சு. வேணுகோபால் எழுதிய மூன்று குறு நாவல்கள் கொண்டது இந்த பனங்காய் மயிலை. தொடக்கப் பக்கத்தில் ஆசிரியர் பற்றிய குறிப்பில் குறிப்பிட்ட படி எழுத்தில் தேனி மக்களின் அன்றாட சொல்லாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த சொற்கள் இன்னும் சில காலத்தில வழக்கொழிந்து போகும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த வகையில் இந்த புத்தகத்தின் இன்றைய கால கட்டத்தில் தேனிப் பகுதின் சொல் வளத்தை ஆவணப்படுத்தப்பட்ட புத்தகமாகவே பார்க்கிறேன். குறிப்பாக அண்டவிடாது, அமட்ட மாட்டேங்கிராங்க, நட்டணையா பேசுராங்க, வேத்தாளு,எசம்பும் போதே, சன்னமா, ஊக்கமா… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒன்றிணைந்த மதுரை மக்களுக்கு இந்த வார்த்தை குறிப்பாக தேனி, திண்டுகல், மதுரை மக்களுக்கு நன்றாகவே தெரிந்த வார்த்தைகளாக தான் இருக்கும். ஆனால் இந்த தலைமுறையினருக்கு இது தெரியுமா என்றால் அவர்களுக்கு இது போன்ற வார்த்தைகளுக்கு ஒரு டிக்ஸனரி தேவைப்படும் என்றே தோன்றுகிறது. அந்த வகையில் இந்த புத்தகம் ஒரு சொற்கற்றைகளை கொண்டது என்றால் மிகையில்லை.
அதே போல் ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு ஜீவனை புதைத்து வைத்தார் போல இருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. குறிப்பா மாடுகள், ஆடுகள் போன்ற விலங்கினைங்களை தான் குட்டிகளை ஈனுவதாக சொல்லுவார்கள். ஆனால் இவர் வாழையும் ஈனும் என்கிறார். (வாழைத்தோப்பு, தார் இன்னும் ஈனவில்லை). வார்த்தைகளை மொழியாகம் செய்து தமிழ் படுத்துகிறேன் பேர்வழியென்று செல்லாமல் அன்றாட நாம் பயன்படுத்தும் ஆங்கில சொல், அதுவும் குறிப்பாக பரவலாக கிராமங்களில் புலக்கத்தில் உள்ள வார்த்தைகளை அப்படியே கையாண்டிருப்பது சிறப்புக்குறியது. எழுத்து நடையும் புனைவுகளும் விரைவாக வாசிக்கவே தூண்டுகின்றன.
கல்லூரி காலத்தின் காதலை சாதிகள் என்ன செய்யும் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறார். அதே போல அந்த அந்த வீடுகளில் எந்த மாதிரியான உரையாடல்கள் மற்றும் அகங்காரங்கள், ஆறுதல்கள், மற்றும் ஏமாற்றங்கள் நடைபெறும் என்பதையும் அவர் சுட்டிகாட்டுகிறார். கனிஷ்கா, அர்ச்சனா, பகவதி இவர்களை சுற்றிய காதல் உறவு குறித்து உணர்ச்சிகரமாகவும். இன்றை எதார்த்தோடு இணைத்து எழுதப்பட்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
காலம் வரையும் ரேகை ஒரு பெண்ணின் மனதையும், தவிப்பையும், யாரிடமும் சொல்ல முடியாத உள்ள போராட்டத்தையும் நடுக்கத்தையும் அற்புதமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர். எப்படி ஒரு இளம் பெண்ணின் தவிப்பை அப்படியே பதிவு செய்ய முடிவும் என்று தெரியவில்லை. மாமன் மகன் அவளை கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லும் போது ஏற்படும் துள்ளல் அவனுடைய காதலியினின் மிரட்டலில் நடுங்கி போவதை அப்படியே கண்முன் காட்சியை விரியச்செய்கிறார் எழுத்தாளர்.
தனக்கு நல்ல கணவனாகவும், அரசு வேலைக்காரனாகவும் கிடைக்கப்போகிறான். அவ்வளவு ஒழுக்கமானவன் என்று சொல்லப்பட்ட அவனின் உண்மையான கொடூரமுகத்தை பார்க்க பார்க்க அவள் படும் பாடு அப்பா அப்பா சொல்லவே முடியவில்லை. அந்த கொடூரத்தை தன் தந்தையிடம் சொல்லவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்று நினைக்கும் போதே கதக்குன்னு இருக்கு. அவளுக்கு ஆதரவாக இருக்கும் அண்ணன். தன் மகள் தான் முக்கியம் என்று என்னும் அப்பா. தவறாவனுக்கு வழி காட்டிவிட்டோமே என்று வருந்தும் பாட்டி இப்படி அந்த நாவல் ஒரு குடுப்பத்தின் ஒட்டு மொத்த தவிப்பையும் பதிவு செய்திருக்கிறார். கடைசியாக அவர் பதிவு செய்கிறார் நீங்க என்ன வேணும்முன்னாலும் சொல்லுங்க ஆனால் அந்த கால கட்டத்தில் நடந்தது அவளை வதைக்கத்தான் செய்கிறது. இதனை இப்படி பதிவு செய்கிறார் ”நினைவுகளின் பாதை சாவதில்லை”
மற்றும் ஒரு நாவலான இரு வேறு உலகம் இரண்டு நடப்பு உலகத்தை காட்டுகிறது. உண்மையில் ஒரு குறிப்பிட நில அமைப்புக்குள் இரு வேறு உலகத்தை காட்டுகிறார். குறிப்பாக கல்வி தளத்தில் உயர் கல்வியில் சேறும் மாணவர்களுக்கான உலகத்தில் எத்தனை வகையான மாணவர்கள் உள்ளனர் என்பதை அற்புதமாக படம்பிடித்துக் காட்டுகிறார். அத்தனை வாழ்விடங்கள் உள்ளன என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள பெரிதும் உதவும். இது என்னவோ நகர்புறபகுதியில் உள்ள வாழ்விடங்கள் இல்லை. பல்வேறு கிராமங்களில் உள்ள வாழ்விடங்கள். குழந்தைகள் எவ்வாறு தன்னுடைய உயர் கல்விகாக்கா முன்னெடுக்கிறார்கள் என்பதை தான் பார்க்கிறோம். சாக்கடையின் கடைசி பகுதியில் வசிக்கும் மாணவி, நடு காட்டுக்குள் வசிக்கும் மாணவன், வசதி படைத்தை வியாபாரியின் மகன், தண்ணீர் தொட்டிக்கு கீழ் சாக்குகளால் மூடப்பட்ட பகுதி வீடு என்று சொல்லும் மாணவி இப்படி பல்வேறு மாணவர்களையும் அவர்கள் வாழ்வியல் சூழல்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.
என்னை மிகவும் பாதித்த பகுதி நண்பன் சக்திவேலை தேடி வரும்போது அவனுடைய அண்ணி குழந்தை பெற்று இருப்பாள், அதுவரை அவளை யாரும் பார்க வரவில்லை. அவளும் அவள் குழந்தையும் தனித்துக் கிடக்கிறார்கள். வீட்டுக்குள் உட்கார்ந்திருந்தவனிடம் தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லுகிறாள். அவன் அந்த குழந்தையை தூக்கி அவள் கையில் நூறு ரூபாய் நோட்டை திணிக்கிறான். அதெல்லாம் வேணாம்முண்ணா. எங்குழந்தையை தூக்கியதே போதும் என்று சொல்லும் போது அந்த தாயின் தனிமையும், தவிப்பும் வேதனையையும் எப்படி கடந்து செல்ல முடியும். அரசு நலத்திட்டங்கள் மக்களுடைய தேவையை எவ்வாரெல்லாம் பூர்த்தி செய்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அந்த நாவல் மிகவும் அவசியம். ஓசி ஓசி என்றும் பேசும் பேதைகள் இந்த நாவலை கட்டாயம் படிக்க வேண்டும். சைக்கிள் என்ன செய்கிறது. மின்விசிறி என்ன செய்கிறது டிவி என்ன செய்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்த கடைசி நாவலை படியுங்கள்.
இந்த மூன்று குறுநாவலும் ஒரு நிலப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை நமக்கு ஒரு குறும்படம்போல காட்டுகிறது. இது மக்களை படித்துக் கொள்ள பெரிதும் உதவும் நூல். மக்களை படியுங்கள்.
இந்த அற்புதமான படைப்பை வெளிகொண்டுவந்திருக்கும் யாவரும் பதிப்பகத்திற்கு நன்றியும் வாழ்த்துக்களும். இது போன்ற எழுத்தாளர்களை எனக்கு தொடர்ந்து அறிமுகம் செய்து வைக்கும் அன்பு நண்பர் ஜீவ கரிகாலனுக்கும் எனது அன்பு. எழுத்தாளர் சு. வேணு கோபால் அவர்களுக்கு எது வாழ்த்துக்கள்
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பனங்காய் மயிலை” குறு நாவல் |
| ஆசிரியர்: | சு.வேணுகோபால் |
| வெளியீடு: | யாவரும் பதிப்பகம் |
| விலை: | ₹.220.00 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 மொ. பாண்டியராஜன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

