சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழ்ந்த (அவ்வாறு வாழ வற்புறுத்தப்பட்ட) மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது கூகை. வாசிக்க வாசிக்க துக்கம் மேலிடுகிறது. இப்புத்தகத்தை வாசிக்கும், மனசாட்சி கொண்ட எவரும், ஓரிடத்திலாவது புத்தகத்தையே மூடி வைத்து விட்டு, நம் சமுதாயத்தின் கொடிய விசமான சாதீ’ய படிநிலைகளை எண்ணி நொந்து கொள்வது உறுதி. நிச்சயம் வெட்கப்பட வேண்டும்.
கிணறு வெட்டிக் கொடுப்பார்கள். ஆனால் அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதியில்லை. தொட்டால் தீட்டு. கிணறு வெட்டும் போது தீட்டு இல்லையா? அவர்களின் உழைப்பை மட்டும் உறிஞ்சிய ரத்தகாட்டேரிகள்.
சோற்றுக்கு தம்மையே எப்பொழுதும் சார்ந்திருக்குமாறு பார்த்துக் கொண்ட ஜமீன் மற்றும் மேலத்தெரு மக்கள்.முதுகை எப்பொழுதும் வளைந்தவாறு வைத்துக்கொள்ள சாட்டையடிகளும் சவுக்கடிகளும். போதாமைக்கு எப்பொழுதும் கூழைக்கும்பிடுகள், தொங்கிய தலைகள், ஒட்டிய வயிறுகள், ஏச்சு பேச்சுக்கள், எப்பொழுதும் அனுபவித்து எறிய ஏழை வீட்டுப் பெண்கள், குறைந்த கூலிக்கு, சமயத்தில் கூலி இல்லாமலும், அதுமட்டுமா, மலமள்ள, சாவுக்கு குழி தோண்ட, துஸ்டி சொல்ல எல்லா கீழ்நிலை வேலைகளுக்கும் கட்டாயத்தின் பேரில் விருப்பமில்லாது செய்ய வற்புறுத்தப்பட்டனர்.
மான ரோசத்தோடு வாழ விரும்பினாலும், அவர்களை அவ்வாறு வாழவிடாது, தந்திரமாய் ஒடுக்கி தனக்குக்கீழ் எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இம் என்றால் அடி உதை ஏன் என்றால் குடிசைகளைக் கொளுத்துவது. ச்சீய் என்ன மாதிரியான மனநிலை கொண்ட மக்களைக் கொண்டது இச்சமூக கட்டமைப்பு. அறிவுள்ள எவரும் இதற்காக வெட்கப்படுவர்.
சொந்தமாக ஒரு கடை வைத்துக்கொள்ள கூடாது. குடிக்க தண்ணீரிலிருந்து எல்லாவற்றுக்கும் மேலத்தெருவையே சார்ந்து வாழுமாறு வற்புறுத்தப் பட்டனர்.
இக்கதையின் நாயகியாக முத்துப்பேச்சியைப் பார்க்கிறேன். வெற்றிமாறன் அவர்கள் ஒரு படம் இயக்கவேண்டும் முத்துப்பேச்சியைப் பற்றி. அவள் சமர்த்து, இரக்கம், துணிச்சல், பாசக்காரி, எல்லாம் அபாரம். அப்புச்சுப்பனோடு பேச்சியின் நட்பு அழகு.
சீனித்தாத்தா, அவர் சமூக முன்னேற்றத்திற்கு உழைத்த மூத்தவர். நெளிசு சுழிவு தெரிந்தவர். கம்மாயில் விசம் வைக்க வந்தவர்களை ஒரே அமுக்கில் வீழ்த்தியது அட்டகாசம்.
ஆரம்பத்திலேயே வரும் முத்துக்கருப்பனும் மூக்கனும் அழகி படத்தை நியாபகப் படுத்தினர்.
மாயவனம், மோகனவல்லி என அப்போதைய அரசியலைப் பேசி இருந்தது.
அம்மக்களின் வாழ்க்கைமுறையில் காலத்தினால் ஏற்பட்ட மாற்றம் குறிப்பாக வேதக்கோயில்களின் வருகை. அதனால் கொஞ்சம் முன்னேற்றம் மற்றம்
அது சார்ந்த பிரச்சனைகள். கொலைகள்.
குறிப்பாக பொய் வழக்குகளும், பூட்ஸ் கால்களும் வலியோருடன் இணைந்து அவர்கள் வாழ்க்கையை சூறையாடியது. கொடுமையிலும் கொடுமை.
அருணாச்சலம் சிறந்த மனிதாபிமானமுள்ள கதாபாத்திரம். அவர் போன்றோர் எப்பொழுதும் உண்டு. அவர் வாழ்க.
இச்சமூக மக்களை கூகை இனத்தோடு ஒப்பிட்டு ஆசிரியர் எழுதி இருக்கிறார். பெரிய இறகு, உடல் வலிமை எல்லாம் இருந்தும், பகல் பொழுதில் எல்லா பறவைகளிடமும் கொத்தி குதறப்படும் இனமாக இவர்களை சித்தரிக்கிறார்.
முத்தையாபாண்டி போன்ற கதாபாத்திரத்தை வாசிக்கும் பொழுது கசப்பேறுகிறது.
ஜமீன் ஆசைப்படும் கன்னிப்பெண்களை அவர்தம் பெற்றோர், நிலவறை தோண்டி குழிக்குள் ஆழ்த்தி அவர்களை சிறுதெய்வங்கள் ஆக்கியது வரலாறு தான் என்றாலும் உவப்பில்லை. நீங்களே பெண்ணைப் பாதுகாப்பேன் பேர்வழியில் அடக்கி, ஒழித்து வளர்க்கிறார்கள். முடியாத பட்சத்தில் கொன்று விடுவது, இது தான் நீங்கள் பாதுகாக்கும் லட்சணமா? உங்கள் இயலாமைக்கு அவளைக் கொன்று கன்னி தெய்வமாக்கி புளங்காகிதம் வேறு.
முரண்படுகிறேன்.
பேச்சியை போலவே மாரியும் கயிறு பொதியை எடுத்துக் கொண்டு, சோத்துச்சட்டியுடன் கிளம்பும் இடம், எப்பொழுது இவர்களுக்கான விடிவுகாலம் வரும் என ஏங்கியது மனது.
பேச்சியின் வாழ்க்கைக்குள் நுழைந்த கதாபாத்திரமான காளி என்னும் அவள் கணவனை பெருமையாக சொல்கிறார்கள். ஒரு கொப்பை பிடித்தால் அதை விடக் கூடாது என பேச்சிக்காக எல்லாம் துறந்தவர், இழந்தவர், இறந்தவர்னு. அதே மாதிரியே அவர் ஏன் அவருடைய முதல் மனைவிக்கு இல்லை?.
அண்ணல் அம்பேத்கரை நினைவு கூறி இதனை முடிக்கிறேன். அவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த கதையை இப்பொழுதும் நேரில் பார்க்கும் அவலம் தான் இருந்திருக்கும்.
ஜெய் பீம்!
புத்தகம்: கூகை
ஆசிரியர்: சோ.தர்மன்
வெளியீடு: அடையாளம் பதிப்பகம்


இந்த நவீனத்தை சமீபத்தில்தான் படித்து முடித்தேன். உண்மையிலேயே பேச்சி ஒரு அழுத்தமானவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
கூகைக் கோயிலையும் ஆலமரத்தையும் அகற்றி காளிக்கு கோயில் கட்டுவது கிறித்துவர்கள் சித்தரிக்கப்பட்ட விதம் பள்ளுக்குடி பறைக்குடி வேறுபாடுகள் போன்ற அம்சங்கள் வேறு நோக்கங்கள் உண்டோ என்று சந்தேகிக்கச் செய்கிறது.
எங்கேயோ எப்பவாவது ஒரு அய்யர் நிலப்பிரபு நிலத்தை கொடுத்திருக்கலாம். ஆயின் நிலப்பிரபுத்துவத்தின் பொதுவான குணாம்சம் வேறு. இங்கே அய்யர் வாரிக் கொடுப்பதாக சித்தரிப்பது என்பது பிசிறடிக்கிறது.
பெண்கள் பாலியல் ரீதியில் சுரண்டப்படுவது, துட்டி கழிக்கப்போன இடத்தில் ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டு வந்ததற்காக தண்டிக்கப்படுவது ஆகியவை பேசப்பட்டிருப்பினும் இது முழுமையடையவில்லை