“சஞ்சாரம்” நாவல் – நூல் அறிமுகம்
சென்னையில் சமீபத்தில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன்.
என்னையறியாமல் மேள வாசிப்பையும் நாதஸ்வர இசையையும் ஒரு சாதகப்
பறவையைப்போல உள்வாங்கிக் கொண்டிருந்தது என் மனம். அவர்களுடனே இசையில்
சஞ்சாரம் செய்துகொண்டிருந்தேன். இத்தனைக்கும் ராக ஆலாபனைகள் எதுவுமே
தெரியாது எனக்கு. அதனாலென்ன? கிராமத்திலிருப்பவர்கள் ரசிக்க வில்லையா
என்ன? இந்த லயிப்பு எதனால்? நிச்சயமாக எஸ்.ரா வின் சஞ்சாரம் நாவலின்
பாதிப்புத்தான்.
மூதூர்க் காரர்களுக்கும், பனங்குளத்துக் காரர்களுக்கும் சூலக்
கருப்பசாமிக்கு யார் வில் எடுத்துக் கொடுப்பது என்ற தகராறில், கச்சேரி
செய்து கொண்டிருந்த ரத்தினத்தையும் பக்கிரியையும் “இன்னும் என்னடா
உக்காந்துக் கிட்டிருக்கீங்க? செரைக்கவா ? எழுந்து போங்கடா” என்று
குடிகாரன் வீரசின்னு விரட்டுகிறேன். நிறைய நேரமாய்ப் பொறுத்துப்
பார்த்தப் பக்கிரி பதிலுக்கு வீரசின்னுவை ஒரு குத்து விடுகிறான்.
அவ்வளவுதான். பக்கிரியைத் துவட்டி எடுத்துவிடுகிறார்கள். அங்கிருந்த
மரத்தில் கட்டிப் போட்டு விடுகிறார்கள். பூசாரி அவிழ்த்துவிடுகிறான்.
இரவில் பந்தலுக்குத் தீவைத்துவிட்டுப் பக்கிரியின் அக்கா வீடு
கொடுமுடிக்குக் கிளம்புகிறார்கள்.
லாரியில் தப்பிச் செல்லும் வழியில் அவர்கள் இருவருக்கும் ஏதேதோ நினைவுகள்
வருகின்றன. பழைய ஞாபகங்கள் கிளர்ந்து எழுகின்றன. ஒவ்வொன்றாய் நமக்கு
முன் காட்சிகளாய் விரிகின்றன. அரட்டானம் லட்சய்யாவின் நாதத்திற்கு
கல்யானை தன் காதுகளை அசைத்ததால் படையெடுத்து வந்த மாலிக்காபூர் ஊரைக்
கொள்ளையடிக்காமல் திரும்பிவிடுகிறான். கல் யானை காதுகளை அசைத்ததோ
என்னவோ? எஸ்.ரா இந்த சாக்கில் மனிதர்களின் காதுகளை அசைக்க முயற்சி
செய்கிறார்.
“ஏழு வீட்டுச் சோறு” சுவாரசியமான கதை. சக்கிலி கருப்பையாவுக்கு
நாதஸ்வரம் கற்றுத் தந்த காரணத்தினால் கண்ணுசாமி நாயனக்காரர் படாத பாடு
படுகிறார். கிண்ணிமங்கலம் வேணுகோபாலிடம் நாதஸ்வரம் கற்றுக்கொள்ளப் போன
பக்கிரிக்கு கடைசி வரையிலும் கற்றுத் தரவேயில்லை. அவன் சாணக்குழிக்குள்
விழுந்ததுதான் மிச்சம். மருதூர் மடம் ராகவையாவிடம் கற்றுக் கொண்டு
நாதத்தை வசப் படுத்துகிறான். “இந்த வாத்தியம் அசுர வாத்தியம். யானை
மாதிரி. பயத்துக்குக் கட்டுப் படறதில்லே. பழக்கத்துக்குத்தான்
கட்டுப்படும்”
வாசிப்பதற்காக தேர்தலில் அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கொள்வதெல்லாம் படு
சுவாரசியமான கதை. இவர்களுக்குக் கிடைக்கிற சன்மானம் வெறும் கேவலம்தான்.
ஆனால் எல்லாவற்றையும் இழந்தபின்னும் இன்னும் மிச்சம் என்று சொல்லிக்கொள்ள
இடவலம் ஜமீனிடம் இருந்தது இசை ரசனை மட்டும்தான். அகங்காரம் பிடித்த
வாத்தியக் கலைஞனுக்கு கழுதை வெட்டை பரிசளித்த ஊமை ஐயர்.
காதுகளை அடைத்துவிடுகிற திமிரி நாயனத்தை அமிர்த கானமாக மாற்றியவர்
ராஜரத்தினம் பிள்ளையாம். அவரது முதல் வாசிப்பு மண்ணடியில்தான்
நடந்திருக்கிறது. தாசிகளின் ஆட்டத்துடன் சேர்ந்த நாயனம் மேளத்திற்கு
மரியாதை இருப்பதில்லையென்று தனியாக வாசிக்க ஆரம்பித்த தெக்கரை சாமிநாதப்
பிள்ளை முதல் காருகுறிச்சி அருணாசலம் வரை நாவலில் அவரவர் கதையும்
தப்பித்துப் போகும் ரத்தினம், பக்கிரியின் நினைவலைகளாகத் தொடர்கிறார்கள்.
திடீரென்று வாத்தியக்காரர்கள் வராமல் போக கரகாட்டக்காரிகள் இரண்டு பேர்
தவித்துப் போகிறார்கள். அப்போது காசு வாங்கிக் கொள்ளாமலே ரத்தினமும்
பக்கிரியும் வாசித்துக் கொடுக்கிறார்கள். இயல்பிலேயே அவர்களுடனான உறவு
அவ்வப்போதையத் தேவைக்கெனவே அமைகிறது. காமம் ஒரு பெரிய சமாச்சாரமே இல்லை.
சர்வசாதாரணமாக ஆகிவிடுகிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் மகத்தான
மனிதாபிமானம் வெளிப்படுகிறது.
போலீசுக்குப் பயந்து ரத்தினம் பக்கிரியை விட்டு விட்டுச் சென்னை
தாம்பரத்திற்கு தெரிந்தவன் ஒருவன் வீட்டுக்குப் போய் கடைசியில் மாமியார்
வீட்டுக்குப் போக அங்கே கைது செய்கிறார்கள். பக்கிரி அக்கா வீட்டில்
இருக்கும் போது போலீஸ் வந்து பிடிக்கும். அக்கா கேட்பாள்…“எதுக்குடா
உனக்கு இந்த வேலை. ரெண்டு வருஷம் போட்டுரவாங்களாமே” என்கிறாள்.
பக்கிரி சொல்வான்…“சோத்துல உப்பு போட்டு சாப்புடுறோம் இல்ல”. இது வெறும்
ரோஷம் சம்பந்தப் பட்ட விஷயமில்ல. காலமெல்லாம் கீழ்ச்சாதி என்று குத்தப்
பட்ட முத்திரையின் கொடூரமான முகம் இது. நாயனம் வாசிக்கிறபோது எதிரில்
ஊறுகாய் சாப்பிடும் சிறுபிள்ளையைக் கூட இந்த சாதித்திமிர்
சட்டாம்பிள்ளைத்தனம் செய்ய வைத்துவிடுகிறது. கடவுளுக்குப் பக்கத்தில்
நாதஸ்வரம் வாசிப்பவர்கள்தான். ஆனால் சாப்பிட வரும்போது தெருவில் உட்கார
வைத்துவிடுகிறது சமூகம். இவர்களின் துயரத்தின் நிழலைத் தொடர்ந்துதான்
கதை, கிளைக் கதை என்று சொல்ல ஆரம்பித்து விடுகிறார் எஸ்.ரா.
“இந்த நாவல் நாதஸ்வர இசையின் மேன்மையைச் சொல்ல முற்படவில்லை. மாறாக,
நாதஸ்வரம், மேளம் வாசிப்பவர்களின் வாழ்க்கைத் துயரத்தை, அலைக்கழிப்பை,
தனிமையை, கடந்தகாலப் பெருமைகளை, மறக்கமுடியாத நினைவுகளைப் பதிவு செய்யவே
முற்படுகிறது” என்று முன்னுரையில் குறிப்பிடுவார் எஸ்.ரா. அவர்கள்
படுகிற அவமானத்தின் கண்ணீர்த் துளிகளை எஸ்.ரா தனது விரல்களால் துடைக்க
முயற்சி செய்கிறார். அதையும் மீறி அவர்களின் கண்களில் கரை கட்டிக்
கொள்கிறது கண்ணீர் நதி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “சஞ்சாரம்” நாவல் |
| ஆசிரியர்: | எஸ்.ராமகிருஷ்ணன் |
| வெளியீடு: | தேசாந்திரி பதிப்பகம் |
| விலை: | ₹.360 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 நா.வே.அருள் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

