சாதி ஒழிப்பு; இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பார்வையில்
நூலின் அட்டைப் படம் சொல்லும் செய்திகள்
இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரை:
இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்ம சமயச் சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக அமைப்பதென உறுதி பூண்டுள்ளோம்.
நீதி: சமூக, பொருளாதார, அரசியல் நீதி
சுதந்திரம்: எண்ண, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை வைக்க, உண்மையைச் சொல்ல, வழிபாடு செய்ய சுதந்திரம்
சமத்துவம்: தகுதிப்பாட்டிலும் வாய்ப்பிலும் சமத்துவம் ஆகியவற்றை அளித்து அவர்களை உயர்வுறச் செய்தல்
சகோதரத்துவம்: தனி மனித கௌரவம். தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு உறுதி அளித்தல்
இருபத்து ஆறாம் நாள் நவம்பர் 1949ல் நமது அரசியலமைப்பு அவையில் ஏற்று, இயற்றி, இந்த அரசியலமைப்பை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம்
அய்யன் திருவள்ளுவர்:
உலகப் பொதுமறை என்று போற்றக்கூடிய அய்யன் திருவள்ளுவர் மனித வாழ்க்கையின் சகல நடவடிக்கைகளையும் அறம் பொருள் இன்பம் முப்பகுதிகளாகப் பிரித்து வாழ்வியல் தத்துவங்களை வழங்கியுள்ளார். தமிழில் வழங்கியிருந்தாலும், இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கே பொருந்தும்படியாக அமைந்துள்ள அற்புதப் படைப்பு திருக்குறள். சாதி மதம் மொழி கடந்த மனித இனத்தின் ஒன்றுபட்ட எழுச்சியான சமத்துவத்தைப் போதித்த தத்துவ ஞானிதான் திருவள்ளுவர்.
வேதங்களைப் புகுத்தி மனித பேதத்தை வளர்த்த சாதியை வளர்த்த ஆரியத்திற்கு எதிராக, எங்கெல்லாம் மனிதன் பிறந்தானோ அங்கெல்லாம் சமத்துவமானவன், வாழப் பிறந்தவன்தான் மனிதன், எல்லோரையும் அரவணைத்து ஆளப்பிறந்தவன்தான் என்று 1330 குறள்களின் மூலம் மனித சமூதாயத்திற்கு என்றென்றும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
“ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்” என்ற மனிதனுக்குமனிதன் யாரும் யாருக்கும் பிறப்பால் வேற்றுமையில்லை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நெறிமுறை பாய்ச்சிய திருவள்ளுவர்தான் இந்த நூலின் அடித்தளத்தில் முதன்மையானவராகத் திகழ்கிறார்..
அய்யா வைகுண்டர்:
இந்தியாவின் தென்முனை சூரியனாய் பிறந்த அய்யா வைகுண்டர், சமூக்கத்தில் ஒடுக்குதலும் ஒடுங்குதலும் மனிதனைச் செயற்கையாக உருவாக்கப்பட்டது. அது மனுதர்மத்தை அடிப்படையாகக்கொண்டு மேல்சாதி நம்பூதிரிகளின் கட்டளையை ஏற்று ஆட்சி செய்தவர்களால் உருவாக்கிய கொடுமை.ஆதிக்க வெறியர்களுக்கு எதிராக ஒடுக்குதலை ஒழித்து கூனிக்குருகி ஒடுங்குதலை அழித்து ஒடுக்கப்பட்டோரை தலைநிமிரச் செய்கின்ற தர்மம்தான் ”யுக தர்மம்” ( சமதர்மம்) என்று பறைசாற்றியவர் அய்யா வைகுண்டர் வள்ளுவப் பெருந்தகைக்கு இடதுபுறம்.இருப்பவர்.
“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்
மாளக்கிடப்பார் மதத்தார் என்மகனே” என்றும்
”சாதியெனும் பாம்பு சதி செய்யும் பாம்பு”
”சாதியொரு நிரப்பாய் தானாள்வாய் என்மகனே” என்றும்
,பதினெண் சாதிகளும் பண்பாய் ஓருதளத்தில்
விதி வந்ததென்று மேவிக் குலாவியிருந்தார்” என்றும் அகிலத்திரட்டு
ஏட்டில் சாதி சமத்துவத்தைப் போதித்தவர், தனது இறுதி காலத்தில் நோய்வாய்ப்பட்டு இருக்கும்போது இறுதியாக பார்க்க வந்த பல சமூக மக்களிடம்
” ஒன்ணு சொன்னதை ஒன்ணு கேட்டு
ஒருவருக்கொருவர் நிரப்பாய் இருந்திடுங்கோ” என்றும் போதனை செய்த தென்முனைச் சூரியன் அய்யா வைகுண்டர்.
அருட்பிரகாச வள்ளலார்:
“கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக” என்றும்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரப் குப்பையும் தணந்தேன்” என்றும், சாதியின்மீது சம்மட்டி கொண்டு அடித்தவர் வள்ளலார் சுவாமிகள்.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்:
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். முதன்முதலாக இந்தியாவில் மேதினத்தை சென்னையில் கொண்டாடியவர். சோசலிசப் புரட்சி ரஷ்யாவில் நடப்பதற்கு முன் இந்தியாவில்தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்காமல் போனதற்கு இங்கிருக்கும் பிரத்யேகமான சாதிய முறைதான் தடையாக இருக்கிறது. என்று சாதியின் மிகப்பெரிய தடையைச் சுட்டிக்காட்டியவர் தோழர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார்:
ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராடி ஆங்கிலேயனால் சித்திரவதைக்குள்ளான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர் ஆங்கிலேயர்களின் கொடுமைகளுக்கெதிராக மட்டும் போராடவில்லை. இந்திய தேசத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியிலே மண்டிக்கிடக்கும் சாதியப் பாகுபட்டிற்கெதிராகக் கிளர்ந்தெழுந்தவர்
தியாகி வ.உ.சி தூத்துக்குடியில் அரசியலில் ஈடுபடும்போது கண்ணில்லாத தாழ்த்தப்பட்டவர்களை தம் வீட்டில் வைத்து கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் சுவாமி சகஜானந்தா என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு சைவ சித்தாந்தமும் தமிழிலக்கியமும் கற்பித்து மனம் துணிந்து வீட்டில் ஒருவராக ஏற்றுக்கொண்டார். இச்செயலுக்காக அன்றைய சாதி வெறி பிடித்த தன் சாதியினர் வ.உ.சி குடும்பபத்தினரை சாதி நீக்கம் செய்துவிட்டனர். அதற்காக அவரும் அவரது துணைவியாரும் கவலைப்பட வில்லை.. ஆனால் பிற சமூத்தினரிடம் பெரும் மதிப்புயர்வு பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.
1927ல் சேலம் அரசியல் மாநாட்டில் அவர் பேசிய சுதந்திரப் போராட்ட உரையில் “ஆங்கிலேயரிடம் நாம் சுய அரசாட்சி கேட்கும்போது, அதற்கு நாம் தகுதியானவர்தானா? என்று கேள்வி கேட்டுவிட்டு அதற்குப் பதிலாக “பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருந்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலோர் விட்டு விட்டனரா? என்று மனதில் உறுத்தும்படி கேட்டவர்தான் நமது கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.
தந்தை பெரியார்:
சாதி, சடங்கு, சம்பிரதாயங்கள், வேதங்கள், புராணங்கள், மூடநம்பிக்கை, இதிகாசங்கள் ஆகிய அனைத்தின் மூலம் சமூகப் பாகுபாடுகளையும், ஒடுக்குமுறைக் கூறுகளையும் ஆரியர்கள் திணித்துள்ளார்கள். இப்படித் திணிக்கப்பட்ட கசடுகளை அகற்றுவதற்காக தனது வாழ்நாள் முழுவதும் மக்களிடம் பயணித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். “சாதி ஒழியவேண்டும்.. அதை நிலை நிறுத்தும் சாத்திரங்களும் மனுதர்மமும் ஒழிய வேண்டும்.” என்று சமத்துவ மருந்து ஊசியை மக்களிடம் செலுத்தியவர் தந்தை பெரியார். டாக்டர் அம்பேத்கர் 1936ல் வெளியிட்ட ”சாதி அழித்தொழிப்பு” நூலை முதல் முதலாக தந்தை பெரியார் தமிழில் வெளியிட்டவர்.
கர்ம வீரர் காமராஜர்:
கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் என்பது அனைவரும் அறிந்ததே. சாதிபேதத்தை தனது உணர்வில் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை, தந்தை பெரியாரோடு கைகோர்த்து விரட்டியவர் கர்மவீரர் காமராஜர்.”சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். காமராசர் அவர்கள் முதலமைச்சராகி இருக்கின்றார். இவருக்கு சாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றி பல முறை பேசியிருக்கிறார்” என்று பெரியார் 15-04-1954ல் விடுதலை நாளேட்டில் குறிப்பிட்டார். ராஜாஜி காலத்தில் மூடப்பட்ட ஏராளமான பள்ளிகளை கர்மவீரர் காலத்தில் அதைவிட அதிகமான பள்ளிகளைத் திறந்து ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வெளிச்சம் பெற ஊக்கப்படுத்தினார்.மதிய உணவுத்திட்டத்தால் பாய்ச்சல் வேகத்தில் ஏழையெளியவர், ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் சேர்க்கை அதிகமானது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி:
1926 ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட அகில உலக பெண்கள் மாநாடு பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் டாக்டர் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரையில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேற வேண்டுமென்றும், பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழியவேண்டுமென்றும் வலியுறுத்தினார். 1925ல் சென்னை மாகாண சட்டசபைத் துணைத்தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவரே. அப்போது சட்டமன்றத்தில் புரட்சிகரமான சட்டங்களான தேவதாசி முறை ஒழிப்பு, இருதார மணத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, பால்யவிவாகத் தடுப்புச் சட்டம் ஆகியவைகளின் மசோதாக்களைக் கொண்டுவந்து சட்டமாக்கியவர் தேவதாசி முறை ஒழிப்புச்சட்டமும், பெண்களுக்குரிய சட்டங்களும் சாதிக் கொடுமைகளுக்கு நிகரான சட்டங்கள்தான்.
பாபாசாகேப் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்:
1916 லேயே அமெரிக்காவில் படிக்கும்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தில் “இந்தியாவில் சாதிகள்’ அதன் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி என்ற ஆய்வேட்டை சமர்ப்பித்தவர். 1936 ல் “சாதி ஒழிப்பு “ என்ற நடைமுறை சாத்தியப்பாட்டுக்கான ஆய்வு நூலை வெளியிட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர். ஆரியர்களால இந்தியர்கள்மீது வலுக்கட்டாயமாக திணிப்பட்ட பின்னணியை ஆழமாக விளக்குகிறார் இந்த இரண்டு நூல்களிலும். சாதியை ஒழிப்பதற்கு பல வழிமுறைகளை விளக்குகிறார்.அவற்றில் “இந்திய சமூக அமைப்பை திருத்தி அமைக்கவேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்திற்குமுன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும்.” என்றும் “நீங்கள் எந்தத் திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலொழிய அரசியல் சீர்திருத்தமோ,பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது. சாதி, இந்துக்களை முற்றிலுமாக சீரழித்து சின்னா பின்ன மாக்கியுள்ளது.” என்பது உட்பட ஏராளமான ஆய்வுக் கருத்துகளை இந்திய மக்களின் சிந்தனைக்கு வழங்கி இருக்கிறார். அதோடு தனது வாழ்நாள் முழுவதும் சமூக ஒடுக்குமுறைக்கெதிராகவும், சாதியை ஒழித்து சமத்துவ சமுதாயம் காண்பதற்கு நேரடி களப்பணியில் ஈடுபட்ட மாபெரும் போராளி பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆவார்.
இந்நூலுக்கான அடித்தளங்களான
- இந்த நூலின் அட்டைப் படத்தில் பொறிக்கப்பட்டுள்ள இந்தியஅரசியல் சாசன முகப்புரை
- அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகளான 14, 15, 16, 17,19, 21, 46 ஆகியவைகள்.
- மேற்குறிப்பிட்ட மிகப்பெரிய அர்ப்பணிப்பு ஆளுமைகளோடு ஜோதிராவ் பூலே, சாவித்திரி பூலே, உஸ்மான் ஷேக், பாத்திமா ஷேக், பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் தியாகத் தடங்கள்
- நாங்குநேரியில் நடந்திட்ட மனதை வேதனைப்படுத்தும் நிகழ்வுகள்.
- இதையொட்டி நடத்திய கள ஆய்வு.
- இந்தக் கள ஆய்வையொட்டி “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பாரதிதாசனின் கவிதை வரிகள் தலைப்பில் பல இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரடங்கிய கருத்தரங்கங்களில் நடைபெற்ற ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் வழங்கிய உற்சாகச் சிந்தனை ஆகியனவாகும்.
அரசியல் சாசன முகப்புரையோடு நல்ல வடிவமைப்போடும், கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் கடுமையான உழைப்பில், சிந்தனா பூர்வமான தொகுப்போடு சிந்தன் புக்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலில் மொத்தம் 44 கட்டுரைகள் 216 பக்கங்களில் அடங்கியுள்ளன.
நூல் நோக்கம் பகுதி
நூல் நோக்கம் பகுதியில் நூல் தொகுப்பாளர் கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு விளக்கும்போது, பள்ளிகளில் படிக்கும்போதே மாணவர்கள் கற்றல் செயல்பாட்டைத் தொடங்கும் போதும், தொடரும்போதும் சமூகப் பாகுபாட்டைப் போக்கும் விதத்தில் கல்விச் சூழல் அமையவில்லை என்பதற்கு ஏராளமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்.
“அனைவரையும் கல்வி வளாகத்திற்குள் வரவழைத்து சமத்துவத்திற்கான புரிதல் கொண்ட கற்றறிந்த மாந்தர்களை உருவாக்குவதே சமூகநீதி. அதற்கு நேரெதிராக “வளாகமே இல்லாத கல்வி” என்ற நிலைக்கு இந்தியாவை இட்டுச் செல்லத் துடிக்கிறது கல்வி மறுப்பு அரசியலின் நவீன வடிவமான தேசியக் கல்விக் கொள்கை 2020”
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சமூகப் பாகுபாடுகள் ஆகியவை அனைவருக்கும் சமத்துவமான வாழ்க்கை முறைக்குப் பெரும் இடையூறாக அமைகின்றது.
‘’பாகுபாடுகள் நிறைந்த சமூகக் கட்டமைப்பில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் பாகுபாடுகளைக் களையும் பெரும் ஆற்றலைப் பெற கல்வி நிலையங்கள் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அத்தகைய பெரும் பொறுப்புடைய கல்வி வளாகங்களில் மாணவர்கள் சாதிய ரீதியாக அணி திரள்கிறார்கள் என்பது வேதனைக்குரியது. அன்பும் நேசமும் வளர வேண்டிய வயதில் வெறுப்பும் பகையும் மூள்கிறது என்பது மிகவும் வேதனை செய்தி”
”சாதி என்பது கடவுளுக்கே எதிரான, அறிவியலுக்குப் பொருந்தாத, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிரான ஒரு கருத்தியல். சாதி என்ற தவறான கருத்தியல் இன்று யூடியூப், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக மாணவர்கள் மனதில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெற்றோர்களை மீறி, ஆசிரியர்களை மீறி, மாணவர்கள் இத்தகைய சமூகச் சீரழிவு ஊடகப் பரப்புரையில் சிக்கிக் கொள்கின்றனர.”
சாதி ஒழிப்பைப் பற்றி விவாதிக்கும்போதும், இது சார்ந்த இயக்கங்களில் இறங்கும்போது, இட ஒதுக்கீடு இருப்பதால்தானே சாதிமுறை இருக்கின்றது. அதை எடுத்துவிட்டால் சாதி இருக்காதே என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். அதற்குச் சரியான பதிலாக முன்வைக்கிறார் கல்வியாளர். “சாதியின் அடிப்படையில்தான் காலங்காலமாகக் கல்வி மறுக்கப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டவர்கள் சமூக மற்றும் கல்விப் பின்தங்கலில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காகக் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கிட கொடுக்கப்படும் சான்றிதழை “சாதிச் சான்றிதழ்” என்று புரிந்து கொள்வது சான்றிதழ் வழங்கப்படும் நோக்கத்திற்கு நேரெதிரானது”. என்று விளக்குகிறார்.
” புத்தர், திருவள்ளுவர் உள்ளிட்ட சமூக விஞ்ஞானிகள் முன்வைத்த “சமூக உரையாடல்” கோட்பாட்டின் அடிப்படையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மக்களுடன் சாதி ஒழிப்பிற்கான உரையாடலைத் தொடங்குகிறது.”
”திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்டோபர்8, 2023 அன்று “சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி”
என்ற தலைப்பில் நெல்லைக் கல்விக் கருத்தரங்கமும்,. ஜனவரி 6 2024 அன்று அதே தலைப்பில் தென்காசி கல்விக் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது.
இந்தத் திட்டமிடலில் பங்கேற்ற ஆசிரியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இதே தலைப்பில் கட்டுரை எழுத வைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர்.
அதனடிப்படையில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் வைக்ககபட்டன. அந்தப்போட்டிகளில் பரிசுபெற்ற கட்டுரைகளையும் ஆசிரியர்கள், மற்றும் சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களின் கட்டுரைகளையும் இணைத்து இந்த நூல் ஆக்கப்பட்டுள்ளது” போன்ற காரணங்களையும் முன் வைக்கிறார்
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய” ”இந்தியாவில் சாதிகள் அதன் தோற்றம்” குறித்த ஆய்வுகளையும், சாதி ஒழிப்பிற்கான செயல் திட்டங்களையும், பாலின சமத்துவத்திற்கான ஆய்வு நூல்களையும் பாடத்திட்டத்தில் இணைத்து உயர்கல்வி பயில வரும் மாணவர்களைப் பக்குவப்படுத்தி சிறந்த ஜனநாயகப் பண்பு கொண்ட மாந்தர்களாக வளர்த்தெடுக்க அரசு மேற்கொள்ள வேண்டும்.” என்ற கருத்துகளுடன் இன்னும் பல கருத்துகளை தனது நூல் நோக்கம் பகுதியில் வடித்துள்ளார்.
அடுத்த பகுதியாகக் கருத்தரங்கிற்கும், பள்ளிகளில் பொது விழிப்புணர்வு மேடைகளிலும் பாடி நடனம் ஆடுதற்கும் ஒரு பாடல் தயாரிக்கப்பட்டது. அது பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் கல்வியாளர் பு. பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேரா. முனைவர் க.கணேசன், புலவர் சு. பழநிச்சாமி, தோழர் வே. மணி ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் சாதி ஒழிப்புக் கும்மிப் பாடல் தயாரானது. அந்தப் பாடல் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் சாதி ஒழிப்பிற்கான உறுதிமொழிகள் ஆசிரியர்களுக்கான உறுதிமொழிகள் பகுதி மிகவும் முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது. இந்த உறுதிமொழிகளை இரு தரப்பினரும் ஏற்றெடுக்கும்போது, நிச்சயமாக அவர்களின் சிந்தனையில் ஒரு ஈர்ப்பை உருவாக்கும். சமத்துவ சமுதாய கற்றல் கற்பித்தல் திசையை நோக்கி உந்தித் தள்ளும் விதமாக அமைந்திருக்கிறது.
நாங்குநேரியில் களப்பணியில் கண்டறிந்த உண்மைகளும், அரசிற்கு கோரிக்கைகளும் பானைச் சோற்றுக்குப் பருக்கைப் பதம்போல
பிஞ்சு நெஞ்சங்களில் சாதிய நஞ்சை வளர்க்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ற அடுத்த பகுதி.
இப்பகுதியில் நாங்குநேரியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே நடைபெற்ற வன்முறைத் தாக்குதல் குறித்து அப்பகுதியில் சென்று கள ஆய்வு செயததின் அடிப்படையில், கல்வியாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு தனது ஆய்வு முடிவுகளையும், தமிழ்நாடு அரசுக்கு பல பரிந்துரைகளையும் வழங்குகின்ற அறிக்கையாக வடிவமைத்திருக்கிற பகுதி மிகவும் விரிவாக அமைந்திருக்கிறது.
”ஊரின் பெருமை, முன்னோரின் தியாகம், ஊரின் வளர்ச்சு ஆகியவற்றைக் குறித்து ஊர்த் திருவிழாக்கள் பேசுவதில்லை. அதற்கு நேரெதிராக, ஆதிக்க சாதியின் தலைவர்கள் தங்களின் பிடியிலிருந்து தனது சாதியைச் சார்ந்த மக்கள் விலகிவிடக் கூடாது என்ற நோக்கில் சாதிய உணர்வைத் தூண்டுவது, சாதிப் பெருமையைப் பறைசாற்றும் விதமாக நிகழ்வுகளை அமைத்துக் கொள்வது, விளம்பரப் பலகையில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் விதமாக படங்களையும் வாசகங்களையும் இடம் பெறச் செய்வது என்ற போக்கு மிக அதிகமாக உள்ளது.”
