2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" புத்தகம் | Sa.TamilSelvan's Thamizh Sirukathaiyin Thadangal Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வனின் “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

எழுத்தாளர் ஜெயகாந்தன் தமது வானொலி உரை ஒன்றில் ” நான் ஏன் எழுதுகிறேன்?” என்னும் தலைப்பில் தாம் எழுதுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்திக் கூறியிருப்பார். அது ஒரு நல்ல இலக்கியத்திற்கான பண்புகளைக் கூறும் பட்டியலாகவும் இருக்கும். பொதுவாகவே கலை என்பது அழகியல் நோக்கும் கருத்தியல் நோக்கும் கொண்டது. அது இலக்கியத்திற்கும் பொருந்தும். நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, என்ன சொல்கிறோம் என்பதும் எப்படிச் சொல்கிறோம் என்பதும் இலக்கியத்தின் அடிப்படைக் குணங்களாக இருக்கின்றன. ஒரு நல்ல இலக்கியம் என்பது எப்போதும் இந்த இரு பண்புகளின் கலவையாகவே இருக்கும். நமது மரபார்ந்த இலக்கியங்களில் சிறந்தவைகளாக நாம் கருதுவதும், நிலைபெற்றிருப்பதும் இப்பண்புடையவைதாம்.

நவீன இலக்கிய வடிவங்களில் ஒன்றான சிறுகதை, அது பிறந்த முதல் ஐம்பது ஆண்டுகளில் ‘ என்ன பேசியது?” என்ற கருதுகோளை முன் வைத்தே தமிழின் சிறந்த கட்டுரையாளரும், குறிப்பிடத்தகுந்த சிறுகதையாளருமான ச.தமிழ்ச்செல்வன் ‘ தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் ‘ என்னும் இந்த ஆய்வு நூலை எழுதியிருக்கிறார் எனலாம்.

“தமிழ்ச் சிறுகதைக்கெனக் காத்திரமான ஓர் அரசியல் உண்டு” என்பதை தம் வாசிப்பில் உணர்ந்த அவர், கால வரிசையில் சில சிறுகதையாளர்களின் படைப்புகளை முன்வைத்து அவர்கள் முன்னெடுத்த அரசியலை அறிமுகம் செய்யும் சிறு முயற்சியே இந்நூல் எனக் குறிப்பிடுகிறார்.

சிறுகதைகள் கூறும் அரசியல் என்பது எழுத்தாளர்கள் தம் படைப்புகளின் வழி முன்வைத்த சமூகப் பார்வை, வாழ்ந்த காலத்தின் தாக்கம், பிரிவினைகள் குறித்த ஓர்மை, பெண்கள், சாதி குறித்த நிலைப்பாடு போன்றவற்றையே கருதுவதாக ஆசிரியர் கூறுகிறார்.

தமிழ்ச் சிறுகதைகளின் போக்கை முழுவதும் ஆய்ந்தறிய எழுத்தாளனின் எழுத்துக்களை மட்டுமன்றி, எழுத்தாளர் வாழ்ந்த வாழ்க்கை, சாதி, படித்த படிப்பு, நட்பு வட்டம், பொருளாதார நிலை, வாழ்ந்த இடம், பொது வாழ்வுடன் அவருக்கிருந்த தொடர்பு ஆகிய காரணிகள் துணையாகக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

நூலின் முன்னுரை, தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் நிலவி வந்த பண்புகளை ( போக்குகள்) வகைப்படுத்தி, தமிழ்ச் சிறுகதையின் உள்ளடக்க வளர்ச்சியை உணர்ந்து வாசகன் நூலுக்குள் நுழைய உதவுகிறது.

தமிழின் முதற்சிறுகதையாளராகக் கருதப்படுகின்ற வ.வே.சு ஐயர் முதல் கந்தர்வன் வரையிலான அறுபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள், வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாகவும் விரிவாகவும் எழுத்தாளர் ரசனை, விருப்பு சார்ந்து விமர்சன நோக்கில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

வ.வே.சு ஐயர், அ.மாதவய்யா, பாரதி என்ற வரிசையில் ஐம்பத்து மூன்று ஆண் எழுத்தாளர்களின் படைப்புகளும்,ஆறு பெண் எழுத்தாளர்களின் படைப்புகளும் நூலில் ஆராயப்பட்டுள்ளன. திராவிட இயக்க எழுத்தாளர்களாக அண்ணாத்துரை, மு.கருணாநிதி முதலானோரும், கவிஞராகவே அறியப்பட்ட இன்குலாப்பும், சமூகப் போராளியான மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரும் ஆய்வின் மையப்பொருள் கருதி நூலில் இடம்பெற்றுள்ளதாகக் கருத வேண்டியுள்ளது.அவ்வகையில் அண்ணாவும், கலைஞரும் நூலில் பேசப்படுகின்றனர்.

