“போயிட்டு வாங்க சார் (Goodbye Mr.Chips)” – நூல் அறிமுகம்
புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே ஆசிரியர் புத்தகம் உருவான கதையை கூறுகிறார். அதாவது இப்புத்தகம் உள்ள கதை இவராக உருவாக்கியது கிடையாது. மேலும் இது ஒரு மொழிபெயர்ப்பு நூலும் அல்ல. 1933 ல் பிரிட்டிஷ் வீக்லி என்ற ஆங்கில பத்திரிகையில் வெளியான கதை தான் குட்பை மிஸ்டர் சிப்ஸ். பின்னர் 1934 இது நூலாக வெளிவந்தது.
அந்த நூலை வாசித்து அந்த புத்தகத்தின் அனுபவங்களை பகிர்ந்ததின் மூலமாக உருவான புத்தகம் தான் போயிட்டு வாங்க சார் என்று கூறுகிறார் ஆசிரியர் ச மாடசாமி அவர்கள்.
முதல் பக்கத்தில் இருந்த இந்த வரிகள் என்னை மிகவும் நெகிழச் செய்தன.
” ஆயிரம் தடவை காட்டினாலும் அன்பு தெவிட்டுவதில்லை …அதிலும் விளக்கு வெளிச்சத்திலும் கொட்டுச் சத்தத்திலும் தன்னை வெளிப்படுத்தாமல் கூசி ஒதுங்குகிற அன்பு ரொம்ப ரொம்ப ருசியானது”
ஆம் இக்கதையில் வரும் சிப்ஸ் என்னும் கதாபாத்திரம் அன்பை காட்டுவதில் சற்றும் சலிக்காதவர். சிப்ஸ் ஒரு இனிப்பு, கண்டிப்பு, அர்ப்பணிப்பு, குறும்பு எல்லாம் கலந்த கலவையாக இருக்கும் ஒரு ஆசிரியர். தன்னுடைய 22 வயதில் ஆசிரியராக தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார் சிப்ஸ்.
இங்கிலாந்தில் இருக்கும் மெல்பரி என்ற இடத்தில் முதல் முதலாக ஆசிரியர் பணியில் அமர்கிறார். ஆனால் அங்கு இருக்கும் மாணவர்களின் கிண்டல் பேச்சுகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஓராண்டிலேயே அங்கிருந்து புரூக்பீல்டு என்ற இடத்திற்கு வருகிறார் சிப்ஸ்.
அப்படி பள்ளிக்குச் சென்ற தன் முதல் நாள் அன்று தலைமை ஆசிரியர் வெதர்ப்பை, சிப்ஸிற்கு அளித்த அறிவுறுத்தல் மாணவர்களிடம் கண்டிப்பாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதுதான்.முதல் நாள் சிப்ஸ் வகுப்பறையில் செல்லும் பொழுது கிட்டத்தட்ட 500 மாணவர்கள் ஒரே ஹாலில் திரண்டு இருந்தனர்.மாணவர்களுக்கே உரித்தான கேலியும், கிண்டலும் வகுப்பறை முழுவதும் இருந்தது.அவர்களை எப்படி சமாளிப்பது என்பது சிப்ஸிற்கு ஒரு பெரும் சவாலாகத்தான் இருந்தது.ஆனால் இம்முறை சிப்ஸ் தன்னை மாணவர்களுக்கும் முன் ஒரு கோமாளியாக நிலைநிறுத்த முன் வரவில்லை.மாறாக மாணவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வர எண்ணினார்.கூட்டத்தில் ஒரு மாணவனை எழுப்பி இன்று நீ 100 முறை எழுதி வர வேண்டும் என்று தண்டனையை அளித்தவுடன் மீதமுள்ள 499 மாணவர்களும் அமைதியாயினர்.
சிப்ஸ் இடம் தண்டனை பெற்ற அந்த மாணவனின் மகன் ,பேரன் என மூன்று தலைமுறைக்கும் சிப்ஸ் ஆசிரியராக இருந்தார்.சிப்ஸ் ஒரு நவீன ஆசிரியர் கிடையாது.அவர் ஒரு ஆங்கில ஆசிரியராக இருந்தாலும் லத்தின், கிரேக்கம் போன்ற மொழிகளையும் கற்றறிந்தவர்.அவர் எடுக்கும் வகுப்புகள் அனைத்தும் பழைய பாணியிலேயே எடுக்கக்கூடியவர்.ஆனால் மாணவர்கள் புதியவராயினும் பழையவராயினும் அனைவரின் குரல்களுக்கும் சலிக்காமல் காது கொடுத்து கேட்பவர்.
22 வயதில் ஆரம்பித்து 80 வயது வரை ஆசிரியராக பணியாற்றியிருந்த சிப்ஸ் தன்னிடம் பயின்ற மாணவர்களின் பெயர்களை எப்பொழுதும் மறந்ததே இல்லை.ராணுவத்தில் இணைந்து அல்லது போர்களில் மடிந்த எத்தனையோ பேர்களின் பெயர்களை பள்ளி காலை வழிபாட்டு நேரத்தில் தலைமையாசிரியர் பேப்பரை பார்த்து படிக்கும் பொழுது சிப்ஸ் அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் தன் கண்முன்னே கொண்டு வந்து அந்த மாணவர்கள் செய்த குறும்புத்தனத்தையும் பள்ளியில் அவர்களின் செயல்பாடுகளையும் நினைத்துப் பார்த்து தன்னுடைய ஞாபகங்களை ஆசை போட்டுக் கொண்டிருப்பார்.
65 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்.போயிட்டு வாங்க சார் குட் பை என்று சொல்லி அவரை வழி அனுப்பி வைக்கின்றனர்.பணி ஓய்வுக்கு பிறகு சிப்ஸ் திருமதி விக்கெட் வீட்டில் குடி போகிறார்.அந்த வீடு அப்பள்ளிக்கு எதிரிலேயே இருப்பதால் சிப்ஸிற்கு எப்பொழுதும் ஒரு ஆனந்தம்.அடிக்கடி இந்த பள்ளிக்கு சென்று வருவதும் மாணவர்களை சந்திப்பதும் அவர்களுடன் உரையாடுவதும் அவருக்கு பேர் ஆனந்தத்தை அளித்தது.தனக்கு அறிமுகமே இல்லாத மாணவர்களை கூட தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு தன் கையால் தயாரிக்கப்பட்ட தேநீரை அளித்து போதும் என்னும் அளவிற்கு சாப்பிட ஏதாவது அளித்துக் கொண்டே இருப்பார்.
எப்பொழுது இப்படி எல்லாம் மாறினார்.ஆரம்பத்தில் கரரான பெயர் வழியாக இருந்தவர் இன்று மாணவர்களிடம் அவ்வளவு அன்பும் அக்கறையும் பாசமும் வைத்திருக்கிறார்.தானாக மாறினாரா?நிச்சயமாக இல்லை.48 வயதான சிப்ஸிற்கும் 25 வயதான காதரினுக்கும் காதல் உருவானது.
பழைய சிந்தனைகளில் ஊறிப் போனவர் தான் சிப்ஸ்.மாணவர்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்கும் போன்ற பல்வேறு சிந்தனைகளில் கூறி இருந்த சிப்ஸை மீட்டெடுத்தவர் ஒரு புது உலகத்தை அவருக்கு காட்டியவர் தான் காதரின்.சோசியலிசத்தை நன்கு புரிந்த காதரின் சமூகத்தில் மாற்றத்திற்காகவும்,பெண் வாக்குரிமைக்காகவும்,மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையில் மாற்றங்களுக்காகவும்,மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களுக்கான வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி ஒரு உலகம் உள்ளது அதை ஆசிரியர்கள் நீங்கள் தான் அவர்களுக்கு வெளிக்காட்ட வேண்டும்,தண்டனைகள் அழிப்பதால் மட்டும் வரும் மாணவனை திருத்தி விட முடியாது,நீங்கள் தண்டனை அளிப்பதற்கு முன்பு நம் மாணவனை அழைத்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை கேளுங்கள் அவர்களை புரிந்து கொள்ளுங்கள் என்று சிப்ஸிடம் பலமுறை பேசி பேசி தான் இப்படி எல்லோருக்கும் பிடித்தமான சிப்ஸை நமக்கு அளித்திருக்கிறார் காதரின்.
சிப்ஸ் ஒரு பழமைவாதியாக இருந்தாலும் காதரின் பேச்சுக்களை அவர் புறக்கணிக்கவில்லை.அவள் கூறியதை அனைத்தையும் காது கொடுத்து கேட்டார்.திருமணமான ஒரு வருடத்தில் காதரின் இறந்தாலும் அவர் சொன்ன வார்த்தைகளை ஒவ்வொன்றாக அவர் நடைமுறைப்படுத்தினார்.மாணவர்களின் மனங்களில் அழியாத இடத்தை பிடித்தார்.
ஆம் ஆரம்ப காலத்தில் மாணவர்கள் தனக்கு அடங்கியிருக்க வேண்டும் தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் தன் சொல்பேச்சை கேட்க வேண்டும் என்று இருந்த சிப்ஸை காதரின் ஒரு புது மனிதனாக மாற்றினார்.ஆசிரியர்களுக்கே இருக்கும் எந்திர தனங்களை உதறி தள்ளினார் சிப்ஸ்.வகுப்பறைக்கே என்று இருக்கும் சில ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளை தகர்த்தார்.மாணவர்களின் குரல்களுக்கு செவி கொடுத்தார்.மாணவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.காதரின் வருகைக்குப் பின் சிப்ஸ் தன்னை ஒரு முழுமையான ஆசிரியராக உணர்ந்தார்.
காலங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன அனைத்தும் நவீனம் ஆகிக் கொண்டிருக்கின்றன.நீங்கள் இன்னும் பழைய செயல்முறையிலேயே பாடங்களை நடத்திக் கொண்டிருப்பதால் மாணவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள முடியவில்லை எனவே நீங்கள் விருப்ப ஓய்வு அளித்து விட்டு செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் சொல்லும்போது ஒருபோதும் முடியாது நான் விருப்ப ஓய்வு அளிக்கப் போவதில்லை நான் என்றும் மாணவர்களுடனேயே என்னுடைய பயணத்தை மேற்கொள்வேன் என்று கூறினார் சிப்ஸ்.அதை ஒரு மாணவன் ஒட்டு கேட்டு தன்னுடைய பெற்றோரிடம் சென்று ஆசிரியர் சிப்ஸை தலைமையாசிரியர் பள்ளியை விட்டு செல்லுமாறு வற்புறுத்துகிறார் என்று கூறுவார்.இதைக் கேள்விப்பட்ட அனைத்து பெற்றோர்களும் மாணவர்களும் சிப்ஸுக்காக வந்து குரல் கொடுத்தனர்.எங்கள் ஆசிரியர்,மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர் அவர் இங்கே தான் இருக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் தலைமையாசியருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.அப்பொழுதுதான் புரிந்தது சிப்ஸ் இருக்கு மாணவர்கள் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோம் என்று.
சிப்ஸினால் வகுப்பறையில் பல மாற்றங்கள் வந்து கொண்டே இருந்தன.ஆசிரியர்கள் என்றால் அதிகார வர்க்கம் என்றோ மாணவர்கள் அவர்களுக்கு அடிபணிந்து நடப்பவர்கள் என்றோ இல்லாமல் வகுப்பறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவுமுறை மிக சிறப்பாக உருவாகிக் கொண்டிருந்தது.
தன் விருப்ப ஓய்வு பெற்ற பின்பும் மீண்டும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு சிப்ஸிற்க்கு கிடைக்கிறது.அதே பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் பொறுப்பும் வகிக்கிறார்.பாடம் கற்பிக்கும் முறையில் up to date இல்லை என்று சிப்ஸை ஒதுக்க நினைத்தனர்.ஆனால் மாணவர்களின் பெயர்களை அவர்களின் முகங்களை மனதில் பதிய வைத்துக் கொள்ள சிப்ஸை தவிர வேறு எவராலும் முடியாது.எதற்கும் அஞ்சாமல் நின்ற சிப்ஸ் போரை எதிர்க்கும் பழைய மனிதர்.போரிலும் இவர் up to date இல்லை தான்.
ஆனால் அன்று ஒரு நாள் இரவு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சிப்ஸ்.போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது பள்ளிக்கு அருகே ஆங்காங்கே குண்டு விழும் சத்தங்கள் காதை இழந்தன.ஆனால் எதற்கும் பயப்படாமல் குண்டின் சத்தத்தை விட தன்னுடைய சத்தத்தை அதிகப்படுத்தி பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.சீசர் பற்றிய பாடம் எடுத்துக் கொண்டிருந்த அவர் மாணவர்களின் கவனம் சிதறுவதை கண்டார்.அப்பொழுது மாணவர்களுக்கு
“சத்தத்தை வைத்து ஒன்றின் முக்கியத்துவத்தை மதிப்பிடக்கூடாது”
என்று கூறி அன்றைய வகுப்பை தொடர்கிறார்.இந்த குண்டுகள் நம்மை அழிக்கப் போகிறது என்று இருந்தாலும் கூட இறக்கும்போது கூட உருப்படியான ஒரு வேலையை நாம் செய்து கொண்டிருந்தோம் என்ற ஒரு நம்பிக்கையில் நாம் இறப்போம் என்று தன்னுடைய பதராத குரலில் தைரியமாக கூறுகிறார். விடியும் பொழுது அந்த குண்டுகள் பட்டு அந்த ஊரில் 9 பேர் இறந்து போனதை கேள்விப்படுகின்றனர்.
குண்டுகள் வெடித்தாலும் தன்னுடைய அயராத உழைப்பும் தைரியமும் கொண்டு மாணவர்களுக்கு கல்வியை கற்பித்த சிப்ஸ் ஒரு அபூர்வமான சிப்ஸாக அனைவருக்கும் தெரிந்தார்.
சிப்ஸ் தன்னுடைய 80 வயதில் இறந்து விடுகிறார்.இரக்கம் தருவாயில் மனைவியும் இல்லை குழந்தைகளும் இல்லை என்று யாரோ ஒருவர் சொல்லும் வார்த்தைகள் இறக்கும் தருவாயில் அவர் காதுகளில் ஒலிக்கிறது.அப்பொழுது அவர் தனக்குள்ளே கூறிக் கொண்டிருக்கிறார் எனக்கு ஏன் பிள்ளைகள் கிடையாது என்னுடைய மாணவர்கள் அனைவருமே என்னுடைய பிள்ளைகள்தான் என்று ஒவ்வொருவரின் பெயர்களையும் முணுமுணுத்துக் கொண்டே நீண்ட உறக்கத்திற்கு செல்கிறார்.
சிப்ஸ் ஒரு கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும் இது போன்ற ஆசிரியர்கள் என்றுமே நம் நினைவுகளை விட்டு அகல மாட்டார்கள்.சிப்ஸ் ஒரு அதிநவீன கருவிகளை எல்லாம் வைத்து பாடம் நடத்தியவரோ அல்லது மாணவர்கள் எளிதில் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு வழிவகை செய்தவரோ அல்லது கல்வி என்பது கற்கண்டு என்பது போன்ற கல்வி புகட்டியவரோ கிடையாது இருந்தாலும் சிப்ஸ் என்றும் நம் மனதில் நிலைத்திருக்கிறார்.இது போன்ற ஆசிரியர்கள் நமக்கும் தேவை.நாமும் அவ்வாறு இருக்க வேண்டும்.என் ஆசையோடு என் புத்தக அறிமுகத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | போயிட்டு வாங்க சார் (Goodbye Mr.Chips) |
| தொகுப்பாசிரியர்: | ச.மாடசாமி |
| வெளியீடு: | |
| விலை: | (10% discount price was: ₹.63 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 நளினி |
புத்தகம் வாங்க: www.thamizhbooks.com
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

