சாலையோரச் சித்திரங்கள் – கவிதை
எப்போதும் சாலையோரத்து வறுமை
வரையப்படும் ஓவியங்களுக்கும்
பதியப்படும் ஒளிப்படங்களுக்கும்
மாதிரியாவதேன்?
மாபெரும் ஓவியக் கலைஞன்
சாலையோரத்தில்
தெய்வங்களை கரிக்கோடுகளாலும்
சுண்ணக்கட்டிகளாலும்
வரைய நேர்ந்ததேன்?
புலரும் பொழுதிலும்,
அந்தி மாலையிலும்
சடம் போன்ற சாலையும்,
உயிரோவியமாய்
உயிர் பெறுவதேன்?
வானம் மட்டுமா போதிமரம்?
வழியெங்கும் நிகழும்
வாழ்க்கையும் அது சொல்லும்
சேதிகளும் வேறென்ன?
அரண்மனைக்குள் இருந்தவனை
ஆரண்யம் செல்லச் செய்த
காட்சிகள் யாவும்
சாலையோரச் சித்திரங்கள்
செய்த மாயம் தானே!
ஊரடங்கோ, வேலைநிறுத்தமோ
வெறிச்சோடிய சாலைகளைக்
காட்டுவதில் தான்
தொலைக்காட்சித் திரைகளுக்கேன்
இவ்வளவு ஆனந்தம்?
சாலையோரத்து மரங்கள்
தங்கள் நிழல்களால்
வரையும் ஓவியங்களுக்கு
வண்ணங்களின் தேவையேது?
எழுதியவர் :
மகாலிங்கம் இரெத்தினவேலு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Super Mama 👍👌👌👌👌