ச.தமிழ்ச்செல்வனின் தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் நூல் – பெரணமல்லூர் சேகரன் எழுதிய நூல் அறிமுகத்துடன் புத்தக அட்டை மற்றும் ஆசிரியர் உருவப்படம்.

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – நூல் அறிமுகம்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” – சிறுகதை வாசிப்பை நேசிக்கத் தூண்டும் நூல்

தமிழ்நாட்டில் கதை சொல்லும் போக்கு நெடுங்காலமாக இருந்து வருகிறது. எழுத்து வடிவம், அச்சு என்றான பிறகு புத்தக வடிவம் பெற்ற கால கட்டத்தில் சிறுகதைகள் ஆவணமாகிவிட்டன.

அவ்வகையில் ஆவணப்படுத்தப்பட்ட சிறுகதைகளைச் சேகரித்து தேர்ந்த எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி 52 எழுத்தாளர்கள் மூலம் அவர்கள் படைத்த சிறுகதைகளையும் அவை எழுதப்பட்ட பின்னணியையும் எழுத்தாளர்களின் அரசியல் சமூக பொருளாதாரப் பின்னணியையும் கணக்கில்கொண்டு 900 பக்கங்களுக்குப் பக்கம் பெரு நூலைப் படைத்து வெளியிட்டுள்ளார் மூத்த எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். இந்நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பது சாலவும் பொருத்தமானதே.

நூலாசிரியர் கதைகளைப் படித்த பின்னரே இந்நூலை எழுதியுள்ளார் என்பது இந்நூலை வாசிக்கும்போது புலனாகிறது. கடின உழைப்புச் செலுத்தி நமக்கு வழங்கியுள்ள நூலாசிரியர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் இந்நூலை வழக்கம் போல அழகிய முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயத் தோழர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

வெறுமனே சிறுகதை ஆசிரியர்களையும் அவர்களது சிறுகதைகளையும் அறிமுகம் செய்யவில்லை இந்நூலாசிரியர். மாறாக சிறுகதை ஆசிரியர்களின் பின்புலம், அவர்களின் வாழ்நிலை, அக்காலத்தின் அரசியல் நிலை, எழுத்தாளர்கள் சார்ந்த அரசியல் சமூக நிலை போன்ற அம்சங்களை வைத்துக்கொண்டு அவர்களின் சிறுகதைகளை அறிமுகம் செய்திருப்பது சிறப்பு.

சிறுகதை இலக்கிய வரலாற்றின் துவக்கமே வ.வே.சு.ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ சிறுகதையில் இருந்து துவங்குகிறது என்பர். அவ்வகையில் வ.வே.சு. ஐயரில் துவங்குகிறது இந்நூல். கவிஞர் கந்தர்வனில் முடிகிறது இந்நூல். தமிழ்ச் சிறுகதையை அறிமுகப்படுத்திய வ.வே.சு.ஐயரின் சொந்தக் கதை பாபநாசம் யாத்திரையின்போது தண்ணீருக்குள் தவறி விழுந்த மகள் சுபத்ராவைக் காப்பாற்ற நீருக்குள் குதித்து சுழலில் சிக்கிக் காலமான சோகக் கதையாய் முடிந்தையும் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச்செல்வன்.

சாதி எதிர்ப்பு, இந்துமதச் சீர்கேடுகளைச் சாடுதல், பெண் கல்வி, ஆண்-பெண் சமத்துவம் , விதவாவிவாகம் என்கிற உள்ளடக்கத்தோடு அன்றைய நாளில் மிக முற்போக்கான படைப்புக்களை முன் வைத்தவர் அ.மாதவையா என்பதை இந்நூல் மூலம் அறியலாம். பல கதைகளிலும் கட்டுரைகளிலும் தண்டச்சோறு உண்ணும் பார்ப்பு என்கிற அளவுக்குத் தான் பிறந்த சாதியைச் சாடுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ‘சாஸ்திரியார் மகன்’ எனும் பாரதியின் குட்டிக்கதையைக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். ‘சிறுகதை’ எனும் தலைப்பிலேயே ஒரு சிறுகதையை பாரதி படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கூலி, விலை, லாபம் போன்றவற்றின் அடிப்படைகளை விளக்கும் மார்க்சியப் பார்வையை உள்வாங்கியவராக புதுமைப்பித்தன் ‘ விநாயக சதுர்த்தி ‘ கதையை எழுதியுள்ளதாக நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன். மேலும் தமிழராகப் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மனுஷியும் அவசியம் வாசித்தே ஆக வேண்டிய புதுமைப்பித்தன் கதைகளாக செல்லம்மாள், துன்பக்கேணி, சிற்பியின் நரகம், கயிற்றரவு, கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் எனப் பட்டியலிடுகிறார் நூலாசிரியர்.

உலகத்தை எழுத்தில் கட்டியெழுப்பிய முதல் தமிழ் எழுத்தாளராக மௌனியை அடையாளம் காட்டுகிறார் தமிழ்ச்செல்வன். ஆண்-பெண் உறவுதான் கு.ப.ராஜகோபாலனது எழுத்தின் சாராம்சம் என்பது புலனாகிறது. “எதற்கேனும் சமர்ப்பணம் செய்யப்படாத வாழ்வு, உப்பில்லாத ஊறுகாய், குறிப்பாக இன்றைய இலக்கிய ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் இன்றியமையாதது” என்று சொன்னதோடு நிற்காமல் இலக்கியத்திற்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர் ந. பிச்சமூர்த்தி என்பது புலனாகிறது. “பி.எஸ்.ராமையாவின் ‘மலரும் மணமும்’ எனும் கதைதான் வாசித்துத் தன் மனதில் நீண்டகாலம் நின்ற கதை” என்கிறார் நூலாசிரியர்.

1951ஆம் ஆண்டில் தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘பஞ்சும் பசியும்’ நாவல்தான் அயல் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் என்று இந்நூல் மூலம் அறிய முடிகிறது. “நவீன சிறுகதைகளில் காணப்படும் யதார்த்தம் அண்ணாவின் கதைகளில் காண முடியாதது. அதன் காரணமாகவே இந்தக் கதைகள் வாசக மனதின் அக உலகில் சென்று ரசாயன மாற்றங்களை விளைவிக்கும் சக்தியற்றவை ஆகிவிடுகின்றன’ என விமர்சித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

“இலக்கியத்துக்காகவே தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்த ஒருவர் உண்டெனில் அவர் சி.சு‌ செல்லப்பாதான்” எனக் குறிப்பிடும் நூலாசிரியர் அரசாங்கம் அறிவித்த ராஜராஜன் விருதைக்கூட கொள்கைநிலை நின்று நிராகரித்தார் என்பதையும் அதனால் குடும்பத்தாரின் வெறுப்புக்கும் ஆளானார் என்பதை அறியும்போது நம்மை வருந்தச் செய்கிறது. மணிக்கொடி என்ற புரட்சிகர எழுத்தாளர்கள் மத்தியில் கு.ப.ரா. ஓர் ஆராய்ச்சியாளர், பிச்சமூர்த்தி ஒரு தத்துவஞானி, புதுமைப்பித்தன் ஒரு கலகக்க்காரர் என்றால் சிதம்பர சுப்ரமணியன் ஒரு பழமைவாதி என்றாலும் வாழ்வின் நித்தியமான அம்சங்களைப் பேசியவர் என்ற முறையிலும் வடிவ நேர்த்தியுடன் சிறுகதை உருவம், அழகியல் பற்றிய பிரக்ஞையுடன் எழுதியவர் என்கிறார் நூலாசிரியர்.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த தி.ஜ.ரங்கநாதனின் எழுத்துகளை தமிழக அரசு நாட்டுடமையாக்கியதைக் குறிப்பிடும் தமிழ்ச்செல்வன் மார்க்சின் மூலதனச் சுருக்கம் என்ற நூலையும் படைத்த பெருமைக்குரியவர் எனக் குறிப்பிடுகிறார். “கல்கியால்தான் சிறுகதை, தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அஸ்திவாரத்தின்மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. அந்தச் சிகர வளர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் மணிக்கொடி குழுவினர்” என்கிறார் பேராசிரியர் க.சிவத்தம்பி.
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி சிறுகதைகளை எழுதிக் குவித்தாலும் பிரச்சாரத் தொனி தூக்கி நிற்கும் என்கிறார் நூலாசிரியர்.

