட கட்சிகளின் செல்வாக்கு ஓங்குதல் ஆகியவற்றில் ஆசிரியர் ஏனோ பெரும்பான்மை மக்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து உடையவராகவே நூலை வாசிக்கையில் உணர முடிகிறது. சாகித்ய அகாதமி விருது வாங்கிய கால கட்டத்தையும் இத்தோடு பொருத்தி பார்க்காமல் இருக்க இயலவில்லை.
இந்திராகாந்தி இறப்பு, எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்குதல் என பல அரசியல் தகவல்களும் நூலில் ஆங்காங்கே கதையோடு இயைந்து வருகிறது.
மேலும், பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டும் படாமல் நூலாசிரியர் ஆங்காங்கே தொட்டுச் செல்கிறார். வெகுசன மக்களை அரசியல்வாதிகள் தங்களின் சுயலாபத்திற்காக எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதனையும், அரசியல் பின்புலம் கொண்டோர் எல்லாத் துறைகளிலும் இருந்து கொண்டு வேலையே செய்யாமல் அடுத்தவர்களையும் ஏய்த்துக் கொண்டு இருப்பதையும் நூலில் பதிவு செய்துள்ள விதம் அருமை.
நூலில் ஓரிடத்தில் ருக்குமணியின் வீட்டிற்கு வரும் ஆசிரியை தேன்மொழி தங்கராசுவிடம், ”டீச்சருங்கதான் சார், உலகத்திலேயே மோசம்” என்பார். அதற்கு தங்கராசு, ”கண்டக்டர், டிரைவர் தான் மோசமுன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்” என்பார். ”இல்ல… இல்ல… டீச்சருங்கதான்” என்பார் தேன்மொழி.

இந்த வரிகளை வாசிக்கையில் எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் நடந்ததாய் கூறப்படும் செய்திதான் நினைவுக்கு வந்தது. எம்.ஆர்.ராதா அவர்கள் சினிமாத்துறையினர் பற்றியும், அவர்கள் அரசாங்கத்தை ஏய்ப்பது, போன்றவற்றையெல்லாம் பொது மேடைகளில் பேசுவது குறித்து ஒரு நிருபர் கேட்டபோது, ”ஆமாம். நான் அந்த துறையில் இருப்பதால் எனக்குதான் அவர்கள் செய்யும் தவறுகள் நன்றாக தெரியும். அப்படியென்றால் நான் தானே அதைப்பற்றி பேச வேண்டும்” என்று கூறியதாக படித்ததுண்டு. அதுபோல அவரவர் துறையினர் பற்றிய அபிப்ராயங்களையும், உண்மைகளையும் இவ்வரிகளில் உணர்த்தியிருப்பார் ஆசிரியர்.
தனக்கு தொடர்பே இல்லாத ஒரு சம்பவத்தால் தங்கராசு காவல்துறையினரால் தாக்கப்பட்டு இறந்து விடுவதோடு நாவல் முடியும். ஏனோ அந்த அத்தியாயங்களை வாசிக்கையில் சமீபத்தில் தமிழகத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. கடைசி அத்தியாயங்கள் விறுவிறுப்பாக நகர்கிறது.
வாசிப்பில் தொய்வு ஏற்படுத்தாமல் பலதரப்பட்ட மனிதர்களையும், அவர்களின் வாழ்வியலையும் உணர்த்தும் விதமாய் நாவல் நகர்வதால் சோர்வின்றி வாசிக்கலாம்.
வாசிப்பும், பகிர்வும்
திவாகர். ஜெ