பெண் எழுத்தாளர்களில் புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா விருத்தாசலமும், கு.ப. ராஜகோபாலின் சகோதரியான கு.ப. சேது அம்மாளும் இருக்கின்றனர்.

சிறுகதைகளைப் பற்றிய இந்த ஆய்வு நூல், ஆய்வின் காரணமாகச் சிறுகதைகளைப் படித்து எழுதப்பட்ட தல்ல. நூலாசிரியர் தம் இளமை முதற்கொண்டே அச்சிறுகதைகளின் மீது வாசிப்பும் நேசமும் கொண்டவராகத் திகழ்ந்திருப்பதை நூலைப் படிக்கும் எவரும் உணர முடியும். சில சிறுகதைகளைக் கூறும்போதே அவற்றைப் படித்த சூழலையும்,அப்பொழுது தமது இயல்பில் அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் கூறியிருப்பது நெகிழ்ச்சியளிக்கிறது. கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையைப் படித்துவிட்டுக் கதை ஏற்படுத்திய அதிர்வுகளைத் தாங்க முடியாமல் மூன்று நாள் காய்ச்சலில் படுத்துவிட்டாதக் கூறியிருக்கிறார் ஆசிரியர்.

ஒரு முழுமையான மார்க்சியச் செயல்பாட்டாளரான நூலாசிரியர் அந்தப் பார்வை கொண்டே அத்தனை சிறுகதைகளையும் பார்க்கிறார். கதையில் வெளிப்படும் பண்புகளுக்கு எழுத்தாளரின் வாழ்க்கை நிலையை மட்டுமின்றி அரசியல் சூழலையும் காரணம் காட்டி விளக்கிச் செல்கிறார்.

ஆனாலும், சிறுகதைகளை மதிப்பிட, நல்லபடைப்பு குறித்த உண்மையான பிற அளவீடுகளையும் இவர் கைவிட வில்லை. இது படைப்பு குறித்த உண்மையான இயல்பை, மேன்மையை வாசகனுக்கு உணர்த்திவிடும் நல்ல பண்பைக் கொண்டிருப்பது இந்நூலின் குறிப்பிடும்படியான சிறப்பாகும்.

சான்றாக, புதுமைப்பித்தனை சிறுகதைகளில் உச்சம் தொட்ட ஒருவராக ஏற்க முடியாது என்ற முற்போக்கு இலக்கிய முன்னோடி தி.க.சி – யின் கூற்றை மறுத்து, புதுமைப்பித்தனை சமகால அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகளைத் தயக்கமின்றிக் கேள்விக்குட்படுத்திய மகத்தான முன்னோடி , அவரது உயரம் இன்னும்கூட எட்டப்படவில்லை என்று கூறுகிறார் ஆசிரியர் ; அதேபோல்
கைலாசபதி, தி.க.சி போன்றோரால் ‘சமூகப் பார்வையும் சமகால வாழ்வு குறித்த அக்கறையுமற்ற எழுத்தாளர் ‘ என விமர்சிக்கப்பட்ட மௌனியை , அவரது படைப்பு மொழிக்காகத் “தத்துவச்சாயல் கொண்ட கவித்துவமான தெறிப்புகளை உரைநடையில் கொண்டு வந்த முதல் தமிழ்ப் படைப்பாளி அவர்தான்” என்கிறார் ; லா.ச.ரா -வைத் ‘தமிழ்ச்சிறுகதையின் எல்லைகளை விரித்துச் சென்ற மனவெளிப் பயணி’ என்றும் மதிப்பீடு செய்கிறார்.

