நூல் அறிமுகம்: சா. கந்தசமியின் *தொலைந்து போனவர்கள்* – பா. அசோக்குமார்“தொலைந்து போனவர்கள்”
சா.கந்தசாமி
கவிதா பப்ளிகேஷன்
பக்கங்கள் : 160
₹.80

கடந்த ஆண்டு மறைந்த எழுத்தாளர் “சாயாவனம்” சா. கந்தசாமி அவர்களால் எழுதப்பட்டு 2011 இல் வெளியிடப்பட்ட நாவலே இது. தொலைந்து போனவர்கள் என்ற தலைப்பே மிகச் சிறப்பான ஒன்றாகவே கருதுகிறேன். காணாமல் போனவர்கள் என்ற பொருளில்லாமல் இளமை பருவத்திலிருந்த குணநலன்களில் இருந்து தொலைந்து போனவர்கள் என்பதே எனது புரிதல்.

பள்ளி பருவத்தில் வகுப்புத் தோழர்களாக இருந்த நால்வர் பற்றிய கதையே இது. ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு பிறகு அவர்கள் சந்திக்கும் சூழலும் நிகழும் நடப்புகளுமே கதைக்களம். தாமோதரன் என்ற கதாபாத்திரம் எதார்த்தமாக சாலையில் பார்க்கும் சங்கரன் மூலமாக தொடங்கும் தேடலின் பயணமே இந்த தொலைந்து போனவர்கள்.

இந்த நாவலைப் படிக்கும்போது நமது பள்ளி பருவம் நம் கண்முன் விரியும் என்பதே உண்மை. அவருடைய காலத்தில் நிகழும் காலச்சூழலாக இருந்தபோதிலும் நட்பின் அடையாளங்கள் என்றும் ஒன்று தானே. தாமோதரன், சங்கரன், வேணு, ராமசாமி என்ற நான்கு நண்பர்களில் நமது நண்பர்களைத் தேடி ஞாபகக்கீற்றில் நிச்சயமாக மிதக்கலாம். ஒன்றாக பள்ளி செல்வதில் தொடங்கி படிப்புக்கு உதவுவது, சேட்டைகள் செய்து மாட்டுவது என நினைவுகள் சுவாரஸ்யமானவை.

தேவையற்ற வருணனைகளைத் தவிர்த்து மிக இயல்பாக கதையை நகர்த்திய விதமே நாவலை விறுவிறுப்பாக்கி காட்டுகிறது என எண்ணுகிறேன். சந்திக்கும் நிகழ்வுகளின் வழியே பழைய கால நினைவுகளை பகிரும் உத்தி மிக நேர்த்தியாக அமைந்து நாவலை சுவாரஸ்யமான முறையில் படிக்க உதவுகிறது எனலாம். பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் சூழலில் தாமோதரனுக்கு ஏற்படும் சங்கடங்கள் யாவும் காலத்தின் கட்டாயமென்றே எண்ணத் தோன்றுகிறது.

தாமு ஒவ்வொருவரையும் சந்திக்க முனையும் போதும் சங்கரன் தவிர்க்க முயல்வது யதார்த்தமானதே. நல்ல வசதியான நிலையில் உள்ளவன் மற்றவர்களைத் தேடிச் செல்வதாக கதையை அமைந்தவிதம் வித்தியாசமானதே. அதனால் வாழ்வின் பின்தட்டில் தவழும் நிலையிலுள்ள நண்பர்கள் விரக்தியுடன் எதிர்கொள்வதும் இயல்பானது தானே..

“பள்ளிக்கூடம்” திரைப்படத்தை நினைவூட்டுவதாகத் தோன்றினாலும் இது முற்றிலும் மாறுபட்டக் கோணத்தில் அமைந்த ஒன்றென ஆணித்தரமாகக் கூறலாம். படிக்கிற காலத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் வாழ்வில் பின்தங்குவதும் ஆசிரியரால் “சுழி” என்று அழைக்கப்பட்டவன் வாழ்வில் உயர்ந்து நிற்பதும் அன்றாட வாழ்வில் நடைபெறும் சாத்தியமானது தானே… காலமும் சூழலுமே மனிதர்களின் நடத்தைக்கும் மாற்றங்களுக்கும் காரணமென்பதை மிக அழகாகக் காட்சிபடுத்தியுள்ளார் எழுத்தாளர் அவர்கள்.

No description available.

சங்கரனின் காதல் வாழ்வும் திருமண முறிவும் தொழிற்சங்கச் செயல்பாடுகளும் நடைமுறை வாழ்வை அசை போட்டு பார்க்க உதவுவதாகவே உள்ளது. பள்ளியில் நன்மதிப்பு பெற்ற மாணவன் குடியிலும் சூதாட்டத்திலும் மூழ்கி மனைவியையே தனது நண்பனுடன் சந்தேகித்து பேசும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படும் சூழல் கண்ணீர் வரவழைக்கக்கூடியதே…

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் குடியில் மூழ்கி தத்தளித்த நிலையில் புதுவாழ்வில் திளைக்கும் ராமசாமி கதாபாத்திரம் படு சுவாரஸ்யமானதே. பள்ளி இறுதி நாளில் எடுத்த புகைப்படத்தை வைத்து சந்திக்க உத்தேசித்த நாளில் வருகை புரியாத நண்பர்களை பகடி செய்யும் காட்சி ஆழ்மனத்தின் அற்புத வெளிபாடின்றி வேறில்லை என்றே கருதுகிறேன். தாமுவும் உயர்ந்த நிலையை அடையாவிட்டால் இந்த சந்திப்புகள் எப்படி இருந்திருக்கும் என்ற சிந்தனை நம்மை நிந்தனை செய்வதாகவே உள்ளது.

தாமுவின் மனைவி கதாபாத்திரம் மட்டுமே மிக அந்நியப்பட்ட பிம்பத்தை உண்டாக்குகிறது. தாமுவின் கதாபாத்திரமும் இறுதியில் தடுமாறும் சூழல் மிக ரம்மியமாக அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன் என்னை சந்திக்க வந்த நண்பனின் நினைவும் சமீபத்தில் நான் சந்திக்கச் சென்ற நண்பர்களின் நிகழ்வுகளும் இந்நாவலில் உள்ளது போல் இல்லை என்பதில் ஆனந்தமே…

பள்ளி பருவத்தில் இருந்த நட்பை அணுஅணுவாக ரசித்து மனதில் வைத்து பூஜித்துக் கொண்டிருந்த தாமு கதாபாத்திரம் அற்புதமே.. காலமும் சூழலுமே நட்பை பிணைத்திருக்கும் காரணிகளோ இல்லை மனித மனங்களின் நெருக்கடிகளே காரணங்களோ என்ற அங்காலாய்ப்பை இந்நாவல் உருவாக்கியுள்ளது. அன்பு, பாசம், கருணை, இரக்கம், விளையாட்டுத்தனம், துரோகம், விட்டுக் கொடுத்தல் , தியாகம் முதலிய பல்வேறு பண்புநலன்களின் கலவையாக இந்நாவலை அனுபவிக்கலாம்.

நண்பர்களை சந்திக்க முனையும் நபர்களுக்கு இதனை முன்னெச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளலாமோ என்ற எண்ணமும் உண்டாகிறது. உதாசீனப்படுத்தினால் அதனைத் தாங்கும் மனப்பக்குவம் பெறுவது ஒருபுறம் இருந்தாலும் நமது பகட்டும் பந்தாவும் மற்றவர்களை கூனி குறுகி நிற்க வைக்காத வண்ணம் நடப்பது மறுபுறமோ என்று சிந்திக்கத் தூண்டுவதாகவே இந்நாவல் இருக்கிறதென்பதே எனது புரிதல்.

நண்பர்களைச் சந்திப்பதும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளும் சூழலைப் பொறுத்துத்தானே அமையும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். நட்பை பாராட்டுவோம். நட்பு களங்கமற்றதே என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம். நண்பர்களை சந்திக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன். காலம் கைகூடட்டும் விரைவில். அருமையான அனுபவங்கள் கைகூடட்டும்.

வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.

பா. அசோக்குமார்
மயிலாடும்பாறை.