”தமிழ்நாடு அரசு எஸ் சி எஸ் டி சிறப்பு உட்கூறுத் திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் ஆண்டில் 17,076 கோடி ரூபாய் ஒதுக்கி நிறைவேற்றி வருகிறது. இவ்வாறான திட்டங்கள் மாநிலத்தில் இருந்த போதிலும் நாங்குநேரி போன்ற பட்டியலின குடியிருப்புப் பகுதிகளில் இத்திட்டத்தின் மூலம் ஒரு பட்டியலின பயனாளி கூட பயனடைந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. பட்டியலின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள், தாட்கோ கடன் தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு நிலம் வாங்கும் திட்டங்கள் குறித்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்”
“இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 19 மற்றும் 21 முழுமையாக அதன் மெய்யான பொருளில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றால் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15, 16, 17 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சமூக சமத்துவத்தை உருவாக்க போதிய முயற்சி மேற்கொள்ளத் தவறியதே நாங்குநேரியில் பட்டியலின மாணவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு அடிப்படைக் காரணம் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்”
“ஒரு சாதியில் ஒருவர் பிறந்திருந்தாலும், சாதிய உணர்வு இல்லாமல் அவர் வாழ்வதைச் சாதியச் சங்கங்களும், அதன் தலைவர்களும் அனுமதிப்பதில்லை. சாதியின் பெருமையைப் பாராட்டவும், தனது தலைமையை ஏற்று நடக்கவும் மக்களை சாதி ரீதியாக அணி திரட்டி வைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு மக்களைச் சாதி ரீதியாக அணி திரட்டி வைத்திருப்பதால் தேர்தல் காலத்தில் தனது செல்வாக்கைக் காட்டி அரசியல் கட்சிகளிடம் பேரம் பேச முற்படுகின்றனர்”என்று பொதுவாக சாதியை மக்களிடம் நிலைநிறுத்த நிகழ்ந்து வரும் புறக் காரணியாகும். இந்தப் போக்கும் இளம் மாணவர்களிடமும் செல்வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது.
நாங்குநேரிப் பகுதியில் இளம் மாணவர்கள் மத்தியில் சாதியப் பாகுபாட்டு வன்முறைச் நிகழவு உணர்த்துவது என்ன? என்பதற்கானச் சூழலை விளக்குகின்ற ஏராளமான உற்றுநோக்கல்களைப் பதிவு செய்திருக்கிறது. அவற்றில் சில அம்சங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.
அப்பகுதியில் வாழ்கின்ற பட்டியலின மக்களின் சமூகப் பொருளாதார நிலையை சுட்டிக்காட்டுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனையும், தனது அண்ணனை வெட்ட வந்த அரிவாளைத் தடுத்து தங்கள் இருவரின் உயிரையும் காத்த தங்கையையும், இவர்களின் தாயாரையும் பார்த்து கேட்டறிந்து விபரங்களையும் எடுத்துக்காட்டுகிறது.
தாக்குதலை நடத்திய பெற்றோரையும் பார்த்து அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும் முன்வைக்கிறது.
தாக்குலுக்குஉள்ளான மாணவர்களும், தாக்கிய மாணவனும் படிக்கும் பள்ளியில் சென்று தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்களையும் சந்தித்து கேட்ட கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது அறிக்கை.
தாக்குதலுக்கு உள்ளாகி கடுமையாகத் தனது உடல்நிலையில் பாதிப்படைந்த மாணவர் மாணவிக்கு அவர்களின் மேற்படிப்புக்கும், பாதுகாப்புக்கும் அவர்களது குடும்பத்திற்கு வாழ்வாதாரத்திற்கும் உதவும் வகையில் அரசுக்கு நியாயமான கோரிக்கைகளை விளக்கமாக வைக்கிறது அறிக்கை.
சாதிய ரீதீயான வன்கொடுமைகளைத் தடுக்க அரசு மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள்
மாநிலப் பள்ளிக கல்வித்துறை, மாவட்டக் கல்வித் துறை, சமூகப்பாதுகாப்புத் துறை, சமூகநலத்துறை, உள்துறை, வருவாய்த்துறை ஆகியோருக்கான வேண்டுதல்கள்.
“சாதிய வன்மத்தின் விளைவாகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவருக்கு சட்டப்படிப்பும், தார்மீக பொறுப்பின் அடிப்படையிலும் மாணவரின் உயர்கல்விக்கான செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். அண்ணன் தங்கை இருவரின் கல்விக்கும் தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும். மாணவரின் கல்வி முழுமை பெற்ற பின்னர் அவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.”
அண்ணனை வெட்டும்போது, தானும் வெட்டைக் கையில் வாங்கிக் கொண்டு தடுத்து அண்ணனின் உயிரைக் காப்பாற்றப் போராடிய குழந்தைக்கு தமிழ்நாடு அரசு உரிய விருதினை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை முன்வைக்கிறது.
”கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் தாக்கிய மாணவர்கள் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தப்படும் அதே வேளையில் அவர்களின் பள்ளிப்படிப்பை அவர்கள் தடையில்லாமல் முடிக்க அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றத்தை உணர்ந்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க, அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்களைச் சீர்திருத்துவது அரசின் கடமை. படிப்பையும் முடித்து, தண்டனைக் காலமும் முடிந்த பின்னர் அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வேலை அல்லது சுயதொழில் செய்வதற்கு அனைத்து உதவிகளையும அரசு செய்ய வேண்டும்.”
”பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட பதவிகள் அதிகார மையங்கள் அல்ல. அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவச் சமூகத்தைக் கட்டமைக்கும் கடமைமிக்க உயர் பொறுப்புகள் என்பதை உயர் அலுவலர்கள் உணர்ந்தால் மட்டுமே பள்ளிக் கல்வித்துறை பொறுப்புமிக்க இந்திய குடிமக்களை, சமூக அக்கறை கொண்ட மக்களை உருவாக்க முடியும்” போன்ற வேண்டுதல்களோடு ஏராளமான கண்டறிந்த உண்மைகளையும் கோரிக்கைகளையும் இந்த அறிக்க முன்பவைக்கிறது.
பள்ளிகளில் தொடங்கியிருக்கும் சாதியப் பாகுபாட்டுவெறிச் சிந்தனைக்கு வித்திடக்கூடிய சமூகப்புறச்சூழலையும் விளக்குகிறது. பள்ளிகளில் பாடத்திட்டங்களில் சாதி ஒழிப்பு குறித்து அறிவியல் பூர்வமாகவும், சிந்தனையை மேம்படுத்தும் விதமாகவும் சேர்ப்பது ஆகிய அம்சங்களில் 36 கோரிக்கைகளை அறிக்கையாக அரசிடம் முன்வைக்கிறது. வாசகர்களாகிய பொது ஜனங்களும் அறிவி ஜீவிகளும் முற்போக்குச் சிந்தனாவாதிகளும் கருத்தில் எடுத்துக்கொண்டு ஒன்றுபட்டு செழுமைப் படுத்த வேண்டிய கோரிக்கைகள்தான்
சிறப்புக் கட்டுரைகளின் பார்வையில் சாதி ஒழிப்பு
கருதுக செயல்படுக கட்டுரை:
சாதியை விரட்டுவதற்கு தங்கள் கவிதை வேள்வி மூலமும், சிந்தனை செயல்பாடுகளின் மூலமும் வழிகாட்டிய பேராளுமைகளான திருவள்ளுவர், வள்ளுவர், ஔவையார், திருமூலர், மாணிக்கவாசகர் தந்தை பெரியார், பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆகியோரின் மனதை சுண்டியிழுக்கும் வழிகாட்டுகளை மனதில் படும்படியாக “கருதுக செயல்படுக” எனும் தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பேரா. பி. இரத்தினசபாபதி கட்டுரை வடித்துள்ளார்..
சாதி ஒழிப்புக்கான இயக்கத்திற்கும், காலங்காலமாக கல்வியிலும் சாதிய ஒடுக்குமுறையென்ற இழிவிலும் வீழ்ந்தோரை உயர்த்திவிட முன்னுரிமை வழங்கும் சான்றிதழ் வழங்குவதற்கும் சம்பந்தமில்லை என்பதை பளிச்செனச் சுட்டிக்காட்டுகிறது.
சாதிப்பற்று என்ற பெயரில் இளம் நெஞ்சங்களில் சாதிவெறி என்ற நஞ்சைத் தெளிக்கும் வஞ்சகத்தை சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரும் அகற்ற முன்வரவேண்டும் என்ற அறைகூவலை இலக்கியச் சுவையோடு முன்மொழிகிறது “கருதுக செயல்படுக” கட்டுரை.
கணியன் பூங்குன்றனாருக்கு ஊலகெல்லாம் உறவினர் – ஆப்பிரிக்காவில் அதன் வேர்:
”கணியன் பூங்குன்றனாருக்கு உலகெல்லாம் உறவினர்– ஆப்பிரிக்காவில் அதன் வேர்” என்ற தலைப்பில் பேராசிரியர் பா. தயானந்தன் அவர்களின் நீள் கட்டுரை காலத்திற்கேற்றபடி இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
“நம்மைப் போன்ற நவீன கால மனித இனம் ஆப்பிரிக்காவைத் தவிர வேறு எங்கும் வாழாத காலம் அது. ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம் என்று ஏளனம் செய்து, காலனித்துவப்படுத்தி, ஒரு கோடிக்கும் மேல் தங்கள் சொந்த தொலைதூர உறவினர்களை அடிமைப்படுத்தியவர்கள் உட்பட, ஆப்பிரிக்கா அனைத்து மனிதர்களின் பிறப்பிடமாகும்” என்று கட்டுரை தொடங்குகிறது.
நான் யார்? என்ற கேள்வியை நாம் ஒவ்வொருவரும் கேட்டால் அறிவியல் ரீதியாக பிரமிக்கத்தக்க அளவில் புதையல் புதையல்களாகப் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன இந்தக் கட்டுரை மூலமாக.
”இன்று உலகில் வாழும் 800 கோடி மக்கள் கடந்த காலத்தில் வாழ்ந்த சுமார் 14000 கோடி மக்கள் இவர்கள் எல்லோருக்கும் அந்த அம்மாவின் மைட்டோகான்ட்ரியா மட்டும்தான் பரம்பரையாக தொடர்ந்து வந்துள்ளது.” என்பதை விளக்குகிறது.
”சிற்றினம் (Species ) முதன் முதலில் 300000 ஆண்டுகளுக்கு முன்பு அழகான ஏராளமான பல்லுயிர்களும் மற்றும் உணவுகளும் நிறைந்த அந்த நிலத்தில்தான் தோன்றியது” என்றும் “ இன்று உலகம் முழுவதும் இருக்கும் சுமார் 350 கோடி ஆண்களிடமும் ஆப்பிரிக்க முதல் தந்தையின் Y- குரோமோசமாகத்தின் இருக்கிறது” என்றும் இன்று வாழும் உலக மக்கள் அனைவருக்கும் ஆதித் தாயும் தந்தையும் ஆப்பிரிக்காவில்தான் தோன்றினார்கள் என்பதைப் புரிய வைக்கிறது கட்டுரை.
சுமார் 30000 ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து சில குழுக்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். இவ்வாறு மனிதக்குழுக்கள் கண்டம் விட்டு கண்டம் பரவுவதற்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடித்திருக்கின்றன என்று சுட்டுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டிற்கு பழமையான மனித எலும்புகள், மண்டை ஒடுகள் அல்லது மற்ற திசுக்களிலிருந்து டி என் ஏ வைப் பிரித்து ஆராய்ச்சி செய்து முழு மரபணுத் தகவல்களை வரிசைப்படுத்தும் ஆய்வு அறிவியல் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த ஆய்வின் மூலம் அனைத்து மக்கள் குழுக்களுமே ஓரளவு வேறு சில குழுக்களோடு உறவு கொண்டவைதான் என்று மரபணு நிபுணர்கள் உண்மைகளைக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.
இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கும்போது ஆப்பிரிக்காவில் தோன்றிய மக்கள் குழு முதல், இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இன்று வாழ்கின்ற மக்கள் குழு வரை கலப்பில்லாத மக்கள் குழு என்று எதுவும் இல்லை என்பதை அறிய முடிகிறது. சாதி என்பது பொய்யாய் பழங்கதையாக, ஒரு ஆதிக்கக் குழு திட்டமிட்டு, தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு பலரை அடிமைப்படுத்துவதற்காகத்தான் உருவாக்கப்பட்டது என்று அழுத்தமாக சிந்தனையில் ஒடிவரும். தனித்துவத் தூய்மை என்பது எந்த மக்கள் குழுவுக்கும் இல்லை என்பதே அறிவியல் உண்மையைப் பளிச்சென வெளிப்படுத்துகிறது..
அறுபதாயிரம் ஆண்டு காலத்தில் உருவான மரபணு மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை, ஆரியர்களின் வருகை மேலும் பன்முகத் தன்மையை, பல மடங்கு பெருக்கியது. அதேசமயம் இந்தியா என்றாலே “சாதி” நினைவுக்கு வரும் அளவுக்குத் தனித்தன்மை வாய்ந்த நாடாகவும் இந்தியா மாறியது. பல்லாண்டு கலப்பு மணங்களால் விளைந்த மரபணு பரிமாற்றம் இன்றைக்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் முடிவுக்கு வந்தது. நான்கு வர்ண அமைப்பு, சாதி அமைப்பாக உருவெடுத்தது. மனுவின் கருத்துகளும், சட்டங்களும், கட்டுப்பாடுகளும், சமூகத்தில் கடுமையான படிநிலை ஒழுங்கை அமல்படுத்தியது. அகமணம் பெருகத் தொடங்கி பல ஆண்டுகளில் படிப்படியாகச் சாதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதிக்க அதிகாரம், நாடெங்கும் பல்வேறு இடங்களில் ஆட்சிசெய்த அரசர்கள் பல்வேறு காலங்களில் சாதி அமைப்பை நிலைநிறுத்தினார்கள். இந்த தீமை இன்னும் நம்மோடு வாழ்கிறது. சாதி அமைப்பு, அடிமைத்தனம் இவை இரண்டுமே சக்திவாய்ந்த சமூகச் சூழ்ச்சியில் பிறந்தவை. இரண்டும் மரபணு வேறுபாடுகளைத் தவறாக முன்வைத்து, மக்களைப் பிரிப்பதை நியாயப்படுத்துகின்றன” என்று வாசிப்போரை தெளிவான சிந்தனைக்கு வரவழைக்கிறது.
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்:
”ஒரு தாய் மக்கள் நாம் என்போம்” என்ற பேரா. முனைவர் கு. இரவிக்குமார் அறிவியல் செயல்பாட்டாளர் வடித்த கட்டுரை சார்லஸ் டாரவினின் பரிணாமக் கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டது. உயிரினங்களின் பரிணாமத்தை ஆய்வு செய்த உயரிய முயற்சிகளை விவரிக்கிறது. அவர் கண்டறிந்த நுட்பமான பல விபரங்களைத் தருகிறது.
“ நாம் இப்போது பார்க்கும்போது உயிரனங்கள் அனைத்தும் முன்பிருந்த உயிரினங்களிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தவை. இது போன்ற புதிய உயிரினங்கள் உருவாவதற்கு ஆதாராமாக இருப்பது இயற்கைத் தேர்வு. ஒரு உயிரினத்தின் வாழ்விற்குச் சிறப்பாக உதவும் உட்கூறுகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஒரு கட்டத்தில் ஆரம்பகால உயிரினங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு புதிய உயிரினமாக அவை பரிணமிக்கின்றன” என்பதை மையப்படுத்துகிறது இக்கட்டுரை.
இந்தக் கோட்பாடு அடிப்படையில் சமீபத்திய ஆய்வுகளை கட்டுரை குறிப்பிடும்போது “எல்லா மனிதர்களும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றியுள்ளோம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளின் மூலம் நம்மால் இதை இன்று சான்றுகளுடன் நிறுவ முடியும் என்று விவரிக்கிறது.. இக்கட்டுரை. காலங்காலமாக பிராமணியத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சாதியெனும் நோயைத் தகர்ப்பதற்குச் சிந்திக்க வைக்கிறார் கட்டுரையாசிரியர்.
சமூகக் கட்டமைப்பும் கற்றல் செயல்பாடுகளும்:
ஆசிரியர் க. பிச்சைக்கனியின் “சமூகக் கட்டமைப்பும் கற்றல் செயல்பாடுகளும்” என்ற கட்டுரை கற்றல்–கற்பித்தல் செயல்பாட்டில் சாதி ஒழிப்புச் சிந்தனையை எவ்வாறு ஊட்டுவது என்பதைப் பற்றி விவரிக்கிறது.
“ ஏன்தான் இங்கு மனிதனாகப் பிறந்தோம்? நம்மை நாடு கடத்தி விட்டால் நன்றாக இருக்கும்” “ எத்தனை முறை சாகடிப்பீர்கள்? “என்னிடத்தில் இருந்து பார். என் வலி உனக்குப் புரியும்” போன்ற வெளிப்பாடுகளையும் சாதியால் பாதிக்கப்பட்டவர்களிடம் காண முடிகிறது” என்று சாதி நோயின் பாதிப்புத் தளத்தைச் சரியாக இனங்காட்டி துவங்குகிறது இவரின் கட்டுரை.
“இந்தச் சூழல்களில் அறிவியல் துணைகொண்டு கல்வியால்தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அறிவை வளர்க்க முடியும். சாதியெனும் சங்கடமான ஒரு கற்பனை பிம்பத்தைக் கல்வி நிறுவனங்களால்தான் தகர்க்க முடியும். என்ற நம்பிக்கையை விதைக்கிறார் கட்டுரையாளர்.
சாதியத் தீங்குகளை தகர்க்கும் வேலைகள் நடைபெறுகிறதா? என்று கேளவியைக் கேட்டு, அதற்குத் தகுந்த பதில்களை வரிசைப்படுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கிறது.
பாடத்திட்டமும் சமூகப் பயன்பாடும் எப்படி இருந்தால் மாணவ இளங்குருத்துகளிடம் சாதிய உணர்வை ஒட்ட விடாமல் செய்யலாம் என்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன் வைக்கிறது இவரின் கட்டுரை..
“சமூகத்தில் இருக்கின்ற சாதியை, மாணவர்களை உணரச் செய்து, சாதியை அறிவியல் பூர்வமாக அணுகி அதை எப்படித் தகர்க்க வேண்டும் என்பதை ஆசிரியர் பயிற்சியின்போது மிகத் தெளிவாகப் பயிற்சி வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் இந்தச் சமூகத்தைக் கட்டமைக்கும் பொறுப்புமிக்க சமூக விஞ்ஞானிகள் என ஒவ்வொரு ஆசிரியரையும் உணரச் செய்யவேண்டும்” என்பது உள்ளிட்ட நடைமுறை சாத்தியமுள்ள பல வழிகாட்டல்களை நம்முன் எடுத்து விளக்குகிறார் கட்டுரையாளர்.
ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர் கூட்டுப் பங்கேற்பின் வெளிப்பாடு:
“சாதியெனும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்ற பொருளில் 6-1-2024 அன்று தென்காசியில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் ஓவியப்போட்டிகளும், கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டன. பாரதி, பாரதிதாசன், வள்ளலார், ஆகியோரின் கவிதைகளில் சாதி சமத்துவ வரிகளிலும், உழைக்கும் வர்க்கமென அணிதிரள்வோம் என்ற பொதுத் தலைப்பிலும் கட்டுரைகளுக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டன. அதில் பெற்றோர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆசிரியப்பெருந்தகைகளும் கட்டுரை வழங்கினர். 31 சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து இந்த நூலில் இணைக்கப்பட்டிருக்கின்றன.
கட்டுரைகள் கவனப்படுத்தும் சிந்தனைத் துளிகள்:
”எதைச் சொல்வது, எதை விடுவது என்ற முடிவுக்கு வரமுடியாதபடி சாதி மதம் பற்றிய திணிப்புகளும் வன்முறைகளும் அவலங்களும் சமூக வரலாற்றில் நிரம்பியுள்ளன. இருந்தாலும் நாங்குநேரி சம்பவத்திற்குப் பிறகு சாதி, மதம் குறித்து வெளிப்படையான உரையாடல்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்’’. .“அறியாமை, மடமை ஆகிய இருளில் ஆழ்த்தி மக்களை அடக்குவதே ஆளும் வர்க்கத்தின் பணி. தங்களுக்கு எதிராகக் கலகம் செய்துவிடக் கூடாது என்று கருதிய ஆளும் வர்க்கத்தினரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கருவியே மதமாகும். உண்மைக்கும் அறிவியலுக்கும் புறம்பான கருத்துகளைக் கொண்டே மதங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. அனைவரும் பகுத்தறிவுடன் ஆராய்ந்து மதப்பிடியிலிருந்து விடுபட்டு மனிதனை மனிதனாக மட்டும் பார்க்கும் சமத்துவச் சிந்தனை வர வேண்டும்.
சாதி பேதங்களைக் கடுமையாகச் சாடும் சித்தர்கள் தடத்திலும், ”மதம் மக்களை மயக்கும் அபினாகும்” என்ற மார்க்ஸியத் தடத்திலும், வேத மறுப்புச் சிந்தனையின் பாதையிலும் சாதியைச் சாடுகிறார். “ஓடும் உதரத்தில்–வடிந்து ஒழுகும் கண்ணீரில்/ தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டோ அப்பா/ எவர் உடம்பிலும்–சிவப்பே இரத்தம் நிறமமப்பா /எவர் விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கை குணமமப்பா/ நெற்றியில் நீறும் மார்பில் நீண்ட பூணூலும் பெற்று இவ்வுலகில் எவரும் பிறந்ததுண்டோ அப்பா/” என்ற கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் சாட்டையடிக் கவிதையின் மூலம் சாதி ஒழிப்பை மையப்படுத்துகிறது இக்கட்டுரை. க.சிவசுப்ரமணியன், பட்டதாரி ஆசிரியர் செங்கோட்டை.(பக்கம் 130,132)
”இன்றும்கூட, நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஒரு ஊரில் அருகிலிருக்கும் சுடுகாட்டிற்குச் செல்ல, ஒரு தெருவழியே மற்றொரு பிரிவினர் செல்ல அனுமதிக்காமல் அவர்கள் பல மைல் தூரம் சுற்றி பிணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த மாதிரியான சூழல் ஒரு ஊரில் என்றில்லாமல் இது பரவலாக பல ஊர்களிலும் இருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தியாக உள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்திலும் மிகக் கடுமையாக முன்னேற்றமடைந்து விட்டோம் என்று பெருமை பேசும் இந்தக் காலத்திலும், மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு பார்க்கும் இந்தக் கொடூரமான நிலை தொடரலாமா? இந்த நிலையை அறிந்த மாணவர்களில் ஒரே பள்ளியில் வந்து படிக்கும் குழந்தைகளின் மனநிலை என்னவாக இருக்கும்? இவர்களின் மனக் காயத்திற்கு மருந்திட வேண்டாமா?” ”பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களைப் பாரட்டி கௌரவிப்பதிலும் ஒரு பிரிவினர் மாணவர்களை குடத்திலிட்ட விளக்காக இருட்டடிப்பு செய்யும் பழக்கமும் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களிடமும் உள்ளது. இதுவும் தீண்டாமைக் குற்றத்தின் ஒரு வடிவம்தான்” ”சமூக ஏற்றத் தாழ்வுகளால் மனம் நொந்து போயிருக்கும் குழந்தைகளின் மனதிற்கு தைரியமூட்டும் வகையில் நம் கற்றல் கற்பித்தல் செயல்பாடு அமைய வேண்டும்” என்பதை விளக்குகிறது. த. கலைவாணி, பெற்றோர், மூன்றுவாய்க்கால் புதூர், செங்கோட்டை(பக்கம்109)
பாகுபாடு கூடாது என்பதை ஆசிரியர்கள்தான் கற்றுத்தர வேண்டும். வகுப்பறையில் உள்ள ஆசிரியர்களின் பாகுபாடு மிகுந்த வேதனைக்குரியது. எங்களை நிர்வகிக்கும் அனைத்து நிலைகளிலும் ஊர், பஞ்சாயத்து, ஆசிரியர்கள், அதிகாரிகள் என அனைத்து நிலைகளிலும் சாதியப் பாகுபாட்டைப் பற்றி வகுப்பு எடுக்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுகிறார் மாணவி. பி க சாதனா, 10 ம் வகுப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, சீவநல்லூர்(பக்கம்113)
”பிறவியில் உயர்வு தாழ்வு சொல்லல் மடமை–இந்த
பிழை நீக்குவதே உயிர் உள்ளோரின் கடமை” என்ற பாவேந்தரின் கவிக் குமுறலையும்,“ மதவாதம் ஒழிந்தால் சாதி ஒழியும்! சாதி ஒழிந்தால் சமத்துவம் பிறக்கும்
வேறுபடும் சமயம் எல்லாம் புகழ்ந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட்டல்லால் மாறுபடும் கருத்தில்லை” என்ற தாயுமானவர் கவி வரியையும், பாரதியின் கவிவரியும், “சாதி மனிதனைச் சாக்கடையாக்கும்” என்ற பெரியாரின் சிந்தனையும் அனைவரும் உட்கொள்ள வேண்டும். என கவித்துமாக விளக்குகிறது கட்டுரை டே.வசந்த செல்வி தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, அழகாபுரி, குருவிகுளம் (பக்கம் 124)
எவனொருவன் எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் காண்கிறானோ அவன் உள்ளததில்தான் இறைவன் குடிகொள்வார். என்றும் “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக” என்றும் சாதிக்கு சவுக்கடி கொடுத்த வள்ளலாரின் கனவும், சித்தர்களின் சமத்துவ சிந்தனைக் கனவும் சாதிக்குச் சமாதி கட்டும் என்பதை கட்டுரையில் மையமாக்குகிறார். ச.வடிவம்மாள் எம் ஏ பி எட், ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் (பக்கம்126).
. நாம் தினமும் ஏற்கும் உறுதிமொழிக்குப் பொருள் கூறுவது மட்டுமல்லாமல், இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் இதன் பொருளை விளக்கிக் கூறுவதன் மூலம், சாதியை அடிப்படையாக வைத்து பிரிவினை பேசும் பெரியவர்களிடம், குழந்தைகளாகிய நாங்கள், தினமும் ஏற்கும் உறுதிமொழியில் “ இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள்” என்று கூறியிருக்கிறது. “எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்” என்றும் கூறியிருக்கிறது. அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ பிரிவினை பேசலாம்?என்று வினா தொடுக்கிறார் மாணவர். (பி. க.அகிலன் 7ஆம் வகுப்பு,அரசு உயர்நிலைப்பள்ளி,மேலச்செங்கோட்டை) (பக்கம் 115-116)
.“ நம்நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல தனியார் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி போதிய ஊதிய உயர்வு அளிக்காமல் அவர்களின் அடிப்’படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் அவர்களைப் போராட வைத்துப் போராட்டத் தலைமையைப் பிரித்து வேடிக்கை பார்த்து வருகிறது.
உழைக்கும் வர்க்கம் உயர வேண்டுமானால் அனைத்துத் துறைகளும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். உழைக்கும் வர்க்கம் வெற்றிபெற அனைத்து மக்களும் சாதி மதம் கடந்த ஒற்றுமையுடன் போராடிப் புரட்சி ஏற்படுத்தி வெற்றிபெற வேண்டும்” என போராட்டக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் சாதி மிகப் பெரிய தடையாக இருக்கிறது என்ற மார்க்ஸியப் பார்வையில் சாதி என்ற மனநோயை ஒழிப்பது அவசியம் என்ற முத்தாய்ப்பான கருத்தை முன்நிறுத்துகிறது கட்டுரை. க. ராஜ்குமார், இடைநிலை ஆசிரியர், கந்தசாமிபுரம்.(பக்கம்129).
நண்பர்களாக, சகோதரர்களாக வலம் வரவேண்டிய மாணவர்கள் சாதி மத சமய அடையாளங்களை நெற்றியிலும், கைகளிலும் அணிந்து கொண்டு தங்கள் வேறுபாடுகளைக் காட்சிப்படுத்தி நடைபோடுகிறார்கள். பள்ளி வளாகத்திற்குள்ளும் சமுதாயத்திலும் சில மாணவர்கள் சாதி, மத சமய குழுக்களாகவே திரிகின்றார்கள். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சிலர் பச்சோந்திகளாக அக்குழுக்களுக்குத் துணை போகின்றார்கள். என் சாதிக்காரப் பையனை, இந்தச் சாதிக்காரப் பையன் எப்படி அடிக்கலாம்? இந்தச் சாதிக்காரப் பையன் என் மகனை எப்படி இவ்வாறு அழைக்கலாம்? எனக் கேள்வி கேட்டு வம்புக்கு வந்து, தன் மகனின் சாதிக் கொம்பை சீவி விட்டு, பிஞ்சிலே நஞ்சைக் கலக்கும் பெற்றோர்கள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது கட்டுரை . இரா.சீதாலெட்சுமி, ஆசிரியர் வீரமாமுனிவர் ஆர் சி மேல்நிலைப்பள்ளி, தென்காசி(பக்கம்144)
”இப்பொழுது உள்ள நிலையில் சசாதி ஒழிய வேண்டாம் என்று கருத்துக் கொள்ளும் வஞ்ச நெஞ்சினரும், கயவரும், குமுகாயக் கொடியவர் இந்த நூற்றாண்டு அறிவியல் காலத்திலும் ஓரளவில் இருக்கவே செய்கின்றனர் என்பது மிகவும் வருந்துவதற்குரியது”…….சாதியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எண்ணம் விருப்பம் நமக்கு இருக்குமானால் அது ஒழியாதா என்ன? அஃதென்ன பூதமா? அல்லது மெய்ப்பொருளா? ஒழிக்க முடியவில்லை என்பதற்கு உண்மையாகவே இந்த வகையில் இன்னும் நமக்கு தெளிவான அறிவு வளரவில்லை. பொதுமக்களும் புலமக்களும் ஒன்றாகத் துணை நின்றால் ஒழித்து விடலாம்” என்ற நம்பிக்கையை விதைக்கிறது.. அ.முகமது தௌபிக் பன்னிராண்டாம் வகுப்பு ஏ பிரிவு (பக்கம்173)
”200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தாத்தாக்களின் பெயர் தெரியாத நாம்தான் 2000 வருடங்களுக்கு முன்பு எவனோ ஒரு ஆரியன் வைத்த சாதிப் பெயரை கொடி பிடித்துக் கொண்டு இருக்கிறோம்” சி. அருணாச்சலம் 12ஆம் வகுப்பு வீரமாமுனிவர் ஆர். சி மேல்நிலைப்பள்ளி தென்காசி(பக்கம்194)
”மனித குலத்தில் நான்கு வருணங்களாகப் பிரித்து அவற்றிற்கு உயர்வு தாழ்வு கற்பித்த கொடுமை நாட்டில் பரவியது. கடவுளின் முகத்தில் தோன்றியவர் ஒரு வருணத்தார், தோளில் தோன்றியவர் ஒரு வருணத்தார் இரண்டாம் வருணத்தார், இடையில் பிறந்த வருணத்தார் மூன்றாம் வருணத்தார், தொடையில் பிறந்தவர் நான்காம் வருணத்தார் என்று அயல் மொழியாளர் (ஆரியர்) கற்பித்த நெறி நாடெங்கும் புகுந்து பரவி விட்டது. பலர் இதை உண்மையாக இருக்கக்கூடும் என நம்பி விட்டனர் என்றும்,
”சாதி என்பது ஓர் இருட்டு. அந்த இருட்டு அகன்றாலே உலகம் விடியும். இதைப் பாரதிதாசன் “ வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு
தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி” என்று பெண் குழந்தையைத் தாலாட்டும் பாடலாக வடித்துள்ளார். சாதி எங்கே பெரிய தடை தெரியுமா? ஆணும் பெண்ணும காதலிப்பார்கள், உயிர் ஒன்றிய நிலையில் அவர்களிடையே அன்பு பெருகும். காதல் செழிக்கும். அப்போது காதல் என்ற பச்சை மரத்தை வெட்டச் சாதிக் கோடாரி நீளும்” அ. முத்துகோபால் 11 ம் வகுப்பு, வீரமாமுனிவர் ஆர் சி மேல்நிலைப்பள்ளி தென்காசி(பக்கம் 163-164)
”அரசு ஊழியர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதிப்பெயரைச் சேர்க்கக் கூடாது என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
அரசு ஆளுமைக்கு உட்பட்ட பொது இடங்களில் அரசு விழாக்களில், அரசு ஆவணங்களில் சாதிப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது.
பொதுத் தலைவர்களை சாதி அடையாளங்களுக்குள் அடைத்து அரசியல் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.
இந்நிலத்தை ஆண்ட மன்னர்களைத் தங்களது சாதியைச் சேர்ந்தவர்கள் என்று உரிமை கொண்டாடுவதைத் தடுக்க வேண்டும்”. என்ற ஆதங்கத்ததை வெளிப்படுத்துகிறது.சி. அருணாச்சலம், 12ம் வகுப்பு சி பிரவு, ஆர் சி மேல்நிலைப்பள்ளி, தென்காசி( பக்கம் 194)
முடிவுரையாக
214 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் உள்ள கட்டுரையாளர்கள் வெளிப்படையாக மனந்திறந்து கருத்துகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி, தென்காசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நடத்திய கருத்தரங்கம், மற்றும் கலந்துரையாடலுக்கான விரிவான அழைப்பிதழ் இந்த நூலில் இணைக்கபட்டிருக்கிறது. இந்த இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்து சமூக மக்களின் முழு ஆர்வ பங்கேற்போடு நடைபெற்றிருக்கின்றன.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் பாடல் மாகவி பாரதியின் பெண் கும்மிப் பாடலைத் தழுவி ”பேதத்தை வளர்த்த சாதியை ஒழிக்க” கூட்டுத் தயாரிப்பில் உருவானது. இசையமைத்துப் பாடி பதிவு செய்த பாடலுக்கு கருத்தரங்கங்களில் கலந்து கொண்ட மாணவிகளால் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மக்களை வெகுவாக ஈர்த்தது.
அந்தப் பாடலை சமூக ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விழாக்கள் சமயத்தில் மாணவர்களைப் பயன்படுத்தி நிகழ்த்துவதற்கு மிகவும் பொருத்தமான ஒன்று ஆகும்.
கட்டுரைகளை ஊன்றிப் படித்தால் கலந்துரையாடல் மாதிரியே நமக்குப் புலப்படும். ஒருவர் ஒரு கட்டுரையில் அவர் மனதில் பட்ட சமூகப் பொதுப்புத்தியில் இருப்பது வெளிப்படும்போது, இன்னொருவர் கட்டுரையைப் படிக்கும்போது அதற்குச் சரியான எதார்த்தமான அல்லது அறிவியல் பூர்வமான பதில் வருவதாகவே அமைந்திருக்கிறது. வாசிப்பவர்களால் பொருத்திப் பார்க்க முடியும் எனக் கருதுகிறேன்.
இந்த நூலைத் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை சார்பாகவும், தென்காசி மாவட்ட மாணவர்கள் சார்பாகவும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
அரசு பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கருத்தரங்கங்கள் சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்தியுள்ளது.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறப்புக் கட்டுரைகளையும், ஆசிரியர் மாணவர் பெற்றோரின் கட்டுரைகள் சிலவற்றை பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்குப் பொருந்தும்படி அரசு நினைத்தால் அமைக்க முடியும்..
தமிழ்நாடு அரசு 1989-90 ஆண்டுகளில் எண்ணறிவும் எழுத்தறிவும், விழிப்புணர்வும் அடங்கிய அறிவொளி இயக்கம் நடத்தியதைப் போல தமிழ்நாடெங்கும் ”சாதி ஒழிப்பு” இயக்கம் நடத்துவது சீர்திருத்தவாதிகளின் கனவை நனவாக்குவதோடு, இந்திய அரசியல் சாசனத்தை நாடெங்கும் பரப்பி இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிப்பது தமிழக சமூக – அரசியல் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்கும். தமிழ்நாட்டின் இச்செயல்பாடு இந்தியா முழுவதும் ஆக்கபூர்வமான தாக்கத்தை உருவாக்கும். நாடு சிறக்கும்.
சாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்
பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
சிந்தன் புக்ஸ்
பக்கம்: 216
விலை : 225
நூல் பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும்
புத்தகம் வேண்டுவோர் தொடர்புகொள்க:
Phone: 44 2433 2924
Bharathi Puthakalayam – 7, Elango Salai, Teynampet
Chennai – 600 018
நூல் அறிமுகம் எழுதியவர்:
பேரா. கணேசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அருமையான பதிவு. அரசுக்கும், ஆசிரியர் சமூகத்திற்கும், மாணவக் கண்மணிகளுக்கும் வழங்கியிருக்கிற கருத்துப் பகிர்வு. சற்று நேரம் செலவழித்து கூர்மையாகப் படித்து உள்வாங்கி சிந்தித்தால், இந்த நூலின் நோக்கம் நிறைவேறும். பதிவிட்டமைக்கு பாராட்டுதலும் நன்றியும்.