சாதிகளின் உடலரசியல் என்னும் இப்புத்தகம் அன்றாடம் நம் வீட்டில் காலை முதல் இரவு வரை கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களான வாசல் தெளிப்பது, கோலம் போடுவது, விளக்கேற்றுவது, நல்ல நாள், நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் பார்ப்பது முதல் புராதான சடங்குகள், பிறப்பு இறப்பு சடங்குகள், பூப்பெய்தும் சடங்குகள், வீட்டு விலக்கு, தீட்டு, தீண்டாமை வரை எப்போது எப்படி உருவாக்கப்பட்டன என்பதை பற்றிக் கூறுகிறது.
இந்த சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் ஆரிய சமூகத்திலிருந்து வந்தவை. ஆரிய சமூகத்தினர் மனிதர்களை பார்ப்பனர், சத்திரியர் ,வைசியர், சூத்திரர் என்ற நால்வகை வர்ணங்களாக பகுத்து வைத்தனர்.
இதில் பார்ப்பனர்கள் உயர்வகையினராகவும், சூத்திரர்கள் அனைவருக்கும் கீழ் நிலையில் இருப்பவராகவும் பகுத்துக் கொண்டனர். பார்ப்பனர்கள் தங்களை உயர் ஜாதியாகக் கொண்டுள்ளதால் தங்களை யாரும் தீண்டக் கூடாது என்றும் தங்களை யாராவது தீண்டினால் தான் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி குளித்து தள்களைச் சுத்தம் செய்து கொள்வர். அதற்கான பரிகாரம் பூஜைகளை செய்து கொள்வர்.
அதைப் போலவே தாங்களும் உயர் ஜாதியினராக காட்டிக் கொள்வதற்காக பார்ப்பனர்களை பின்பற்றி சத்திரியர்களும் வைசியர்களும் அவர்களைப் போன்றே சடங்கு. சம்பிரதாயங்களை செய்ய ஆரம்பித்தனர்.
சூத்திரர்கள் மூன்று வர்ணத்தினருக்கும் வேலை செய்பவர்களாகவும், அடிமைகளாகவும் இருந்ததால் அவர்களால் எந்த சடங்கு சம்பிரதாயம் செய்தும் தங்களை உயர்த்திக் கொள்ள முடியாத நிலையில் தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்டிருந்தனர்.
இதனால் பார்ப்பனர்களின் சடங்கு சம்பிரதாயங்களை மற்ற அனைவரும் எந்த கட்டாயமும் இன்றி மிக இயல்பாக மக்கள் அனைவரும் இந்த வர்ணாசிரம மனுதர்மக் கோட்பாட்டை இன்று வரை பின்பற்றி வருகிறார்கள். அதனால் இன்று வரை பார்ப்பனர்களின் ஆதிக்கம் அனைத்து மக்களிடமும் மேலோங்கி இருக்கிறது.
எந்த நல்லது, கெட்டது நடந்தாலும் சடங்குகளை சம்பிரதாயங்களை பார்ப்பனர்களின் வழிகாட்டலில் அவர்களை வைத்து செய்து தங்களின் தற்காலிகத் தீட்டை கழிக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையால் நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் தேவையில்லாதது என்பதை அறிய இப்புத்தகம் ஒமக்கு உதவுகிறது.
மேலும் இந்த சடங்கு, சம்பிரதாயங்களை பெண்களையே செய்ய வைத்து அவர்களின் மீது பெரும் சுமையை ஏற்றி வைத்தும், அவர்களின்மாதாந்திர உடற்கழிவை தீட்டாக பாவித்து அவர்களை தற்காலிக தீண்டாமைக்குட்படுத்தி, பெண் உடல் என்ற ஒரே காரணத்துக்காக அந்த உடலின் மீது தீண்டாமையையும், வன்முறையையும், சுருண்டலையும் நிகழ்த்துகிறது இந்த ஆணாதிக்கம். அது நம் குடும்பத்திற்கு நல்லது என்று நம்ப வைக்கப்பட்டும் அவர்களே அதை விரும்பி ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதே போலத் தான் பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல், போன்ற நிகழ்ச்சிகளுக்கு சடங்குகளும், தற்காலிகத் தீண்டாமைகளும் இன்று வரை நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. தீட்டைக் கழிப்பதற்கு ஒரு பிராமணன் வந்து பரிகாரம் செய்து நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நிலை இன்று வரை நம் நாட்டில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு அபத்தம் என்பதை உணர வைக்கிறது இப்புத்தகம.
தீட்டு, விலக்குதல், தீண்டாமை ஆகியவற்றை குறித்த ஒரு பார்வையை புத்தகம் நமக்கு அளிக்கிறது. தீட்டு, விலக்குதல் ஆகியவை எல்லா வர்ணங்களிலும் தற்காலிகமாக கடைபிடிக்கப்படுவது. ஆனால் இந்த தீண்டாமை என்பது சூத்திரர்களுக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மற்ற வர்ணங்களிலுள்ள மனிதர்கள் அனைவரும் இறுதிவரை அவர்களிடம் தீண்டாமையை கடைபிடிக்க வேண்டுமென மனுதர்மம் கூறுகிறது.. இந்த தீண்டாமையின் உளவியலை பற்றி ஆசிரியர் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
நடைமுறையில் எல்லா சாதியினரும் தற்காலிக தீண்டாமையை கடைபிடித்து வருவதால் சூத்திரர்களான உழைப்பாளி மக்களை தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது மக்களால் இயல்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. சடங்குகள் இருக்கும் வரை தீட்டு ,தீண்டாமை இருக்கும். ஜாதிகள் இருக்கும் தீண்டாமை இருக்கும். ஜாதிகள் ஒழிந்தால் தான் பிராமணியம் ஒழியும். பிராமணியம் ஒழிந்தால் தான் மானுட சமத்துவம் மலரும் என்ற அம்பேத்கரின் கூற்று உண்மையாகும் நாள் வர வேண்டும் என்கிறார் ஆசிரியர்
அனைத்திற்கும் மேலாக நம் உடலிலேயே நம்மையுமறியாமல் தீண்டாமையை கற்பித்திருக்கிறார்கள். வலது புறம் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவை என்றும் இடது புறம் செய்யும் செயல்கள் கெட்டவை என்றும் பகுத்து இருக்கிறார்கள். இது என்ன ஒரு அறிவீனம்? வலது கையில் தான் கொடுக்க வேண்டும் வலது காலை முதலில் முன்னெடுத்து வைக்க வேண்டும் என்ற பழக்கத்தை இன்று வரை நாம் பின்பற்றி வந்து கொண்டிருப்பதிலிருந்து அறியலாம்.ஒவ்வொரு நாளும் நம்முடைய அனைத்து செயல்களிலும் பிராமணியமும், மனுதர்மமும் மாறாத பிணைப்பை கொண்டிருக்கின்றன. இதுதான் நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் என்ற நம்பிக்கையை நம்மிடையே விதைத்து அதிலிருந்து நம்மை வெளிவராதபடி செய்து கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள..
ஆதி காலத்தில் மக்கள் இனக் குழுக்களாக வாழ்ந்த போது ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தன்மையான சடங்கு. சம்பிரதாயங்கள் இருந்தன. அவரவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து குழுக்களாக வாழ்ந்து வந்தனர். மேலும்.அவர்கள் பல்வேறு இனக் குழுக்களுக்கிடையே புறமணத் திருமணம் என்பது சாதாரணமாக இருந்து வந்தது.
ஆனால் வர்ணாசிரமதர்மம் வந்த பிறகு பார்ப்பனியர்கள் தங்களுக்குள்ளே திருமணம் செய்யும் அகமணமுறையைக் கொண்டு வந்தனர.. இதன் மூலம் தீண்டத்தகாதவர்கள் தங்கள் வர்ணத்தில் கலப்பு மணம் செய்வதை தடுப்பதற்கான ஏற்பாடாகவே அது இருந்தது..
ஆதியிலிருந்து மற்றவர்களைப் போலவே செய்து பழக்கப்பட்ட நாம் அவர்களைப் போலவே ஒரு உயர் நிலையில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக சத்திரியர்களும், வைசியர்களும் தங்களுக்குள்ளே திருமணம் செய்ய ஆரம்பித்தனர்.
சூத்திரர்களைத் தீண்டாமை என்ற காரணம் காட்டி அவர்களை மட்டும் விலக்கி வைத்தனர்.
எந்த மக்கள் எந்த வேலையை செய்ய வேண்டும் ,அவர்கள் எந்த சடங்கு சமுதாயங்களை கடைபிடிக்க வேண்டும், அவர்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்தும் எல்லாவற்றையும் மனுதர்மம் எழுதியபடி இந்திய சமூகம் இன்று வரை பின்பற்றி வந்து கொண்டிருக்கிறது என்றால் அவற்றின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ளலாம்..இது இந்திய சமூகத்திற்கு மிகக் கேடான காலமாக ஆசிரியர் கூறுகிறார்.
அவர்களுடைய தந்திரங்களையும் ,, ஏமாற்றுக்களையும் அம்பலப்படுத்த வேண்டியதும் மாற்றுப் பண்பாட்டு நிகழ்ச்சி நிரல்களை உருவாக்க வேண்டிய காலமும், சவாலும் தற்போது நம் முன்னே இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும், உடலும் சமமான மதிப்பும், முக்கியத்துவமும் உடையவை. எல்லோருக்கும் இந்த பூமியில் அவரவர்களுக்கான இடம் இருக்கிறது .இந்த பூமியின் உயிரோட்டத்திற்கு எல்லோரும் ஏதோ ஒரு பங்களிப்பைச் செய்யவே செய்கிறார்கள்.. அந்த பங்களிப்பினால் மட்டுமே உயிர்ச்சங்கிலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.. அப்படி இருக்கும் போது மனிதர்களில் மட்டும் ஏற்றத்தாழ்வு எப்படி இருக்க முடியும். பூமியில் பிறக்கும் மனிதன் யாராக இருந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான மதிப்பு தான் இருக்க முடியும்.
மனிதர்களை இப்படி மேல், கீழாகப் பிரித்து வைக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமே வர்ணாசிரமத்தின் மனுதர்மக் கோட்பாடு தீண்டாமையை கொண்டு வந்தது. இதை ஒழிக்க வேண்டுமானால் மீண்டும் புறமணத் திருமணத்தை ஆதரிக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்காலத்தில் அகமண முறை அந்தந்த சாதியினரிடம் இறுக்கமாக இல்லை. ஒவ்வொரு வர்ணத்திலும் உள்ள பல சாதியினர்களிடையே புறமணத் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
ஆனால் அது மட்டும் போதாது. வர்ணப்படிநிலைகளிலும், சாதிப்படிநிலைகளிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ள தீண்டத்தகாதவர்களுடன் மண உறவு கொள்வதன் மூலமே தீண்டாமை என்ற அடையாளத்தை மக்களிடமிருந்து ஒழிக்க முடியும்.
இத்தகைய மனப்பூர்வமான தீண்டதலின் மூலமே உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பிக்கும் தீண்டுதல், மேல், கீழ் என்ற பிரிவினை இல்லாத தீண்டுதல், இந்த பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒரே மாதிரியான மதிப்புடைவை என்ற மதிப்பிற்குரிய தீண்டுதல், சாதி, மதம்,,இனம், மொழி என்ற எல்லா வேறுபாடுகளையும் கடந்த தீண்டுதல், ஆண், பெண்,மாற்று பாலினம், சிறுபாலினம் என்ற வேறுபாடுகளே இல்லாத தீண்டுதல் ஆகியவை தான் இன்றைய மனித குலத்தின் தேவை என ஆசிரியர் அறுதிகிட்டு கூறுகிறார்
இன்று நம்மிடையே 20 சதவீதத்தினர் கீழ்ச் சாதியினரான தலித்துகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை பரிதாபகரமானது. அவர்கள் பலவிதங்களில்அவமானப் படுத்தப்படுகிறார்கள்.இதைப் பறைசாற்றும் விதமாக நடக்கும் ஐஐடி தற்கொலைகள், ஆணவக் கொலைகள், ஐஏஎஸ் படித்தவர்களை அவமாபை்படுத்துவதால் அவர்கள் தங்களின் வேலையைக் கைவிடுவது, அரசியல்வாதிகள் மற்றும் போலீசார் கள் இவர்களின் மீது நடத்தும் அராஜகங்கள் ஆகிய அவலங்களை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
படித்தவர்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காதவர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும். நாம் தான் அந்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்கான வித்து நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது நம்மில் ஏற்படும் மாற்றம் தான் சமுதாய மாற்றமாக மலரும். பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் கனவு நினைவாக வேண்டும்.
நன்றி.
புத்தகம் : சாதிகளின் உடலரசியல்
ஆசிரியர் : உதயசங்கர்
பக்கங்கள்: 94
பதிப்பகம் : நூல் வனம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.