சிறுகதைகளைப் பற்றிய நூல் என்றாலும் அவற்றையே முதன்மைப் பொருளாகக் கொண்ட நூல் என்றாலும், தேவை கருதி அந்த ஆசிரியர்களின் நாவல்களையும் கட்டுரைகளைப் பற்றியும் பேசுகிறார். கவிதைகள் எழுதியவரென்றால் அவையும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன. எழுத்தாளரின் ஆளுமையை மதிப்பிட முழுமையாக அவரது படைப்புகளை அணுக வேண்டும் என்பது நூலாசிரியரின் திட்டமாக இருக்கிறது. அப்படி முழுமையாகப் பார்க்காததன் விளைவாகவே சிறுகதைகளை மட்டுமே வைத்துக் கு.ப.ராவைப் ‘ பெண்மனம்’ பற்றி மட்டும் எழுதியவர் என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டோம் என்கிறார் ;
கிருத்திகா- வின் ‘ வாஸவேச்வரம்’ நாவல் பற்றியும், இன்குலாப்பின் கவிதைகள் பற்றியும், ராஜாஜியின் பாடலையும் பற்றியும் இங்கு அவர் கூறியிருப்பது இதை ஒட்டித்தான் எனக் கருத வேண்டியுள்ளது.

தொ.மு.சி.ரகுநாதனைப் புதுமைப்பித்தனும் கு.ப. ராவும் இணைந்த கலவையாகக் கருதும் எழுத்தாளர், அவரது ‘ இளங்கோவடிகள் யார்?’ எனும் முக்கியமான ஆய்வு நூல் தமிழறிஞர்களால் கண்டு கொள்ளப்படாதது பெருங்கொடுமை என்று வருந்துகிறார்.

தமிழ்ச் சிறுகதையின் அரசியலைப் பற்றிப் பேசுவதாகக் கூறிக் கொண்டாலும், தமிழ்ச் சிறுகதைகள் குறித்த நுணுக்கமான பார்வை நூல் முழுதும் விரவிக் கிடக்கிறது. சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகளில் மாடுகளும் அவற்றோடு பழகும் மனிதர்களும் இடம்பெற்ற அளவுக்கு, தமிழில் வேறு யாருடைய எழுத்திலும் இடம்பெறவில்லை என்று கூறுவதும், பெண் எழுத்தாளர்களில் அங்கதத்தைக் கையாண்ட ஒரே தமிழ்ப்பெண் எழுத்தாளர் என்று கிருத்திகாவை கூறுவதும், சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் சித்தரிக்கப்பட்ட அளவுக்கு குழந்தைகளின் உலகத்தை வேறு சிறுகதையாளர்கள் எழுதியிருப்பார்களா? என்று கூறுவதும், உழைப்பின் உயர்வைக் பலரும் பாடியிருந்தாலும் உறவின் கண்ணியாக உழைப்பைச் சொன்னவர் லிங்கன்தான் எனச் சொல்வதும், முதுமையின் தனிமை குறித்து நுட்பமான சிறுகதைகளை வண்ணதாசனைத் தவிர்த்து வேறு யாரும் எழுதவில்லை என அறுதியிட்டுக் கூறுவதும், நல்ல தமிழ்ப் பெயர்களோடு உலவும் கதாபாத்திரங்களைத் தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுதியாகப் படைத்தவர் சா. கந்தசாமிதான் என அடித்துச் சொல்லுவதும் அவரது நுணுங்கிய பார்வைக்கான சில சான்றுகளாகக் கூறலாம்.

சிறுகதைகளை வாசிக்கும்போது எழுத்தாளர்களின் படைப்புகளில் வெளிப்படும் சுய சாதி அடையாளம் குறித்தும் சிந்தித்திருக்கிறார். தாம் பிறந்து வளர்ந்த குடும்பச் சூழலை மையமாக வைத்து எழுதும்போது சாதியும் அதன் பண்பாடும் கூடவே வந்து விடுவது இயல்புதான் என்றாலும், மக்கள்தொகையில் பெரிய சாதி எழுத்தாளர்களிடமே இப்பண்பு அதிகமாக இருப்பதையும் கூறுகிறார். ஆனால், அப்படியும் எழுதாதவர்களாக ரகுநாதனையும், கு.அழகிரிசாமியையும் கூறியிருக்கிறார்.

மார்க்சியத்தோடு முரண்படுகிற, விமர்சிக்கின்ற எழுத்தாளர்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மறுத்து, மிகக் கண்ணியமாகப் பதில் மொழி கூறுகின்றார் நூலாசிரியர்.

மார்க்சிய இயக்கத்தோடு தொடர்பற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளில் அந்தப் பண்புகளைக் காணும்போது அந்த எழுத்தாளர்களை தம் நெஞ்சோடு அணைத்துக்கொள்கிறார். இப்படித்தான், “பசியையும் வறுமையையும் இல்லாமையையும் போதாமையையும் அதே உக்கிரத்துடன் தன் கதைகளில் சொன்ன, நமக்கு மிக மிக நெருக்கமான படைப்பாளி ” என வண்ணநிலவனையும், ” எந்த அமைப்போடும் தன்னை இணைத்துக் கொள்ளாவிட்டாலும் ஒரு மார்க்சிய வாதியாக, இடதுசாரி அரசியலின் சக பயணியாக அவரை அவரது சிறுகதைகள் அடையாளம் காட்டுகின்றன” எனப் பூமணியையும் மகிழ்ந்து பாராட்டுகிறார்.

மார்க்சிய எழுத்தாளர்களைப் பற்றிப் பேசும்போதும் பக்கச் சார்பு எதுவுமின்றி, மற்ற எழுத்தாளர்களைப் பற்றிப் பேசுவதைப் போலவே நிறை குறையெனக் கருதுவதைக் கூறத் தயங்கவில்லை. சமூகப் பிரச்சினையை மையப்படுத்தி எழுதப்படும் சிறுகதைகளில் எழுத்தாளர் சமூக நீதியின் பக்கமாக இருப்பதை வெளிப்படையாகக் காட்டி விடுவதும், கதையின் முடிவில் தீர்வு சொல்ல ஆர்வம் காட்டுவதும் மார்க்சிய எழுத்தின் தன்மையாக அமைந்துவிடுவதைப் பற்றிய ஒரு விவாதம் நூல் முழுதும் தொடர்கிறது. இதனை, படைப்பாளி அமைப்பில் பணியாற்றுவதால் அவரது படைப்பின் கலைத்தன்மை பாதிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை முன்வைத்து பா.செயப்பிரகாசத்தின் படைப்புகளையும், இன்குலாப்பின் சிறுகதைகளையும் நூல் விரிவாகப் பேசுகிறது.தமிழில் புதுமை இலக்கியம், புரட்சிகர இலக்கியம் கலை நயத்துடன் எப்படிப் படைக்கப்பட வேண்டும் என்பதற்குக் கந்தர்வனின் கதைகளையே நூல் சான்றாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழின் முக்கியமான சிறுகதையாளர்களிடமும் தாம் வியக்கும் விசயங்களைக் கூறும் நூலாசிரியர், முரண்படும் விசயங்களையும் கூறத் தயங்கவில்லை. நூலாசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் சிறுகதையாசிரியர்கள் சுருக்கமாகவும், விரிவாகவும், மிக விரிவாகவும் பேசப்பட்டுள்ளனர். பலருடைய சிறுகதைகளில் நூலாசிரியருக்குப் பிடித்தமான ஒரு சிறுகதை முழுமையாகவே தரப்பட்டுள்ளது. இது சிறுகதையாசிரியரின் சிறந்த கதைகளில் ஒன்றை அப்போதே படித்துவிட வாசகனுக்கு உதவக்கூடும் என்றாலும், ஒரு கட்டுரை நூலின் மனநிலைக்கு இது சற்று அலுப்பைத் தருவதாகவே அமைந்திருக்கிறது.

நூலாசிரியர் தாம் கூறப் புகுந்த சிறுகதையாளர்களைப் பற்றிய முந்தைய ஆய்வு நூல்களின் கருத்துக்களைப் பொருத்தமான இடங்களில் கூறியும் உடன்பட்டும் மறுத்தும் தம் ஆய்வை விளங்க வைக்கிறார்.

கல்வி, குழந்தைகள் குறித்த சிறுகதைகளைப் பற்றிய நூலாசிரியரின் கவனமும், சமூகப் பிரச்சினைகள் குறித்த ஆழமான புரிதலும், படைப்பாளி என்ற நிலையைத் தாண்டி களச் செயல்பாட்டாளராக நூலாசிரியரை உணரவைக்கும் பல தருணங்களை வாசகன் நூலில் காணமுடிகிறது.

நூலை வாசிக்கையில் விடுபட்ட எழுத்தாளர்களும் நம் நினைவுக்கு வந்தபடியே இருக்கிறார்கள். வெகுசன எழுத்தாளரான எஸ்.வி.வியைப் படிக்கும்போது,பெண் எழுத்தாளரான லட்சுமி நம் நினைவுக்கு வருகிறார்.

ஆ.மாதவனைப் பேசும் எழுத்தாளருக்கு நீல.பத்மநாபன் நினைவுக்கு வருகிறார்.ஆனால், அவரது சிறுகதைகள் நூலில் பேசப்படவில்லை. கி.ரா வைப் பற்றிப் பேசும்போது தோப்பில் நினைவுக்கு வருகிறார். கந்தவர்வனைப் படிக்கும்போது மேலாண்மை நினைவுக்கு வருகிறார்.
நூலாசிரியரும் விடுபட்ட எழுத்தாளர்கள் சிலரை முன்னுரையில் குறிப்பிடுகிறார். தொடர்ந்த எழுத்துப் பணியில் அவர்களையும் இணைத்து விடுவார் என நம்புகிறோம்.

சில வியப்பூட்டும் செய்திகளும் நூல் முழுவதும் காணக் கிடைக்கின்றன.கு.ப.ராவின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மதுரையில் அனாதையாக அலைந்து திரிந்தது, அநுத்தமாவின் மாமனார் அவருக்கு முதல் வாசகராகவும் புனைபெயர் சூட்டி எழுதச் சொன்னவராகவும் இருந்தது, வை.மு. கோதை நாயகி அம்மாள் ஒருநாள் கூடப் பள்ளிக்குப் போகாமல் 115 நாவல்களை எழுதியது, கு.ப.ரா மதுரை மாவட்டம்,மேலூர், தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றியது, எப்போதும் வெற்றிலை போடும் பழக்கமுள்ள பி.எஸ.ராமையா தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தது, ந.பிச்சமூர்த்தி ‘ ஸ்ரீராமானுஜர்’ என்னும் திரைப்படத்தில் நடித்தது, ஜெயகாந்தன் மதுரை சென்ட்ரல் திரையரங்கத்தில் ‘ வேலைக்காரி’ சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது போன்ற தகவல்கள்…

நூலினை முழுவதும் வாசித்து முடிக்கையில் நூல் கூறும் பல எழுத்தாளர்களைப் பற்றி ஆசிரியர் கூறும் கருத்துக்கள் நம் மனத்தில் அலையலையாக வந்தாலும், “கு.அழகிரிசாமியின் கதைகளை வாசிக்காதவர்கள் தமிழ் வாழ்வின் அதி அற்புதமான தருணத்தை இழந்தவர்கள் ஆவார்” என்ற வரிகள் மேலெழும்பி நம்மை பரவசம் கொள்ள வைக்கின்றன. அதேபோல், கந்தர்வனின் கதைகளைக் கண்ணாடியாகக் கொண்டு அதில் ஆசிரியர் தன்னையும் பார்த்துக் கொள்வது , இருவரது சிறுகதைகளையும் முழுமையாகப் படித்த எனக்கு மனம் உடனடியாக ஓர் ஒப்பிடலை நிகழ்த்தி மகிழ்வைத் தருகிறது.

ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்ச்சிறுகதைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளன‌ என உள்ளடக்கத்தின் தடம் பார்க்கப் புகுந்த இந்நூல், ஐம்பது ஆண்டுகாலத் தமிழ்ச் சிறுகதைகள் எப்படிச் சொல்லப்பட்டன என்கிற வடிவ நேர்த்தி, சொல் முறை குறித்தும் விவாதித்திருப்பது ஒரே கல்லில் இரு மாங்காய் வீழ்த்திய விளைவாய் அமைந்திருக்கிறது.

ஐம்பதாண்டுகாலத் தடத்தின் வழியாக மார்க்சிய இலக்கியம் செல்ல வேண்டிய தடத்தினையும் இந்நூல் தெளிவாகக் காட்டியுள்ளது.

கலைத் திறமையும் மக்கள் பணி செய்யும் செயல்திறனும் கொண்ட இளம் தலைமுறையினருக்கு இந்நூல் ஒரு புதிய தடத்தை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது. அத்துடன் புனைவு குறித்த மார்க்சிய விமர்சனத்தில் ச.தமிழ்ச்செல்வனின் பாணி என்ற புதிய வரவுக்கும் இந்நூல் கட்டியம் கூறியுள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:
விலை: ₹.895 (25% Discount Price 670.00)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 மணி மீனாட்சிசுந்தரம், மதுரை.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் - ரூ. 10,000 பரிசு புத்தகங்கள் வெல்வோம்..

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. நாகேந்திரன் இ

    அருமையான….. விரிவான அறிமுகம் ஐயா. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *