அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்து வந்த பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் தனது செயல்பாடுகளின் போது கண்டும் கேட்டும் அனுபவித்தும் பெற்ற கல்விசார் அனுபவங்களை முன்னிறுத்தி எழுதியுள்ள பல நூல்களில் சிறப்பான நூல் இது “ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்”.
31 பக்கங்கள் மட்டுமே கொண்டுள்ள இச்சிறிய நூலில் நமது கல்வித்துறையில் உள்ள சிக்கல்களைப் பற்றியும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் உள்ளே மறைந்துள்ள திறமைகளையும், அவற்றை எவ்வாறு வெளிக்கொண்டு ,வருவது என்பதை பற்றியும் அதற்கான தீர்வுகளையும் மிக அழகாக எழுதியுள்ளார்.
ஆசிரியர்களிடமும், சமூகத்திடமும் மிகுந்த ஆற்றான்மையோடு அவர் கேட்கும் கேள்வி ” நாம் கொண்டாடும் மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்கள் ..வெற்றி எப்போதும் நம் பார்வையை மறைக்கின்றது… தோற்ற மாணவர்களை நாம் பார்ப்பது எப்போது? தோற்ற மாணவர்களிடம் உரையாடுவது எப்போது???”
ஆசிரியர் அனைவரும் மிகவும் ஆழ்ந்த சிந்தித்து விடை காண வேண்டிய கேள்விகள் இவை. கட்டாயம் சிந்திக்க வேண்டும் என்பதை விட அது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை மற்றும் பொறுப்புணர்வு.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணங்களை கூறுகிறார் அதில் மொழியை பொறுத்தவரை புத்தகங்கள் வாசிப்பு மொழியில் இருக்க வேண்டும் அதுவே மாணவர்களை வாசிப்பை நோக்கி ஈர்க்கும் என்கிறார். குறிப்பாக ஆங்கிலத்தில் பேசும்போதும் எழுதும் போதும் வெளிப்படையான எளிய மொழியை பயன்படுத்துங்கள் எழுத்து குறைவான வார்த்தைகளையும், வாக்கியங்களையும் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான கருத்தாகும். ஏதோ பெரிய பெரிய வார்த்தைகளையும், யாருக்குமே புரியாத சொற்களையும் பயன்படுத்தி தனது ஆங்கில புலமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை .
ஒவ்வொரு குழந்தையும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிறார். அதற்கு நம் பார்வை மாற வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் பாராட்டப்படவும் வேண்டும் என்கிறார். இந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ள மேலும் சில முக்கியமான கருத்துக்களை அவரது வார்த்தைகளிலேயே குறிப்பிட விரும்புகின்றேன்…
*** இந்தியாவில் கல்வியில் முதல் வரிசையில் நிற்கிறது தமிழ்நாடு. ஆனால் எளிய வீட்டு பிள்ளைகள் படிக்கும் அரசு பள்ளிகளின் நிலை என்ன? சமீபத்திய சர்வேயின்படி ஏறக்குறைய 3000 அரசு பள்ளிகள் ஒரு ஆசிரியர் பள்ளிகள், மீதமுள்ள அரசு பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகள், ஆசிரியர்கள் ஐந்து வகுப்பறைகள் சமாளிக்கிறார்கள். நேசிப்பதற்கு நேரமில்லை சமாளிப்பது.. நேசிப்பது.. எதை செய்ய??
*** கண்டுபிடிப்பதா? குழந்தைகளை சத்தம் போடாமல் கவனிப்பதா? ஆசிரியரின் வேலை தான் என்ன? குழந்தைகளின் வாயையும் மனதையும் திறப்பதா? அல்லது சைலன்ஸ் சைலன்ஸ் என கத்துவதா??
***கனவுகள் யாருக்கும் சொந்தமில்லை.
*** தேவை என்ன கவனிக்கும் கண்கள்.. பிரியமுத்துடன் கவனிக்கும் கண்கள். திணிப்பது ஒரு சுமை. கவனிப்பது ஒரு ஊக்கம்.
***குழந்தைகளை திருத்த உங்கள் வழிக்கு கொண்டுவர நீங்கள் செய்யும் முயற்சியை விட, பாதையை தேர்ந்தெடுக்க நீங்கள் தரும் சுதந்திரம் மேலானது .
***குழந்தையை கண்டுபிடிக்க முதல் தேவை “இருக்கும் நிலையிலேயே அவர்களை ஏற்றுக் கொள்வது” தான்.
***வகுப்பறை வாய்ப்பின் களமாக இருக்க வேண்டும். குழந்தைகள் உரையாடுவதற்கான வாய்ப்பு ,குழந்தைகள் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, அது நிகழ்ந்தால் அதுவே வகுப்பறையின் அற்புதம்.
*** உரையாடலில் பங்கேற்கும் ஆசிரியருக்கு தேவையானது சாமர்த்தியம் அல்ல. அன்பும் பொறுமையும் தேவையானவை. உண்மையான அன்பு. உண்மையான பொறுமை. நாடகமல்ல .
***மாற்றம் காண மனம் மிக விரும்புகிறது. சில மாற்றங்கள் மனிதர்கள் திட்டமிட்டு உருவாக்கியவை .சில மாற்றங்கள் கால ஓட்டத்தின் விளைவுகள்.
*** வகுப்பறையில் கடைசி பெஞ்ச் மாணவரும் இனி பேசக்கூடும். ஆசிரியர் கண்களின் கவனம் இனி குறுகி இருக்காது, வகுப்பறை முழுவதும் பரவும். இதுவரை விழாதோர் மீதும் இனி விழக்கூடும்.
விமர்சனம் இல்லாத இடம் எது? ப வடிவ வகுப்பறை மீதும் விமர்சனம் உண்டு. அதில் உள்ள நிறை குறைகளை அகற்றி குழந்தைகளுக்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது மிக முக்கியம்.
*** வகுப்பறை எதார்த்தத்தை பேச வேண்டும். எதார்த்தத்தை புரிய வைக்க வேண்டும்.
** இந்தியாவின் விமோசனம் வகுப்பறையின் கையில்தான் உள்ளது. என்று இந்நூலை முடிக்கின்றார் .
ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் வகுப்பறை உள்ளடக்கத்தில் நிகழ வேண்டிய மிக முக்கியமான மாற்றம் என்கின்றார்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஒவ்வொரு குழந்தையும் கவனிக்கப்பட வேண்டும் கண்டுபிடிக்கப்பட வேண்டும் |
| ஆசிரியர்: | ச. மாடசாமி |
| வெளியீடு: | |
| விலை: | ₹.30 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 யோகப்பிரியா வேம்பயன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

