புத்தகம்: ச. முருகபூபதியின் “கதை சொல்லும் கலை”கதை காலத்தின் தொல்படிவம். கதையைச் சொல்வதும் கேட்பதும் வெறும் பொழுதுபோக்கல்ல, அது எல்லோரையும் உயிர்ப்பிக்கும் சடங்கு, ஒரு வாழ்முறை. கதையின் மூச்சுக் கொண்ட தொல்சடங்குகள் குறையக்குறைய கதை சொல்வதும் கேட்பதும் அரிதாகிக் கொண்டு போகிறது. கதையைச் சொல்லும்போது சில நேரம் கதைக்குள்ளிருந்த சில உருவங்கள் வெளிப்பட்டுச் சொல்பவனையும் கேட்பவனையும் விழுங்கிவிடுமென்ற பயமிருந்தன. கதை சொல்லலில் ஈடுபடுபவர்கள் நிறையப் பகிர்ந்துகொள்வதும் நெகிழ்ந்துபோவதும் சேகரித்துக் கொள்வதுமுண்டு. கதை சொல்லல் என்பது சுவாசத்தைப் போல இரத்த ஓட்டத்தைப் போல மனித இயல்பில் பிரிக்க முடியாததாக இருக்கிறது.

ஆதியில் கல் ஏடுகளில் பதிக்கப்பட்ட உருவங்கள், பூர்வக்காடுகளில் மரித்துப்போன டைனோசர்கள், மூதாதையர்கள் என எவரும் கதைகளிலேயே மறு உயிர் கொள்கிறார்கள். பழங்குடிகள் தங்கள் உடல்களில் குத்திய பச்சைக் குறிகளுக்குள் கதையின் தாதுக்களைச் சுமந்திருந்தனர். முன்னொரு காலத்தில் இலைச்-சருகுகளில் பனையோலைகளில் கதைகள் எழுதி வாழ்ந்த பித்த-னொருவன் இருந்தான். லட்சக்கணக்கான கதைகளைத் தனது பைசாச மொழியில் எழுதியிருந்தான். அவற்றையெல்லாம் உலகத்தின் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரபஞ்சத்திலுள்ள குழந்தைகளெல்லோரும் படித்திட வேண்டு-மென்பதே அவனது தீராத ஆசை. அவ்வாசையோடு தனது கதைகள் அனைத்தையும் பெரிய மூட்டையாகக் கட்டி தனது தேசத்தின் ராஜாவைச் சந்திக்கக் கிளம்புகிறான். வல்லமைபெற்ற ராஜாவைச் சந்திக்க உலகின் மீது காதல் கொண்டு கதைசொல்லியையும் கதை-களையும் மறுக்கிறான். கதைசொல்லியே அக்கதைகளை மொழி-பெயர்க்க ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சி வேண்டுகிறான். கோபம் கொண்ட ராஜா கதைசொல்லியைப் பார்த்து “உன்னப் பார்த்தால் பன்றியைப்போல தோற்றமளிக்கிறாய் வெளியே போ’’ என்கிறார். கதை சொல்லியோ சட்டென உங்களைப் பார்த்தால் புத்தரைப் போன்றிருக்கிறீர்கள் என்று பதில் சொன்னதும் ராஜா “நான் உன்னை அவமதித்திருக்க நீயோ இப்படிக் கூறுகிறாயே? என்று சொல்ல கதை சொல்லியோ “பன்றிக்கு, தான் பார்ப்பதெல்லாம் பன்றியாகவே தோன்றும். புத்தனுக்குப் பார்ப்பதெல்லாம் புத்தனாகவே தோன்றும் என்று சொன்னதும், கதை சொல்லி அரண்மனையைவிட்டு வெளியேற்றப்படுகிறான். மொத்த சோகத்துடன் கதை மூட்டைகளுடன் வனத்திற்குள் வந்தவன் தன் கதைகள் படிக்கப்படாமல் மொழிபெயர்க்கப்படாமல் போய்விடுமோ என்ற வேதனையில் வனத்தில் உள்ள மரங்கள் ஜீவராசிகளுக்காக ஒவ்வொன்றாகப் படித்துப் படித்து எரிக்கின்றான். ஒவ்வொரு கதையும் எரியும்போது கதையின் வாசனை வனமெங்கும் பரவுகிறது. கதை வாசனையறிந்த விலங்குகளும் பட்சிக்கூட்டங்களும் கதை சொல்லியைத் தேடிவந்து சுற்றி உட்கார்ந்து அழுதபடி கதை கேட்கிறது. பாதிக்குமேல் எரிந்த கதைகளின் வாசனை அரண்மனைக்குள் நுழைய மனம் உருகிய ராஜா கதைசொல்லியைத் தேடி ஓடி வருகிறான். அவனிடம் கெஞ்சி எரிப்பதை நிப்பாட்டி கதைகளை உலகத்தின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திட ஏற்பாடுகள் செய்கிறான். அப்படி எஞ்சிய கதைகளே இன்று நமக்கு படிக்கக் கிடைத்திருக்கின்றன. எரிந்த கதைகளைக் கேட்ட வனமரங்களும் விலங்குகளும் பட்சிகளும் பிரபஞ்சத்தை விடாது உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

கதையைப் பற்றிய ஒரு கதையை ஐந்தாம் வகுப்பு மாணவி சொன்ன கதையொன்று இப்படித் துவங்குகிறது. “கதையோ, கவிதையோ தெரியாத ராசா ஒருத்தனுக்கு ஒரு கவிஞன் தன் அரசவைக்குத் தேவைப்பட்டது. பக்கத்து நாட்டில் கிடைத்த கவிஞனை தன் அரசவையில் வைக்க அவனோ கவிதையை மறந்து அரண்மனை தங்க ஆபரணங்களைத் திருடுகிறான். ராசாவோ அவனை அனுப்பி வேறு ஒரு கவிஞனை வைக்க அவனும் திருடுகிறான். கடைசியில் தன் அரசவைக்குக் கவிஞர்களே கிடைக்காமல் அரசனே கவிதைகளும் கதைகளும் எழுதத் தொடங்குகிறான். பிறக்கும் குழந்தைகள் முதற்கொண்டு கதைகளால் வளர்ப்பதே நம் மரபு.

விவசாயிகள் தங்களின் கனவுகளைப் பதிவு செய்ய கதைகளை வார்த்தைகளாய் திருகி பரிமாற்றிக்கொள்ள, கதையின் கதவுகள் திறந்து கொண்டன. விவசாயச் சமூகமாக இருந்த நாம் விதைப்பு, அறுவடைக் காலங்களில்கூட கதைப்பாடல்களாலேயே வேளாண் வாழ்க்கையைப் பின்பற்றினோம். இன்றும் அவை தொடரப்பட்டு வருகிறது. அது போலவே திருவிழாக்களும் சடங்குகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துச் சடங்குகளிலும் எண்ணிக்கையற்ற கதைகளே ஒளிந்திருக்கின்றன.

கதை வழியே கதைகள் சுமந்த பாடல்கள் வழியேதான் நம் குழந்தைகள் உலகை அறிந்துகொள்கின்றனர். கதைவெளிதான் தங்களுக்கான வாழ்விடம் என்பதைத் தங்களையறியாமல் நம்பிக்கை கொண்டுள்ளனர். குழந்தைகள் சந்திக்கும்போது தங்களுக்குள் கதைகளையும் கதைகள் நிரம்பிய பொம்மைகளையும் மற்றும் அவை சார்ந்த பொருட்களையும் உயிர்ப்பித்து பரிமாறிக்கொள்கிறார்கள். கதையில்லா பொருட்களைத் தங்களிடத்தில் வைத்திருப்பதில்லை. அடிப்படையில் எந்தவொரு கதையையும் தங்களுக்குள் உறைந்துவிடாமல் எல்லோருக்குள்ளும் பயணிக்கச் செய்கின்றார்கள். குழந்தைகள் கதையின் வாக்கியங்களைப் பூச்சிகளாக புற்களாக, செடிகொடிகளாகத் தம் சித்திரத்தால் எழுதிக்கொள்கிறார்கள். உதிரமெங்கும் பரவிய கதைகள் விரல்வழி பாத்திரங்களாகி அபிநயம் செய்தன.

கதைகள் எத்தனை ஆயிரம் முறை எத்தனை ஆயிரம் வருடங்கள் சொல்லப்பட்டபோதும் அதற்கு வயதே ஆவதில்லை. பதிலாகக் கதை இன்று பிறந்த செடியைப் போல தனியாக அதிசயமும் ஈரமும் கொண்டிருக்கிறது. தெரிந்த கதை என்றபோதும் கதை ஒன்று போல் சொல்லப்படுவதில்லை. மாறாகக் கதை சொல்லப்படும் சூழல், சொல் முறையில் ஒவ்வொரு முறையும் புதுக்கதையாகவே சொல்லப்படுகிறது.

கதை ஒரு ரகசியக் கனவு போல் இருந்தது. ஒரு கதையைச் சொல்வதின் வழி ஓர் இனக்குழு தனது வேட்கையை கொண்டாட்டங்களை, கசப்பை, வெறியை, கனவுகளை வெளிப்படுத்துகிறது. கதைகள் நிரம்பிய சமூகத்திலே உறவு முறை சீர்கெடாமல் இருந்தது. இன்றும் பல்வேறு இனக்குழுக்கள் சிதைவு பெறாமல் தொடர்வதற்கான காரணம் அவர்கள் பின்பற்றும் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் கதைகளும் அவை சார்ந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் இருப்பதாலேயே அவ்வாழ்க்கை தொடர்கிறது.

கனவுகளே குழந்தைகளுக்கான கதை நிலமாக விளங்குகிறது. அப்படியொரு கனவின் கதையைக் குழந்தைகளிடம் பலமுறை நான் சொல்ல நேரிட்டது. அக்கதை “தனது நாட்டில் செல்வங்கள் கொழித்திருக்க மக்களிடமோ எந்த கனவுகளும் வராது தூக்கத்தில் நித்தமும் உழற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த அரசர் மக்களின் குறைகளைக் கேட்கும்போது தங்களுக்கு கனவுகளே வேண்டுமென்கிறார்கள். தனது அரசப் பிரதிநிதிகளோடு ஆலோசித்து கனவுகளை சேகரிக்க முடிவு செய்கின்றார்கள். அப்போது ராஜதந்திரியான இளவரசன் அண்டை நாடான பாலைவன தேசத்தில் தீராத வறுமை இருந்தும் வற்றாத கனவுகளும் கதைகளும் சிறந்தோங்குவதாகக் கூறுகிறான். உடனே சிறு படைகளை அனுப்பி தூங்கிக்கொண்டிருக்கும் மக்களிடம் கனவுகளைத் திருடத் துவங்குகின்றார்கள். கனவுகளுடன் வெகு அழகாக தூங்கிக் கொண்டிருக்கும் பாலைவனதேச மக்கள் ஒவ்வொருவரிடமும் மலர்களைப் பறிப்பதுபோல கனவுகளைத் திருடி நிறைய மூட்டைகளாகக் கட்டி வருகிறார்கள். கனவுகளைத் திருடத்திருட அம்மக்களுக்கு கனவுகள் அதிகரித்துக்கொண்டே போகிறது. எவ்வளவு அதிசயமான கனவுகளையும் நம் நாட்டிற்குக் கொண்டு வந்து வயல்களில் தூவி தாவரங்களாக, ஆற்றில் தூவி மீன்களாக, இரவுகளில் ஆகாயத்தில் தூவி நட்சத்திரங்களாக நிலவாக, காற்றில் ஊளையிடும் சப்தமாக மக்களின் பாடல்களாக தினம்தினம் கனவுகள் புதிதுபுதிதாக முளைக்கத் துவங்குகின்றன.’’ இக்கதையினைக் குழந்தைகள் நாடகமாக நிகழ்த்தும்போது ஒவ்வொரு கனவினையும் நிகழ்த்திக் கொண்டிருந்தனர். கனவுகளுக்கு அவர்களே உருவம் கொடுத்து நாடகத்தைத் தங்களுக்கான நிலமாக பத்திரப்படுத்திக்கொண்டனர்.

3ஆம் வகுப்பு மாணவி ஒருத்தி சொன்ன ஒரு கனவுக்கதை “ஒரு ஊரில் ஒரு கொட்டு இருந்துச்சாம். ஒருத்தன் அத வாசிச்சானாம். அழகான இசை வந்ததும் கொட்டுக்குள்ள போய் உள்ளேயே இருந்துக்கிட்டானாம்.’’ மற்றொரு மாணவன் சொன்ன கதை “ஒருத்தன் கண்ணாடி டம்ளரில் ஜூஸ் குடிக்கும்போது ஜூஸைத் தொட ஆசைப்பட்டு கண்ணாடி டம்ளரை தோலை உரிப்பது போல உரிச்சி கீழே போட்டுட்டு ஜூஸைத் தொட்டு குடித்ததும் முழிச்சிட்டானாம்.’’ கதைகளே மனித இருப்பின் உயிர்நாடி என்றிருக்கிறது நமது நிலம். கடவுளுடன் பேசுவதற்குக் கதையே பாஷையாக இருப்பதாக நம்பப்பட்டது.நம் கவன வட்டத்திற்கு வெளியே ஆகாயத்தோடு, மரங்களோடு பூமியோடு பட்சிகள் விலங்குகளோடு குழந்தைகள் தம் மழலை வழியும் கதைமொழியோடு எப்போதும் உரையாடிக்-கொண்டிருப்-பார்கள். திசைகளெங்கும் குழந்தைகளுக்காக முடிவற்றுக் காத்திருப்பது மகாஉயிர்கொண்ட கதைகளின் ரேகைகளே.

குழந்தைகளின் மனது புரிந்திராத பெரியவர்களாகிய நாம் அவர்கள் அழும்போது புரிய முயற்சிக்காமல் இருட்டுக்குள் தூக்கி ஓடுவோம். இருட்டு பயத்தில் அமைதியாவார்கள் என்பது நமது நம்பிக்கை. அவர்களோ அவ்விருட்டிற்குள் அதிர்ச்சியூட்டும் கதைகளின் துவக்க நொடிகளைப் பார்த்துவிடுகின்றனர். நாமோ அந்த இருட்டுக்கு பூதம், பேய், முனி, மோகினி என பலபெயர்களில் கதைகளை உலவவிடுகிறோம். குழந்தைகள் நம்மிடம் கதைகள் அடர்ந்த நொடிகளையே வேண்டுகின்றனர்.

கதைகள் கேட்பதில் மனிதர்களுக்கு இருக்கும் விருப்பம் போலவே பலமடங்கு விருப்பம் கடவுளுக்குமிருக்கிறது. சிவனிடம் பார்வதி தான் ஒருபோதும் கேட்டு அறியாத கதையொன்றைக் கேட்க விரும்பினாள் என்று நம்பப்படுகிறது. சிவன் எந்தக் கதையைச் சொல்லத் தொடங்கும்போதும் அது முன்பே தனக்குத் தெரிந்த கதை எனச் சொல்கிறாள். வேறு வழியின்றி அவள் கதையை அவளிடமே சொல்லத் தொடங்குகிறார்.

இது தான் கேட்டறியாத கதை என வேட்கையோடு கேட்டதாகவும் பாதியில் கதையைச் சொல்லி முடித்துத் தொடர முடியாமல் சிவன் தனக்கும் இதற்கு மேல் தெரியாது என எழுந்து போய்விட்டதாகவும் ஒரு கதை இருக்கிறது. முடிக்கப்படாத கதைகள் தான் கதைகள் உயிர்த்திருப்பதற்கான எளிய வழி. குழந்தைகளுக்கு மட்டுமே உலகத்திலுள்ள எந்த உயிரினங்களைப் பற்றியும் பொருட்களைப் பற்றியும் சுயமான கதைகளை உருவாக்கும் குணம் இருக்கின்றது. அப்படிப்பட்ட கதை முடிக்கப்பட்டும் முடிக்கப்படாமலும் புதுப்புது கதை கண்டுபிடிப்புக்களைத் துவங்கிவிட்டுக்கொண்டே செயல்படுகிறார்கள். நாம் எவருமே அந்த அதிசய கணங்களைப் பதிவு செய்வதோ கவனிப்பதோ கிடையாது. முடிக்கப்படாத கதைகளுடன் பூமியெங்கும் அலைவுறும் தேவதைகள் குழந்தைகள் மட்டுமே. குழந்தைகள் தாங்கள் விளையாடும் பொம்மைகளுக்கோ பொருட்களுக்கோ எப்போதும் ஒரு பெயர் அல்லாது தினம் ஒரு பெயர் சூட்டி பல பெயர்களோடு கதைபேசி உறவுகொண்டிருக்கும். அவர்கள் தம் உலகை சந்தோஷத்தாலும் மந்திரச் சிரிப்புகளாலும் நிரப்பிக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு முறை குழந்தைகளிடம் வேலை செய்யும்போது ‘சிரிப்பு’ என்ற தலைப்பில் நாடகம் நிகழ்த்த வேண்டிய சூழல் உருவானது. அப்போது நான் சொன்ன கதை “ஒரு நாட்டின் மன்னன் சிரிப்பதற்குத்  தடைவிதித்து தடையை மீறுபவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்படுமென்கிறான். மக்களோ வழியின்றி கட்டுப்பட்டு சந்தடியற்ற இடங்களில் மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் அடக்கி வைத்த சிரிப்புக்களையெல்லாம் சப்தமின்றி சிரித்துக் கொள்கிறார்கள். சிரிப்புத் தடைச் சட்டத்தை மக்கள் மீறுமெனக் கருதிய மன்னன் சிரிக்காமலிருக்கும் பொது விரதத்தினைக் காவல் கண்காணிப்பில் ஏற்பாடு செய்கிறான். அப்பொழுது எவரும் சிரிக்காமலிருக்க காவலர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அடக்கிக்கொண்டிருக்கும் மக்களில் சிலர் “தண்ணீர் குடிக்கப் போறேன்’’ “ஒண்ணுக்குப் போறேன்’’ எச்சித்துப்பப் போறேன்’’ என்று பல சாக்குப்போக்குகள் சொல்லி அவ்விடத்தைத் தாண்டிப்போய் அடக்கப்பட்டவைகள் அனைத்தையும் சிரிப்பாகச் சிரித்து பின் சேர்ந்துகொள்கிறார்கள். இன்னொரு நாள் ஊருக்குள் ரகசியமாக தூரதேசத்திலிருந்து இரண்டு சிரிப்பு வியாபாரிகள் வருகிறார்கள். தனித்தனி கூட்டமாகச் சேர்ந்து மக்கள் அவனை நெருங்கும்போது மன்னனுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் சிரிப்பை வாங்காமல் ஓடிவிடுகிறார்கள். ஊரில் உள்ள பெண்கள் எல்லோரும் ஒன்றுகூடி அச்சிரிப்பு வியாபாரியிடம் திரவமாகவும், திடமாகவும் உள்ள அவற்றை வாங்கி திட்டம் தீட்டி, மன்னனுக்குப் பிடித்த கறிக்குழம்பில் சிரிப்பைக் கலந்து சமைக்கின்றார்கள். கொழுக்கட்டையில் வெல்லத்தோடு சிரிப்பையும் சேர்த்து வைக்கின்றார்கள். இப்படி உணவுப் பதார்த்தத்தில் சிரிப்பையும் சேர்த்துச் சமைத்து விருந்திற்கு மன்னன், மந்திரி, படைவீரர்கள் என எல்லோரையும் அழைக்கின்றார்கள். சிரிக்கா-மலிருந்த படைவீரர்களின் மந்திரிகளின் உடல்கள் இரும்பைப்போல விறைப்பாக இருக்கிறது. விறைத்த நடையில் எல்லோரும் பொது விருந்திற்கு  வருகிறார்கள். கொழம்பு ஊற்றும்போது சிரிப்பின் வாசனை அவர்களைத் துளைத்து பாடாய்ப் படுத்துகிறது-. சிரிக்காமல் இருந்த படைவீரர்களுக்கு எப்படி சிரிப்பதென்றே தெரியாமல் புதிதுபுதிதாகச் சிரிக்கிறார்கள். ஒரே சிரிப்புச் சத்தம். மன்னனும் மந்திரிகளும் எல்லோருமே சிரித்து உருளுகிறார்கள்.’’ சிரிப்புக் கதையினைக் குழந்தைகள் பலமுறை பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தியிருக்கின்றார்கள். இது பின்னர் பெரிய நாடகமாகவும் ஒரு கிராமத்தில் குழந்தைகளால் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.

சிரிப்பைப் பற்றி 4ஆம் வகுப்பு மாணவி சொன்ன கதை. இப்படி ஆரம்பிக்கும்: “ஒரு ஊர்ல சிரிக்கவே முடியாதவங்க மடத்துல கூடி ஒருத்தர ஒருத்தர் கிச்சங்காட்டிக்கிட்டே இருந்தாங்களா ஆனா யாருக்குமே சிரிப்பு வரலையாம். கடைசில கருப்பசாமின்னு ஒரு பய குர்ர்ன்னு ஒரு சிரிப்பு வார்த்தையை எல்லார் காதுக்குள்ளேயும் சொன்னதும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே இருந்தாங்களாம்.’’ நம் மரபில் கதையைப் பேசுவதற்கு நம்மிடையே கதையைத் தவிர வேறு உபகரணங்கள் இல்லை. இப்படி கதையைப் பற்றிய கதைகளே நம்மிடையே பல நூறு இருக்கின்றன. கதைகள் சிலந்திபோல எப்போதும் உதடுகளால் பின்னப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவை ஓயாது முடிவற்று நூற்கப்படும் கம்பளமாக விரிந்துகொண்டே செல்கிறது.

இன்றும் மழை வராத நம் கிராமங்களில் மக்கள் மகாபாரதக் கதைகளைக் கூட்டாக வாசிக்கும்போது மழை வரும் என்று நம்பும் பழக்கமிருக்கிறது. அதுபோலவே நல்லதங்காள் பாவைக்கூத்து நடத்துவது, வடமாவட்டங்களில் கூத்து நடத்துவது தென்-மாவட்டங்களில் நாடகம் நிகழ்த்துவது என கதைக்கும் மழைக்குமான பந்தம் பண்பாட்டோடு தொடர்புடையது.

உலகில் கதை சொல்லப்படுவதற்குச் சான்றாக அமைந்த ஒரு கல் சிற்பமொன்று அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. அதுவே முதல் கதையாம். அது ஆதிகிரேக்கச் சிற்பமென்று சொல்லப்படுகிறது. அதில் ஒரு முதலையின் மீது குரங்கு அமர்ந்து செல்வதாகவும் அக்கதை முதலை _ குரங்கு கதைதான் என்றும் பண்பாட்டு மொழியியல் அறிஞர் ஏ.கே. ராமானுஜம் சொல்கிறார். இக்கதைதான் இன்று வரை சான்றுகளுடன் இருக்கக்கூடிய தொன்மையான கதை என்கிறார்கள். கதைகளின் பாதத்தடத்தைக் காண்பது அதிசயமே. இப்படி கதையின் இருப்பு நம் மரபின் ஜீவனாக உயிர்த்திருக்கிறது. உலகெங்கிலுமுள்ள கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாய்மொழிக் கதைகள் மற்றும் நாடோடிக் கதைகளின் மந்திரத்தன்மையை வணங்கி அதன் ரேகைகளைத் தம் படைப்புகளெங்கும் பதித்து நவீனமாக்குகின்றனர்.

கதைகளின் தாயகமாக விளங்கிய இந்தியாவிலிருந்தே கதை சொல்லும் கலையை கற்ற பாரசீகர்கள் அதனை அராபியர்களிடையே பரப்பி பின் அவை மத்திய கிழக்குப் பிரதேசங்களெங்கும் பரவி பூமிமுழுக்க முளைத்ததாக ஒரு கதையுண்டு.கி.பி.6ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் குணாத்தியர் என்ற மாகவி தன் ரத்தத்தை மையமாகக் கொண்டு பைசாச பாஷையில் ஏழு லட்சம் கிரந்தங்கள் அடங்கிய ஒரு பெருங்கதையைப் படைத்தார். அதற்கு ‘பிருகத்கதை’ எனப் பெயரிடப்பட்டது. கதைசொல்லல் என்பது உயிரியல் தன்மையின் ஒரு பகுதியாகத் தவிர்க்க இயலாதிருக்கிறது. நமது கதைகள் முடிந்த பிறகும் நம்மில் ஒரு பகுதியை உயிரோடு வைத்திருக்கின்றன.

உலகளவில் அறியப்பட்ட 1001 அரேபிய இரவுகள் எனும் கதையில் கதைபோடும் ஸீரசாத் தனக்கு விதிக்கப்பட்ட மரண-தண்டனையைக் கதை சொல்லலின் மூலமே ஒத்திப் போடுகிறாள். தண்டனை விதித்த மன்னன் கதைகளுக்கு அடிமையாகிறான். இங்கு கதை சொல்லல் நிஜ மரணத்திற்கெதிராகச் செயல்படுகிறது.

உலகின் அனைத்து முதிர்ந்த பாறைகளில், குகைகளில் கீறப்பட்ட எழுத்துக்களை ஆதிமனித கோட்டோவியங்களைக் கதைகளின் பிறப்பிடம் எனக் கொள்ளலாம். நம் மரபில் கோவில்-களில், சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்களிலும் தூண்கள் மற்றும் சிற்பங்களிலும் படைக்கப்பட்ட படைப்பாக்கங்களிலும் ஜொலிப்பது கதைகளின் உயிர்நாடியே. நம் இதிகாசப் புராணக் கதைகளின் பாத்திரங்கள் நம் கோயில்களில் இப்படி பல்வேறு உருக்கொண்டிருக்கின்றன.

நம் மரபில் சிகிச்சையளிப்பதுகூட கதைக்குணம் கொண்டது. உதாரணமாக காணிக்காரர்கள் எனும் பழங்குடி மக்களில் இன்னும் தீராத நோயை குணப்படுத்த கொக்கரை எனும் அடங்கு வாத்தியத்தை வாசித்தபடி நோயாளியைக் கிடத்தி சாற்றுப்பாடல்கள் பாடுவார்கள். பின்னர் அந்நோயாளியைத் தண்ணீர் படாத இடத்தில் ஏழு நாள் வைத்திருப்பார்கள். சிகிச்சைக்குப் பின் அவனது உடல் புது மண்ணால் செய்யப்பட்டிருக்கிறதென்பது நம்பிக்கை. ஏழு நாளுக்குள் தண்ணீர் பட்டால் கரைந்துவிடுமென்று நம்பப்படுகிறது. அதுபோல் முதுவ பழங்குடிகளில் நோயாளியை குணமாக்க முதுவப்பெண் பாடலுடன் வெறிகொண்டு ஆடி தன் நாவால் நோயாளியின் உடலெங்கும் எழுதி முடித்தபின் அவன் குணமாகிறான். இப்படிக் கதையானது நம் உடலையும் ஊடுருவிச்செல்கிறது.

ஒரு குறிப்பிட்ட பிராந்தியக் கதைகளின் மூலம் அப்பிரதேச மக்களின் வரலாறு, சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வரலாறுகளை எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இவைபோல நம் பண்பாட்டு நிகழ்த்துக் கலைகளில் புராணக் கதைகளைப் பேசும் கதாகாலட்சேபம், சிறுதெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் வில்லுப்பாட்டு, இராமாயணம், மகாபாரதக் கதை பேசும் தெருக்கூத்து, ஊர்க்கதைகளையும், புராணக்கதைகளையும் சொல்லும் பாவைக்கூத்து, பொம்மலாட்டம், குழந்தைகளை ஆறுதல்படுத்தும் தாலாட்டுப் பாடல், மணமான தம்பதியர்களின் திருமண நலுங்குப் பாட்டு, மழை வேண்டி நிகழ்த்தப்பெறும் முளைப்பாரி, பஞ்சத்தைச் சொல்லும் பஞ்சகாலப் பாட்டு, கும்மிப் பாடல்கள் மற்றும் ஒயிலாட்டப் பாடல்கள். இவை தவிர கோயில்களில் அம்மன் வழிபாடு பற்றிய பம்பை உடுக்கையடிப் பாடல்கள், குறிசொல்லிகள், சாமியாடிகள் மற்றும் இறப்பு வீட்டின் ஒப்பாரி என அனைத்து மரபுக்கலைகளின் உயிர் மூச்சாய்ச் செயல்படுவது கதைகளும் கதை சொல்லலுமே.

இன்று ஊர்தோறும் அரிதாகிவரும் பூம்பூம் மாட்டுக்காரன், குடுகுடுப்பைக்காரன், பகல்வேடம், சிகிச்சையளிக்கும் குறிசொல்லிகள்,  மந்திரவாதி என இவர்களது கலையின் செயல்திறன் அனைத்திற்குள்ளும் ஊடாடி நிற்பது கதையென்ற ஜீவவிதைகளே. இன்றும் கிராமம்கிராமமாக சாமத்தில் வரும் பூம்பூம் மாட்டுக்காரன் ஒவ்வொரு வீட்டுமுன் நின்று அக்குடும்பத்தின் கடந்த _ நிகழ்கால மற்றும் எதிர்காலக் கதைகளைச் சொல்வதை குழந்தைகளும் பெரியவர்களும் கூட ஆவலோடு கேட்டுக்கொள்வது இப்பவும் தொடர்கிறது. இப்படி கதைகளோடு ஊருக்குள் நுழையும் பூம்பூம் மாட்டுக்காரனின் வருகையை நாய்கள்கூட வாய்கட்டிக் கேட்கும் எனச் சொல்வதுண்டு. இப்படி நம் பண்பாட்டின் மரபுக் கலைவடிவங்களுக்குள்ளெல்லாம் கதைகளும் கதை சொல்லலும் அலைவுறுவது எதேச்சை. இன்றும் நாம் கதையை எதிர்கொள்ளும் போது கதையின் பகுதியாக நாம் மாறிவிடுவதோடு, கதை நம்மையே தன்னுள் சுருட்டிக்கொண்டு விடுவதும்தான் மரபான கதை சொல்லலின் விளக்க முடியாத விந்தை.

முன்னர் நம் மக்கள் விவசாயம் இல்லாத காலங்களில் தம்மை வேறொரு பாத்திரமாகப் புனைந்து பல கதைகளோடு பகல்வேடமிட்டு வாழ்ந்த மரபு நம்மிடம் உண்டு. அப்படிப்பட்ட பகல் வேடத்தில் திருடர்களாகப் போய் திருடுவதும் உண்டு. அகப்படும்போது “பகல்வேடதாரிநான்’’ என்று சொன்னால் விட்டுவிடுவார்கள். இப்படி நம் முன்னோர்கள் கதைகளைக் காலச்சூழலுக்கு ஏற்றாற்போல் விரும்பிய வடிவங்களில் நிகழ்த்திக்கொள்ள இடமிருந்தது.

தொடரும் யுத்தங்களால் குருடாக்கப்பட்ட தாவரங்களும், மலர்களும் பதற்றங்களுடன் குழந்தைகளின் கனவுகளைப் பற்றிக் கதைகளாக உலவுகின்றன. போர் விமானங்களும், துப்பாக்கிகளும், ஏவுகணைகளும் வீழ்த்திய பொம்மைக் கூட்டங்களும், ம்யூசியங்களும், நூலகங்களும், எண்ணெய் மூழ்கிய கடல் பட்சிகளும் கதைகளில் வீறு கொண்டு மறு உயிர்பெறுகின்றன. சரித்திரத்தில் மறைக்கப்பட்ட அனைத்துச் சம்பவங்களும் சொல்கதைகளில் உலவிக் கொண்டுள்ளன.

தொலைக்காட்சிகளில் வரும் கார்ட்டூன்களையோ, விளம்பரங்களையோ திரைப்படங்களையோ குழந்தைகள் அப்படியே சொல்வதில்லை. அவர்களுக்கு பிடித்த வகையில் மறுபுனைவு செய்தே தங்கள் சகதலைமுறைகளிடம் பரிமாற்றிக்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அவை வேறு புதுக்கதைகளாக உருமாறியிருப்பதை நாம் பார்க்கமுடியும்.

ஒவ்வொரு யுத்தத்திலும் ஒரு தேசத்தின் பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆப்கான், ஈராக், இலங்கையென தொடரும் எந்த யுத்தத்தை எடுத்துக் கொண்டாலும் மியூசியம், நூலகம், பாமியான் புத்தசிலைகள் என பல வகைகளில் பண்பாட்டு அடையாளங்களை விநாசமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்நிலை தொடரும்போது வரும் சந்ததிகளுக்குப் பண்பாட்டைப் பின்பற்ற வழியேதும் இல்லாது போய்விடும். இன்னொரு அபாயம் இவ்வழிவுகளை நம் தொலைக்காட்சிகள் நமக்கு நேரிடையாகவே ஒளிபரப்புகின்றன. நம்மோடு நம் குழந்தைகளும் அக்காட்சியினை நூடுல்ஸ், ஸ்நாக்ஸ் கொறித்தபடி ஒரு விளையாட்டைப் பார்ப்பது போன்று உணர்ச்சியற்று நம்மைப்போல பார்க்கும் நிலை உருவாகி வருகிறது. இதுதான் நமக்கு கவலையளிக்கிறது. நம் அனைத்துத் தொலைக்காட்சிகளும் இந்த உணர்வு மழுங்கடிக்கும் வேலைகளை வெகு இயல்பாக செய்து கொண்டிருக்கிறது.

தொலைக்காட்சி சேனல்களின் படையெடுப்பினால் நம் மக்களின் கதை சொல்லும் மரபு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் குழந்தைகளின் கதை கேட்கும் மரபு அழிந்து வருவதாகவும் பரவலான ஒரு கருத்து உலவுகிறது. தொலைக்காட்சியில் வருவதை வேறு கதைகளாக்கி சொல்லித்திரிகின்றனர்.

அது முழு உண்மை அல்ல. எத்தனை சேனல்கள் வந்தாலும் நம் குழந்தைகளின் கதைத்தாகம் அதே வெப்பத்துடன் இன்றும் இருந்து வருவதைக் குழந்தைகளுடன் பழகும் எவரும் சட்டெனப் புரிந்துகொள்வர். பெரியவர்கள்தான் நாளும் அவசரமாகி வரும் தம் வாழ்வின் கதியில் கதை சொல்லவோ கதை கேட்கவோ விருப்பமும் அவகாசமுமின்றி ஓய்வான நேரமும் இல்லாதவர்களாக மாறிப்போனார்கள்.யுத்தகாலத்தில் கதையின், கதைசொல்லியின் முக்கியத்துவத்தைச் சொல்லும் இசபெல்லா ஆலண்டேயின் ஒரு நாவலில் கதைசொல்லி ஒருத்தி இப்படி வருகின்றாள் “கதைகள் சொல்வதையே ஜீவிதமாகக் கொண்ட பெண்ணொருத்தி தேசமெங்கும் அலைந்து மந்திரம், சாகசம், திகில், கொடூரம், யுத்தம், மோகம் என பல குணம் கொண்ட கதைகளைச் சொல்லித் திரிகிறாள். ஒரு நாள் யுத்தகளத்திலிருந்து ஒரு மெல்லிய வாளைப் போன்று கூர்மையான தோற்றத்துடன் வீரன் ஒருவன் இவள் எதிரே தோன்றி ஐந்து தங்கக் காசுகளை அவளிடம் கொடுத்து கடந்த காலம் ஒன்றை எனக்குத் தா. என்னுடையது கூக்குரலும் குருதியும் நிரம்பியது. அதை நீ பயன்படுத்தாது என்னைக் காப்பாற்றும் கதையொன்றை எனக்குத் தருவாயா’’ எனக் கேட்கிறான்.

கதைசொல்லியான அப்பெண்ணோ காயமேறி எதிரிகளின் வடுவேறிய வாளுடன் நிற்கும் அவனைத் தன் மடியில் கிடத்தி அவன் கண்களை உற்று நோக்கி கதை சொல்லத் தொடங்கினாள். யுத்த நிர்க்கதியிலிருந்து விலகி அபூர்வ வார்த்தைகளால் நாள் முழுதும் அவ்வீரனுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தாள். கதை சொல்லி முடிக்கும்போது விடிந்திருந்தது. அப்போது அவனது முகத்தைக் கண்டபோது அவனிடமிருந்து சோகம் விலகியிருப்பதைப் பார்க்க முடிந்தது. கதைகள் கேட்ட அவனது முகம் அமைதியும் வசீகரமும் பெற்று அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.

குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சியின் தொடர்கதைகள், விளம்பரங்கள், கார்ட்டூன்கள், சண்டைக் காட்சிகள், டூயட் காட்சிகள், பாடல்கள் என அனைத்து நிகழ்ச்சிகளும் வெளிப்படுத்தும் தன்மையில் சொல்வதை மறுப்பின்றி சுயசிந்தனைக்கு வாய்ப்பற்று அப்படியே ஏற்றுக்கொள்ளுதலுக்கே அதிக அழுத்தம் தருவதால் கற்பனைத் திறனை மழுங்கடித்துவிடுகிறது. ஆனால் கதை சொல்லுதல் அல்லது கதை சொல்லியிடம் உலவும் குழந்தைகள் கதைகள் குறித்து இடையிடையே உரையாடும் வாய்ப்புகள் இருப்பதால் கேள்விகள் கேட்பதும் கதையோடு ஒன்றிய விளையாட்டுக்கள் உருவாவது, பாடல்கள் உருவாவது எனப் பல்வேறு குழந்தைகளின் கற்பனாவெளிக்கு இட்டுச் செல்கின்றன. இவற்றை ஒருபோதும் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்குவதில்லை.

தினமும் தொலைக்காட்சியில் வரும் குழந்தைகளுக்காகக் குழந்தைகளே சந்திக்கும் நிகழ்ச்சியில்  அவர்களால் சுயமாக ஒரு போதும் பேச முடிவதில்லை. அதில் ஏற்கெனவே கற்பிக்கப்பட்ட கதைகள், பாடல்கள், விடுகதைகள், திரைப்பட வசனங்கள், கேள்விகள் என வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி சுழல்கிறது. கதை வெளியில் வாழும் குழந்தைகளால் மட்டுமே எந்தப் பொருள் குறித்தும், உயிர் குறித்தும், பிரபஞ்சம் குறித்தும் சுயமாக கதைக்கவோ விளையாடவோ முடிகிறது. கதை சொல்லும் கலைப் பாதை வழியே நிறுவப்பட்ட, திணிக்கப்பட்ட அறிவுலகைத் தாண்டி அல்லது றீஷீரீவீநீ-ஐ தாண்டிய எதையும் எதிர்கொள்ளும் விந்தை உலகிற்குள் குழந்தைகள் பிரவேசிக்க முடிகின்றது. வலிந்து கற்பித்தல் மற்றும் நீதி போதனைகளைச் சொல்லுதல் போன்ற விஷயங்கள் குழந்தைகளுக்கான மாற்று உலகை மழுங்கடிக்கவே செய்கின்றன. அவர்களது உலகு இசையும் லயமும் இணைந்தது.

இசை இல்லாத ஒரு செயல்கூட குழந்தைகளிடம் கிடையாது. பெரியவர்களாகிய நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். அறிவு புகட்டுகிறோம் என்று மெல்ல மெல்ல குழந்தைகளின் சங்கீத உணர்வுகளைக் குலைத்து வருகிறோம். குழந்தைகளின் சங்கீத உணர்வுகளைக் கதை சொல்லலின் வழியாகவே உத்வேகமளிக்க முடியும்.

வகுப்பறைக்குள் வரும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்குள் பேசவே பெரும் விருப்பம் கொள்வார்கள். காரணம் எல்லோரும் வெவ்வேறு ஊர்க்குடும்பத்திலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் பகிர்ந்துகொள்ள எவ்வளவோ கதைகள் இருக்கின்றன. பேசுவதற்கான சுதந்திரத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு நாம் தரவேண்டும். நாம் சொல்வதை மட்டுமே அவர்கள் கேட்கவேண்டுமென நினைக்கிறோம். வகுப்பறைகளை முதலில் உரையாடல்களுக்கான வெளியாக மாற்ற வேண்டும்.

இந்திய கலாச்சாரத்தின் ஜீவ ஊற்றான கதை மரபை நம் குழந்தைகள்தாம் இன்றும் காத்து வருகின்றனர். ஆனால் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்களின் நெருக்குதலால் அவர்களது மனது அலைக்கழிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கும் (ஷிமீறீமீநீtவீஸீரீ ரிஸீஷீஷ்றீமீபீரீமீ) மனது மறைந்துகொண்டும் கதை மரபை மழுங்கச்செய்தும் வருகிறது. நாளும் தொடரும் யுத்தங்களும், வன்முறைக்காட்சிகளும் ஸ்நாக்ஸ் கொரித்தபடி கிரிக்கெட் பார்ப்பது போல டி.வி. பார்த்து சுரணையற்று ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறது. மேலும் மெக்காலே கல்வியின் இறுகிப்போன பாடத்திட்டங்களும் பரீட்சைகள், தேர்வுகள், கட் _ ஆஃப் மதிப்பெண்கள், பதற்றமான பெற்றோர்கள் என நம் குழந்தைகளின் கதை மூச்சைக் கழுத்துப்பிடியாக அமுக்கும் கயிறுகள் இறுகிவரும் சூழல் அச்சம் தருவதாயுள்ளது.

குழந்தைகள் இத்தகைய கதை எதிர்மறைச் சூழலில் தாமாகவே தம் கதைத் துடிப்பை இயல்பு நிலையில் வைத்திருக்க முடியாது. நம் ஆதரவும் துணையும் அவர்களுக்குத் தேவை. இந்த ஆதரவும் துணையும் வெறும் தார்மீக அடிப்படையில் இருந்தால் பயனில்லை. அவர்களின் அன்றாட வாழ்வில் அதுவும் கூட வரவேண்டும். அந்த ஆதரவு திட்டவட்டமானதாகவும் குறிப்பிட்ட வகையினதாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் பணச்செலவில்லாததாகவும் அல்லது குறைந்த செலவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

கதை சொல்லல் என்பது ஒரு போதனையல்ல. மாறாக நிகழ்த்துதல் அனுபவம். சக்திமிக்க ஒரு நிகழ்த்து அனுபவம். மனோதர்ம ஓட்டங்கள் மூலம் சிருஷ்டி ரகசியங்களை உணர வைக்கும்படியாகக் கதை சொல்லல் அமைய வேண்டும்.

குழந்தைகளுக்கான கற்பித்தல் முறைமையின் ஒரு பகுதியாகக் கதைகள் மாற வேண்டும். வரலாறு, புவியியல், அறிவியல், கணிதம், தத்துவம், கலாச்சாரம் என பல்துறை அறிவும் கதைகள் வழியே கற்பித்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாகவும் சுயசிந்தனை உள்ளதாகவும் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக இயற்கை பற்றிய பழங்குடி கதைகளைச் சொல்லும் போது கதை இயற்கையின் அத்துணை தோற்றவியலைச் சொல்லத் துவங்குவதோடு அந்த மக்களின் கதை வழியாக கலாச்சார மறு மதிப்பீடுகளை முன்வைத்துவிடுகிறது. கதை வழி சொல்லப்படுகிற எந்தவொரு விஷயத்தின் மீதும் குழந்தைகள் நம்பிக்கை கொண்டு அதனோடு வாழத் தொடங்கிவிடுகின்றனர். இன்றும் கதை யார் சொன்னபோதும் சொல்லும் முறை மிக நவீனமாகவும் புதிய கதையாடலோடு எப்போதுமிருப்பது ஆச்சரியம் தருகிறது.நாட்டார் வழக்காறுகளும் (திஷீளீறீஷீக்ஷீமீ) தொலைக்காட்சிப் பிம்பங்களும் குழம்பிக்கிடக்கும் குழந்தைகளின் கதை மனங்களை முதலில் புரிந்துகொண்டு இன்றைய குழந்தைகளின் இயல்பை உள்வாங்கிய பிறகே நாம் புதியதை உருவாக்க முடியும்.

அதற்குப் பலவிதமான செயல்பாடுகளை உருவாக்க வேண்டும். அவற்றில் மிக முக்கியமாக…

அ. இன்று குழந்தைகள் மத்தியில் புழங்கிக்கொண்டிருக்கும் அனைத்து விதமான கதைகளையும் தொகுத்து ஆய்வு செய்வது.

 1. அக்கதைகளின் உருவாக்கும் மற்றும் அதன் பிறப்பிடம்.
 2. குழந்தைகள் பலமுறை ஒரே கதையை திரும்பத் திரும்பச் சொல்லும்போது கதைகளில் ஏற்படும் மாற்றங்கள்.
 3. அதுபோல் அவர்கள் உருவாக்கும் பாடல்களில் ஏற்படும் மாற்றங்கள்.
 4. அவர்கள் புரிந்துகொண்ட உலகைப் பற்றிச் சொல்லும் கதைகளில் வெளிப்படும் அவர்களது சுயபார்வை.
 5. அக்கதைகள் மற்றும் பாடல்களினூடாகத் தொழிற்படும் அவர்களின் உளவியல் ஆகியவற்றைத் தொகுத்துக்-கொள்வது.

ஆ. குழந்தைகள் அவர்கள் அறிந்த உலகத்திலிருந்து எழுதத் தூண்டி படைக்கப்படும் கதைகளைத் தொகுப்பது.

 1. அவர்களுக்குப் பிடித்த பொருட்களைப் பற்றிய கதைகளை அவர்களிடமிருந்தே பெறுவது.
 2. அவர்கள் அறிந்த தாவரங்கள், பறவைகள், மிருகங்கள் என இயற்கையின் படைப்புகளைப் பற்றிய கதைகள்.
 3. வருடந்தோறும் நிகழும் ஊர்த்திருவிழாக்கள் மற்றும் கோவில் பண்டிகைச் சடங்குகளைப் பற்றிய கதைகள்.
 4. அவர்கள் பெற்ற இசை, பாடல், ஆடல்களைப் பற்றிய கதைகள்.
 5. அவர்களுக்குப் பிடித்த நாடக, சினிமா மற்றும் இதர கலைஞர்களைப் பற்றிய கதைகள்.
 6. கனவுகள் மற்றும் பல்வேறு நினைவுகளைப் பற்றிய கதைகள்.
 7. மழை, வெயில், பஞ்சம், ஊர்விட்டு ஊர் பிழைக்கப்போவது என இயற்கையின் சீற்றங்களைப் பற்றிய கதைகள்.
 8. அவர்களுக்குத் தெரிந்த பொம்மைகள், முகமூடிகள், சித்திரங்கள், சிலைகள் பற்றிய கதைகள்.
 9. விபத்துக்கள், யுத்தங்கள், ஊர்ச்சண்டைகளைப் பற்றிய கதைகள்.
 10. மனிதன், உயிரினங்கள் பிறப்பு பற்றிய கதைகள்.
 11. அவர்களுக்குப் பிடித்த தனிமனிதர்கள், கடவுளர்களைப் பற்றிய கதைகள்.
 12. பிடித்த விஷயங்களைக் கடித வடிவில் கதைகளாக, பாடல்களாகப் பெறுவது.

இ. மேற்சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் குழந்தை-களிடம் கொண்டு செல்ல வேண்டிய புதிய கதைகளைத் தயாரிப்பது இறுதிக் கட்டம். அவை எழுத்து வடிவோடு நிற்காது நிகழ்கலை வடிவமாக்க வேண்டும். அவற்றை நாம் கீழ்க்கண்ட நிலைகளில் பிரித்துக்கொள்ளலாம்.

 1. உலகெங்கிலுமுள்ள கதைகளைப் பற்றிய கதைகள்.
 2. உலகம் உருவான விதம் பற்றி பழங்குடிகள் சொன்ன பல்வேறு இனக்குழுக்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தல்.
 3. உலகைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமான கதைகளைத் தொகுத்துக் கொடுத்தல்.
 4. தேர்ந்த உலக அளவிலான நாடோடி, நாட்டுப்புற, தேவதைக் கதைகளைத் தருதல்.
 5. அதுபோல் நாட்டுப்புறப் பாடல்களையும் விளையாட்டு, உழவு, தாலாட்டு, கும்மி எனப் பல விதங்களில் தருதல்.
 6. தாவரம், விலங்கு, தண்ணீர், புத்தகம் போன்ற தலைப்புகளில் பல பகுதிகளாகக் கதைகளைப் பிரித்து அவற்றை இந்திய, தமிழக மற்றும் உலகளவிலான கதைகளைத்தருதல்.
 7. எளிய வடிவில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குத் தருதல்.
 8. உலக அளவிலான சிறந்த எழுத்தாளர்களின் தேர்ந்த கதைகள்.
 9. இந்திய மற்றும் உலக அளவிலான சிறந்த புத்தகங்களைப் பற்றியும் நாவல்களைப் பற்றியும் சிறு வடிவில் கதைகளாகத் தருதல்.
 10. இந்திய மற்றும் உலகுதழுவிய சிறந்த எழுத்தாளர்கள், ஓவியர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், பாடகர்கள், யோகிகள், போராட்டக்காரர்கள், இசை மேதைகள், தத்துவவாதிகள், விஞ்ஞானிகள், கணித மேதைகள், உலகத் தலைவர்கள் எனப் பல்வேறு துறைசார்ந்த அறிஞர்களைப் பற்றிய வரலாறுகளை எளிய கதை வடிவில் தயாரித்து வழங்குதல்.
 11. குழந்தைகளின் உலகம் சார்ந்த பொம்மைகள், மரப்பாச்சிகள், முகமூடிகள் பற்றிய பல்வேறு விஷயங்களைப் பரந்த, எளிய கதை வடிவில் தருதல்.
 12. உலகப் பார்வையில் சடங்குகள், திருவிழாக்கள் பற்றிய அரிய தகவல்களைக் கதைகளாகத் தருதல்.
 13. மறைந்துபோன தாவரங்கள், விதைகள் மற்றும் விலங்கினங்கள், பறவைகளைப் பற்றிய கதைகளைத் தருதல்.
 14. பிச்சைக்காரர்கள், பைத்தியங்கள், சந்நியாசிகள் மற்றும் திருடர்கள் இவர்களைப் பற்றிய உண்மையான பார்வைகளை உண்டாக்கும் விதத்தில் கதைகளை வழங்குதல்.
 15. இன்று வரை நடந்த யுத்தங்களைப் பற்றிய வரலாறுகளை சுய பார்வைகளுடன் கதைகளாக்குதல்.
 16. இந்திய மற்றும் உலகக் கலாச்சாரங்களைப் பற்றிய செய்திகளைக் கதை வடிவில் தருதல்.
 17. இதற்கிடையில் பெற்ற கதைகளின் ஞாபகங்களை நண்பர்-களுக்குக் கடித வடிவில் தெரியப்படுத்துதல் வேண்டும்.

இப்படி வகைப்படுத்தப்பட்ட கதைகளைத் தயாரித்து நாடக வடிவங்களின் துணைகொண்டு கதை சொல்லல் முக்கியமானது. பாவைக்கூத்து, பொம்மலாட்டம் மற்றும் பல்வேறு இசைக்கருவிகளின் துணை கொண்டும் கதை சொல்லலைப் பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு செல்லுதல். பின்னர் குழந்தைகளையும் கதை சொல்லு-தலுக்குப் பல்வேறு வடிவங்களின் துணை கொண்டு பயிற்றுவித்தல். இந்த வகையில் நமது பாரம்பரிய கலை வடிவங்களின் துணைகொண்டு கதைகளைக் கொண்டு செல்வதின் வழியாக நம் குழந்தைகள் பண்பாட்டு உணர்வுள்ளவர்களாக மாறுவதோடு அழிந்து வரும் அக்கலை வடிவங்கள் மறுபடியும் வாழ்வதற்கான சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது.

சித்திரமிட்டபடி, ஆடியபடி, பாடியபடி, சப்தமிட்டபடி, தாவரங்-களுடன் சண்டையிட்டபடி, விலங்கினங்களோடு, பட்சிகளோடு கதை சொல்லியபடி, தனக்குத் தானே உரையாடும் அவர்களது உரையாடல் என்றும் முடிவற்றுத் தொடர்கிறது. நாம் அதனை மென்மேலும் படைப்பூக்கமாக்க வேண்டும்.அறிந்து வரும் உலகைப் பற்றிய அவர்களது பார்வையினைப் பரிமாற்றிக்கொள்ள வகுப்பறைகள் அவர்களுக்கு முக்கிய களமாகிறது. ஒவ்வொரு குழந்தையும் தான் அறிந்த உலகு பற்றி தனித்த பார்வையும் கண்டுபிடிப்பும் கொண்டுள்ளது. அது கற்பனை வெளி. பெரியவர்-களாகிய நம்மிடமோ படித்து அறிந்த உலகு மட்டுமே உறைந்து போயுள்ளது. நமக்குக் கற்பனை உலகம் என்பது பேச்சோடு சரி. குழந்தைகளுக்கோ அதுவே வாழ்க்கை.

கதை சொல்லலின் வழியாகவே அவர்களுக்கிடையிலான உரையாடலை உயிர்ப்பிக்க முடியும். ஆனால் இன்றைய கல்விச் சூழலில் அவர்களை உரையாட வைப்பதற்கான அக்கறையும் கவனமும் இல்லை.

இவற்றைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்படும் கதைகளைச் சித்திரங்களுடன் கூடிய சிறுசிறு புத்தகங்களை அவர்களுக்கு வழங்குவது முக்கியம். இறுதியில் அவர்களை சுயமாகக் கதைகள் எழுத வைத்து அவற்றையும் புத்தகங்களாக்க வேண்டும். அக்கதை-களையும் நாடகங்களாக, பொம்மலாட்டங்களாக மாற்ற வேண்டும். கதை பற்றிய உரையாடலை அவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்திக்-கொண்டே இருக்க வேண்டும். நாடகீயமான கதை பொதிந்த குழந்தைகளின் வாழ்முறையைக் காப்பாற்றி செயலாக்குவதே நம்மை நாம் அடையாளம் காணும் குறியீடு.

உரையாடலை, உறவினை, நேசத்தை, நெருக்கத்தை ஏற்படுத்தக்-கூடிய கதை சொல்லலின் மூலமே எதிர்காலத்தில் உருவாகப் போகும் நல்ல நேர்மையான அறிஞர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள், காவலர்களென சமூகத்தில் மாற்றம் விளைவிக்கக்கூடிய மனிதர்களையும் நாட்களையும் நாம் பெற முடியும்.