பூமி பிளக்குமடா ! – எஸ் வி வேணுகோபாலன் பூமி பிளக்குமடா !
எஸ் வி வேணுகோபாலன் 

வந்தோம் வந்தோம் வந்தோம் வந்தோம்

கொடியெடுத்தே
தம் தோம் தம் தோம் தம் தோம் தம் தோம்
படையெடுத்தே !
ஏரெடுத்துப் பாடெடுத்துப்
போரடித்த வேளாண் கூட்டமடா –
உழைப்பே ஊட்டமடா !
நீரடித்துப் புகையடித்தால்
வாயடைத்துப் போக மாட்டமடா –
நியாயம் கேட்பமடா!                                 (வந்தோம்…வந்தோம்.)
காடுவெளஞ்சத ஈடு மறுத்து
வீடுபுகுந்து கொள்ளை அடிப்பாயோ
எதிர்த்தால் உதைப்பாயோ ?
காலகாலமாய்ச் சோறளித்தோரைக்
கூளமாக்கி வீதியில் எறிவாயோ
வேதனை அறிவாயோ ?                                  (வந்தோம்…வந்தோம்.)
மூலதனத்துக்கு ஆலவட்டம்
ஏழைவிவசாயிக்கு எல்லாம் நட்டமாடா
வேளாண் சட்டமாடா ?
பாடுபட்டவர் நாதியற்றிருக்க
மேடிருப்பவர் மேலும் கொட்ட மாடா
இதுதான் திட்ட மாடா?                                          (வந்தோம்…வந்தோம்.)
ஊன்பெரிதில்லை உயிர்பெரிதில்லை
ஓய்ந்திருப்பவர் யாமில்லை தோள் தட்டுவோமடா
முரசு கொட்டுவோமடா !
மேலடுக்கினில் நீயொடுக்கினால்
கீழடுக்கினில் பொங்கிக் கலக்குமடா
பூமி பிளக்குமடா !                                                       (வந்தோம்…வந்தோம்.)
*********************