திருநெல்வேலி மாவட்டம் பாரதி, புதுமைப்பித்தன், ரகுநாதனில் தொடங்கி இன்றளவும் எண்ணற்ற அற்புதமான படைப்பாளிகளைத் தமிழுக்குத் தந்திருக்கிறது. கி.ரா.வும், கு.அழகிரிசாமியும் முன்னத்தி ஏர் பிடித்து உழுது பண்படுத்திய தமிழ்ப் படைப்புலகத்தை இன்றைய இளம் தலைமுறையினரான வண்ணதாசன், வண்ணநிலவன், ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி உள்பட பலர் வளப்படுத்தி வருகிறார்கள்.

இவர்களில், ஒரு படைப்பாளியாக மட்டுமின்றி தொழிற்சங்கவாதியாக, நாடக – திரைப்பட உலகில் ஈடுபாடு கொண்டவராக, அறிவொளி இயக்கங்களில் முன்னிற்பவராக, வரலாற்றை பரவலாக்க முயல்பவராக, இப்படிப் பன்முகப்பட்ட தளங்களில் இயங்கி வருபவர் ச.தமிழ்ச்செல்வன்.

இராணுவத்திலும் பணியாற்றி அனு பவங்கள் பெற்றவர். கலை – இலக்கியம் – நாடகம் – சினிமா எல்லாவற்றைப் பற்றியும் தீவிரமான – அழுத்தமான அபிப் ராயங்கள் உள்ளவர். அதேசமயம், இன்றைக்குத் தனக்குச் சரி என்று படுகிற அபிப்ராயங்களில் நாளைய சமூகச் சூழல் மாறும்போது தானே மாறுபடவும் நேரலாம் என்கிற எதார்த்த உணர்வோடும் இருக்கிறார்.\

தமிழ்ச்செல்வனின் ‘வெயிலோடு போய்’ தொகுப்பு, தமிழின் சிறந்த கதைத் தொகுதிகளில் ஒன்றாக மதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு – இன்றைய வாழ்க்கையின் உக்கிரத்தைப் போதுமான அளவுக்குப் பதிவு செய்ய முடியவில்லை என்கிறார்.

படைப்புகளில் மனம் ஒன்றி, தானே அழுதும், கண்ணீர் சிந்தியும், குமுறியும் – எழுத்தையும் வாழ்க்கையையும் தனித்தனி யாகப் பார்க்க முடியாதவராக உணர்வுமயமானவராக இருக்கிற தமிழ்ச்செல்வனின் படைப்புலகமும் உணர்ச்சிமயமானதாக இருப்பதில் வியப்பில்லை.

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் ...

தமிழ்ச்செல்வனின் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் தமிழ்ச் சினிமா உலகின் முதல் பாடலாசிரியர். அப்பா சண்முகம், ஓர் எழுத்தாளர். இவருக்கு இளையவரான ‘கோணங்கி’ என்கிற இளங்கோ நவீன தமிழ்ச் சிறுகதையாளர்களுள் முக்கியமானவர். மற்றொரு சகோதரர் முருகபூபதி, நாடகத் துறையில் தீவிர முயற்சி களில் ஈடுபட்டிருப்பவர். இப்படி, குடும்பமே கலை – இலக்கியத் துறை ஈடுபாடுடையது.
தமிழ்ச்செல்வனின் மனைவி, பள்ளி ஆசிரியை. ஒரு மகன். அவனும் ‘நண்பர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு கதைகள் சொல்கிறவனாக வளர்கிறான்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லுகிற தமிழ்ச்செல்வன், நேர்காணலுக்கென செயற்கையான மொழியில் பேசவில்லை. சென்னை – திருவான்மியூரில் எழுத்தாளர் கமலாலயன் இல்லத்தில் மனமொன்றிய நண்பர்களுடன், ஒரு மாலை நேரத்தில், மிக இயல்பாக நேரம் செலவிட்டார். அந்த நேரத்தில் கலை – இலக்கியம் – தமிழ்ப் படைப்புலகம் சம்பந்தமாகச் சொன்னவை இவை.

எழுத்தாளர் கமலாலயன், பத்திரிகையாளர் பா.ஸ்ரீகுமார், பதிப் பாளர் எம்.பாலாஜி ஆகியேருடன் இணைந்து எடுக்கப்பட்ட பேட்டி இது.

உங்கள் இளமைக் காலம், எழுத்துலக ஈடுபாடு பற்றிச் சொல்லுங்கள்…

ரொம்ப ஃபார்மலான கேள்வியில் ஆரம்பிக்கிறீங்க. சரி! நானும் என்னோட தம்பி கோணங்கியும் பள்ளிக்கூட நாட்கள்ல தீவிரமா வாசிக்கிறதுண்டு. அப்ப வந்த ‘கண்ணன்’ சிறுவர் பத்திரிகை, பிறகு ‘தீபம்’ , ‘கணையாழி’ – இப்படி ரசனை வளர வளர சீரியஸ் லிட்டரேச்சர் நெறையப் படிச்சோம். வீட்டில் அப்பா எழுதுறவர். அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகி வேற வேற ஊருக்குப் போய்க்கிட்டிருந்ததால பாட்டி வீட்ல தங்கிப் படிச்சோம்.

வீடு நெறைய தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் சேகரிச்ச புத்தகங்கள், அப்பாவோட சேகரிப்பு… இப்படி படிக்கிறதுக்கான சூழல் இருந்தது. அம்மாவுக்கும் தமிழ் இலக்கியங்கள்ல பரிச்சயமிருந்தது. ஏராளமான தமிழ்ப் பாடல்கள மனப்பாடமா சொல்லுவாங்க. இதெல்லாம்தான் என்னை எழுதறவனா ஆக்கினது.

அப்போ நீங்க என்ன மாதிரியான புத்தகங்கள படிச்சீங்க? யாரை ரொம்ப பிடிக்கும்?

Noolulagam » பொன்விலங்கு » Page 1

ஒவ்வொரு ஸ்டேஜ்ல ஒரு சிலரைப் பிடிச்சது. பிறகு அவங்க எழுத்தே பிடிக்காமலும் போனது. மொதல்ல ‘தீபம்’ நா.பா.வைக் குறிப்பிடணும். அவரோட ‘குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு’ இதை யெல்லாம் படிச்சப்போ பைத்தியமாயிட்டேன். பொன்விலங்கின் மோகினி இன்னமும் அழகிய கனவா மனசுல பதிஞ்சிருக்கா. அரவிந்தன், சத்தியமூர்த்தி போல வாழணும்கிற வெறியை அப்போ ஏற்படுத்தின எழுத்து அவருடையது.

ஜெயகாந்தன் சிறுகதைகள்: Jayakanthan Short ...

ஜெயகாந்தன், லா.ச.ரா. கொஞ்ச காலம் பிடிச்சது. பெறகு நா.பா., ஜெயகாந்தன், லா.ச.ரா. பிடிக்காமல் போச்சு. பெறகு புதுமைப்பித்தன். முன்னதாவே சாதாரணமா படிச்சுகிட்டு இருந்தாலும் சிறுகதைகள் எழுத ஆரம்பிச்சு பத்திரிகைகள்ல என்னோடது வெளிவர ஆரம்பிச்சப்போ எனக்குப் பிடிச்ச ரொம்ப நல்ல எழுத்தாளர் கு.அழகிரிசாமி. நெறைய நம்மோட ஒத்துப்போற மாதிரியான விஷயங்களை எழுதினவர். அவரோட ‘அழகம்மா’ கதை ரொம்பப் பிரமாதமான, நுட்பமான கதை. ‘சிரிக்கவில்லை’ ‘வெறும் நாய்’ இதெல்லாம் பயங்கரமான கதைகள்…!

கு. அழகிரிசாமி கதைகள் | Buy Tamil & English ...

‘திரிபுரம்’ கதை படிச்சப்போ, அதைப் படிச்சு முடிச்ச அன்னைலேந்து எனக்கு ரெண்டு மூணு நாள் காய்ச்சலே வந்திருச்சு. இப்படி ஆகும்னு என்னால நம்பக்கூட முடியல. ஆனா, அது நெஜம்…!

என்றார் போர்ஹே - Endrar Borges - Panuval.com - Online ...

மற்ற மொழிப் படைப்பாளிகள்ல ‘போர்ஹே’வோட கதைகள் ரொம்பப் பிடிச்சிருக்கு… தமிழ்ல வந்துகிட்டு இருக்கிற கதைகள்ல இப்போ ரொம்பப் பிடிச்சதா எதையும் சொல்ல முடியலை…!

இப்ப எழுதறவங்க யாரும் சரியா எழுதலைன்னு ஃபீல் பண்றீங்களா…?

அப்படியில்லை. முயற்சிகள் நடந்துகிட்டிருக்கு. நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி தமிழ் இலக்கியத்துல ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இருந்துச்சு. அது ஒருவித ஏமாற்றத்துல முடிஞ்சிருக்கு. ஜெயமோகன், கோணங்கி இவங்க எல்லாம் புதிய வாசிப்பு முறையைக் கோருகிற ஓர் எழுத்து முறையை அறிமுகப் படுத்தினாங்க. நான் ரொம்ப எதிர்பார்த்தேன். அவங்ககிட்ட இருந்து ஏதோ புதுசா ஒண்ணு வரப்போகுதுன்னு. ஆனா, அது புதுசுங்கற மனநிறைவோட நின்னு போச்சு…!

ரப்பர் Rupper

ஜெயமோகனோட ‘ரப்பர்’ நல்ல நாவல். ‘திசைகளின் நடுவே…’ தொகுப்புலகூட பல நல்ல கதைகள் இருக்கு, நல்லா வருவார்னு எதிர்பார்த்தேன். அவரோட சமீபத்திய கதைகள என்னால வாசிக் கக்கூட முடியல.

சிறந்த சிறுகதைன்னு எதை, எப்படி அடையாளம் காண முடியும்?

சிறந்த சிறுகதைங்கிறது காலத்துக்குக் காலம் மாறக் கூடியதா இருக்கு. முதல்ல ஜெயகாந்தன் சிறுகதைகளைப் படிச்சப்போ ‘இதான்யா எழுத்து’ங்கற மாதிரி தோணிச்சி. லா.ச.ரா.வைப் படிக்கும்போது ரொம்ப அதிர்ச்சியூட்டும்படியா பயங்கரமா இருந்துச்சி.

Buy La Sa Ramamirtham Kathaikal Part 2 book : La Sa Ramamirtham ...

‘தீ’ன்னு எழுதினா ‘தீ’ புடிச்சு எரியணும் அப்படி எழுதணும் என்பாரு அவரு. இப்போ லா.ச.ரா.வைப் படிக்கவே முடியலை.

Noolulagam » புதுமை பித்தன் கதைகள் » Page 1

அப்புறம் புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி கதைகள்ல ஒவ்வொண்ணுலயும் ஒவ்வொரு பிரச்னை மையக் கருவா இருக்கும். பல நல்ல படைப்புகளை இரண்டு பேரும் தந்திருக்காங்க.. இன்னிக்கு எனக்கு லூசுன், போர்ஹே கதைகள் ரொம்ப நல்லா பிடிச்சதா இருக்கு.

Buy வேல ராமமூர்த்தி: தேர்ந்தெடுத்த ...

தமிழ்ல எழுதறவங்கள்ல வேல.இராமமூர்த்தி கதைகள் புடிச் சிருக்கு. அவரோடதும் இன்னும் பூரணமான படைப்புகளா வரலை.

‘பூரணமான கதை’ன்னு எப்படித் தீர்மானிக்கிறீங்க?

இப்போ… ஒரு மனுஷன் இருக்காருன்னு வைச்சுக்குங்க. அவரோட உயரத்துக்குத் தகுந்த தடிமன் இருக்கணுமில்ல…? அப்ப தானே பூரணமா இருக்கார்னு அர்த்தம். அது மாதிரி எல்லா அம்சத்துலயும் நிறைவைத் தர்ற கதையை ‘பூரணமான கதை’ன்னு சொல்லலாம். உருவம், உள்ளடக்கம், உத்தி இதெல்லாம் பிரிச்சு பிரிச்சிப் பார்க்க வேண்டியதில்லை. படிக்கும்போதே புரியும். ‘நடை நல்லா இருக்கு…’ அப்பிடின்னு சொன்னாலே மத்த அம்சங்கள்ல ஏதோ ‘மிஸ்ஸிங்’னு அர்த்தம். எல்லா அம்சங்களும் முழுமையா இருந்தா, படிச்சதும் அத உணர முடியும்…!

உங்களோட முதல் தொகுப்பு ‘வெயிலோடு போய்’ பற்றி?

வெயிலோடு போய்..... @ viruba.com

அதில 14 கதைகள் இருக்கு எல்லாமே ரொம்ப பெர்ஸனலா நான் ஃபீல் பண்ணி எழுதின கதைங்க. ரொம்ப உணர்ச்சிகரமான மனநிலையிலிருந்து எழுதப்பட்டவை. அதிகமான கதைகள் கல்யாணத்திற்கு முன்னாடியும், ‘வெயிலோடு போய்’ ‘வார்த்தை’ இதெல்லாம் கல்யாணத்திற்குப் பிறகும் எழுதப்பட்டவை.

எல்லாக் கதைகளையுமே எழுதும்போது ரொம்ப வேதனையாகி, கதாபாத்திரங்களோடவே நானும் ரொம்பத் துன்பப்பட்டுதான் எழுதினேன். இப்படி வேதனைப்பட்டு எழுதினாதான் அது கதை, இல்லேன்னா அது கதையே இல்லைங்கற மாதிரி முடிவுகூட வெச்சிருந்தேன். இப்போ அந்த அபிப்ராயம் இல்லை.

வெவ்வேறு அறி-வுத் தளங்கள்ல, உணர்வுத் தளங்கள்ல கதைங்க உருவாவதற்கு வழி இருக்குன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. லத்தீன் அமெரிக்க கதைகள படிச்ச பிறகு ஏற்பட்ட மாற்றம் அது.

உங்க தொகுப்புல ‘அசோக வனங்கள்’ கதையிலயும் ‘வெயிலோடு போய்’ கதையிலயும் ஒரே பாத்திரம் தொடர்ச் சியாய் வர்ற மாதிரி இருக்கே…?

சரிதான். சில கேரக்டர்ஸ் அப்படி நம்மை பாதிக்குது. குறிப் பிட்ட ஒருத்தரை அல்லது ஒரு விஷயத்தை வைத்து எழுத ஆரம்பிக்கிறோம். அது போகும்போது பல பேரோட அநுபவங்களையும் சேர்த்தே கொண்டு வருது. ஒரு பத்திரிகைச் செய்திகூட பெர்ஸனல் ஆகி கதையா ஆயிடும்.

‘குரல்கள்’ கதைகூட ஒரு செய்திதான். எங்க பகுதி சிவகாசிப் பக்கம் பட்டாசுத் தொழிற்சாலைகள் நெறைய இருக்கறதால அடிக்கடி வெடி விபத்து நடக்கும். அத நேர்ல போயி பார்த் திருக்கேன். செய்திகளையும் படிக்கிறோம். மந்திரிங்க வர்றது, ரூபாய் கொடுக்கறது, அம்பது பேரு செத்தான்னா அஞ்சு பேரு செத்தான்னு சொல்றது… இப்படியான விஷயங்கள் மனசப் பாதிக்குது. இந்த மாதிரி ஒரு செய்தி பெர்ஸனல் ஆகும்போது கதையா ஆயிடும்.

சொந்த அநுபவமா மாறி வந்தாத்தான் அது கதையா வரும். இல்லாட்டி அது வெறும் செய்தியாவே நின்னுடும். தமிழ்ல நெறையக் கதைகள் செய்திகளாவே இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!

உங்க கதைகள்ல எந்தக் கதை உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது?

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் | Buy Tamil ...

எல்லா கதைகளுமே! ஒண்ணு ரெண்டுதான் பிடிச்சதா இருக்கணும்கிற கட்டாயம் இல்லை. நாம நெனச்ச அளவுக்கு எல்லாமே உக்ரமா வந்திருக்கான்னு வேண்ணா பாக்கலாம். அதுல வித்தியாசம் நிச்சயமா இருக்கும்! உதாரணமா சொன்னா, என்னோட ‘வார்த்தை’ கதை ஒரே சிட்டிங்ல முழுவீச்சுல வந்திச்சு. சில கதைகள் ரெண்டு மூணு தடவை எழுத வேண்டி வரும்.

எதனால அப்படி?

எழுதுகிற சூழல் அமையணும். எழுதுவது என்பது ப்யூர்லி பெர்ஸனல். எழுதப்படுகிற விஷயங்கள் சமுதாயத்திலிருந்துதான் கிடைக்கும். ஆனா எழுத்தில் வடிப்பது என்பது எழுத்தாளன் தனி மனிதனாகவே செய்து தீர வேண்டிய வேலை. அதைச் செய்வதற்கு அவனுக்கு வீட்டுச்சூழல் உட்பட சாதகமா இருக்கணும். நம்ம குடும்பங்கள்ல சமயத்துல அபரிமிதமான அன்பே கூட எழுதுறவனை முடக்கிடுது.

ஏன்னா, கலைஞர்கள் அடிப்படையிலேயே நெகிழ்ந்து போற வங்களா இருக்காங்க. அபரிமிதமான அன்புக்கு ஆளாகும்போது அவன் ஒருமுகப்படுத்தப்பட்ட நெகிழ்ச்சியடைஞ்சு இயங்க முடியா தவனா ஆயிடறான்! எழுத்துலயும் அது பிரதிபலிச்சுடுது.

இளம் எழுத்தாளர்களுக்கு அப்ப நீங்க என்ன அட்வைஸ் பண்ணுவீங்க? இந்த மாதிரி அறிவுரை கேட்கிறதோ, சொல்றதோ எந்த அளவுக்குப் பயன்படும்னு நெனைக்கிறீங்க…?

பொதுவா கல்யாண வீடுங்கள்ல வாழ்த்துரை வழங்கக் கூப்பிடுவாங்க. நானும் முந்தியெல்லாம் போய்ப் பேசியிருக்கேன். ஒரு நாள் உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். எவ்வளவு தப்பா பேசிகிட்டு இருந்திருக்கோம்னு. யாராவது இன்னொருத்தர் வாழ்க்கைக்கு அறிவுரை சொல்லமுடியுமா? ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க வழியிலே வாழ்ந்துதான் கத்துக்கிறாங்க. யாரும், யாரையும் புரிஞ்சிக்கிறதும் கிடையாது; அதுக்காக முயற்சி செய்றதும் கிடையாது. அது மாதிரி என்னோட அறிவுரைகளைக் கேட்டு என்னோட எழுத்து அனுபவங்களை அறிந்து யாரும் எழுதிட முடியாது. ஆனா, வாசகர்களுக்கு எழுதறவங்களோட வாழ்க்கை அனுபவங்களைக் கேட்கறதுல ஓர் இன்ட்ரஸ்ட் இருக்கும்…! அதுக்காக சிலதைப் பகிர்ந்துக்கலாம்… அவ்வளவுதான்.

சிறுகதைப் பட்டறைகள் நடத்தி அதன் மூலம் படைப் பாளிகளை உருவாக்க முடியுமா? எழுதவறங்களுக்கு இந்த மாதிரி பட்டறைகள் எந்த அளவுக்குப் பயன்படும்னு நெனைக்கிறீங்க…?

