இந்து முஸ்லிம் காதல் திருமணம் ? ச.சுரேஷின் முதல் நாவல் : “ வெளிச்சம் “ – ஜி.பி.சதுர்புஜன் 

Sa. Suresh in Velicham Novel Book Review by G.B. Chathurbhujan . Book Day is Branch of Bharathi Puthakalayam.B.I.T.S. பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மேல் படிப்பை முடித்துவிட்டு இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்துவிட்டு தற்போது கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் செட்டிலாகியிருக்கும் ச. சுரேஷ் தன்னுடைய கன்னி முயற்சியான ‘வெளிச்சம்‘ நாவலை சென்னை சந்தியா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறார் என்று அறிந்ததும், அதை ஆவலுடன் வாங்கிப் படித்துப் பார்த்தேன்.

நாவலைப் படிப்பதற்கு முன் இந்த ‘ வெளிச்சம் ‘ ஒரு ‘எலக்ட்ரானிக்’ வெளிச்சமாக, கம்ப்யூட்டர் துறையின் முன்னேற்றங்களைக் கையிலெடுத்து ஏதாவது அதிநவீன விஞ்ஞானக் கற்பனைக் கதையை சொல்லும் என்று எதிர்பார்த்தேன். என்ன ஆச்சரியம், இந்த நாவலில் அமெரிக்கா இல்லை, கம்ப்யூட்டர் இல்லை, அதிநவீன விஞ்ஞானம் இல்லை – இப்படி நான் யூகித்த எதுவுமே இல்லை.

இப்படி நம் எதிர்பார்ப்பை புறந்தள்ளிவிட்டு தன்னுடைய ‘ வெளிச்சம் ‘ நாவலில் ச.சுரேஷ் அவர்கள் கையிலெடுத்திருப்பது ஒரு அச்சு அசலான காதல் கதையைத்தான்.

ஆனால், இது ‘ஆயிரத்தில் இதுவும் ஒரு காதல் கதை ‘ என்ற வரிசையைச் சேர்ந்தது அல்ல. மிகவும் வித்தியாசமான ஒரு காதல் கதை. மிகவும் மென்மையான, ஆனால் உண்மையான ஒரு காதல் கதை.

கதை ஹைதராபாத்தில் நடக்கிறது. த்ரிஷா என்ற அய்யங்கார் பெண்ணுக்கும், ஆதில் என்ற முஸ்லிம் இளைஞனுக்கும் இடையே இயற்கையாக மலரும் இனிமையான காதல்.

Sa. Suresh in Velicham Novel Book Review by G.B. Chathurbhujan . Book Day is Branch of Bharathi Puthakalayam.

முஸ்லிம் வெறுப்பில் இறுகிப் போயிருக்கும் அய்யங்கார் குடும்பம் ஒரு பக்கம்: இந்துக்களோடு எந்த சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற குடும்பக் கட்டாயத்தில் உறைந்திருக்கும் ஆதில் குடும்பம் மறு பக்கம்.

144 பக்கங்களில் இந்தக் காதல் கதை இளமைத் துள்ளலுடனும் ச.சுரேஷின் தடங்கலற்ற, தெளிந்த நீரோடையைப் போன்ற எழுத்து நடையுடனும் வாசகர்களான நம்மையும் விடாமல் இழுத்துச் செல்கிறது.

கடைசியில் என்ன நடக்கிறது ? இத்தகைய ஒரு இந்து – முஸ்லிம் காதல் ஜெயிக்குமா ? தடைகளைத் தாண்டுமா ? இது சாத்தியம்தானா ?

“வெளிச்சம் “ நாவலைப் பற்றி இன்னும் ஒரு வரி சொன்னாலும் உங்களுக்கு கதையின் போக்கு புரிந்துவிடும் அபாயம் இருக்கிறது. அப்படி முன்கூட்டியே கதையைச் சொல்லி வாசகர்களின் சுவாரசியத்தைக் குறைப்பது ஒரு விமர்சகனின் வேலையல்ல அல்லவா !

இந்த நாவல் ச.சுரேஷின் முதல் நாவல் என்று சொன்னால் நம்பவே முடியவில்லை. ஒரு வேளை பூர்வ ஜன்ம வாசனையோ என்னவோ ! அவருடைய நடை நம்மை அசத்துகிறது. இந்தக் காதல் நம்மையும் பற்றிக் கொள்கிறது.

வாழ்த்துகள் சுரேஷ் ! வருக தமிழ் நாவல் உலகிற்கு ! வாசகர்கள் – குறிப்பாக இளைஞர்கள் – உங்களை நிச்சயம் வரவேற்பார்கள் !

“ வெளிச்சம்“ (நாவல்)
ச.சுரேஷ்
சந்தியா பதிப்பகம், சென்னை
பக்: 144
விலை : ரூ.150

ஜி.பி. சதுர்புஜன் 
98400 96329

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.