நூல் அறிமுகம்: ஓல்காவின் சுஜாதா – ச.ரதிகா

 

பெண்ணை மையப்படுத்தி எழுதுவதும், பெண்ணிற்கு ஆதரவாக சிறு குரல் கொடுத்தலும் பெண்ணியமாக பார்க்கப்படும் வேளையில் எது பெண்ணியம் என்ற கேள்விற்கும் இது பெண்ணியமா என்ற குழப்பத்திற்கும் நிரந்தர தீர்வளிப்பதே ஓல்காவின் எழுத்து. தெலுங்கில் அவர் எழுதியதை செம்மையாக செழுமையாக தெளிவாக திண்மையாக திறமையாக மொழிப்பெயர்த்துள்ளார் கௌரி கிருபானந்தன். அவ்வகையில் சுஜாதா என்றும் படிப்பவரின் நினைவில் நீக்கமற நிலைத்து நிற்பாள். ஆண்களை அவமானப்படுத்தாமல், அடிமைப்படுத்தாமல் பெண்களும் அவர்களைப் போன்ற உயிரும் உணர்வுமுள்ள சகமனிதர்களே என்பதை எப்பொழுதும் போலவே இதிலும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ஓல்கா.

கிமு, கிபி போல பெண்களின் வாழ்க்கையை திமு.திபி திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என்று பிரிக்கலாம். அது என்ன பெண்களுக்கு மட்டுமா ஆண்களின் வாழ்க்கையும் தானே மாறுகிறது என்றால் ஆம் ஆனால் பெண்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் ஆண்களுக்கு வருவது இல்லை. அதனால்தான் பெரும்பான்மையான ஆண்களால் பெண்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை. திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் பெண்கள் வெகு விரைவில் தொலைப்பது தங்கள் நட்பையே. அந்நட்பே இந்நூலின் கருவாகும்.

கல்லூரிப் பருவத்தில் தோழிகளாக வாழ்ந்த சுஜாதா,சாரதா,உஷா,ரமா ஆகிய நால்வரின் திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையே சுஜாதா. பெண்களுக்கும் சிறு வயதிலிருந்து இயல்பாகவோ பழக்கப்படுத்தியோ பழகிவிட்ட பழக்கங்களும் ரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் உணர்வு சார்ந்தவையே அதை திருமணத்திற்குப் பிறகு விருப்பப்பட்டோ சூழ்நிலை காரணமாகவோ அழிப்பதும் அழிக்கப்படுவதும் அழித்துக்கொள்வதும் கொலையே. இக்கொலையை சம்பந்தப்பட்டவர்களே பல நேரங்களில் உணர்வதில்லை அல்லது உணர்ந்தும் அதுதான் நடைமுறை என்று ஏற்றுக் கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களுக்கும் அதுவே சரியான வழிமுறையாக கூறுவதோடு சில நேரங்களில் அதை ஏற்க கட்டாயப்படுத்துவார்கள் அவ்வாறு ஒரு கதாபாத்திரமாகவே நால்வரில் ஒருவரான ரமா இருக்கிறாள்.

அவளைப்போல தன்னை இழக்காமல் வாழ உஷா முயற்சி செய்து கொண்டிருந்தாள் சாரதாவோ முயற்சியின்றி மகிழ்ச்சியின்றி விரத்தியில் வாழ்க்கையை கடத்திக் கொண்டிருந்தாள். இவர்களுக்கான நம்பிக்கையாக, தைரியமாக நாயகி சுஜாதா வருகிறாள். அவளின் கணவனாக வரும் பிரசாந்த் படிப்பவரின் மனதில் நீங்காத பிம்பம். நல்லவனாகத் திகழும் பிரசாந்த் அதற்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் போது சுஜாதா கூறும் பதிலில் ஓல்கா தனித்து நிற்கிறார். உஷாவின் கணவர் அவளையும் குழந்தைகளையும் விடுத்து வேறொரு பெண்ணை மணம் முடித்த போது என்னுடன் ஒன்றிணைந்து அவரால் வாழ முடியவில்லை இன்னொரு பெண்ணுடனாவது வாழட்டும் என்பதும் இதுவரையில் யாருடைய வாழ்க்கையையோ நான் வாழ்ந்து வந்தேன். இன்னொருத்தரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் செயல்பட்டு வந்தேன். இப்பொழுது உண்மையிலேயே என் வாழ்க்கையை நான் வாழவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்குதான் முக்கியத்துவம். என் இருப்பு ,விருப்பு இவை எதுவும் இல்லாமல் செய்து கொண்டேன்.நான் என்ற ஒருத்தி இருப்பதை நானே மறந்து விட்டேன். இப்பொழுது அவன் நினைவுபடுத்தினான் நான் ஒருத்தி இருப்பதையும், நான் வாழ வேண்டும் என்ற முதிர்ச்சியையும் புத்தக வாசிப்பே அவளுக்கு அளித்தது. நமக்கு சொந்தம் என்று நினைத்த நபர் வேற்று மனிதர் ஆகிவிட்டால் வருத்தம் ஏன் இருக்காது ?ஆனால் வருத்தப்படுவதனால் என்ன செய்ய முடியும்? பிரச்சனை வந்தபோது தீர்வு காண வேண்டுமே தவிர வருத்தப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தால் எப்படி? வாழ்க்கை என்றால் கணவன் ஒருத்தன் மட்டும் தானா? இத்தனை நாளும் அவன் தான் என் வாழ்க்கை என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று அவன் இல்லாவிட்டாலும் என் வாழ்க்கை எனக்கு இருக்கிறது. என்ன செய்யப் போகிறாய் என்று வாழ்க்கை என்னிடம் சவால் விடுகிறது. அந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

கணவன் இல்லாமல் போனால் பெண்ணின் வாழ்க்கை அர்த்தமற்றதாகி விடாது என்று நிரூபிக்க தோன்றுகிறது. நம் வாழ்க்கையை நம்மால் வாழ முடியும் என்று உஷா தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்கிறாள். கணவனுக்குப் பிடிக்கவில்லை என்ற ஒற்றை காரணத்துக்காக ஓவியம் வரைவதை நிறுத்தி இருந்த சாரதா சுஜாதாவிற்காக வரையும் போது தனக்குப் பிடித்த மாதிரி தன்சொல் கேட்டு தன்னுடைய வீட்டில் இருக்க வேண்டுமென கணவன் கூறும்போது ஐந்து வருட வாழ்க்கை கேள்விக்குறியாகுகிறது. அப்போதும் தாயாருக்காக சுயமரியாதையை இழந்து சகித்துக் கொண்டு வாழும்போது சுஜாதா உன்னை உண்மையாக நேசிப்பவர்கள் நீ இப்படி இம்சை அனுபவித்துக் கொண்டிருந்தால் அந்த வாழ்க்கையைத் தொடரும்படி சொல்லமாட்டார்கள். அம்மா அப்படி சொல்கிறார் என்றால் அவளுக்கு உன் மீது இருக்கும் அன்பை விட சமுதாயத்தைப் பற்றிய பயம் அதிகம் என்று அர்த்தம். அவளுடைய அஞ்ஞானத்தால் உன்னுடைய வாழ்க்கையை பற்றி யோசிக்கவில்லை என்று அர்த்தம். முட்டாள்தனம் நிறைந்த அந்த அன்பு உனக்கு எந்த விதமாகவும் நன்மை செய்யாது.

குழந்தைகள் என்கிறாயா?நீ அடிமையாய் இருந்து கொண்டு அவர்களுக்கு சுயகௌரவத்தை கற்றுத்தரப் போகிறாயா? உன்னை பார்த்த அவர்கள் என்ன கற்றுக் கொள்வார்கள்? உன் பேச்சுக்கு என்ன மதிப்பு கொடுப்பார்கள்?சாப்பாடு போட்டு உடலை வளர்க்கும் முட்டாள் தாய் தானா நீ?நீ உன் குழந்தைகளுக்காக நீ சுய கௌரவம் உடையவளாக இருக்க வேண்டும் என்பது அனைத்துப் பெண்களுக்கான நீதி போதனை. வீட்டை நிர்வாகம் செய்வது அவர்களுடைய வாழ்க்கையை விட முக்கியமானதா? வேடிக்கை என்னவென்றால் அந்த வீடுகள் தம்மை விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று பெண்களுக்குத் தெரியாது. தெரிந்த அன்று அவர்கள் அந்த வீட்டில் ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டார்கள் என சுதாஜா கூறுவது குடும்பத்தை நோக்கி கேட்கப்பட்டவையே. தற்காலத்தில் பெண்கள் பலர் தங்களுடைய குழந்தைகளுக்காகவே தன்மானத்தை இழந்து தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்து பலவற்றை பொறுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். குழந்தையைப் பெற்றுக் கொண்டு வளர்ப்பது என்பது வாழ்க்கையின் லட்சியமாக மாற்றிக் கொள்ள மாட்டேன். குழந்தைகளுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்கித் தருவேன்.

அது என்னுடைய கடமை. என்னுடைய எத்தனையோ கடமைகளில் அதுவும் ஒன்று. அது மட்டுமே என் வாழ்க்கை எப்படி ஆகும்? என்ற சுஜாதாவின் தெளிவு அனைத்துப் பெண்களுக்கும் தேவையான ஒன்று. ஆண்கள் இதை படிக்கும் பொழுது கட்டாயம் பெண்ணியம் குறித்த பார்வை விரிவாகும்.இங்கு பெண்கள் சுயத்தை இழந்து வாழ்வதற்கு முழுமுதல் காரணம் அவர்கள் மட்டுமேதான்.இதை சுஜாதா படிக்கும் ஒவ்வொருவரிடமும் உணர்த்திச் செல்வாள்.

*சுஜாதா* _ ஓல்கா

தமிழில் – கெளரி கிருபானந்தன்.

வெளியீடு – பாரதி புத்தகாலயம்

எழுதியவர் – ச.ரதிகா .