எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறுதுயர்’ என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை
பெருந்துயர் தரும் சிறுதுயர்
ஒரு தொடக்கப்பள்ளி மாணவனை வகுப்பறையை நோக்கி ஈர்ப்பது பாடப்பொருளா? வகுப்பறையின் ஒழுங்கு நேர்த்தியா? கற்பிக்கும் உத்திகளா? அல்லது இவை அனைத்துமா? எனச் சிந்தித்தால் இவற்றைவிட முதன்மையான ஒன்றாக இருப்பது வகுப்பறையில் செயல்படும் ஆசிரியரின் அன்புதான்.
‘விருப்பத்தோடு விஷத்தைக்கூடக் குடித்துவிடலாம்; வெறுப்பில் அமிழ்தம் கூட உள்ளே இறங்காது’ என்பது கற்றலுக்கும்
பொருந்தும். மாணவனிடம் கற்றல் விருப்பத்தை ஏற்படுத்துவதிலும்,தக்க வைப்பதிலும்,தொடர்ந்து கொண்டு செலுத்துவதிலும் கற்பிக்கும் ஆசிரியரின் அன்பு எனும் பண்புக்கு உயரிய இடமுண்டு.
தொடக்கக்கல்வி பயிலும் குழந்தைக்குப் பள்ளி வீட்டைப் போன்று இருத்தல் வேண்டும் என்பார் காந்தியடிகள்.பள்ளியின் ஆகப்பெரிய சவால் அதுதான். ஒருபோதும் பள்ளி வீட்டைப் போன்று இருத்தல் இயலாது. பள்ளியில் காலையில் ஒலிக்கும் முதல்மணி மாணவனுக்கும் வீட்டுக்கும் உள்ள உறவை ஒழித்து ஓய்கிறது.பள்ளி முடிவில் மாலையில் ஒலிக்கும் கடைசிமணியின் அதிர்வுகளோ மாணவனை மானசீகமாக வீட்டுக்குள் கொண்டு சேர்க்கிறது.மாணவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு வீட்டுக்கு ஓடுகிறான்.
இந்நிலையில் மாணவனுக்கு வகுப்பறையை விரும்பச் செய்வது எப்படி?தாயைப் போன்ற அன்பும் பரிவும் இன்சொல்லும் கொண்ட ஆசிரியர்களால் வகுப்பறையில் அன்பு மலர்கள் தளிர்த்தும், பூத்தும், மணம் பரப்பும். மாறாக அமைந்துவிட்டால் கருகிப்போவது எத்தனை அரும்புகள்? ஆசிரியரின் அன்புச் சொல்லுக்கும் சிறுதொடுதலுக்கும் ஏங்கும் சிறுவனின் துன்பத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறுதுயர்’ என்னும் என்னும் சிறுகதை மிகுந்த வலியோடு முன்வைக்கிறது.
தொடக்கப்பள்ளியில் கதை நிகழ்கிறது. வகுப்பறையில் மாணவனுக்கு வயிறு வலிக்கிறது; வாந்தி வருவதைப் போல இருக்கிறது. ஆசிரியை அவனை வெளியில் சென்று வாந்தியெடுக்கச் சொல்லி, கூட ஒரு மாணவனை அனுப்புகிறார். திரும்பி வந்தபோது “என்ன செய்கிறது? காலையில் சாப்பிட்டாயா?உடல்நலமில்லையா?” என எதுவும் கேட்காமல் அவனை உட்காரச் சொல்கிறார் ஆசிரியை.
உடன் சென்றவன் “மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுத்ததாகக்”கூறுகிறான். ஆசிரியை அதைக் காதில் வாங்கவில்லை.வலி இப்போது குறைந்திருக்கிறதா? என ஆசிரியர் கேட்பார் என்று மாணவன் எதிர்பார்க்கிறான். அவரோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
பின்பு,அவன் அழுவதாக மாணவர்கள் கூறுகிறார்கள்.அப்போது”டீச்சர் அருகில் வந்து நெற்றியில் கைவைத்துக் காய்ச்சல் அடிக்கிறதா என்று பார்க்க மாட்டார்களா என்று ஆசையாக இருந்தது ” என்று மாணவன் விரும்புகிறான்.
ஆனால், ஆசிரியர் வேறொரு மாணவனை அழைத்து அவனை வீட்டில் விடச் சொல்கிறார். ஒருமாதம் மஞ்சள்காமாலையில் கிடந்து தேறி பள்ளிக்குத் தேர்வெழுத வந்த மாணவனைக் கடைசிப் பெஞ்சில் அமர வைக்கிறார் ஆசிரியர்.
அவனது நிலை குறித்து ஏளனம் செய்கிறார். சக மாணவிகள் சிரிக்கிறார்கள்.
“அம்மா வந்து ஓரமாக நின்றால்கூடப் பரிட்சை எழுதிவிடலாம் என்பதுபோல ஏக்கமாக இருந்தது” -இது பலவீனமான மாணவனின் நிலை.
மாணவனிடம் பேப்பரைப் பிடுங்க மட்டுமே ஆசிரியர் அருகில் வருகிறார்.”முருகன் துணை என்று எழுதிட்டா பரிட்சையில பாஸ் பண்ணிடுவியா?” என்று கேட்கிறார். சரியாகத் தேர்வு எழுதாதற்குத் தலைமையாசிரியரிடம் அழைத்துக்கொண்டு போகிறார்.
மாணவன் பள்ளியை விட்டு ஓட்டமெடுக்கிறான்.
வீட்டில் அம்மாவும் நண்பனும் டீச்சரைத் திட்டும்போதும் ” என்னுடைய டீச்சர் அப்படிப்பட்டவரில்லை என்று சொல்லவேண்டும் போலிருந்தது” என்று எண்ணுகிறான்.
ஆனால்,”காய்ச்சலா என்று ஒரேயொரு முறை டீச்சர் தொட்டுப் பார்த்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் மட்டும் மனத்தில் இருந்துகொண்டே
இருந்தது”என முடிகிறது கதை.
உடம்பு நோவு,தேர்வெழுத முடியாத வருத்தம் ஆகிய எல்லாவற்றையும் விட, ஆசிரியர் அன்பாய் ஒரு சொல் சொல்லாதது பெருந் துயராக
மாணவனை வருத்துகிறது.
பெரிய மனிதர்களே வார்த்தைகளில்தான் வாழ்கிறார்கள்.பாவம் சின்னப் பிஞ்சு என்ன செய்யும். ஒரு சொல்தான்.தக்க சமயத்தில் கூறப்படும் சொல் வலிமையைத் தரும்.
பலவீனத்தை மாற்றும் பலமாகவும்,இயலாமைக்கு ஊக்கமாகவும்,தளர்ந்த உடலுக்கு ஊன்றுகோல் போலவும் அமையும். இது ஆசிரியரான அவர் அறியாத ஒன்றல்ல. ஆனாலும், வகுப்பறையில் ஓர் ஆசிரியர் எல்லா நேரங்களிலும் அன்பாக நடந்துகொள்ள இயலாத நிலையும் இருக்கத்தான் செய்கிறது.
அவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு.ஒரு நாளில் நீண்ட தூரம் பயணம் செய்து பணிபுரிந்து வீடு திரும்புபவர்களில் ஆசிரியர்களே அதிகம். உடல், மன, குடும்ப, அலுவலகப் பிரச்சினைகள் அவர்களுக்கும் உண்டுதான்.
பெண் ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபம். அதிகாலையில் எழுந்து,வீட்டு வேலைகளை முடித்து,சமையல் செய்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி,கணவனுக்கும் சமைத்து எடுத்து வைத்துவிட்டு, தனக்கும் எடுத்துக்கொண்டு பேருந்தைப் பிடிக்க விரைகிறார்கள்.
நிறைய பேர் பேருந்திலேயே காலைச் சாப்பாட்டை முடித்துக் கொள்கிறார்கள். மாலையில் வீடு சென்று வீட்டுவேலை,சமையல் எனத் தொடர்வதோடு, தம் பிள்ளைகளுக்கும் ஆசிரியராகத் தொடர வேண்டியிருக்கிறது.
இடைப்பட்ட பணி நேரத்தில் பள்ளியில் மாணவர்களிடம் எப்பொழுதும் அன்புடன் நடந்துகொள்வது எப்படி? என்று வினா எழுப்பினாலும் பணிச்சுமையால்
எரிச்சல்பட்டுத் தூக்கிப்போட மாணவர்கள் ஒன்றும் கோப்புகள் அல்லவே?!
எப்பொழுதாவது இப்படி நடந்து கொள்பவர்கள் உடனடியாகத் தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும். புறக் காரணிகளால் கற்பித்தல் பணியில் எவ்வித மாறுபாட்டையும் வெளிப்படுத்தாதவரே சிறந்த ஆசிரியர். தவறைத் திருத்திக்கொள்வது ஆசிரியருக்கும் அழகுதான்.
மாணவனிடம் அன்பாய், பணிந்து போவதும் ஆசிரியருக்குப் பெருமையே!
‘டீச்சர் தொட்டுப் பார்த்திருக்கலாம்; அன்பாகப் பேசியிருக்கலாம்’ என்ற மாணவனின் ஏக்கத்தைப் படிப்பவருக்குக் கடத்துகிறது இச்சிறு கதை; ஆசிரியருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறத்தை முன்வைத்து வாசகருடன் உரையாடுகிறது.
கதையில் வரும் ஆசிரியர் போல எவரும் இருந்துவிடக் கூடாது என்ற பதற்றம் கதை எழுப்பும் கூடுதல் உணர்வாக இருக்கிறது.
கட்டுரையாளர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

🙏
வணக்கம்.
மிக மிக அருமை
ஐயா மணி மீனாட்சிசுந்தரம்
அவர்களின்
பெருந்துயர் தரும் சிறு துயர்
கதைவிமர்சனம் பற்றியகட்டுரை.
அருமையான வரிகள் விருப்பில்
விஷத்தையும் குடிக்கலாம்.
வெறுப்பில் அமிழ்தமும் பிடிக்காது.
ஆம் நம் மனம் விரும்பி செய்தால் எந்தவொரு செயலையும் சாதிக்கலாம். கதையைப் படிக்கவில்லை என்றாலும் கதையைப் படித்த முழு உணர்வு விமர்சனத்தில் நிறைந்திருந்தது.
புறக்காரணிகளால் கற்பித்தலில்
எவ்வித மாறுபாட்டையும் ஆசிரியர் ஏற்படுத்தக்கூடாது என்ற வரிகளில் அனைத்து ஆசிரியர்களிடத்தும்
தேவையான நல்இலக்கணத்தை
போதனையாகவும், கண்டிப்பாகவும் கூறிச் செல்லும்
விதம் அருமை.
ஆசிரியர்கள்
மாணவர்களின் மனதைப்
படித்தால்தான் மாணவர்களைப்
பாடப்புத்தகத்தை படிக்கவைக்கமுடியும் என்ற கருத்தை திறம்பட உரைத்த
விமர்சனம் மிக அருமை.
🙏 ஐயாவிற்கு வாழ்த்துகள்.
நல்ல உணர்வுபூர்வமான கதை