பட்டறைகள் நடத்தி ஒருத்தரை எழுத்தாளனா உருவாக்கிட முடியாது. ஏற்கெனவே எழுதிகிட்டிருக்கிறவங்கள செழுமைப்படுத்த பட்டறைகள் உதவும். பல எழுத்தாளர்கள் ஒரே இடத்துல சந்திச்சுப் பேசறதுல பரஸ்பரம் எழுதணும்கிற உந்துதல் ஏற்படும். உதாரணமா, மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் நாலஞ்சு பேர் சந்திச்சா மணிக்கணக்காப் பேசுவாங்க. பேசி முடிச்சுட்டு ராத்திரி கண் விழிச்சு ஒரு கதை எழுதி, மறுநாள் சந்திக்கும்போது “இந்தாய்யா, படிச்சுப் பாரு’’ன்னு மத்தவங்ககிட்ட குடுப்பாங்க. மத்தவங்களோட கதைகளப் பத்திப் பேசுறது ஒரு நல்ல அனுபவம்தானே!

கோவில்பட்டியில எனக்கு நாலஞ்சு நண்பர்கள் – எல்லாருமே எழுதறவங்கதான். ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் பேசிகிட்டிருப்போம். அதுக்கு மேல போயி, எழுதின ஒரு கதையோட அடுத்த நாள் வந்து “இந்தா, புடி’’ன்னு குடுப்போம்.

எவ்வளவு பெரிய எழுத்தாளனா இருந்தாலும், அது மாதிரி வேறொருத்தரோட அபிப்ராயம், தட்டிக் குடுக்கிற ஒரு தூண்டுதல் தேவையாத்தான் இருக்கு.

ஒரு கதை எழுதினா அதோட ரியாக்ஷன் என்னன்னு இந்த மாதிரி சந்திப்புகள்ல உணரமுடியுது. அதேபோல பட்டறைகள் – பரஸ்பர கருத்துப் பரிமாற்றம், எல்லாரும் ஒரே இடத்தில ஒண் ணாச் சேந்து பேச முடியறது – இந்த மாதிரி நன்மைகள் இருக்கு. மத்தபடி ‘இன்ன இடத்தில், இன்ன தேதியில் நடந்த இந்தப் பட்டறையில் உருவான இன்னார்’ – என்று எந்த ஓர் எழுத்தாளரையும் நாம இதுவரை சுட்டிக்காட்ட முடிஞ்சது இல்லை. (சற்று இடை வெளிக்குப் பின்) இன்னொரு பெரிய நன்மை இருக்கு. சிறுகதைப் பட்டறையில. படைப்பு மன நிலையோ, அதற்கான உக்கிரமோ, பயிற்சியோ எதுவுமே இல்லாம எழுதிக்கிட்டிருக்கிற ஆட்கள், “ஓ, சிறுகதை எழுதுறதுல இவ்வளவு விஷயம் இருக்கா? இது ஏதோ பெரிய விஷயம்… நம்ம இதுக்கு லாயக்கு இல்ல’’ன்னு புரிஞ்சிகிட்டு எழுதாம ஒதுங்கிப் போயிடுவாங்க. (சிரிக்கிறார்)

ஒரு சிறுகதை எழுத்தாளர், எழுத்தை மட்டுமே தன் முழு நேர வேலையா வைத்திருக்கணுமா? அமைப்பு ரீதியான பல வேலைகளைச் செய்து கொண்டு, ஒருத்தரால வெற்றி கரமான எழுத்தாளரா இருக்க முடியாதுங்கிறாங்களே… அது பற்றி?

அமைப்பு ரீதியான பல வேலைகளையும் செஞ்சிகிட்டு ஒருத் தரால வெற்றிகரமா எழுதவும் முடியும். உதாரணமா நான், அறி வொளி இயக்கத்துல வேலை செய்றேன். ஏற்கெனவே நான் வேல செஞ்ச தபால் தந்தித் துறையில் தொழிற்சங்க அமைப்பாளனா இருந்திருக்கேன். ஆர்ப்பாட்டம் ஊர்வலம்னா அதுக்கு ஏற்பாடு பண்றது… மற்ற சங்க நடவடிக்கைகள்… இதெல்லாம் செய்ததுண்டு. ஏதாவது அமைப்புகள்ல வகுப்பு எடுங்கன்னா போயி, அத நடத்துவோம்… இப்பிடி! இதெல்லாம் செய்துகிட்டு எழுதவும் முடியுது. ஒரு சங்கடம் என்னன்னா, இப்படி அமைப்பு ரீதியான வேலைகளுக்காக நெறைய அலைஞ்சு திரியறப்போ ஃபிஸிகலா நாம எக்ஸாஸ்ட் ஆயிடறோம். களைப்பு மேலிட்டு ‘வீட்டுக்குப் போயி எப்படா கட்டயச் சாய்ப்போம்’கிற மாதிரி ஆயிடுது. இது ஒண்ணு தான் பிரச்சினை எந்த வேலையைச் செஞ்சாலும், அதுல இருந்து அந்நியப்பட்டு விலகி ஒர்க் பண்றதுக்கும் நமக்குத் தெரியணும். அப்படி அலியனேட் ஆகி வேலை செய்ய முடியாதது தான் நம்மோட பலகீனம்.

தபால் துறையில் பணியாற்றுவதாக சொன்னீங்கள். என் னென்ன விதமான வேலைகளில்…?

எல்லாவிதமான வேலைகளுமே. தபால் பிரிக்கிறதுல இருந்து மணியார்டர் புக்கிங், ரெஜிஸ்ட்ரேஷன்… இப்படி எல்லா வேலை யும். இப்ப ரெண்டு மூணு வருஷமா அறிவொளி இயக்கத்துக்காக டெபுடேஷன்ல வந்திருக்கேன்.

நீங்கள் இராணுவத்தில் வேலை செஞ்சிருக்கீங்க இல்லியா? அந்த அனுபவங்கள் உங்க படைப்புகள்ல போதுமான அளவு வெளிப்படவில்லையே? எங்களுக்குத் தெரிந்து, ஒரே ஒரு சிறுகதையிலதான் இராணுவ அநுபவம் வெளிப்பட்டிருக்கு. அதனால இந்தக் கேள்வி. இராணுவத்தில் பணி செய்வது என்பது, மற்ற எல்லா வேலைகளில் இருந்தும் ரொம்ப வித்தியாசமானது. அந்த அனுபவங்கள் உங்களைப் பாதித்த அளவுக்கு படைப்பு களில் பதிவாகியிருக்கிறதா?

இந்த வகையில், போதுமான அளவு பதிவாகவில்லைதான். பொதுவா பட்டாளத்துக்குப் போயிட்டு வர்றவன் ரொம்ப ரீல் விடுவான். பட்டாளத்தப் பத்தின கதைகள் நம்ம மக்களுக்கு நெறையத் தெரியும். இங்கிலீஷ்ல நெறைய வந்திருக்கு. தமிழ்லகூட தி.சு.ராஜு நெறைய எழுதியிருக்கார். அவங்க எழுதினதையே திரும்ப நானும் எழுதறதுல என்ன பிரயோசனம்? அவங்க எழுதின தைத் தாண்டி புதுசா என்ன எழுதறோம்கிறதுலதானே முக்கியம்…! அந்த மாதிரி புதுசா ஏதாவது எழுத முடிஞ்சா எழுதுவேன்…!

இராணுவத்துக்கு எப்பப் போனீங்க? எவ்வளவு நாள் அங்க இருந்தீங்க?

காலேஜ் படிப்பு முடிஞ்சதும் மிலிட்டரிக்குப் போனேன். ரொம்ப இலட்சியமான கனவுகள் எனக்கு. அப்போ நான் பயங் கரமான காந்தியவாதி. குறிஞ்சி மலர், பொன்விலங்கு கதாநாய கர்கள் மாதிரி எப்பவும் கதர் உடைதான். தேசத்துக்காக உயிரையே கொடுக்கிற ரொம்ப உன்னதமாக ஒரே சேவை இராணுவ சேவைங்கிற உணர்வோட போயிருந்தேன். நாலு வருஷம்தான் இருந்தேன். அதுக்குள்ள என்னோட கனவுகள் நொறுங்கிடுச்சு. அங்க எத்தனியோ ஃபிராடுகள். உதாரணமா ஒன்னு சொல்வாங்க. “ஒரு ஆயில் எஞ்சின் இருந்ததாம். கணக்குல அது போகப்போக “மோட்டார் என்ஜின் ஆயில்’’னு ஆகி, கடைசியில் எஞ்சின் ஆயில் டப்பாதான் ஸ்டாக்குன்னு முடிஞ்சதாம்.’’ அது மாதிரி எவ்வளவோ…! பலவிதமான மனிதர்கள் பல வக்கிரமான அனுபவங்கள்… மறக்க முடியாத பல நல்ல விஷயங்களும்கூட. அப்போ நான் இளைஞன். அடாலஸன்ட் ஏஜ். செக்ஸ் தொடர் பான பல குழப்பங்களோட இருக்கிற வயதில்லையா! நானும் அந்த மாதிரியாக இருந்தேன். ரொம்ப ரொமான்டிக்கான பீரியட். அது பிரிதீஷ் நந்தி, கமலா தாஸ், சஸ்தி பிரிதா, பாரதி முகர்ஜி இவங்களோட எல்லாப் படைப்புகளையும் தேடிப் பிடிச்சுப் படிச்ச நேரம். ரொமான்டி சைஸான மூடில் இருந்தேன். இங்க ரொமான் டிக்ங்கிற வார்த்தைக்கு ரொம்பத் தப்பான அர்த்தங்கள் இருக்கு இப்போ. நான் அந்த அர்த்தத்திலே சொல்லலை. கனவுமயமான உலகத்துல இருந் தேங்கிற அர்த்தம்தான். இப்பக்கூட நைட்ல எங்காவது தூரத்தில இருந்து ஒரு இந்திப் பாட்டு கேட்டா அப்படியே அந்த பனி படர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள், ஸ்னோஃபால், அந்தக் குளிர் க்ளைமேட்டைக் கூட உணர முடியுது. அதையெல்லாம் அப்படியே ஃபீல் பண்றேன்…! மறக்க முடியாத நாட்கள் அவை.

உங்கள் படைப்புகள்ல அது வெளிப்பட்டிருக்கா?

நமது தமிழ்ச் சூழல்ல இராணுவ கள அனுபவங்களைக் கொண்ட நாவல்கள்னு பாத்தா பெரும்பாலும் ரஷ்ய நாவல்களின் மொழிபெயர்ப்புகள்தான். நமக்குப் போர்க் கள அனுபவங்களோ சூழலோ நேரடியாக அறிமுகம் ஆகாதவைதானே…! அதனால நம்மோட மிலிட்டரி அனுபவங்கள வெச்சு எழுதறபோது தமிழக வாசகர்களுக்கு அது ஒருவிதமான அந்நியத் தன்மை கொண்ட படைப்பாயிடுமோன்னும் தயக்கம் இருக்கு…!

மனிதர்களில் வக்கிரமான மனப்போக்குள்ளவர்கள் இருக்கிறார்கள். இராணுவத்திலும் அப்படிப்பட்டவங்களச் சந்திச்சதா சொன்னீங்க… அதையெல்லாம் அப்படியே எழுதலாமா? வக்கிரங்களை அப்படியே பதிவு செய்கிற போக்கு சரியானதாக இருக்குமா…?

பலவிதமான வக்கிரப் போக்குள்ள மனிதர்களைச் சந்திச்சேன். அதையெல்லாம் அப்படியே கொண்டுவர முடியுமா? கொண்டு வரணுமா? வரணும்னா எந்த மாதிரி மொழியிலே எழுதணும்…? இப்படிப் பல கேள்விகள் எனக்கு இருக்கு… அப்படியே வார்த்தை பிசகாம எழுதணும்கிறாங்க… நான் இன்னும் அதுல கன்வின்ஸ் ஆகலை. நிச்சயமா எழுத்துக்குன்னு ஓர் அழகியலோடதான் எதையுமே சொல்ல முற்படணும். ஆனா, சமீப காலமா எந்தவிதமான சலனமும் இல்லாம கிட்டத்தட்ட சவம் போல உணர்ச்சியற்றுக் கிடந்த எழுத்துலகத்துல- தமிழ்ச் சூழல்ல ஓர் உடைப்பு ஏற்படுத்தற மாதிரி ‘தடால் புடால்’னு இவங்க சில விஷயங்களத் தூக்கிப் போட்டிருக்காங்க… உதாரணமா சாருநிவேதிதாவோட ‘எக்ஸிஸ் டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியன்களும்’ மாதிரி படைப்புகள். இதை வாசிச்சேன். ஒரு விதத்துல அது பிடிச்சும் இருக்கு. ஆனா, குடும்ப அமைப்பைத் தகர்த்தாதான் சமூக மாற்றம்கிற மாதிரி கருத்துகள் தொடர்பாக பெண் அடிமைத் தனத்திற்குத் தீர்வாக இவங்க முன் வைக்கிற கருத்துகளை என்னால ஏத்துக்க முடியலை. பெண்ணியம்கிற பேர்ல இவங்க முன்வைக்கிற கருத்துகள் எல்லாம் பெண்களை இப்போ இருக்கிற நிலைமையை விட இன்னும் மோசமான நிலைமைக்குக் கொண்டு போய்த் தள்ளிடும். ஆனா, இந்த மாதிரி விஷயங்கள் பத்திச் சிந்திக்க வைச்சிருக்குங்குற வகையில இது மாதிரிப் படைப்புகளை நாம கவனத்தில் எடுத்துக் கொள் ளத்தான் வேணும்.

‘முற்போக்கு இலக்கியம்’ ‘முற்போக்கு எழுத்தாளர்கள்’ பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க…?

சீரியஸா எழுதற எழுத்தாளருங்க எல்லாருமே முற்போக்கு எழுத்தாளருங்கதான். ‘சோசியல் கமிட்மெண்ட்’ இல்லாம எவனும் எழுத முடியாது. வாழ்க்கையை அபத்தம், சுத்தப் பேத்தல்னு ஒரு பேட்டியில லா.ச.ரா. சொன்னார். அதை ஒத்துக்க முடியாது. ஆனா அவரோட ‘கன்னியாகுமரி’ சிறுகதை சிறந்த முற்போக்கான கதை. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், செம்மலர் இதெல்லாம் அந்தக் கதையப் பாராட்டி இருக்கு. வெறும் வியாபாரத்துக்காக எழுதற வங்கள எல்லாம் நாம ‘எழுத்தாளர்’னு பட்டியல்ல சேத்துகிட்டு முற்போக்கா பிற்போக்கான்னு பார்க்க வேண்டியதில்லை. வாழ்க்கையோட சம்பந்தமே இல்லாம, அந்தரத்துல நிக்கிற எழுத்துல, தரையிலயே கால் பாவாம அப்பிடியே நழுவிப் போகிற எழுத்துல கூட வாழ்க்கையைப் பற்றின உக்கிரமான வரிகள் இருக்கு…! முழுமையான, சரியான கலாபூர்வமான படைப்புகளைத் தருகிறவங்க எல்லாரும் முற்போக்கு எழுத்தாளர்கள்தான்…! அவர் இடதுசாரியா இருக்கணும் என்கிற கட்டாயமில்லை. ‘மன்னனைப் பாடமாட்டேன்; மகேசனைத்தான் பாடுவேன்’ என்று சொன்ன தியாகையரின் குரல் முற்போக்கானது என்கிறோம் ‘கடவுளை மட்டுமே பாடுவேன் மனிதனைப் பாடமாட்டேன்’ என்று பின்னர் வந்த குரலை பிற்போக்கு என்கிறோம். மனிதனைப் பாட வந்த பாரதியை முற்போக்கானவர் என்போம். காலத்தில் வைத்துத்தான் சொல்ல முடியும்.

‘தலித் இலக்கியம்’னு இப்ப தமிழ்ல ஒரு குரல் அதிகமா ஒலிக்க ஆரம்பிச்சிருக்கு. அது பற்றி…

‘தலித்’துன்னா யாரு…? ஒடுக்கப்பட்டவங்க. ஒடுக்கப்பட்ட வங்களப் பத்தி எழுதப்படற எல்லாமே தலித் இலக்கியம்தான். ‘இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் இன்று குளிக்க மாட்டேன்’ அப்படின்னு ஆப்பிரிக்காக்காரன் கவிதை எழுதினான். ஏன் ஞாயிற்றுக்கிழமைல குளிக்க மாட்டானாம்…? அது வெள்ளைக்காரனுக்குப் புனிதமான நாள். சர்ச்சுக்குப் போற வழிபாட்டு நாள். வெள்ளைக்காரனோட ஒடுக்குமுறைக்கு எதிரான கலகக்குரல் இந்த மாதிரி வெளிப்படுது. இந்த எதிர்ப்புக்குரல் கலகக் குரல், நம்ம நாட்டுல காலம் காலமா ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில ஒலிச்சிக் கிட்டிருக்கு. அந்தக் குரல் எல்லாம் தலித் இலக்கியக் குரல்தான்.

தலித்துகளாக இருப்பவங்க மட்டும்தான் தலித் இலக்கியம் படைக்க முடியும் அப்படின்னு ஒரு கருத்து இருக்குதே…?

தலித் வாழ்க்கையை தலித் எழுதுவது போல மற்றவர்கள் எழுத முடியாது. அதற்காக மற்றவர்கள் தலித் வாழ்வு பற்றி எழுதவே கூடாதுன்னு சொல்ல முடியாது. கூடாது. தான் பிறந்த சொந்த சாதிக்குத் துரோகம் செய்யவும் தயங்காத மனநிலை உள்ளவன்தானே உண்மையான படைப்பாளி. அவன் எழுதலாம்.

நோபல் பரிசு பெற்ற அலெக்ஸ் ஹெய்லியோட ‘ஏழு தலை முறைகள்’ நாவல் இப்ப தமிழ்லயும் மொழிபெயர்ப்பாகி இருக்கு. அதுல, பல ஆண்டுகளுக்கு முன்னாடி தென்னாப்பிரிக்காவின் கருப்பர்கள், வெள்ளையர்களால் அடிமைப்படுத்தப்பட்ட நீண்ட வரலாறு அற்புதமா பதிவாகியிருக்கு. எப்பவோ நடந்த சம்பவங்களைப் பற்றிப் படிச்சு, ஆராய்ச்சி பண்ணி கலாபூர்வமான நாவலா எழுத முடிஞ்சிருக்கு… இது மாதிரி நம்ம சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் படைப்புகள்ல பதிவு செய்ய முடியுமில்லையா…?

ஏழு தலைமுறைகள் (புதினம்) - தமிழ் ...

செய்ய முடியும். நான் சொல்றதும் அதேதான். வெறுமனே படிச்சுட்டு மட்டும் எழுத முடியாதுங்கறதுதான் விஷயம். படிச்சு, ஆழமா உள்வாங்கி, பெர்ஸனலா உணர்ந்தாதான் எழுதமுடியும். நானோ, வேறு யாராவதோ செய்ய முடியலாம். முடியாதுன்னு ஒண்ணுமில்லை.

இது தொடர்பா, அறிவொளி இயக்கம் மூலமா ஏதாவது முயற்சிகள் செய்திருக்கீங்களா…?

அறிவொளி இயக்கத்துல, திருநெல்வேலி மாவட்டத்துல புதுசாக எழுதப் படிக்க கத்துக்கிட்டவங்களுக்குப் புரியும்படியா, எளிய முறையில, சுதந்திரப் போராட்ட வரலாறுகளை சிறுசிறு புத்தகமா தொடர்ச்சியாக கொண்டு வர்றோம். நாலு புத்தகம் வந்திருச்சு. அதை நான்தான் எழுதறேன். அதுக்காக நெறைய படிச்சேன். ஏராளமான புத்தகங்கள சேகரிச்சேன். ஆனா, எல்லாத்தையும் ‘கிரிட்டிகலா’ படிச்சேன்னு சொல்ல முடியாது…!

என்ன கொடுமைன்னா, சுதந்திர போராட்ட கால சம்பவங்கள் பூராவும் அடங்கின ஒட்டுமொத்தமான வரலாற்று நூல்னு ஒரு முழுமையான புத்தகம்கூட தமிழ்ல இதுவரை வரலைங்கிறதுதான்! அங்கங்க பல புத்தகங்கள்ல உதிரியா இருக்கு. பல விஷயங்கள் விட்டுப் போயுமிருக்கு… அதையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்கறதே பெரும்பாடா இருக்கு… அத விடுங்க… நம்ம தமிழகத்தோட வரலாறு ஒரு முழுப் புத்தகமா இதுவரை வந்திருக்கா…? நம்ம பேராசிரியர்கள் என்னென்னவோ எழுதிகிட்டு, பேசிகிட்டுத் திரியறாங்களே… அவங்க இதைச் செஞ்சுத் தொலைக்கலாம் இல்ல… ஆராய்ச்சி செஞ்சு இதை யெல்லாம் ஆதாரபூர்வமா ஒரே புத்தகமா எழுதினா நம்மை மாதிரி சாதாரண ஆளுங்களுக்கு எவ்வளவு பிரயோசனமா இருக்கும்…!

தாழ்த்தப்பட்டவங்கள்ல எத்தனையோ பேர் சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்டாங்க… அவங்களப் பத்தி ஏதேனும் தெரியுமா…

வாசக இயக்கத்தைத் தீவிரப்படுத்தறதுக்கு என்ன செய்ய லாம்னு நினைக்கிறீங்க…?

நான், இது பற்றி எப்போ யோசிச்சாலும் ஒரு தோற்றவனேட மனநிலைக்குத்தான் வர்றேன். பல விஷயங்களில், ரொம்ப ‘சென்சிட்டிவ்’ஆக இருக்கறவன் இன்னிக்கு வாழவே முடி யாது. அப்படி ஒரு மோசமான நிலைமை இருந்துகிட்டிருக்கு…! சமூகத்தின் மீது, நமது மக்களின் மீது ஒரு மிகப்பெரிய கலாச்சார யுத்தம் தொடுக்கப் பட்டிருக்கு…! டி.வி. சினிமா இந்த மாஸ் மீடியாக்கள்ல எல்லாம் மக்களோட கலாரசனையையே சீரழிக்கற மாதிரி புல்டோசர் வெச்சு தகர்த்துகிட்டிருக்கான்…! நாம குண்டூசி யைக் கொண்டு சண்டை போடறோம்…! படிச்சவங்ககிட்ட முற்றாக நான் நம்பிக்கை இழந்துட்டேன்…!

இது ரொம்ப ப்ரஸ்ட்ரேட்டட் டோன்ல வர்ற கருத்தா இருக்கு… உங்க மாவட்டத்துல இருந்து நீங்க தொகுத்துத் தந்த ‘தூசு படிந்த அலமாரிகளை நோக்கி’ பிரசுரம் நூற்றுக்கணக்கான நல்ல புத்தகங்கள அறிமுகப்படுத்தின ஒண்ணு. அதுல இருந்து சுருக்கப்பட்ட ஒரு நாலு பக்க பட்டியலை வட ஆற்காடு மாவட்டத்துல நாங்க (கமலாலயன்) பரவலாகப் பயன்படுத்தினோம். அதையும் நீங்கதான் தயாரிச்சுத் தந்தீங்க… நெறைய பேரை நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவங்களா ஆக்கறதுக்கு இந்த ரெண்டும் பயன்பட்டது. ஆனா இப்ப நீங்க முற்றாக நம்பிக்கையிழந்து பேசறீங்களே…?

நெலைமை, நம்பிக்கையளிக்கிறதா இல்லை. ‘தூசி படிந்த அலமாரிகளை நோக்கி’ன்னு நாங்க போட்ட பிரசுரம் இப்ப தூசி படிஞ்ச கெடக்கு… நாம இப்ப இருக்கிற சூழல், நம்ம வாழ்க்கை இதெல்லாம் மனுஷன மாசுபடுத்திக்கிட்டு இருக்கு… இதுல எங்க நாம மீண்டு வர்றது..? ‘தூசி படிந்த அலமாரிகளை நோக்கி’ பிரசுரம் ஐநூறு காப்பி போட்டோம். ஐநூறு வாசகன் திருநெல்வேலில உருவாகி இருக் கானா…? இல்லியே..! அங்க ஏற்கனவே படிச்சு கிட்டிருந்த பதினஞ்சு பேர்ல ஏழு பேரு படிக்கிறதையே நிறுத்திட் டான்…! மீதி எட்டு பேர்தான் தொடர்ந்து படிக்கிறாங்க…! எதன் மீது நீங்க அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க முடியும்..? ஒருவித Defeated மனநிலைதான் இருக்கு…!

அறிவொளி இயக்கம் மூலமா ஒவ்வொரு பஞ்சாயத்து அளவிலும் நூலகம் அமைக்க ஏற்பாடு நடந்திருக்கு. பத்திரிகைகள், செய்தித்தாள் வாங்கி விநியோகிக்கிறீங்க… ஒவ்வொரு மாதமும் ஒரு புத்தகத்தை அறி முகப்படுத்திகிட்டு வர்றீங்க… இந்த மாதிரி இயங்கி கிட்டிருக்கிற நீங்க Defeated மனநிலைல இருப்பதாக விரக்தியோட சொல்றது முரண்பாடா இருக்கே…?

படிச்சவங்க மேல எனக்கு நம்பிக்கையே வரலைன்னுதான் சொன்னேன். ஆனா, நீங்க குறிப்பிட்ட அறிவொளித் தொண் டர்கள் அது மூலமா புதுசா எழுதப் படிக்க கத்துகிட்ட ஏராளமான மக்கள் இவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. புது சிலேட் மாதிரி இருக்கற இவங்க மூலம்தான் நாம ஏதாவது செய்ய முடியும். நல்ல விஷயங்களை புத்தகங்களை அறிமுகப் படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கு… புதுசா படிப்பறிவைக் கத்துகிட்டு ஆர்வமா வர்றவங்ககிட்ட கருத்துகளைக் கொண்டு போயிடலாம்னு நம்பிக்கை இருக்கு. ஆனா, நாம மொதல்ல சொன்ன படிச்ச மக்களை ஒண்ணும் பண்ண முடியாது… அவங்ககிட்ட நம்ம ‘பப்பு’ வேகாது…!

எதிர்காலத்தில் நல்ல மாற்றம் வரலாமில்லையா…? ஏன் ஒரேயடியா விரக்தி அடையணும்?

நான் ஒரு முற்போக்கு எழுத்தாளன். அதனால நம்பிக்கை யோடுதான் பேசணும் அப்படின்னு எதிர்பார்க்காதீங்க. எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் சொல்ல முடியும். தொண்ணூறு களில் வாழக்கூடிய ஒரு முற்போக்கான படைப்பாளிக்கு எதிர் காலத்தின் மீதான நம்பிக்கையோடு கூடவே ஒருவிதமான Defeated மனநிலையும் இருக்கே. அப்படியான சூழல் கட்டாயமும் இருக்கு. சோவியத் வீழ்ச்சி பெரிய மன உடைவை ஏற்படுத்தியிருக்கு.

ஒரு நேர்மையான படைப்பாளி, இரண்டு பக்கங்களையும் பதிவு செய்யத்தான் வேணும். அந்த வகையில் உங்க கருத்து சரிதான்…! அப்புறம், நீங்க திரைப்படம் நாடகம்னு இந்தத் துறைகளிலேயும் ஆர்வமுள்ளவர். கோவில்பட்டியில் ‘சிருஷ்டி’ நாடகக் குழுவை இயக்கி வந்தவர். இந்த மீடியாக்கள் மூலமா முற்போக்கான கருத்துகளைச் சொல்ல முடியுமா? உங்க அநுப வங்கள் என்ன…? எதிர்காலத்தில் என்ன செய்யமுடியும்னு நெனைக்கிறீங்க…?

தமிழ்ச் சூழலில், நாடகத்துக்கு ஒரு நிர்ணயகரமான இடம் இருக்கு. நவீன நாடகம்கிற பேர்ல, பல்கலைக் கழக வளாகத்தில் ஒரு ஐம்பது, நூறு பேருக்குள்ள மட்டுமே சீரியஸா நாடகங்கள் போடறாங்க. இது முக்கியம்தான். ஆனால், ஏராளமான மக்களிடம் போய்ச் சேரும்படியான மீடியாவாக நாடகம் இருக்கும்போதுதான் எனக்கு அதன் மீது அக்கறை. அந்த வகையில் ‘வீதி நாடகம்’ தான் ஆயிரக்கணக்கான மக்களிடம் போய்ச் சேரக்கூடிய வலு வான நாடக வடிவம். ஆனால், அதற்கான முயற்சிகள் தமிழ் நாட்டில் ரொம்ப ரொம்பக் கம்மி.

‘சென்னை கலைக்குழு’ மாதிரி ஒண்ணு ரெண்டுதான் தொடர்ச்சியாக இயங்குகிற குழுக்கள். வீதி நாடகத்துக்கான அழகியல் இதெல்லாம இனிமேதான் டெவலப் ஆகணும் ‘அறிவொளி இயக்கம்’ நிறைய கிராமங்களில் வீதி நாடக வடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்கு… அது ஒரு கலாச்சாரமா மாறியிருக்கா என்பதெல்லாம் கேள்விக் குறிதான். இது பத்தின தொடர்ச்சியான சிந்தனை தேவைப்படுது நமக்கு..! எனக்கும் தெளிவில்லை இப்போதைக்கு.

‘நமக்கான நாடகம்’னு எதைக் குறிப்பிடுறீங்க?

தவுல் அடிச்சி தமிழ் மக்களின் பிரச்சினைகளை சொல்கிற தமிழ் நாடகம், தமிழனுக்கான நாடகம். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் போட்டாரு. அதுக்கு முந்தி தெருக்கூத்து இருந்திச்சு. படிப் படியாக இப்ப உள்ள மாடர்ன் தியேட்டர் எப்படி உருவாகி வந்தி ருக்கும்னு பார்க்கணும், நாடகத்திலேயே ஊறிச் சிந்திக்கிறவங்களுக் குத்தான் இது பற்றிச் சொல்ல முடியும்.

நல்ல திரைப்படங்களை அறிமுகப்படுத்தறது எப்படி? இதுல எப்படி உங்க கவனம் திரும்பிச்சு?

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி 1984ல் ‘சென்னை ஃபிலிம் சொசைட்டி’ நடத்தின ஃபிலிம் அப்ரிசியேஷன் கோர்சுக்கு வந்திருந்தேன். அந்த அநுபவம் என்னை முற்றிலும் புதிய ஓர் உலகத்துல அப்படியே தூக்கி எறிஞ்சுடுச்சு. அந்த பத்து நாள் அநுபவம் வாழ்க்கையிலே மறக்கவே முடியாதது.

பை சைக்கிள் தீவ்ஸ் (திரைக்கதை) | Buy ...

‘பைசைக்கிள் தீவ்ஸ்’ ‘சிட்டிசன்ஸ் கேன்’ ‘பாட்டில்ஷிப் போடம்கின்’ மாதிரி பல படங்கள பார்க்க முடிஞ்சது. புதிய அநுபவம் அது. சிறுகதை, நாவல் இந்த எதிலயும் கிடைக்காத மகத்தான அநுபவம்…! எந்த நாவலைப் படிச்சும் அப்படி ஒரு மனநிலைக்குப் போனது கிடையாது. அந்த மனநிலை யோட, இதெல்லாம் மக்கள்கிட்டப் போகவேண்டிய விஷயம்னு ஒரு வேகத்தோட போனேன்.

Pather Panchali (1955) - IMDb

திருநெல்வேலிக்குப் போயி ‘பதேர் பாஞ்சாலி’ மாதிரி நல்ல படங்கள எடுத்துகிட்டு பத்துப் பதினைஞ்சு ஊர்கள்ல போட்டு லெக்சர் குடுத்தேன். அதன் தொடர்ச்சியா ஃபிலிம் ஆப்ரிசியேஷன் கோர்ஸ் மாவட்ட அளவுல நடத்தினோம். அந்த வகுப்புகளுக்கு சென்னையிலிருந்து எம்.சிவக்குமார், கல்யாணராமன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி இவங்க வந்தாங்க, மூணுநாள் நடத்தினோம்.

இந்த முயற்சிகளோட அடுத்த கட்டத்துக்குப் போக முடியலை. ரொம்ப காஸ்ட்லியா வேற இருக்கு. என்னோட கனவு இதுல என்னன்னா, ஒவ்வொரு ஜில்லாவுலயும் சில குறிப்பிட்ட ஊர்கள்ல, குறிப்பிட்ட கால இடைவெளில திரும்பத் திரும்ப நல்ல படங்களைத் தொடர்ந்து போட்டுக்கிட்டே இருக்கணும். அப்படிச் செய்தா, ஒரு இணையான ரசிகர்கள் கூட்டம் (Parallel Audience) உருவாகும். நாமேகூட புதிய குறும்படங்களை(Short Films) உருவாக்கியும் திரையிடலாம். ஒரு ‘கலை இரவு’ பிரம்மாண்டமா நடத்த ஒரு லட்சம் வரைகூட வசூல்பண்ண முடியுது நம்மால. ஷார்ட் ஃபிலிம் எண்பதாயிரம் ரூபாய்ல எடுக்கலாம். கூட்டம் சேர்க்கறது, கை தட்டறதோட நம்ம வேலை முடிஞ்சுடலை. பத்து ஷார்ட் ஃபிலிம் தயாரிச்சு எடுத்துட்டு கிராமம் கிராமமா போகணும்… ‘நாக் அவுட்’ குறும்படம் இன்னிக்கு தமிழ் நாட்டுல பல ஊர்கள்ல, பல்லாயிரக்கணக்கானவங்க நடுவில போட்டோமே த.மு.எ.ச. மூலமா…! அத தொடர்ந்து செய்யணும்.

திரைப்படங்கள்லயே கமர்ஷியல் ஃபிலிம், ஆர்ட் ஃபிலிம்னு வேற பிரிக்கிறாங்களே…? ஆர்ட் ஃபிலிம்கிறது ஒரு சிறுபான்மை மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். சாதாரண மக்கள் அதை நெருங்க முடியாதுங்கிற மாதிரி பொதுவான அபிப்ராயம் இருக்கே…?

திருநெல்வேலி – -கோவில்பட்டி கலை இரவுல ஆர்ட் ஃபிலிம் போட்டோம். போலந்து நாட்டுப் படம் உட்பட. 3000 பேர் விடிய விடிய அப்படியே உட்கார்ந்து பார்த்தாங்க. மக்களுக்குப் புரியா துன்னு இன்னமும் புருடா விட்டுகிட்டு திரியறத என்னால ஒத்துக்க முடியல. ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படம் யாருக்குப் புரியாது…? அப்படியே புரியலைன்னா மைக் வைச்சு பக்கத்துல இருந்து விளக்கம் சொல்லேன். நல்ல படங்களைக் கொண்டு போயி மக்கள் கிட்ட சேர்க்கணும்னு நெனைச்சாதானே இதைப் பத்தி நீ யோசிக்கப் போறே…? ஜனங்களுக்கு எது புரியும், எது புரியாதுன்னு முடிவெடுக்கறதுக்கு நாம யாரு? நமக்கு ஜனங்களோட ரசனை எல்லாம் புரிஞ்சிருக்கா? கலைக்காக நாம எவ்வளவு நேரம் ஒதுக்கு றோம்? அதுக்காக என்ன பயிற்சி எடுக்கிறோம். எதுவும் பண்ணாம நாம பாட்டுக்கு இருந்தா வியாபாரிங்க அந்த ஃபவர்புல் மீடியாவ வெச்சு ஜனங்க ரசனையை புல்டோசர்ல அடிச்சுத் தள்ற மாதிரி மோசமான விஷயங்கள்ல திருப்பிடறாங்க. இதை எத்தன நாளைக்குத் தொடர்ந்து அனுமதிக்கப் போறோம்?

ஓரளவு பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள், மத்தவங்க படைப்புகளைப் படிக்கறதே இல்லை. இதை பெருமை யாகவே சொல்லிக்கவும் செய்றாங்க. மத்தவங்களோட படைப்புகளப் படிச்சா, பலரோட எழுத்துச் சாயலும் நம்ம எழுத்துல வந்திடலாம்னு பயமா? என்ன காரணம் இதுக்கு…?

தமிழ்ல எழுதறவங்க, தமிழின் இலக்கியத்தரமான கதைகளைப் படிச்சே ஆகணும். ஏன் சொல்றேன்னா, முன்னமே ஒருத்தர் எழுதியிருந்தார்னா, அதே விஷயத்தை நீ மறுபடியும் எழுதாம தவிர்க்கலாமில்லையா? அதைவிட மேம்பட்டு எழுதலாமே…! என்ன எழுதினாலும் புதுசா என்னத்த எழுதப் போறோம்? திரும்பத் திரும்ப காதல், கல்யாணம், ஆண் பெண் உறவு, பொருளாதாரம் இதுகளுக்குள்ளதான எழுதறோம்…! இதுல, ஏற்கெனவே சொன்னதைவிட அதிகமா நீ என்ன சொல்றேங்கறதுதான் கேள்வி…! நீ படிச்சாத் தானே அந்த விஷயம் தெரியும் உனக்கு…!

செம்மலர்ல வந்த ‘பசி’ங்கற கதையை ‘இலக்கியச் சிந்தனை’ பரிசுக்காக தி.ஜானகிராமன் தேர்ந்தெடுத்தார். அப்ப அவர் சொன்னார்… “சிறந்த சிறுகதை எதுன்னா, வாசகனுக்கு அந்தக் கதையில் உள்ள விஷயங்கள் போக, வேறு சில அவனோட சொந்த வாழ்க்கையை சமூக வாழ்க்கையை நினைவுபடுத்தறதா இருந்தால்கூட அது நல்ல சிறுகதை’’ன்னு சொன்னார்.

‘உல்லாசப்பயணம்’னு வண்ணதாசனோட கதை. அதைப் படிச் சப்போ என்னோட பால்ய காலத்தை நினைவுப்படுத்திச்சு. அது போக, அதுல சமூகப் பின்புலம் அழுத்தமா சொல்லப்படலைன்னு எனக்குப் பட்டுச்சு. அந்த இன்ஸ்பிரேஷன்லதான் ‘வார்த்தை’ கதையை எழுதினேன். ‘உல்லாசப் பயணம்’ படிக்காமல் இருந்திருந்தா ‘வார்த்தை’ எழுத முடிஞ்சிருக்காது. அதனால, படிக்க வேண்டாம்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. முடிஞ்சா எல்லாப் படைப்புகளையுமே படிக்கத்தான் வேணும். ஆனா, முடியறதில்லை. முழு நேரமும் வேற வேலை இல்லாம எழுதிகிட்டே இருக்காங்கள்ல, அவங்கள்லாம் படிக்கலாம்.

தொடர்ச்சியா எழுதும்போது சோர்வு ஏற்பட்டு, அது படைப்புகளிலேயும் வெளிப்பட வாய்ப்பு இருக்குல்லியா…?

ஈடுபாட்டோட செஞ்சா, தொடர்ந்து செய்யலாம். இலக்கியம், கலை எல்லாமே ‘க்ராப்ட்’  தானே? வாழ்க்கைல இருக்கிறதத்தானே சொல்லப் போறீங்க…? அந்த க்ராப்டை, செய்நேர்த்தியை தொடர்ந்து எப்படி மெருகேற்றிக் கொண்டு போகப் போறீங்கங்கிறதுதான் கேள்வி. நூறு வருஷமா ஒரே மாதிரி எழுதிகிட்டிருந்தா அது தேவையில்லை, பயனுமில்லை.

புதுசு புதுசா சோதனை பண்ணி எழுதணும். புதுமைப்பித்தன் அப்படி செஞ்சிருக்கார். அவர் நிதானமா எழுதினதா அஞ்சாறு கதைகளைத்தான் சொல்ல முடியும். மத்ததெல்லாம் அவசர அவசரமா செஞ்சதுதான். அதுக்குள்ளயே என்னென்னமோ ஆராய்ச்சி எல்லாம் செஞ்சிருக்கார். கு.அழகிரிசாமி பயங்கர நிதானம். செதுக்கின மாதிரி செய்திருக்கார். சில கதைகள் கொஞ்சம் நீளம்கிற உணர்வு இப்ப எனக்கு இருக்கு.

புதுமைப்பித்தனுக்கு நேரம் இல்லை. வாழ்க்கையில கஷ்டம், அவசர அவசரமா எழுதிக் குடுத்தாகணும். ரூபா வந்தாகணும், சாப்பிட் டாகணும்னு இப்படி நெறைய நெருக்கடி அவருக்கு. அவ ரோட மனைவிகூட ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க, “அவரு எந்தக் கதையையுமே திருத்தி மனநிறைவோட அனுப்பி வெச்சதில்லை… அந்த அளவுக்கு எங்களுக்கு பண நெருக்கடி.’’ அந்த அளவுக்கு நமக்கு நெருக்கடி எதுவும் இல்லாதப்ப, நிதானமாகவே உட்கார்ந்து எழுதலாம். ஆனாலும்கூட நாம அவசரமா எழுதறோம். அதனாலதான் தமிழில் ‘மாஸ்டர் பீஸா’ இன்னும் எதுவும் வராம இருக்கு. ஆயிரம் கதை எழுதன பெறகும் இன்னமும் பிரசுர அவசரத்தோட எழுதற மனநிலை நெறையப் பேருக்கு இருக்கு. நல்லா எழுதறத விட நெறைய பிரசுரமாகணும்கிற துடிப்பினால நெறைய பேராலே எதையும் சாதிக்க முடியலை.

‘ஓவியனுடைய மொழி வண்ணங்கள்…’ அப்படின்னு ஓர் ஓவியர் சொன்னார். அது மாதிரி எழுத்தாளனுடைய மொழி என்னவா இருக்கணும்…? சில பேர் பேச்சு நடை யில எழுதறது தான் சரி என்கிறாங்க…! சிலர் இலக்கிய நடையில் எழுதினாதான் அது எழுத்துன்னு சொல் றாங்க… அது பற்றி…

ஒரு கதையைப் படிச்சு முடிச்சவுடனே அந்தக் கதையைப் பத்தித்தான் வாசகன் பேசணும். கதையில் பேசப்பட்ட நிகழ்வையும், உணர்வையும் பற்றித்தான் அவன் பேசணும். மொழி நல்லாருக்கு நடை நல்லாருக்குன்னு பேசினாலே போச்சே, கதையோட விஷயம் அடிபட்டாச்சுல்ல! நமக்கு மொழியா முக்கியம்? வாசிக்கும்போது வாசகனுக்கு எழுத்து அழிஞ்சுப் போகணும். நெருடலா ஒரு வார்த்தைக்கூட இருக்கக் கூடாது. ‘என்றான்’ அப்படின்னு உரை யாடல் முடியும்போது எழுதறதே எனக்குப் பிடிக்க மாட்டேங்குது. அது, கதையில்ல படிச்சிகிட்டு இருக்கோம்கிற உணர்வை ஏற்படுத்திடுது.

நவீன எழுத்தாளர்கள் மத்தியில், ஒரு சாதாரண வாசகனுக்குப் புரியற மாதிரி எழுதினா அது இலக்கியமே இல்லைங்கிற குரல் அதிகமாகி இருக்கே…?

ஆமாம், இந்த மாடர்னிஸ்ட், போஸ்ட் மாடர்னிஸ்ட் குரல்களால ஏற்கெனவே நல்லா எழுதிகிட்டு இருந்தவங்க கூடப் பாதிக்கப்பட்டிருக்காங்க. நானே ஒரு வருஷம் அப்படி பாதிக் கப்பட்டு இருந்தேன். பேராசிரியர்களோட படையெடுப்பு தமிழ் இலக்கியத்துக்கு வந்ததில்லையா, அதனுடைய பல விளைவுகள்ல இதுவும் ஒண்ணு. படைப்பாளிக்கு இது தேவையில்லாத விஷயம். அமைப்பியல் ரீதியா மொழியியலிலும் வரலாற்றிலும் நீங்க ஏதாச்சும் செய்யுங்கப்பா… எங்களை விடுங்க. சில்வியா, தமிழவனெல்லாம் மாடர்னிச, போஸ்ட் மாடர்னிச நாவல், கதைகள்னு எதையோ எழுதி பாடா படுத்தறாங்க. இதையெல்லாம் கொண்டு வந்து எங்க முதுகுல சுமத்தாதீங்க. நாங்க பாட்ல ஒரு ஓரத்துல ஏதோ எழுதிகிட்டி ருக்கோம்… எழுத்தாளருங்க பூராப் பேரையும் இவங்க மிரட்டுனதுல ஏற்கெனவே தரமா எழுதிகிட்டிருந்தவங்ககூட இப்படியும் நம்மால எழுத முடியும்னு காண்பிக்கறதுக்காக ‘சித்திரக் குள்ளன்’ ‘ஆவி’ ‘வேதாளம்’னு ஏதேதோ எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

அமைப்பியல் கதைகள்னு தமிழ்ல புதுசா ஒரு அணுகுமுறையா இது வந்தா வரட்டுமேன்னு பாத்தா, இவங்க பண்ற கூத்து… தமிழின் முதல் சிறுகதைன்னு பேசப்படற ‘குளத்தங்கரை அரச மரம்’ கதையில வ.வே.சு. ஐயர் மரத்தைப் பேச வைக்கலியா..? எப்பவோ அவர் செஞ்சதை இப்பதானய்யா, நீங்க பேசறீங்க… ‘ஏணியற்ற நிலையம்’னு மாதவய்யா, எல்லா சாதியையும் போட்டு கிண்டலடிச்சு எழுதினார். அவங்ககூட இப்பிடி மண்டையைப் போட்டு உடைச்சுக்கல. அவர்கள் எழுத்தாளர்கள். அலட்டிக்காம எழுதினாங்க. இவங்க எழுத்தாளர்களா இல்லை. அதனால சர்ச்சைகளைக் களப்பிகிட்டு பேசிட்டிருக்காங்க. நாம பாட்டுக்கு எழுதிகிட்டிருப்போம்..!

நீங்க சிறுகதைகள் தவிர, நாவல், கவிதைகள் எழுதி இருக்கீங்களா? அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டிருக்கீங்களா?

(சற்று நேர மௌனத்திற்குப் பின்) சில பேர் திடீர்னு கேப்பாங்க ‘இப்போ நீங்க என்ன எழுதிகிட்டிருக்கீங்க’ன்னு. கண்டிப்பா நான் எதையாவது எழுதிகிட்டுதான் இருக்கணுமா? எனக்கா எழுத ணும்னு தோணினா யாரும் கேக்காமலேயே எழுதுவேன். தொடர்ச் சியா ‘கவிதை எழுத ஆரம்பிச்சு, சிறுகதைக்கு வந்து, அப்புறம் நாவலுக்குப் போறாரு இவரு’ன்னு ஒவ்வொருத்தரையும் சுட்டிக்காட்டியே தீரணும்னு ஒண்ணும் கட்டாயமில்லை. கவிதைகள் மட்டுமே ஒருத்தன் கடைசிவரை எழுதக்கூடாதா என்ன? நாவலுக் கான விஷயம் கிடைக்கும்போது எழுத வேண்டியதுதான். அதோட, எனக்கு ஐநூறு ஆயிரம் பக்கங்களுக்கு ரொம்பப் பெரிசா எழுதறதெல்லாம் பிடிக்கலை. வாசகன் என்ன தப்பு பண்ணினான்? தமிழ் படிச்சிருக்கான், இலக்கிய ஆர்வத்தோட தேடி வர்றான் னுட்டு அவன இப்பிடியா ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் கொல்றது…?

அதிகபட்சம் இருநூறு பக்கங்களுக்கு மேல போகக் கூடாது. அதுக்குள்ளே சொல்லுய்யா… சொல்ல முடியலைன்னா எதுக்குய்யா எழுதறே…? போய் பயிற்சி எடு. உனக்கு ஷார்ப்பா சொல்ல முடிய லைன்னா வாசகனை ஏன் கொல்லணும்? அந்தத் திறமை இல்லா தவன் தன்னைத்தானே சுயவிமர்சனம் பண்ணி வளர்த்துக்கணும்.. அவ்வளவுதான்.

கட்டாயமா எழுதணும்னோ, எழுதக் கூடாதுன்னோ எதுவு மில்லீங்க. எழுத விஷயம் கெடைச்சா எழுதலாம். இயல்பா இருக்கணுங்க அவ்வளவுதான். ‘ஆயிரம் பக்கத்துல ஒரு நாவல் எழுதறன் பாரு’ன்னு மெனக்கெட்டு எதையும் செய்யக்கூடாது…!

இன்றுள்ள குடும்பச் சூழல் சிக்கலானதா இருக்கு. குடும்ப உறவுகள் ஒண்ணை ஒண்ணு புரிஞ்சுக்க முடியலை. இதெல்லாம் இன்னிக்குள்ள படைப்புகளில் பதிவாகியிருக்கா…, உதாரணமா, கு.ப.ரா., கணவன் மனைவி உறவு, பெண்களோட நுணுக்கமான உணர்வுகள் இவை பற்றி நுட்பமான படைப்புகளைத் தந்திருக்கிறார். இன்றைய சூழலில் தம்பதிகள்கிட்ட பரஸ்பர பிரியம், இயல்பான உணர்வுகள் பற்றியெல்லாம் தமிழில் போதுமான அளவு படைப்புகளாக வருதா?

நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் சிக்கல்கள் இன்னிக்கு இருக்கு. என்ன காரணம்னு நெனைக்கிறீங்க…? மெனக்கெட்டு அன்பு செலுத்துறது, அன்பா இருக்கேன்னு காட்டிக்கறது… பிரச்னையே அங்கதான் ஆரம்பிக்கும். அது பாட்டுக்கு போய்ட்டிருந்தா ஒண்ணுமில்லை. நம்ம அன்ப நிரூபிக்கணும்னு இவரு ஏதாச்சும் மெனக்கெடுவார், பதிலுக்கு அவங்க ஏதாச்சும் செய்வாங்க. மெனக் கெட்டாலே பொய் வந்து சேரும். பொய்மை வந்து சேர்ந்தா பிரச்னைதானே?   அன்பா இருக்கோம்னு காட்டிக்கறதுக்கு காசுல்ல வேண்டி யிருக்கு! நண்பன்கிட்ட அன்பா இருக்கேன்னா, அவனுக்கு நீ ஏதாச்சும் செய்யணும்.

கல்யாண வீடுகள்ல, பெரிய அண்டா வாங்கிகிட்டுப் போனா பெரிய அன்பு உள்ளவன் மாதிரியும், சின்ன டம்ளர் வாங்கிட்டுப் போனா குறஞ்ச அன்பு உள்ளவன் என்கிற மாதிரியும் இருக்கு. இந்தப் போலி மதிப்புகளுக்கு எல்லோரும் பலியாகிகிட்டே இருக் கோம். இது நம்ம வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம்…

கு.ப.ரா. காலம்… 30களில், அன்னிக்கு இருந்த இந்தியா வேறு; இன்னிக்கு இந்தியா வேறு! அந்தக் காலகட்டத்தில், அவங்க வாழ்ந்த வாழ்க்கையே வேறு. பொதுவா, அன்றைய ஆட்கள் மனைவி, குழந்தைகளோட செலவழிச்ச நேரம் ரொம்பக் கம்பி. வீட்டுக்கு வர்றதே ராத்திரில தூங்கறதுக்கு மட்டும்தான்…! குளிச்சு, சாப்பிட்டுட்டு மறுபடி போயிட்டே இருப்பாங்க… இலட்சியத்த நோக்கி…! அவங்க வீடு இப்படித்தான் இருந்தது. அப்போதைய மனைவியர் எதையும் ‘டிமாண்ட்’ பண்ணிக் கேட்க மாட்டாங்க. அவக “எங்கியாவது போகலாம் பொறப்படு’’ன்னு கூப்பிட்டா மட்டும் இவக போவாக.

இன்றைய தலைமுறை ஆட்கள் அப்படி இருக்க முடியாது. நாம வீட்டுல மனைவி குழந்தைகளோட நேரம் செலவழிக்கிறோம். செலவழிச்சே ஆகணும். இப்ப பெண்கள் படிக்கிறாங்க. வேலைக்குப் போறாங்க, அவங்களுக்குன்னு தனி விருப்பங்கள், அபிப்ராயங்கள் இதெல்லாம் உண்டாகி இருக்கு. நாம இதுக்கெல்லாம் ஈடு கொடுத் தாகணும். இந்த மாற்றங்கள், ரொம்பவும் ‘பாஸிட்டிவ்’ ஆனதாச்சே…! இவரு பெரிய இலக்கியவாதி. முழுநேரமும் இவரு பாட் டுக்கு எழுதிகிட்டும் பேசிக்கிட்டும் திரிவாரு… வீட்ல அவங்க பாட் டுக்கு கெடப்பாங்க என்கிறதெல்லாம் இப்ப முடியாது. இந்த மாதிரி சூழ்நிலைகளோ, சிந்தனைகளோ போன தலைமுறை எழுத்தாளர் களுக்குக் கிடையாது. அதனால, ஒரு வீரியத்தோடயும், உக்கிரத் தோடவும் எழுத முடிஞ்சிருக்கு அவங்களால! இன்றைய எழுத் தாளர்களுக்கு நான் உட்பட பெரும்பாலும் பொருளாதாரத் தேவைகளுக்காக வேலைக்குப் போயாகணும். ஓய்வு நேரத்தில் கதை எழுதணும்கிற கட்டாயமிருக்கு. ஏற்கெனவே சொன்ன மாதிரி குடும்ப உறுப்பினர்களோடயும் நேரம் செலவழிச்சுட்டு, எழுதற துக்கும் நேரம் ஒதுக்கணும். பல தளங்களில் இயங்க வேண்டியிருப் பதால பல மடைகளில் சிந்தனை ‘டைவர்ஷன்’ ஆகவும் வாய்ப் பிருக்கு. இது பூராவும் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்னைகள்…!
நாம, இயல்பா இருப்போம், இயல்பா எழுதுவோம் மெனக் கெடாம நம்ம பாட்டுக்கு இயங்கிகிட்டே இருப்போம்… அவ்வளவு தான் நான் சொல்ல நினைக்கிறது.

உங்க எதிர்கால லட்சியம் என்ன?

ஒரு லட்சம் சிறுகதை எழுதணும்; ஒரு நூறு சினிமா எடுக் கணும் (எல்லோரும் சிரிக்க). ஒரு கனவு எனக்கு அடிக்கடி வருகிறது. நான் மேடையிலே நின்னு பேசிக்கிட்டே இருக்கேன். எனக்கு எதிரிலே லட்சக்கணக்கான மக்கள் எனக்கு முதுகு காட்டி எழுந்து போய்க்கிட்டிருக்காங்க. அவங்களை என்னை நோக்கித் திரும்ப வைக்க முடியும். ‘அந்த ஒரு வார்த்தை’யைச் சொன்னா போதும். லட்சம் பேரும் என் பக்கம் வந்திடுவாங்க. ஆனால் ‘அந்த வார்த்தை’ என் நெஞ்சுக்கும் தொண்டைக்குமா உள்ளேயே இழுத்துக்கிட்டிருக்கு. ஆனால் வாய் வரமாட்டேன்குது…. நான் சாகறதுக்குள்ள அந்த வார்த்தையைக் கண்டுபிடிச்சா போதும்.

சந்திப்பு : சூரியசந்திரன்

‘சாரதா’
ஜூலை – ஆகஸ்டு 1994
(இளைஞர் சிறப்பிதழ்)

4 thoughts on “ஒரு லட்சம் சிறுகதைகள் எழுதணும்! ஒரு நூறு சினிமா எடுக்கணும்!! – ச.தமிழ்ச்செல்வன்”
 1. உங்கள் விருப்பங்கள் முழுமையாக நிறைவேற நல்வாழ்த்துக்கள்.
  சசீஇரா

 2. இப்போது இதை தமிழ்ச்செல்வன் தோழர் வாசித்தால் அவருக்கும் இது சுவாரஸ்யமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  அந்த கடைசி பத்தியில் எனக்கு வேறொன்றும் தோணியது. அவர் அந்த ஒரு வார்த்தையை உச்சரித்து விட நானும் பல்லாயிரம் தோழர் பெருமக்களும் அவர் முன்னமர்ந்திருந்தோம். அவர் தோழர்களே தோழர்களே என அற்புதமாகப் பேசிக்கொண்டிருந்தார். அது ஏதோ பதவியேற்பு விழா போல இருந்தது.

 3. 26 ஆண்டுகளுக்கு முன் அளித்த நேர்காணல்.இப்ப வாசிக்கும்போது பல இடங்களில் சிரிப்பு சிரிப்பா வந்தது.மொத்தத்திலே ரொம்ப அமெச்சூரான ஆளா இருந்திருக்கேன்.அந்த ‘தோற்ற மனநிலை” தொடரத்தான் செய்கிறது.என்னை நானே வாசித்துக்கொள்ள இந்த மறுவாசிப்பு உதவியது.

 4. மிகவும் சுவாரசியமான நேர் காணல்.அதுவும் ஐயா அவர்களின் சமீபத்திய மனநிலையைப் பல்வேறு கூட்டங்களிலும், பயிலரங்கங்களிலும் பன்முகத் தன்மை கொண்டவையாகக் கேட்டுவிட்டு இதனைப் படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.நேர்காணலின் கேள்விகள் வெகு சிறப்பு.

  எழுத்தாளர் சுஜாதா தன் இளம் பருவத்தில் கிடார் வாசித்து உலகை வெல்ல ஆசைப் பட்டதாகவும் பின்னர் வாழ்வின் நிதர்சனம் புரிந்தபிறகு அதனைக் கைவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.அதுபோலவே ஐயாவின் இளம் பிராயமும் கனவு மயமானதாக இருந்திருக்கிறது. படைப்பாளிகளின் பொதுக் குணமோ?

  சத்யா ராமராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *