ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘திருப்பியடித்த வரலாறு’ (இரு பாகங்கள்) நூல்களின் 3D அட்டைப்படங்களுடன் ஆசிரியரின் வண்ண பென்சில் ஓவிய உருவப்படமும், பெரணமல்லூர் சேகரன் எழுதிய நூல் அறிமுகத்தைச் சுட்டிக்காட்டும் சிறப்புப் படம்.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம்

“திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம்

வரலாற்று நூல் எனின் பள்ளிப் பாடங்களில் வரும் மன்னர்களின் வரலாறு, காலனி ஆட்சிகளின் வரலாறு என அறியப்படும். ஆனால் இயக்க வரலாறு எனின் அரசியல் கட்சிகளின் வரலாறு; தொழிற்சங்கங்களின் வரலாறு என பலவகைப்படும்.

இயக்க வரலாற்றில் அவ்வியக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டே தரவுகளைச் சேகரித்து எழுதுவது ஒருவகை; இயக்கத்திற்கு வெளியே இருந்து கொண்டு கிடைத்த தரவுகளின்படி எழுதுவது இன்னொரு வகை. இதில் முதலாம் வகையாக செங்கொடி இயக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டே அவ்வியக்கத்தின் வரலாற்றை எழுதும் வாய்ப்பு நாடறியப்பட்ட எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்று எழுதப்பட்டுள்ளது. இந்நூல் இரு பாகங்களாக வெளி வந்துள்ளது.
செங்கொடி இயக்க வரலாற்றை இந்தியா அளவிலான வரலாறாக அல்லது தமிழ்நாடு அளவிலான வரலாறாக இல்லாமல் அக்கால ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில் நிகழ்ந்த வரலாறாக இந்நூலில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

தஞ்சை மண்ணில் மார்க்சிய இயக்கம்: போராட்டங்களின் ஒரு நூற்றாண்டு” என்பது நூலின் துணைத் தலைப்பாக இருந்தபோதிலும் இந்திய மற்றும் தமிழக அரசியலின் பின்புறத்திலிருந்து 1920 முதல் 1964 வரையிலான வரலாற்றை முதல் பாகத்திலும் 1965 முதல் 2024 வரையிலான வரலாற்றை இரண்டாம் பாகத்திலும் நூலாசிரியர் கொண்டு வந்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரஷ்யாவின் தாஷ்கண்டில் 1920 ஆம் ஆண்டு துவங்கிய நாள் முதல் 1964 ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என இரண்டாகப் பிரிந்தது வரையிலான வரலாற்றை முதல் பாகத்தில் கொண்டு வந்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. இந்தியாவின் ஆன்மா கிராமங்கள் என்பர். அத்தகைய கிராமங்களின் முதுகெலும்பு வேளாண்மையாக இன்றளவும் உள்ளது. வேளாண்மைக்கு அடிப்படைத் தேவையான நிலம் அக்காலத்தில் ஆதீனங்கள், மடங்கள், நிலச்சுவான்தார்கள் ஆகிய மூன்று பிரிவினரிடம்தான் குவிந்திருந்தன. அத்தகையை விவசாயப் பண்ணைகளில் வேலை செய்தவர்களாக தலித் மக்கள் பண்ணையாட்களாக, பண்ணையடிமைகளாக இருந்தனர்
என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர்.

நிலச்சுவான்தார்களின் எல்லை மீறிய கொடுமைகளுக்கு முடிவுகட்ட ஓர் அமைப்பு சமரசமற்ற போராட்டத்தை நிகழ்த்தும் இயக்கம் அவசியமான தேவையாக இருந்தது. அத்தேவையைப் பூர்த்தி செய்யும் இயக்கமாக செங்கொடி சங்கம் உருவானது. அதைக் கட்ட பொருத்தமான போராளி சீனிவாசராவைக் கட்சி தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் தஞ்சை மண்ணிற்கு அனுப்பியது கம்யூனிஸ்ட் கட்சி.

அடிமைகளாகக் கூனிக் குறுகிக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தன்மானம், சுயமரியாதையை ஊட்டி வளர்த்த சீனிவாச ராவின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கை தஞ்சை மண்ணில் வேரோடிய வரலாற்றைத் துல்லியமாக விளக்குகிறார் தமிழ்ச்செல்வன்.

சீனிவாசராவின் பட்டறையில் உருவாகி, கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றுப் போராடி உயிர் நீத்த தோழர்கள் களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாம்பட்டு ஆறுமுகம், ஜாம்பவான் ஓடை சிவராமன், சிக்கல் பககிரிசாமி, நாணலூர் நடேசன், கெழுகத்தூர் காந்தன், கோட்டூர் ராஜூ, நெல்லூர் கே‌ வைரவன், குடவாசல் தங்கையன், ராயமுண்டான்பட்டி என். வெங்கடாச்சலம், இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, திருமெய்ஞானம் நாகூரான் அஞ்சான், மன்னார்குடி ஞானசேகரன், நன்னிலம் நாவலன், பூந்தாழங்குடி பக்கிரிசாமி என காவல்துறையாலும் நிலச்சுவான்தார்களின் அடியாட்களாலும் கொல்லப்பட்டனர் என்பதைத் திரைப்படக் காட்சிகளாகப் படைத்துள்ளார் நூலாசிரியர்.

1964க்குப் பிறகு மணலி கந்தசாமி, மணலூர் மணியம்மை, பி.எஸ்.தனுஷ்கோடி, சாமிநாதன், கே.பி.நடராஜராஜன், அமிர்தலிங்கம், காத்தமுத்து, கோ. வீரையன், கோ.பாரதிமோகன், ஏ.எம்.கோபு, எம். செல்லமுத்து, கே.ஆர். ஞானசம்பந்தம் உள்ளிட்ட தலைவர்களின் அரிய பங்களிப்பை விவரித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

இத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்த தோர்களுள் குறிப்பிடத்தக்க தோழரான கோ. வீரையன், தான் இறக்கும் முன்பாக இந்நூலை வெளியிட விருப்பம் தெரிவித்து அதை அவ்வாறு நிறைவேற்ற இயலாமல் போனதைச் சுட்டிக்காட்டி சுயவிமர்சனத்துடன் வருந்தும் இந்நூலாசிரியர் 2026ஆம் ஆண்டிலாவது நூலாக்கி பாரதி புத்தகாலயம் மூலமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் 27 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. நாடு ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலேயே 1936 ஆம் ஆண்டு அகில இந்திய கிசான் சபா என்னும் பெயரில் விவசாய சங்கம் அகில இந்திய அளவில் துவக்கப்பட்டதற்கான விரிவான குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்டுகள் இணைந்து செயல்பட்டதையும் அவர்கள் அக்கட்சிகளின் ஊழியர்களுக்கு தத்துவார்த்த வகுப்பு எடுத்ததையும் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் சுந்தரம் என்கிற ஊரில் நடைபெற்ற கல்வி முகாமில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், ஜீவா, பி.ராமமூர்த்தி, மணலி கந்தசாமி, கே.முத்தையா உள்ளிட்டோர் வகுப்புகள் நடத்தியுள்ளனர்.

தென்பரை என்னும் கிராமத்தில் குறைந்த கூலியைக் கொடுத்து விவசாய தொழிலாளர்களின் உழைப்பு ஒட்டச் சுரண்டப்பட்டு வந்த விதத்தை விலாவாரியாக விவரித்துள்ளார் தமிழ்ச்செல்வன். சூரியன் உதிக்கும் முன்பு வேலைக்குச் சென்று பண்ணையில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர் சூரியன் மறைந்த பிறகுதான் வீட்டுக்குத் திரும்ப முடியும். மீறினால் சாணிப்பால் சவுக்கடி கொடுமைகள் நிகழ்த்தப்படும் என்ற நிலையில் இந்தக் கொடுமைகளில் இருந்து வெளி நாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும் பண்ணையாரின் ஆட்கள் அவர்களைத் தூக்கி வந்து கொடுமைப்படுத்துவது அறியப்படாத செய்தி. இந்நிலையில்தான் ஆபத்பாந்தவனாக அகில இந்திய கிசான் சபா உதயமானது விவசாய தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

1943ல் மாயவரத்தில் மாதர் சங்க அமைப்பும் ஏற்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. தோழர் மணலூர் மணியம்மாள் அப்பணியில் ஈடுபட்டதைக் குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர். கம்யூனிஸ்ட் கட்சிக்கான தடை நீக்கப்பட்ட பின் 1945க்குப் பிறகு அகில இந்திய கிசான் சபாவிற்குக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டியது.

கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்ட அனுப்பி வைத்த பி.சீனிவாசராவ் “தஞ்சை ஜில்லாவில் நடப்பதென்ன?” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை இந்நூலில் இடம்பெறச் செய்திருப்பதன் மூலம் தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர்களின் உண்மை நிலையைக் களத்திலிருந்து காண்பது போல உணர முடிகிறது.

செங்கொடி இயக்கத்தைக் கட்டி வளர்த்து உயிர்த் தியாகம் செய்தவர்கள், தூக்கு மேடை ஏறியவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள், வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். அவர்களுள் குறிப்பிட்ட தோழர்களைப் பற்றி ஜனசக்தி இதழின் கட்டுரைகள் மற்றும் பிரசுர கட்டுரைகள் மூலம் அவர்களின் வாழ்க்கை வரலாறு பட்மபிடித்துக் காட்டப்பட்டுள்ளது.

விவசாய தொழிலாளர்களின் தன்மானம், சுயமரியாதை, கூலி உயர்வு, தீண்டாமையிலிருந்து விடுதலை என பன்முகத் தன்மையுடன் செங்கொடி இயக்கம் பணியாற்றியதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற காலத்தில் மார்ச் மாதம் சென்னை மாகாண சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டு அத்தேர்தலில் பி.ஜீவானந்தம், பி.ராமமூரத்தி, கே.அனந்தன் நம்பியார், எம்.கல்யாணசுந்தரம், ஆர்.கே.சாந்துலால், மணலி சி.கந்தசாமி, குப்புசாமி, டாக்டர் என்.அண்ணாஜி ஆகிய 8 தோழர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இவர்களில் ரயில்வே தொழிலாளர் தொகுதியிலிருந்து தோழர் அனந்தன் நம்பியார் மட்டும் வெற்றி பெற்றார் என்பதை அறிய முடிகிறது.

களப்பால் குப்பு சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்டதும், இரணியன், ராஜூ, நடேசன், போன்ற தோழர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் தியாக வரலாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்1952ஆம் ஆண்டு நடைபெற்றது. தோழர் அனந்தன் நம்பியார், மாயூரம் நாடாளுமன்றத் தொகுதியில் ரயில்வே அமைச்சர் சந்தானத்தைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் 19 சட்டமன்றத் தொகுதிகளில் 10லும் இரண்டு நாடாளுமன்றத் தொகுதியிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை மாகாண சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பெரும் கட்சியாக விளங்கியது போன்ற பதிவுகள் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம்.

தோழர் தனுஷ்கோடியிடம் நிருபர்கள் “உங்கள் வாழ்க்கையில் எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியபோது, “எழுதப் படிக்கத் தெரியாத பண்ணையடிமையாக இருந்த என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி, மக்கள் ஊழியனாகத் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதையே பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்” என்று கூறியதைப் பதிவு செய்துள்ளது சிறப்பு.

1944-45ல் ஏற்பட்ட கடும் உணவுப் பஞ்சத்தின் போது ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அனைத்துக் கட்சிகளின் மக்கள் உணவுக் குழுக்களை அமைக்க வேண்டும். அக்குழுக்கள் மூலம் பதுக்கி வைக்கப்பட்ட தானியங்களை வெளிக்கொணர வேண்டும் என அறைகூவல் விடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி. உடனே அதனை நடைமுறைப்படுத்தவும் முடிந்தது என்பது அறியப்படாத செய்தி.

செங்கொடி இயக்கத்தின் போராட்டங்களால் ஆட்சிநிர்வாகமும் செங்கொடி இயக்கமும் பல ஒப்பந்தங்களை எழுத்துப் பூர்வமாக உருவாக்கியவை அறிய முடிகிறது. அவற்றுள் சில அமுல்படுத்தப்பட்டதையும் சில அமுல்படுத்தப்படாததையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

செங்கொடி இயக்கத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட தோழர்கள் குறித்து மகத்தான தலைவர் பி.சீனிவாசராவ் 1946ல் ஒரு கட்டுரை எழுதியிருப்பதும் அதை நூலில் இடம்பெறச் செய்துள்ளதும் சிறப்பு.

சதந்திர இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சி 1948 முதல் 1951 வரை மூன்றாண்டுகள் தடை செய்யப்பட்டது இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்.
அத்தகைய அடக்குமுறைக் காலத்தின் குருதி தோய்ந்த வரலாறும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி விவசாய சங்கத்தை மட்டுப்படுத்த பெரியார் தொடங்கிய திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடர்பான பகுதிகள் வாசகர்களுக்குப் புதிய செய்திகளாகத்தான் இருக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் திருத்தல் வாதம் தலைதூக்கிய காலமாகவும் கட்சி பிளவுபட்ட காலமாகவும் இருந்த 1964 ஆம் ஆண்டுடன் நூலின் முதல் பாகம் நிறைவடைகிறது.

நூலின் இரண்டாம் பாகம் 45 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் நூலின் முதல் பாகத்தில் இடம் பெற்ற அனேக தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகளாக பல அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளது.

1967ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் உருவான தி.மு.க. அரசாங்கம் அதன் தலைவர் அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியவில்லை. மாறாக ஆட்சி மாறியும் காட்சி மாறாமல் ஆளும் அரசு நிலப்பிரபுத்துவ வர்க்க பாசத்துடன் தான் இருந்தது என்பது இந்நூலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விவசாய தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட கிசான் போலீஸ் நிலச்சுவார்தார்களுக்கு ஆதரவாகவே நின்றது. அரசும் உறுதுணையாக இருந்தது. அதன் விளைவாக நிலச்சுவான்தார்களுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் நிகழ்ந்த மோதல்களில் அரசும் கிசான் போலீசும் நிலச்சுவான்தர்களுக்கு ஆதரவாகவே நின்றன. அதன் நீட்சியாக கீழ்வெண்மணியில் களேபரம் நடக்க உள்ளதை கட்சியின் மாவட்டச் செயலாளர் முதல்வர் அண்ணாவுக்குக் கடிதம் எழுதியும் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி அண்ணாவிடம் நேரில் எடுத்துரைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக அடுக்கு மொழியில் சமாதானம் சொல்லி மடைமாற்றினார் அண்ணா. அதன் விளைவு 44 கண்மணிகள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிகழ்வு விரிவாக இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.

எளியோரின் கடைசிப் புகலிடமான நீதிமன்றத்திலும் நீதி தேவன் மயக்கத்தால் குற்றவாளி நிலச்சுவான்தார் கோபாலகிருஷ்ண நாயுடு குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார் என்பதுதான் அண்ணாவின் ஆட்சியின் கசப்பான வரலாறு. ஆனால் பின்னாளில் இடது தீவிரவாதிகளால் கோபாலகிருஷ்ண நாயுடு கொல்லப்பட்டார் என்பது தனி.

இந்தியாவில் இந்திரா காந்தியால் ஏற்பட்ட அவசரநிலை, அ.தி.மு.க. தோற்றம், வியட்நாம் வெற்றி, ஜனதா ஆட்சி உள்ளிட்ட பெருநிகழ்வுகளின் காலம் குறித்தும் அதையொட்டி கம்யூனிஸ்ட் இயக்கம் தஞ்சை மண்ணில் களமாடியவை குறித்து அத்தியாயம் 36ல் விளக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு தனித்தனியே களம் கண்டாலும் 1978 முதல் 1981 வரை கூட்டியக்கம் நடத்தியது குறித்து அத்தியாயம் 38ல் விளக்கப்பட்டுள்ளது. அதோடு 45 ஆண்டுகளுக்குப் பிறகு 2026ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் தொடர்ச்சியாக உழைக்கும் வர்க்க நலன் காக்கும் போராட்டங்களை வலுவாக இந்தியாவில் நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் போது நடைபெற்ற மறியல் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் களப்பலியானார்கள் என்பது கசப்பான வரலாறு.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின் அதன் விளைவுகளும் குறிப்பாக தஞ்சை மண்ணில் நிகழ்ந்த வன்முறைகளும் விவரிக்கப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள் காவிக் கும்பலால் பாபர் மசூதி தகர்க்கப்பட்டது. அதையொட்டி இடதுசாரிகள் நடத்திய மத நல்லிணக்க நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியாக தஞ்சை மண்ணில் நடத்திய நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் பிற்காலத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் இடதுசாரி இயக்கமும் போராட்டங்களும் தனித்தனி பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

இந்தியச் சுதந்திரத்திற்கு ஆண்டுக்காண்டு வயது கூடிக்கொண்டே போனாலும் கூட தீண்டாமைக் கொடுமைகளும் சாதி ஆணவப் படுகொலைகளும் பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகளும் தொடர்ந்தபடியே உள்ளன. இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தி வரும் போராட்டங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

2014ல் மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மூன்று முறையாகத் தொடர்ந்து வருவது இந்திய உழைப்பாளி மக்களுக்குத் துன்ப துயரங்கள் தொடர்ந்து கூடிக்கொண்டே வருகின்றன. உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை வகுப்புவாத பிளவுவாத சக்திகள் சீர்குலைத்து வருகின்றன. இவற்றுக்கு எதிரான செங்கொடி இயக்கம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இடதுசாரிக் கட்சிகளின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து செங்கொடி இயக்கம் குறித்து இந்நூலின் இரண்டாம் பாகம் பேசுகிறது.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள் மோடி அரசால் இயற்றப்பட்டதும் ஏராளமான விவசாயிகளைக் களப்பலி கொடுத்து 13 மாத காலம் நிகழ்த்தப்பட்ட விவசாயிகள் போராட்டமும் அதையொட்டிய தஞ்சை மாவட்ட இயக்கப்பணிகள் விரிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

அத்தியாயம் 64ல் தஞ்சைத் தரணியில் நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டதா? எனும் தலைப்பில் ஜெயரஞ்சன் நூலை வைத்து ஆய்வு செய்துள்ளார் நூலாசிரியர்.
நில வினாடிகளுக்கு வசதியேற்படுத்திக் கொடுத்த தி.மு.க.வின் தகிடுதத்தங்களை இக்கட்டுரையில் விவரித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

“இதுவரை நடைபெற்ற போராட்டங்கள் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என்னும் கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை இந்நூல் மூலம் அறியலாம்.

இந்நூலின் இரு பாகங்களுக்கு மான பின்னிணைப்புகளாக நூலுக்குத் துணை நின்ற நூல்கள், பிரசுரங்கள், மாநாட்டு அறிக்கைகள் என பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலை எழுதத் தூண்டிய முத்த எழுத்தாளர் அருணன் அவர்களையும் களப்பணியில் உதவி புரிந்த ஜீ.வெங்கடேசன் அவர்களையும் இந்நூலைச் சிறப்பாக பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் தோழர்களையும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்நூலாசிரியர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இவ்வரிய நூல் முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவரும் படித்தறிய வேண்டிய பாதுகாக்க வேண்டிய வரலாற்று நூல் எனின் மிகையன்று.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:‘திருப்பியடித்த வரலாறு’ (இரு பாகங்கள்) – இரண்டாம் பதிப்பு
ஆசிரியர்: 
வெளியீடு:
விலை: 40% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பெரணமல்லூர் சேகரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *