சு.செல்வகுமாரன் கவிதைகள்
1.பித்தன்
தெரிந்தது
அறிந்தது
உணர்ந்தது
புரிந்ததென
இருந்த
எல்லாமும்
ஒன்றும் இல்லாமல்
போயிருந்தது.
எதுவமற்ற
வெளியாய்
மட்டுமே
அவனால்
இப்போது
உணரமுடிகிறதாம்.
இனி
அறிதலென்பதும்
அறிந்ததை
சிந்தித்தலென்பதும்
அவனிடத்தில் எழாது.
அவன் இப்போது
மனிதனிலிருந்து விலகி
பித்தனாய்
பேதையாய்
ஆகியிருக்கிறான்.
காலம்
அவன் கையிலிருந்து
நழுவத் தொடங்கிவிட்டது.
ஒரு கடவுளைப் போல
இவன் ஒருவனே
எல்லோருக்குமான
சூட்சும வலைகளை
பின்னிக் கொண்டிருந்த
நிலை மாறி
அவனைச் சுற்றிலும்
இப்போது பலரது
வலைப் பின்னல்கள்
நிகழத் துவங்கிவிட்டன.
அவனைப் போலவே
ஒன்றும் அறியாதவனாய்.
2.அப்பாவின் புதிய வீடு
அப்பா மரணித்ததும்
அவசர அவசரமாக
உருவாக்கப்பட்டது
அப்பாவுக்கான புதிய வீடு.
ஏழுக்கு இரண்டடி
நீள அகலத்தில்
ஆறடி ஆழத்தில்
குழிபறிக்கப்பட்டு
அமைக்கப்பட்டிருந்தது
அவருக்கான புதிய வீடு.
மரணித்த அப்பாவை
சொக்காரன்மார்கள்
ஒரு குழந்தையைப் போல
தூக்கி எடுத்து
குளிப்பாட்டி
துடைத்து சுத்தம் செய்தனர்.
வாசனைத் திரவியங்கள்
பூசப்பட்டு
குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள்
கொஞ்ச நேரம்
தூங்கவைக்கப்பட்டார்.
அப்பாவை புதிய வீட்டுக்கு
அனுப்பி வைக்க
இப்போது நேரம் குறிக்கப்பட்டு
எல்லோருக்கும்
செய்தி சொல்லப்பட்டது.
வருகை தந்தவர்கள் யாவரும்
அப்பாவின்
முகம் பார்த்துப் பேசிக்கொள்ள,
அப்பாவுக்கு
யாருடனும் பேசிக்கொள்வதில்
ஆர்வமில்லை.
ஆளரவமற்ற
புதிய வீட்டுக்குச் செல்வதில்
அவருக்கு
விருப்பமில்லை போலும்.
ஆயினும், குறித்த நேரத்தில்
செண்டை மேளங்கள் முழங்க
ஊர்க் குடிமகனின் சங்கொலியோடு
புதிய வீட்டுக்கு
அழைத்துச் செல்லப்பட்டார் அப்பா.
அப்பாவுக்கு
எல்லோரும் வாய்க்கரிசியிட்டு
வணக்கம் சொல்ல
கொள்ளிக்குடம் உடைத்து
மகன்
குடியமர்த்தினான் புதிய வீட்டில்.
3.பரத்தைப் பெண்
சில நேரங்களில்
கேப்டனின் கைகளில் புரண்டு
பின்னர் யாரிடமெல்லாமோ
தொடர்ந்து கைமாறும்
கைப்பந்தாய் தான்
உருள்கிறது வாழ்வு.
ஒவ்வொரு முறை
வீசப்படும் போதும்
சிலர் ஏந்திக் கொள்வதும்
சிலநேரங்களில் ஏந்துவாரின்றி
வீழ்ந்தும் விடுகிறேன்.
ஏந்தல்களும் ஒரு போதும்
எனக்கானதாக நிகழவில்லை.
அது
அவர்களுக்கானவையாகவே
எப்போதும் இருந்துள்ளன.
இனி அவர்கள் பொருட்டும்
ஏந்திக்கொள்ள மாட்டார்கள்.
ரசனையும்
பலமும் இழந்துவிட்டேன்
நைந்து போய் உள்ளேன்.
எப்படி என்னிடமிருந்து
இன்னொருவர் சுகம் காணமுடியும்
எல்லாமும் முடிவுக்கு வந்துள்ளது.
கையற்றவளாய் நிற்கிறேன்
கவிதை எழுதியவர்:
சு.செல்வகுமாரன்
மாநிலக்கல்லூரி
9442365680
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.