எஸ்.தோதாத்ரி எழுதி “தத்துவார்த்தம்” என்கிற இந்த நூல் தத்துவம் பற்றிப் படிக்கத் தொடங்குபவர்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கிறது. படித்தவர்களுக்குத் தொகுப்பாகப் பார்ப்பதற்கும் மார்க்சியத்தில் இருந்து விலாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
இந்த நூல் 35 இயல்களைக் கொண்டுள்ளது. இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிற உட்பிரிகளைக் கொண்ட மார்க்சியத் தத்துவம் 20 இயல்களில் காணப்படுகிறது. மீதமுள்ள 15 இயல்களில் மார்க்சியப் போக்குகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் இந்தியத் தத்துவங்களான உலகாயதம், சாங்கியம், வைசேடிகம், மீமாம்சம், அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களைப் பற்றி சுருக்கமாகவும் எளிமையாகவும் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும்படியும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
முதல் இயல் தத்துவம் என்றால் என்ன? தத்துவத்தைப் படிக்கத் தொடங்கும் அனைவருக்கும் எழும் கேள்வி இது. அரைநாடோடிகளான ஆரியரின் ரிக் வேதம், தமிழர்களின் சங்க இலக்கியம் ஆகியவற்றில் தத்துவங்கள் காணப்படவில்லை. சமூகத்தில் வர்க்கம் ஏற்பட்ட பிறகே தத்துவம் தோன்றுகிறது என்பதை மிகவும் எளிமையாக விளக்குகிறது. தொழில் பிரிவினை ஏற்படும்போது ஏற்பட்ட வர்க்க வேறுபாடே தத்துவம் தோன்றுவதற்குக் காரணம் ஆகும். வர்க்க வேறுபாடு வளரவளர தத்துவமும் வளர்ச்சி பெறுகிறது என்பதை இந்த நூல் விளக்குகிறது.
இரண்டாவது இயல், மீண்டும் மார்க்சியத்தை நோக்கி. மார்க்சுக்கு முன்பானவர்கள் கம்யூனிச சமூகத்தைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால், பாட்டாளி வர்க்க சார்பான அறிவியல் வழிப்பட்ட, கம்யூனிசத்தை சமூகம் அடைவது பற்றியதாக மார்க்சின் சித்தாந்தம் அமைக்கப்பட்டது. இதனை எளிமையாகவும் சுருக்கமாகவும் இந்த இயல் விளக்குகிறது. மேலும் இந்த இயலில் மார்க்சியத்துக்கு எதிரான போக்குகள் உருவாகியிருப்பதையும் அதற்கு எதிராக மார்க்சிய அடிப்படைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக மார்க்சியத்தை கற்க வேண்டியிருக்கிறது என்பதையும் இந்த இயல் வலியுறுத்துகிறது.
6 முதல் 11-ஆவது இயல்வரை பொருள், இயக்கம், இயக்கவியலும், இயக்க மறுப்பியலும், பண்பா? அளவா? நிலை மறுப்பு விதி, எதிர் சக்திகளின் போராட்டம், அறிதல் ஆகிய தலைப்புகளில் இயக்கவியல் பொருள்முதல்வாதம் விளக்கப்படுகிறது. 12-ஆவது இயல் லெனினியம். மார்க்சியம் வறட்டுச் சூத்திரம் அல்ல; அது புதிய சூழ்நிலைமைக்கு ஏற்ப வளர்ச்சி பெறும் என்பதை லெனின் நிறுவியதை இந்த இயல் பேசுகிறது. அது மட்டுமல்லாது அனுபவவாதம் என்கிற மார்க்சியத்துக்கு எதிரான புதிய போக்கினை லெனின் எதிர்த்து பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்கிற நூலை எழுதினார்.
“தத்துவார்த்தம்” என்கிற நூல் சுருக்கமாக எழுதியிருந்தாலும் லெனினது இந்த தத்துவப் பங்களிப்பை மிகவும் சிறப்பாக எஸ்.தோதாத்ரி எழுதியுள்ளார். லெனினது இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தும் கொடுத்துள்ளார். நா.வானமாமலையைத் தொடர்ந்து எஸ்.தோதாத்ரி மார்க்சியத்துக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். வயது முதிர்ந்த இன்றைக்கும் அவர் இணைய வழியில் வகுப்பெடுக்கிறார். உரை நிகழ்த்துகிறார். எஸ்.தோதாத்ரி தொடர்ந்து செய்துவரும் செயற்பாட்டினை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
13-ஆவது இயல் முதல் 20-ஆவது இயல் வரை வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை இந்நூல் விளக்குகிறது. மார்க்சியத்தைத் திருத்தும் போக்கு அதிகமாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தில்தான் நிகழ்கிறது. அதனைப் புரிந்து எஸ்.தோதாத்ரி மார்க்சியத்தில் இருந்து விலகும் போக்கை சுட்டிக்காட்டி, மார்க்சியப் போக்கை நிலைநிறுத்தியுள்ளார்.
வரலாற்றை இயக்கும் சக்தி, உற்பத்திச் சாதனங்களும் உற்பத்தி உறவுகளும்தான் என்று மார்க்ஸ் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, இது மார்க்சியத்தின் மிக முக்கியமான அம்சமாகும்; இதனைப் புறக்கணித்து விட்டுப் பேசப்படும் எதுவும் மார்க்சியம் ஆகாது என்கிறது இந்நூல். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது; சிந்தனை வாழ்நிலையினைத் தீர்மானிப்பதில்லை என்பதே வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படை. இதனை வலியுறுத்தியே மார்க்சியம், அடித்தளம், மேற்கட்டமைப்பு என்கிற கோட்பாட்டை தோற்றுவித்துள்ளது.
உபரி மதிப்பு போன்ற மார்க்சின் அரசியல் பொருளாதாரக் கண்டுபிடிப்புகளும் இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பதையும் இணைத்து அணுகுவதின் மூலம் தற்போதைய முதலாளித்துவ சமூகம் வீழ்த்தப்படும் என்று மார்க்சியம் சமூக மாற்றத்தை அறிவியல் வழியில் விளக்குகிறது. மார்க்சுக்கு முன்பாக பல சோஷலிசங்கள் இருந்தன. அவை அனைத்தும் கற்பனாவாதமாக இருந்தன. அதனால் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை. மார்க்சின் சோஷலிசம் சமூக மாற்றத்தின் விதிகளின் அடிப்படையில் விளக்குவதால் அறிவியல் வழிப்பட்டதாக இருக்கிறது. இது இந்த நூலில் ஒரு தனி இயலில் விளக்கப்பட்டுள்ளது.
மதம் என்பது தொடக்க காலக்கட்டத்தில் இல்லை என்பதையும், சமூகத்தில் வர்க்கம் தோன்றியப் பிறகே உருவானதையும் இந்த நூல் எளிமையாக விளக்கியுள்ளது.
“மதம் என்பது ஆதிகாலத்தில் கிடையாது. உதாரணமாக நமது சங்க காலத்தில் மதம் என்பது கிடையாது. பல வணக்க முறைகள் இருந்தன. நீர், மரம், மலை என்று இயற்கைப் பொருட்களில் ஆவி இருப்பதாக மக்கள் நம்பினர். அணங்கு, கொற்றவை, காடு, கிழான். வேலன் என்று பல தெய்வங்களை வணங்கினர். இது இனக்குழு சமுதாய காலகட்டம். ஆவி வணக்கம் மட்டுமே இருந்தது. இது கோட்பாடாக உருவாகவில்லை. இந்தக் காலகட்டத்தில் சமுதாயம் வர்க்கங்களாகப் பிரியவில்லை.”
எஸ்.தோதாத்ரி இந்தத் தத்துவ நூலை எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளார்; இதற்கு மேல் தத்துவத்தை எளிமையாக எழுத முடியாது.
21-ஆவது இயல் முதல் 26-ஆவது இயல்வரை மார்க்சியத்தின் வளர்ச்சி பற்றியும், அவ்வாறு வளர்ச்சி என்று கூறிக்கொண்டு செய்த திருத்தல் வேலைகளைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. மார்க்சியத்தைப் படித்தறியும்போதே, அதன்மீதான திருத்தல் போக்குகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்; அப்போதுதான் மார்க்சியத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் இருந்து விலகாமலும் இருக்க முடியும். இதனை அறிந்தே எஸ்.தோதாத்ரி இந்தப் பகுதியினை எழுதியுள்ளார்.
இந்த நூலில் மார்க்சியத் திருத்தல்போக்கு, மார்க்சியப் போக்குகள் என்ற சொல்லால் விளக்கப்பட்டுள்ளது. அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது; மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது; என்ன தாக்கம் செலுத்தினாலும் இறுதியில் அடித்தளமே தீர்மானிக்கிறது என்பது மார்க்சியத்தின் சமூகம் பற்றிய பொருள்முதல்வாதத் தத்துவப் பார்வை. மார்க்சியத்தின் அடிப்படையில் நின்று விளக்குபவர்களாக பிளக்கனாவ், லெனின், லூகாஸ் போன்றோக்ளை இந்த நூல் குறிப்பிடுகிறது. இதற்கு மாறாக ஒரு போக்கு ஐரோப்பாவில் தோன்றியது. அது மார்க்சியத்தின் பல கூறுகளில் ஏதாவதொன்றை வலியுறுத்தி மற்றவற்றை விட்டுவிடும் போக்காக இருந்ததை இந்த நூல் அடையாளப்படுத்துகிறது. இத்தாலிய மார்க்சியம், பிரஞ்சு மார்க்சியம், ஆஸ்திரிய மார்க்சியம், பிரிட்டிஷ் மார்க்சியம், பிராங்பர்ட் மார்க்சியம், மாவோயிசம் என இந்தப் போக்கு பல பிரிவுகளாகக் காணப்படுகிறது என்கிறது இந்நூல்.
இப்படிப்பட்டப் பிரிவுகளால் இன்று மார்க்சியம் பற்றிப் பல முரணான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட போக்குகளில் காணப்படும் எழுத்துக்களில் எது மார்க்ஸ் கூறியது; எது இவர்கள் கூறியது என்ற தெளிவு இல்லாவிட்டால் அது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த நூல். இப்படியான மார்க்சியத்தைச் சிதைக்கும் போக்கு மேலை மார்க்சியம் என்கிற போக்கால் விளைந்தது; இந்த மேலை மார்க்சியத்தைத் தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர்களாக ஜார்ஜ் லூகாஸ், அல்தூசர், வால்டர் பென்ஜமின், சார்த்தர் போன்றோர்களைக் குறிப்பிடலாம். பிராங்பர்ட் மார்க்சியத்தையும் இதில் அடக்கலாம் என்கிறது இந்நூல். இந்தப் பணியினை செய்தவர்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாக இருந்துகொண்டே மார்க்சியத்துக்கு மாறாக சென்றவர்களும் உண்டு. கட்சி சாராமல் பண்டித மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களும் உண்டு. இந்த மேலை மார்க்சியம் என்பது 1920-களில் தோன்றிய லெனினியத்துக்கு எதிராக உருவானது. லெனின் மார்க்சியத்தின் அடிப்படையில் ஊன்றி நின்று மார்க்சியத்தை வளர்த்தார். மார்க்சிய அடிப்படைகளை கைவிட்டதனால் மேலை மார்க்சியமானது கம்யூனிசத்தில் இருந்து விலகிவிட்டது என்கிறது இந்த நூல்.
எஸ்.என்.நாகராஜன் மார்க்சிய அடிப்படையைப் புறக்கணித்து, மேற்கட்டுமானத்தில் உள்ள அற ஒழுக்கத்தை முதன்பைப்படுத்துகிறார். மேற்கட்டுமானத்தை அடித்தளம் தீர்மானிக்கிறது என்பதற்கு மாறாக மேற்கட்டமைப்பை தனித்தும், முதன்மைப்படுத்தியும் அதாவது தீர்மானிக்கும் சக்தியாக பார்க்கிறார். இதனால்தான் மேலை மார்க்சியம் மேற்கட்டுமான மார்க்சியம் என்று அழைக்கப்படுகிறது.
“மேலைய மார்க்சியம் உருவானது. இளம் மார்க்சின் படைப்புகளில் காணப்படும் மனிதநேய உணர்வுகளை மேலைய மார்க்சியர்கள் வளர்க்க முயற்சி செய்தனர். ஆனால் லூகாக்ஸ், அல்தூசர் போன்றவர்கள் சோவியத் மார்க்சியத்தை முற்றிலுமாகப் புறக்கணித்துவிடவும் இல்லை. ஆனால் அமெரிக்காவில் பிராங்பர்ட் குழுவினர் மேலைய மார்க்சியச் சிந்தனையை வளர்க்க முற்பட்டபொழுதுதான் மேலைய மார்க்சியம் லெனினிசத்திருந்து முற்றிலுமாக விலகியது. அதில் கம்யூனிச சிந்தனை அறவே அகற்றப்பட்டது. கொள்கைரீதியாக மேலைய மார்க்சியம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் கருத்துக்களிலிருந்து பல இடங்களில் வேறுபடுகிறது”
மேலை மார்க்சியவாதிகள் மார்க்சியத்தின் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள்; காரண காரியத் தொடர்பில் அறிவு தோன்றுகிறது என்பதைவிட, அது மனித உள்ளுணர்வினால் தோன்றுகிறது என்கிற கருத்தை மேலை மார்க்சியவாதிகள் முன்வைக்கின்றனர். இது மார்க்சிய அறிவுத்தோற்றவியலுக்கு எதிராக இருக்கிறது. இதற்குக் காரணம் மேலை மார்க்சியர்கள் ஹெகலின் கருத்துக்களை மார்க்சின் பெயரால் புத்துயிர் ஊட்ட முனைகின்றனர். இத்தகைய போக்குடைவர்களுடன் கிராம்சியையும் சேர்க்கிறது இந்நூல். மார்க்சியம் பேசுகிற அறிவியல் கண்ணோட்டத்துக்கு எதிராக, மேலை மார்க்சியம் மனிதநேயத்தை முதன்மைப்படுத்துகிறது.
அந்நியமாதலைத் தூக்கிப்பிடிக்கிற எஸ்.வி.இராஜதுரை போன்றோர்களின் கருத்துக்கள் மார்க்சியப் பொருளாதாரத்தின் நோக்கத்தையே மாற்றிக் கூறுகின்றன; இந்த விளக்கம் ஒரு கருத்துமுதல்வாத எல்லைக்கு மார்க்சியத்தை இட்டுச் செல்வதைக் காண முடிவதாக இந்நூல் கூறுகிறது. இத்தகைய போக்கு அகநிலையானது; இது மார்க்சியம் பேசுகிற புறநிலையே தீர்மானிக்கிறது என்கிற போக்குக்கு நேர் எதிரானது.
எஸ்.தோதாத்ரி எழுதிய இந்த நூல் மார்க்சியத்துக்கு எதிரான பல போக்குகளை எதிர்த்துப் போராடுகிறது; மார்க்சிய அடிப்படையைத் தூக்கி நிறுத்துகிறது.
27-ஆவது இயலில் இருந்து 35-ஆவது இயல்வரை இந்தியத் தத்துவங்களில் முதன்மையான தத்துவங்களான, உலகாயதம், சாங்கியம், வைசேடிகம், மீமாம்சை, அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ சித்தாந்தம், பௌத்தம், சமணம் ஆகியவற்றைப் பற்றியும் சுருக்கமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சுமார் 80 பக்கங்களுக்குள்ளாகவே பலவற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளது. எஸ்.தோதாத்ரி எழுதிய இந்த நூலை தொடக்க வாசகர் மட்டுமல்ல, மார்க்சிய அடிப்படையினைப் புரிந்து கொண்டுள்ளவர்களும் படித்தால் தொகுப்பாகப் புரிந்து கொள்வதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. நா.வானமாமலை வழிவந்தவர் எஸ்.தோதாத்ரி என்பதை இந்நூல் நிரூபிக்கிறது. மார்க்சியக் கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கிறது.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | தத்துவார்த்தம் |
| ஆசிரியர்: | எஸ்.தோத்தாத்ரி |
| வெளியீடு: |
கதவு பதிப்பகம்
|
| விலை: | ₹.180 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 எழுத்தாளர் அ.கா.ஈஸ்வரன் |
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