கரிசல் மண்ணின் முன்னணிப் படைப்பாளிகளாக கு.அழகிரிசாமி, கி.ராஜ நாராயணன் ஆகியோர் இந்நூலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். 47 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கு. அழகிரிசாமி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என எழுதிக் குவித்துள்ளார். இருவருமே அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர். கு.அழகிரிசாமிக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டபோது அவர் உயிருடன் இல்லை என்பது சோகம்.
கி.ரா.வின் சாதனைகளில் முக்கியமானதாகப் பேசப்படுவது பேச்சு மொழியை நவீன இலக்கியத்துக்கும் கொண்டு வந்து அதற்குரிய அங்கீகாரத்தைப் பெற்று நிலை நிறுத்தியதுதான்.

“உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகித்துடன் ஒரு காகிதத்தில் ‘நெருப்பு’ என எழுதினால் அங்கு பொசுங்குகிற நெடி வரவேண்டும்” என லா.ச.ராமாமிர்தம் சொல்லிக் காட்டியதோடு செய்தும் காட்டினார் எனலாம். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘ஒரு பிடி சோறு தொகுதியைத் தனது முன்னுரையுடன் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியவரே விந்தன்தான் என்பதைச் சுட்டிக்காட்டும் நூலாசிரியர், “அன்றைய நாட்களில் விந்தனின் கதைகளில் வெளிப்பட்ட ஏழை-பணக்காரன் பேதம், வேறெவர் கதைகளிலும் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்பட்டதாகக் கூறமுடியாது” என்கிறார். மகத்தான படைப்பாளிகளில் சிலர் தனிமனித ஒழுக்கம் இன்மையால் விரைவில் மாண்டு போகும் அவலமும் நிகழ்ந்துள்ளது‌. அதற்கொரு சான்று ஜி.நாகராஜன்.

பெண் படைப்பாளிகள் குறித்த தரவுகளைச் சேகரிக்க நூலாசிரியர் தமிழ்ச்செல்வன், அ.வெண்ணிலாவின் ‘மீதமிருக்கும் சொற்கள்-பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் மற்றும் குங்குமம் தோழி படைப்புகளில் இருந்து சேகரித்துப் படைத்துள்ளார். ஒருநாள் கூட பள்ளிக்குப் போகாமல் 115 நாவல்களை எழுதிய ஆற்றாமை வை.மு. கோதை நாயகி அம்மாள், புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாச்சலம், திராவிட இயக்கத் தூணாய் விளங்கிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், கு.ப.ராஜகோபாலனின் இளைய சகோதரி கு.ப.சேது அம்மாள், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் இணையர் மீனாவின் தாயாரான கிருத்திகா ஆகியோரை அறிமுகப்படுத்தியுள்ளார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்ற எழுத்தாளர் அம்பையின் கதைக்களன்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை மையமிட்டவை. பெண் விடுதலை, தனிமனித அறம், அதைவிடத் தனிமனித சுதந்திரம், சமூக அக்கறை, வெறுப்பு-பகைமையின் இடத்தில் அன்பை வைப்பது, மதவாத எதிர்ப்பு என்பன அம்பையின் அரசியல் எனின் மிகையன்று.அநுத்தமா என்னும் பெண் எழுத்தாளர் 22 நாவல்கள், 300 சிறுகதைகள்,15க்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என எழுதிக் குவித்ததையும் இந்நூல் மூலம் அறியலாம்.

2015 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆ.மாதவன், “படைப்புலகில் நான் ஒரு போதகனல்ல. என் வழி கலையைக் கலையுணர்வுடன், யதார்த்தப் பரிவுடன், விளம்புவது மட்டுமே என்பது உண்மை” என்கிறார். அதுவே அவரது இலக்கியக் கொள்கையாகவும் இருந்துள்ளது என்பதை இந்நூல் மூலம் அறியலாம். ‘சக்தி வைத்தியம்’ எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘சொக்கவைக்கும் நடையழகும், வெகு சுலபமாக எந்தவிதமான சிரமும் கொடுக்காமல் எத்தனை நூறு பக்கங்கள் ஆனாலும் அலுக்காமல் படிக்க வைக்கும் எளிய சின்னச்சின்ன சம்பாஷணைகளால் ஆன கதை சொல்லும் நேர்த்தியெல்லாம் எப்படிப்பட்ட சாதாரண வாசனையும் மனம் கவரும்’ என்கிறார் நூலாசிரியர்‌.

272 சிறுகதைகளை எழுதியுள்ள அசோகமித்திரனுக்கு, அவரது ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதைத் தொகுப்புக்காகவே 1996ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பது இந்நூலில் பதிவாகியுள்ளது. “வாழ்வின் அழகுகளை மட்டுமல்ல, குரூரங்களையும் படம்பிடித்துக் காட்டுபவன் தான் அசலான கலைஞன்” என்னும் தமிழ்ச்செல்வன் அப்படியான கலைஞனாக எம்.வி.வெங்கட்ராமைக் காட்டுகிறார். “சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப் பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை” எனக்கூறும் இந்திரா பார்த்தசாரதி அவருக்கேயான தனி பாணியில் அறிவார்ந்த உரையாடல்களோடு சிறுகதை வரலாற்றில் தனித்த இடம் பிடித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது இந்நூலில்.

மருத்துவச் சேவையையும் இலக்கியச் சேவையையும் ஒரு சேர செய்து காட்டிய எழுத்தாளர் சார்வாகனுக்குத் தூண்டுகோலாய்
அமைந்தவர் தி.க.சி என்பதை இந்நூல் மூலம் அறியலாம். ஆரம்பத்தில் யதார்த்தவாத சோசலிசக் கதைகளைப் படைத்த சுந்தரராமசாமி பிற்காலத்தில் தன் போக்கை மாற்றிக் கொண்டார். இவரது சிறுகதைகளில் சித்தரிக்கப்பட்ட அளவுக்குக் குழந்தைகளின் உலகத்தை வேறு சிறுகதையாளர்கள் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே என்கிறார் நூலாசிரியர். சிறந்த நாடக ஆசிரியராக நன்கு அறியப்பட்ட ப்தமசிரீ ந.முத்துச்சாமி சிறுகதைகளுக்காக தமிழக அரசின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

திராவிட இயக்கத்தின் 13 எழுத்தாளர்களின் 115 சிறுகதைகளைத் தொகுத்து சீதை பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எஸ். தென்னரசு, கலைஞர் கருணாநிதி, இராம. அரங்கண்ணல், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, டி.கே. சீனிவாசன் ஆகியோரின் சிறுகதைகளைப் பட்டியலிட்டு விவரித்துள்ளார் தமிழ்ச்செல்வன்.

வண்ணநிலவன் கதைகள் முன்வைக்கும் முக்கியமான அரசியல் ‘முதல்ல மனுசங்களோட பசியை எழுதுங்கய்யா’ என்பதுதான். மிகத் தெளிவான, அழுத்தமான வெளிப்படையான அரசியல் பார்வை கொண்ட படைப்பாளி பா.ஜெயப்பிரகாசம் கரிசல் மக்களின் அழகு களையும் அசிங்கங்களையும் சேர்த்தே பேசுகிறார். துரோகங்கள், வக்கிரங்கள் என எல்லாமே அவரது சிறுகதைகளில் பதிவாகியுள்ளதைத் தொட்டுக் காட்டுகிறது இந்நூல்.

மிகுந்த சொற்சிக்கனத்தோடு, தேவைக்கு அதிகமாக ஒரு சொல்கூட இல்லாத கட்டிறுக்கமான மொழி, மடைதிறந்த வெள்ளம்போலப் பிரவகித்து வரும் கரிசல்காட்டுச் சொற்பிரயோகம். வாசிப்பு இன்பத்தையும் கூர்மையான உரையாடல்கள். அதிகம் பேசப்படாத, ஒடுக்கப்பட்ட உடல் உழைப்பாளிகளையே பெரிதும் பேசும் உள்ளடக்கம் என பூமணியின் சிறுகதைகள் அறிமுகமாகின்றன இந்நூலில். வறுமை, இல்லாமை, போதாமை இவையே பெரும்புலான வண்ணதாசன் கதைகளின் திரைச்சீலைகளாக அமைகின்றன என்கிறார் தமிழ்ச்செல்வன்.

உழைக்கின்ற எளிய மக்களின் வாழ்வை அவர்களின் பக்கம் நின்று உரக்கப் பேசும் அரசியலே இன்குலாப் சிறுகதைகள் முன்னெடுக்கும் அரசியல் என்பதை அறிந்து கொள்ளலாம். 10 நாவல்கள், 5 குறுநாவல்கள், இரு நாடகங்கள், சில கட்டுரைத் தொகுப்புகள் இவை எதையும் வாசிக்காமல் பிரபஞ்சனுடைய 212 சிறுகதைகளை வாசித்தாலே அவரது படைப்பாளுமையைப் புரிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார் நூலாசிரியர். எழுத்தாளர் லிங்கனின் எல்லாக் கதைகளிலும் வர்க்க அரசியலையே பேசினாலும் பிரச்சார நெடியின்றி உயிர்த் துடிப்புடன் அவர் படைத்துள்ளது பாராட்டத்தக்கது. 62 சிறுகதைகளைப் படைத்த சா. கந்தசாமியின் 30க்கும் மேற்பட்ட கதைகளில் மரணம் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் காரணிகளாக வருகிறது என நிறுவுகிறார் நூலாசிரியர். இது அநேகர் வாழ்க்கையில் நிகழ்வது தானே. முன்மாதிரி இல்லாத, எவரும் பின்தொடரவும் முடியாத ஒரு எழுத்துமுறைக்குச் சொந்தக்காரர் மு.சுயம்புலிங்கம்.’சூடிய பூ சூடற்க’ எனும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்று புகழ் பெற்றவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் என்பது புலனாகிறது.

தொழிற்சங்க இயக்கத் தலைவர்களால் இலக்கியம் படைக்க முடியாது. அப்படியே படைத்தாலும் அவை பிரச்சார நெடியின்றி இருக்காது. என்றெல்லாம் பேசப்படுவதுண்டு‌. ஆனால் தொழிற்சங்கத் தலைவர் கந்தர்வன் படைத்த சிறுகதை இலக்கியம் சாகாவரம் பெற்றது என்பதை இந்நூல் மூலம் அறியலாம்.

பொதுவாக சிறுகதை உலகம் விரிந்து பரந்திருந்தாலும் நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போல சிறுகதை யாருக்காகப் பேசுகிறது யாரைப் பேசுகிறது என்பதிலிருந்தே சிறுகதைகளைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. சமூக மாற்றத்துக்கான சிறுதுளியாகவேனும் சிறுகதை இலக்கியம் அமைந்ததை சிறுகதை வரலாறு மூலம் அறியலாம். எனின் எளிய மக்களுக்கான சிறுகதைகளை எளிய மக்களின் வாழ்வியலில் இருந்தே படைக்க முடியும் எனவும் அதன்மூலம் தாக்கத்தை ஏறபடுத்த முடியும் என்பதையும் இந்நூல் நமக்கு உணர்த்துகிறது‌. அதே நேரம் எழுத்துலகில் வெற்றியடைந்த பல எழுத்தாளர்கள் கல்வியறிவு குறைவாக இருந்தபோதிலும் அழகியல் மிக்க சிறுகதைகளை அவர்களால் படைக்க முடிந்திருக்கிறது என்பதையும் அத்தகைய எழுத்தாளர்களில் பலர் வறுமையால் வாடியவர்களாகவே வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. இது நகைமுரணும் சோகமும் கலந்த கசக்கும் உண்மை. எது எவ்வாறாயினும் சமூக வலை தளங்கள் செல்வாக்கு செலுத்தும் இக்காலத்தில் வாசிப்பை நேசிக்கச் செய்ய இத்தகைய நூல் சிறந்த பங்காற்றும் என நம்பலாம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர்:ச.தமிழ்ச்செல்வன்
வெளியீடு:
விலை:₹.895 (25% Discount Price 670.00)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பெரணமல்லூர் சேகரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *