நூல் அறிமுகம்: எஸ் ராமகிருஷ்ணன் “எழுத்தே வாழ்க்கை” – சுரேஷ் சுப்ரமணி 

நூல் அறிமுகம்: எஸ் ராமகிருஷ்ணன் “எழுத்தே வாழ்க்கை” – சுரேஷ் சுப்ரமணி 



பெரும்பாலான தமிழ் இலக்கிய வாசகர்களால் சிறந்த கதைசொல்லி என போற்றப்படும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் எழுத்துல வாழ்க்கைக்கு வந்த கதையையும், தான் எதிர்கொண்ட சவால்களையும், தான் அனுபவித்த வாழ்க்கை போராட்டங்களையும், தான் சென்று கண்டுணர்ந்த இடங்களைப் பற்றியும் நம்மிடையே மனம் திறந்து பகிர்ந்துகொள்ள எழுதிய புத்தகம்தான் “எழுத்தே வாழ்க்கை”.

நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் தன் குடும்பத்தைப் பற்றியும் தன் பள்ளிக்கால நினைவுகள் பற்றியும் உள்ளதை உள்ளபடி நேர்மையாக நம்மிடம் எஸ்.ரா பகிர்ந்துகொள்வது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. தன் பெற்றோர்களும் உடன்பிறந்தவர்களும் எப்போதும் படிப்பதில் ஈடுபட்டு வந்ததால் அந்த சூழல் எனக்கும் வாசிப்பின்மீது மிகுந்த ஈடுபாட்டை கொண்டு வந்துவிட்டது என அவர் சொல்லும்போது ‘எழுத்தாளன் உருவாக்கப்படுவதில்லை…அவன் எழுத்தாளனாகவே பிறக்கிறான்’ என்றுதான் நமக்கு தோன்றுகிறது.

குடும்பத்துக்காக தன் காதல் மனைவியின் உழைப்பையும் அவர் செய்த தியாகங்களையும் மறக்காமல் குறிப்பிடும் எஸ்.ரா ‘எந்த வேலைக்கும் போகக் கூடாது…முழு நேர எழுத்தாளராகவே வாழவேண்டும்’ என தான் முடிவு செய்திருந்தபோதும் அதை மறுக்காமல் அவர் மனைவி மட்டும் வேலைக்கு சென்று அவரை எழுத ஊக்குவித்ததை மனதார பாராட்டுகிறார். “எப்போதுமே எழுத்தாளன் உலகின் துயரங்களுக்காகத் தன்னை வருத்திக்கொள்வதுடன் தனது உடனிருப்பவர்களையும் வருத்தப்பட செய்பவனாகவே இருக்கிறான். ஆகவே, அவனை மற்றவர்கள் புரிந்துகொள்வது எளிதல்ல. ஒன்று அவனை விலக்கிவைத்துவிடுவார்கள். அல்லது அவனை வெறுப்பார்கள். இந்த இரண்டும் இல்லாமல் எழுதுவது மட்டுமே உன் வேலை. மற்ற அத்தனையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று துணை நிற்கும் பெண் கிடைத்தது எனது அரிய பாக்கியம்” என அவர் கூறும்போது ஒரு எழுத்தாளராக அவர் உருவாகும்போது அவர் பெற்ற வலிகள் நமக்கு தெரியவருவதுடன் அவரின் அந்நாளைய நிலையை நினைத்து நமக்கு பரிதாபமும் ஏற்படுகிறது.



பல்வேறு சந்தர்ப்பங்களில் தமக்கு உதவிய நண்பர்களைப் பற்றி சிலாகித்து கூறும்போது “ராவணனுக்கு பத்து தலை உண்டு என்பார்கள். நானும் வேடிக்கையாகச் சொல்வேன். எனக்குக்கூட ஆயிரம் தலைகள் இருக்கிறது. அதில் ஒன்று என்னுடையது. மற்றவை என் நண்பர்களின் தலைகள். அவை என்னுடன் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது. அந்த வலிமையே என்னை எழுதச் செய்கிறது” என பெருமையுடன் சொல்கிறார்.

ஒரு எழுத்தாளனாக உருவாகும்பொருட்டு சென்னையில் காசில்லாமல் பசியும் பட்டினியுமாக தங்குவதற்கு சரியான இடமும் இல்லாமல் தான் அலைந்து திரிந்ததை அவர் சொல்லும்போது ஒரு வெற்றிகரமான எழுத்தாளனின் ஆரம்ப வாழ்வு எவ்வளவு துயரமானது என நம்மை சோகம் கொள்ளச் செய்கிறது. பழைய புத்தகங்களில் உள்ள தூசிகளால் தனக்கு ஒவ்வாமை நோய் ஏற்பட்டும்கூட எங்கு சென்றாலும் பழைய புத்தகக்கடைக்கு செல்வதை தவிர்க்காமல் தொடந்து சென்று பின் அதுவே தன் உடலுக்கு ஏற்புடையதாக மாறிவிட்டது என அவர் சொல்வதை வாசிக்கும்போது எழுத்தின் மீதான அவரின் காதலின் ஆழத்தை அறிந்து உண்மையில் நம் விழிகள் வியப்பால் விரிகின்றன. எழுத்தை மட்டுமே சுவாசிக்கும் ஒரு மனிதனால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என நமக்கு தோன்றுவதை மறுக்கவே முடியாது.

அவர் “புத்தகம் படிப்பது வெறும் பொழுதுபோக்கில்லை. அது நம் ஆளுமையை வளர்த்துக் கொள்வது… அறிவை விருத்தி செய்வது…புதிய சிந்தனைகளை, வாழ்வியல் உண்மைகளை, வரலாற்றை, பண்பாட்டினை, சமகால பிரச்சினைகளை, அதன் வேர்களை அறிந்து கொள்வதாகும்” என சொல்லும்போது வாசிப்பின் மீதான அவரின் தீவிரப் பற்றை நாம் உணர்கிறோம். “உலகின் கண்களில் புத்தகங்கள் வெறும் அச்சிடப்பட்ட காகிதங்கள். ஆனால், வாசகன் கண்களில் அது ஒளிரும் வைரக்கல். ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மா இருக்கிறது. அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது. பல நேரங்களில் வாழ்க்கை அனுபவத்தைவிடவும் புத்தகங்களே நம்மை வழி நடத்துகின்றன, ஆறுதல்படுத்துகின்றன, மேம்படுத்துகின்றன்” என்ற அவரின் வரிகளை வாசிக்கும்போது ஒரு தேர்ந்த வாசகனே எழுத்தாளனாக உருவாகிறான் எனத் தெளிவாக தெரியவருகிறது. அதை உறுதிபடக் கூறிய அந்த மனிதரை நோக்கி புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் மானசீகமாக வணங்கவே செய்வான்.

இந்த புத்தகத்தில் தான் படித்த உலக இலக்கியங்களை பற்றி வாசகர்களிடம் சிலாகித்து கூறுகிறார்.

தான் பார்த்த உலக திரைப்படங்களைப் பற்றி அவை கொடுத்த அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்.

ஒரு தேசாந்திரியாக இந்தியா முழுவதும் தான் சுற்றியலைய நேர்ந்ததை சொல்கிறார்.

இளையராஜாவுடனான தன் சந்திப்பையும் அவருடன் இணைந்து திரைத்துறையில் தான் பணியாற்றிய சந்தர்ப்பத்தையும் மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார்.

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவுடனான தன் நட்பை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறார்.

தன் முதல் படைப்பான உபபாண்டவம் நாவலை புத்தகமாக கொண்டுவர தான் பட்ட சிரமங்களை, அந்த துயரமான தருணங்களை சோகம் ததும்ப உருக்கமாக சொல்கிறார்.

சென்னையின் பெருமழையைப் பற்றியும் அது ஏற்படுத்திய அவலங்களையும் அதன்பொருட்டு சமுதாயம் ஆற்றிய எதிர்வினைகளையும் சமூக சீற்றத்துடன் உரைக்கிறார்.

பாரதியாருடன் நெருங்கிப் பழகிய கல்யாணசுந்தரம் என்ற பெரியவருடனான தன் சந்திப்பை குதூகலத்துடன் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.

கூட்ஸ் வண்டியில் கார்டு இருக்கும் அறையில் அமர்ந்து தான் பயணம் செய்ததை ஒரு கள்ளமில்லா சிறுகுழந்தையின் உவகையுடன் ஆனந்தமாக வெளிப்படுத்துகிறார்.

ஜப்பானைப் பற்றிய தன் பயண அனுபவங்களை இதில் ஒரு நீண்ட கட்டுரையாக விவரித்திருக்கிறார். வெறும் பயண அனுபவமாக மட்டுமே இல்லாமல் அந்நாட்டைப் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை நமக்கு அளிக்கிறார் எஸ்.ரா. ஜப்பானியர்களின் நவீன வாழ்க்கையை சொல்லும் அதே நேரத்தில் பழமையை, பண்பாட்டை விட்டுக்குடுக்காத அவர்களின் கலாச்சார உணர்வை வெகுவாக பாராட்டுகிறார்.

இப்புத்தகத்தில் எஸ்.ரா தன் இனிமையான நினைவுகளை, தன் சோகங்களை, தன் ஏமாற்றங்களை, தன் அனுபவங்களை வாசகர்களிடம் மனம்திறந்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். எஸ்.ரா வின் எழுத்து எப்போதுமே சுவாரஸ்யங்களை சுமந்து கொண்டு திரிபவை. தேர்ந்த கதை சொல்லியான எஸ்.ரா இத்தொகுப்பையும் ஒரு சுவாரஸ்யமான தொகுப்பாக்கி வாசகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்.



ஒரு வெற்றிகரமான எழுத்தாளன் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தோல்விகளாலும், அவமானங்களாலும், துயரங்களாலும் நிரம்பியவை என்பது எழுதப்படாத விதி. அதில் எஸ்.ரா அவர்களும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்த அனுபவங்களை வாசகர்களிடம் ஒளிவுமறைவில்லாமல் நேர்மையுடன் பகிர்ந்துகொள்வதில் எழுத்தாளர் எஸ்.ராவின் வாசகர்கள் மீதான நம்பிக்கை நமக்கு தெரிய வருகிறது.

நூல்: எழுத்தே வாழ்க்கை

ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்.

பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம்.
——————————



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *