ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “‘திருப்பியடித்த வரலாறு’ (இரு பாகங்கள்)” புத்தகம் | S.Tamilselvan's Thiruppiyaditha Varalaru Two Parts Tamil Book Review | தேனிசீருடையான் | www.bookday.in

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம்

“திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு நூற்றாண்டு வரலாறு என்பதைவிட, அடித்தட்டு உழைப்பாளி மக்களின் வர்க்கப் போராட்ட வரலாறு என்று சொல்லலாம். “சோழநாடு சோறுடைத்து” என்ற பழையை மொழியின் புதிய அவதாரமாய், நெல் விளைச்சல் பூமியின் ஆதிக்க சக்திகளின் வரம்புமீறிய அடாவடி வரலாறு என்றும் அதை முறியடித்த வீரம் செறிந்த போராட்ட வரலாறு என்றும் கூற முடியும். அரசர்கள் ஆதிக்கத்தில் நிலங்கள் இருந்தபோது வரிமூலம் கசக்கிப் பிழியப் பட்ட உழவுப் பாட்டாளிகள் ஜனநாயக யுகத்தில் விளையும் நிலங்களைத் தமக்குள் பகிர்ந்துகொண்ட ஆண்டைகளும் தர்மஸ்தாபனங்களும் உழைத்து விளைவித்த மக்களைச் சுரண்டிக் கொழுத்த வரலாற்றை மாற்றி எழுத முயன்ற வரலாறு என்றும் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின், 1964 வரையிலான, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு மற்றும் அதற்குப் பிறகான 2024ஆம் ஆண்டு வரையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்க்கப் போர், தத்துவப் போராட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய, வாழ்வியல் நிகழ்வுகளில் கண்டடைந்த அனுபவங்கள் மற்றும் தன்னிகரற்ற தியாகச் சுவடுகளின் தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது. புனைவிலக்கியவாதியாய் இலக்கிய உலகத்துக்குள் புகுந்த எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் இத்தனை பெரிய நூலை எழுதிமுடிக்க மேற்கொண்ட வாசிப்பு மற்றும் களப் பணிகளின் உழைப்பு நூலெங்கும் விரவிக் கிடக்கிறது. “அ” புனைவு இலக்கியத்துக்காக அரிதாகவே வழங்கப் படும் சாகித்ய அகாடமி விருதை வென்ற அதே சமகாலத்தில் விருதைத் தாண்டிய மதிப்புமிக்க இந்த நூலை எழுதி படைப்புச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். வாசக உலகம் தலைவணங்கிப் பாராட்டுகிறது.

ஆண்டாண்டு காலமாக நில உடமைக்கும் நில உழைப்புக்கும் இடையில் பாகுபாடான இயங்குநிலை இருந்துவந்த போதிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் விவசாயக் கூலிகள் மனக்குமறல் அடைந்து போராட எண்ணம் கொண்டபோது அதை ஒரு iஇயங்கியல் வடிவமாக்கி ஒழுங்கு படுத்தியது “விவசாயிகள் சங்கம்”. “இந்திய கம்யூனி|ஸ் கட்சி என்ற அரசியல் அமைப்பு அந்தப் போராட்டத்தை ஒழுங்கு படுத்தி சுய உரிமைப் போராட்டக் களத்துக்கு அடித்தட்டு மக்களை அழைத்துச் சென்றது. எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் அந்த வரலாற்றின் ஆதிமுதல் அந்தம் ஈறாக நிகழ்ந்த சம்பவங்களைத் தொகுத்து ஒரு காவியம் போல படைத்திருக்கிறார். இன்றைய நாளின் மிகச்சிறந்த உரைநடைக் காவியம் என்று சொல்லலாம். அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முய/ற்சி ஒரு தனிமனிதன் வாழ்நாளில் செய்து முடிக்க முடியாத பேருழைய்யின் படிமம் ஆகும். காரல்மார்க்ஸ் 1800 நூல்களின் சாரத்தை “மூலதனம்” என்ற சமூக அறிவியல் தத்துவப் படைப்பாய் உருவாக்கியதுபோல, இவர் 227 நூல்களில் இருந்து தரவுகளைச் சேகரித்து இந்த வரலாற்று நூலைப் படைத்திருக்கிறார்.

நிலம் என்பது பிரபஞ்ச வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க முடியாத உற்பத்திக் கருவூலம். ஜீவராசிகளின் முதல் தேவை உணவு என்பதால் அதை உற்பத்தி செய்ய மற்ற எந்த உயிரினத்தையும்விட மனிதனே அறிவியல் பார்வையின் அனுகூலங்களைப் பயன்படுத்தி உருவாக்கம் செய்தான். நிலத்தில் உழைத்து உற்பத்தி செய்து பொது உலகத்துக்கு விநியோகம் செய்த அந்த ஆதி ஞானம், பின் வந்தவர்கலால் கபளீகரம் செய்யப் பட்டு, அரசியல் அதிகாரம் மற்றும் புத்திக் கூர்மையின் சதுராட்டம் ஆகியவற்றின் வழியாக சுயமாக்கி தனியுடமை வளாகத்தை உருவாக்கினானார்கள். நிலம் இயற்கையின் பொதுச்சொத்து என்ற கட்டுமானத்தை உடைத்து ஆதிக்க மனோபாவம் வளர்ந்த காலத்தில் தனியுடமை ஆகி, நிலம் உடையவன் சகல அதிகாரங்களும் பெற்று சமூகத்தின் மேல்மட்டத்துக்கு உயர்ந்தான். அந்த சூது தெரியாத உழைப்பாளிகள் நிலத்துக்காரனுக்கு அடிமை உழைப்புச் செய்து “குடிக்கக் கஞ்சி இருந்தால் போதும்” என்ற கையறு நிலைக்கு இறங்கினர். ஆக, நில உரிமையாளன், நிலத்தின்மீதான உழைப்பாளி என்ற வர்க்கபேதம் உண்டாகி உலகம் இரண்டு கூறுகளானது என்பது இயக்கவியல் வரலாற்றின் முன்னுரைப் பகுதி.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சைத் தரணியில் மனித இனம் விழிப்படையத் தொடங்கியது. முதலில் கூலி உயர்வுப் போராட்டம்; அதாவது உழைப்பதற்கு சக்தியை பெற போதுமான தான்யக் கூலி வேண்டும் என்று போராடத் தொடங்கினார்கள். அந்தப் போராட்ட வடிவத்தை நேர்படுத்தி செழுமைப் படுத்திய அமைப்பு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாய சங்கம். வெற்றுக் கோரிக்கைகள் பலன் தராத நிலையில் அதை மேம்படுத்திப் போராட்டக் களத்தை உருவாக்கிய பெருமை கம்யூனிஸ்ட் கட்சி என்ற அரசியல் இயக்கத்துக்கு உண்டு. அந்த உழைப்பாளிக்கூட்டத்தில் இருந்தே அதை வழிநடத்தும் தலைவர்கள் தோன்றினார்கள். அனுபவ முதிர்ச்சிதான் தலைமைத்துவக் கோடுகளை உருவாக்குகிறது.

தஞ்சைமாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தென்பரை கிராமத்தில் முதல் செங்கொடி 1943ல் நிலைநாட்டப் பட்டது. அதை நட்டவர்களும் தத்துவப் பிடிமானத்தோடு வளர்த்தெடுத்தவர்களும் அந்த உழைப்பாளிக் கூட்டத்தில் இருந்து உருவானார்கள். “எனக்கான உணவு எங்கே” என்|ற உரிமைக் கேள்வியின் வழியாக, நில உடமையாளர்களை நோக்கி “எங்கள் வாழ்வை நாங்களே எடுத்துக்கொள்ளப் போகிறோம் என்று எச்சரித்ததோடு அதற்கான முன்னெடுப்புகளைச் செய்த போராட்ட வீச்சுதான் தஞ்சைத் தரணியின் “திருப்பி அடித்த” வர்க்கப் போராட்ட வரலாறாக மாறியது.

ஒருவேளை அந்ஹ்ட உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட்ட திடகாத்திரத்தோடு நின்றிருந்தால் இந்நிலத்தில் சோஷலிசக் கட்டுமானம் உண்டாகியிருக்கும். உழைப்பாளி மக்கள் ஒரே வர்க்கமாக ஒன்றுபட முடியாமல் இருந்த காரணங்களில் பிரதானமானது சாதி. பெரும்பகுதி உழைப்பாளிகள் கீழ்த்தட்டுச் சாதியில் இருந்தார்கள். நில உடமையாளர்கள் உயர்சாதி உழைப்பாளிகளை, வர்க்க விரோதிகளாக்கி, விவசாய இயக்கத்தை உடைக்க முயன்று சில இடங்களில் வென்றும் பல இடங்களில் தோற்றும் போனார்கள். ஒரே வர்க்கத்தின் வளாகவெளியில் நிலவிய இந்த முரணைச் சமாளித்து கம்யூனிஸ்ட் தோழர்கள் அவர்களை ஒற்றுமைப் படுத்த முயன்றார்கள். ”தொழிலாளிவர்க்கப் பாதை” என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை வேலைத்திட்டத்தின் வழியாக சுரண்டலை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்காக அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது. (21ஆம் நூற்றாண்டின் இன்றைய காலப் பகுதியில் சிபிஎம் கட்சியில், ”மக்கள் ஜனநாயகப் புரட்சி” என்ற வேலைத் திட்டப்படி செயல்படுவது மேற்கண்ட வேலைத்திட்டத்தின் நீட்சி என்று சொல்லலாம்.)

அற்புதமான பல இயக்கத் தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து, தியாகம் செய்து இந்த இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர். அந்தத் தியாகிகளின் உழைப்பால்தான் கட்சி இன்றளவும் தொய்வுபடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. களப்பால் குப்பு, வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான், ஓடை சிவராமன், சிக்கல் பக்கிரிசாமி, நாணலூர் நடேசன், கெழுத்தூர் காந்தான், கோட்டூர் மஞ்சான், வைரவன், குடவாசல் தங்கையன், ராயமுண்டாம்பட்டி வெங்கடாச்சலம்; (இவர் எப்படி யாரால் கொலைசெய்யப் பட்டார் என்ற செய்தி இன்றுவரை கிடைக்கவில்லை.) இரிஞ்சூர் சின்னமாப்பிள்ளை, திருமெய்ஞ்ஞானபுரம் அஞ்சான், நாகூரான், மன்னார்குடி ஞானசேகரன், நந்நிலம் நாவலன், மன்னார்குடி பக்கிரிசாமி, மணலூர் மணியம்மை என்று பலபத்துத் தோழர்களின் தியாக வரலாறு இந்நூலில் பேசப் படுகிறது.

இப்படியாக நேர்கோட்டில் பயணித்துக் கொண்டிருந்த கட்சி அமைப்புக்குள் திருத்தல்வாதிகள் நுழையத் தொடங்கினர். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆளும் வர்க்க ஆட்சியின் சில முற்போக்குத் திட்டங்களுக்கு மயங்கி, “அவர்கள் செய்வது சோஷலிசத்துக்கான முன்னெடுப்ப்பு” என்று கணக்குப்போட்டு, கட்சியைப் பிளவு படுத்தினார்கள். இந்திய சீனப் போர் நிக்ழந்தபோது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கட்சியின் ஒரு சாரார் கூறியதை திருத்தல்வாதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடு தம் சொந்தக் கட்சித் தோழர்களையே “சீன ஏஜண்டுகள்” என்று வசைபாடினர் மற்றும் காட்டிக் கொடுத்தனர். அத்தகைய (பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று நியாயம் பேசிய) பல தோழர்கள் அரசாங்கத்தால் வேட்ட்டையாடப்பட்டனர். திருத்தல்வாதத்தின் உச்சபட்ச நிலைபாடாக இந்தக் “காட்டிக்கொடுத்தல்” நடவடிக்கை அமைந்தது. ரஷ்யக் கட்சிக்குள் நிகழ்ந்த ஏகாதிபத்திய மனோபாவமும் டாங்கே தலைமையிலான இந்தியத் திருத்தல்வாதிகளால் பாராட்டப் பட்டநிலையில், கட்சி பிளவு உறுதியானது. அன்றைய காலகட்டத்தில் உலக அளவில் நிலவிய மூன்று முரண்பாடுகளைப் பற்றிக் கணிக்கத் தவறியதால்தான் இந்தப் பிளவு உருவானது என்கிறார் நூலாசிரியர்..

1.சோஷலிச முகாமுக்கும் ஏகாதிபத்திய முகாமுக்கும் இடையிலான முரண்பாடு.

2.முதலாளித்துவ உலகில் முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு,

3.முதலாளித்துவ நாடுகளுக்குள்ளேயே ஏகாதிபத்திய முகாமுக்கும் முதலாளித்துவ முகாமுக்கும் இடையிலான முரண்பாடு.

மேற்கண்ட மூன்று முரண்பாடுகளைக் கணிக்கத் தவறிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களின் சிந்தனை முரண்பாட்டின் விளைவாக . 1964ம் ஆண்டு கட்சி பிளவு படுவது தவிர்க்க முடியாததானது. கட்சியின் முக்கியத் தலைவர்களான 1 இ. எம். எஸ், 2, ஏகேஜி, 3 பி, ராமமூர்த்தி, 4. எம் ஆர், வெங்கட்ராமன், 5 பி. சுந்தரய்யா, 6 எம். பசவ புன்னையா, 7 ஜோதிபாசு. 8 ஹரிகிருஷ்ணக் கோனார், 9 ஹரிகிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரின் தலைமையில் “இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி உதயமானது.

1968ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் 44 பேர் தீவைத்துக் கொளுத்தப் பட்ட, உலகை அதிரவைத்த வரலாற்றுக் கொடூரத்தை இந்நூல் காவியச் சோகப் பிழிவின் தாக்கத்தோடு விவரிக்கிறது. தமுஎகச தலைவரும் படைப்பாளியுமான சோலை சுந்தர பெருமாள் “செந்நெல்” என்ற நாவலில் அந்த நிகழ்வை வாசகமனம் அதிரும்படி காட்சிப் படுத்தியிருக்கிறார். “தீயின் பற்கள் 44 மனித உயிர்களை மென்று துப்பியபோது, தப்பித்து ஓடி நெல்வயல்களின் பழுத்திருந்த நெற்கதிர்களில் ஒளிந்தர்கள். தீயின் நாவு வயல்வரை நீண்டது; அவர்கள்மீதும் நெருப்பு படர்ந்தது. நெல்மணிகள் மொருமொருவென வெடித்துக் கருகின”

ஏரிந்தவர்கள் நினைவாக கீழ்வெண்மணியில் நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. விவசாய இயக்கத்தின் சகோதர வர்க்கமாகிய இந்தியத் தொழிற்|சங்க மையம் பணம் திரட்டி இந்த நினைவுச் சின்னத்தை எழுப்பியது. விவசாய வர்க்கத்தின் சோக வரலா|ற்றின் சின்னமாகவும் மார்க்|ஸி|ஸ்ட் கட்சியின் அடையாளமாகவும் காட்சி தந்துகொண்டிருக்கிறது.

2024ஆம் ஆண்டு வரையிலான கட்சியின் வளர்ச்சிப் போக்கையும் அரசியல் இயக்க நிலைபாடுகளையும், கட்சி ஆவணங்கள் வழியாக மதிப்பீடு செய்கிறது நூல்.

தஞ்சை மாவட்டம் என்ற ஒரு பகுதி வரலாறே இத்தனை பெரிய நூலாக விரிந்திருக்கிறது என்றால் தமிழக, மற்றும் ஒட்டுமொத்த இந்திய நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறை எழுதினால் எத்தனை பெரிய ஆழ்ந்து அகன்ற வடிவமாய் உருப்பெறும் என்று நினைக்க மலைப்பாக இருக்கிறது.

கட்சித் தோழர்கள் மட்டுமில்லாமல் அனைத்துப் பகுதி மக்களின் நூலகங்களையும் அலங்கரிக்க வேண்டிய முக்கிய நூல் “திருப்பி அடித்த வரலாறு,”

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:‘திருப்பியடித்த வரலாறு’ (இரு பாகங்கள்) – இரண்டாம் பதிப்பு
ஆசிரியர்: 
வெளியீடு:
விலை: 40% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 தேனிசீருடையான்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *