ஊஞ்சலென்பது சொகுசான மனநிலையில் அந்தரத்தில் மிதந்தாடுவது. அது உங்கள் வீட்டில் உத்திரத்தில் கட்டியாடும் ஊஞ்சலாக இருக்கலாம். ஆத்தோரம் ஆலமரத்து விழுதுகளில் தூரியாடும் ஊஞ்சலாகவும் இருக்கலாம். எல்லாம் உங்கள் செல்வ மதிப்பை பொருத்தது. எங்கள் தெருவில் ஊஞ்சல் வைத்த வீடொன்று ஒரு காலத்தில் இருந்தது. வயதான கிழவனும் கிழவியும் அதில் தலை சாய்த்து ஊஞ்சலாடிக் களிப்பார்கள். நல்ல விளைந்த தேக்குமரப் பலகையில் செய்யப்பட்டது. கனத்த சங்கிலி நாற்புரமும் பூட்டி மிகப் பாதுகாப்பானதாக இருக்கும். முதியவர்கள் காலமானதற்குப்பின் இப்போது அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும் அது என் நினைவில் இன்று வரை ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகளை இடையிலாடும் ஊஞ்சலாக்கி தந்திருக்கிறார். தலைப்பு கவித்துவமாகவும் உள்ளடக்கம் அர்த்தப் பூர்வமானதொரு கட்டுரையாகவும் ஒளிர்கிறது. அட்டைப் படத்தை இன்னும் அழகியலாக யோசித்திருக்கலாம்.
மொத்தம் 34 கட்டுரைகள் இந்து தமிழ் திசை நாளிதழிலும் மாலைமலர் நாளிதழிலும் வெளிவந்த கட்டுரைகள் சிறிதும் பெரிதுமான கட்டுரைகள்.இலகுவான எழுத்து நடை என்பதால் எவரும் எளிதில் வாசித்து வெளியேறலாம் வாருங்கள் நாமும் உள் நுழைவோம்.
முதல் கட்டுரையே சம காலத்தில் பேசிக் கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை தூக்கி தலையில் வைத்து கொண்டாடும் அபத்தத்தை கண்டிக்கிறது. இன்றைய ஆளுநர் ரவி வகையறாக்கள் இன்றும் கூட கால்டுவெல்லை திட்டி வேத மொழி அரிப்பை சொரிந்து கொண்டிருக்கும் காட்சியை காண்கிறோம்.
புதுக்கோட்டை துறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சமூக அருவெறுப்பு மிகுந்த கட்டுரையும், திருநெல்வேலி நாங்குநேரியில் சின்னத்துரையையும் அவன் தங்கையையும் தாத்தாவையும் வெட்டிச் சாய்த்த சாதீய வெறியர்களின் கொடூரங்களை கண்டித்தும் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. சாதியும் மதமும் எக்காலத்திலும் அகற்ற முடியாத பெரும் தீங்கென வளர்ந்து வருவது நாகரீக சமூகமென்று நாமெல்லாம் சொல்லிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்திற்கு தீரா இழுக்கை தருகிறது என்பதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
வாசிப்பும், வாசிப்பு பழக்கமும் ஒரு தீயாய் பற்றி பரவுவதற்கு ஒரு சிறு பொறியாய் தமிழகமெங்கும் சுற்றிச் சுடர்கிறார். மனிதர்கள் வாசிக்கத் துவங்கினால் சமூகக் கேடுகள் யாவும் தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இரண்டு கட்டுரைகளில் நம்பிக்கை வார்த்தைகளை விதைத்திருக்கிறார். சுயநலமாக நான்கு புத்தகங்களை எழுதி எண்ணிக்கையை கூட்டி விட்டு ஒரு சாகித்ய அகாடமியோ அரசின் இன்ன பிற விருதுகளை பெற முயற்சிக்காமல் தான் பெற்ற கல்வி சமூகமும் பெற்று பயன் பெற வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆர்வமும் உந்தித்தள்ள இன்று ஒரு பெரும் படையையே கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார். நாளைய இளைஞர்களுக்கு பெரும் ஆதர்சமாக ஆசானாக விளங்குவார் என்பது பொய்யில்லை.
மணிப்பூர் வன்முறையும் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மாபாதக நிகழ்வுகளையும் இன்று வரை வாய்மூடி மெளனியாக இருக்கிற காவி பிரதமரையும் ஓரிரு கட்டுரைகளில் மிக அழுத்தமாகவே சாடியிருக்கிறார். கேளாச் செவியினருக்கு தேர்தல் ஒன்றே பாடம் புகட்டும் அருங் கருவியென கொள்வோம்.
மிருக நலனும் மிருக பலமும் எனும் கட்டுரையில் அம்பிகாவதி அமாரவதி காதல் குறித்த செய்திகளும், கம்பரும், மூன்றாம் குலோத்துங்கச் சோழனும், செய்த விவாதங்களும் கட்டுரையில் வருகிறது. எனக்கு தெரிந்து அவை யாவும் புனைவுகளே என்று கருதுகிறேன். அதை உண்மை போல் எழுதியிருக்க வேண்டாம் கு.அழகிரிசாமியின் கதையில் வருவதாக எழுதியிருந்தாலும் கதை கதை தானே.
தினங்கள் குறித்தொரு கட்டுரை, விவசாயிகளின் போராட்டங்கள், நோபல் பரிசு, சின்னப்ப பாரதி, பகத்சிங், வன்முறை கல்வி, பட்டினிக் குறியீடு, ஈரானியப் பெண்கள் எனப் பரவலான தலைப்பில் மிகச் சுருக்கமாக செய்திகளை சொல்லிச் செல்கிறார்.
எவ்வளவோ விஷயங்களும் செய்திகளும் தெரிந்த தோழர் ச.தமிழ்செல்வன் அவர்கள் இன்னும் ஆழமாக விரிவாக எழுதி இருக்க வேண்டும். போகிற போக்கில் நுனிப் புல்லாய் செய்திகளை தந்திருக்கிறார். அவரது உயரத்திற்கு இது போதுமானதன்று. சமகாலத்திற்கு பொறுத்தப்பாடாக பல கட்டுரைகள் இருப்பது சிறப்பு கட்டுரையாசிரியர் ச.தமிழ்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகள்
நூலின் தகவல்கள்:-
நூல் : “இடையிலாடும் ஊஞ்சல்“
நூலாசிரியர் : ச.தமிழ்செல்வன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : ரூ. 140/-
பக்கங்கள் : 144
நூலறிமுகம் எழுதியவர்:-
செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.