1)
VIP
———-
எந்த வேலையும் செய்யாத
எனக்கொரு வேலை
கொடுக்கப் பட்டிருக்கிறது
எந்த வேலையும் செய்யாத
என்னைக் கண்காணிக்கும்
வேலையை நீயே
தேர்ந்தெடுத்துக் கொள்கிறாய்
இருவரும்
வேலையில்லாமல் இருக்கிறோம்
என்னை
உனக்கு மட்டும் தெரிய
உன்னை ஊரே
அறிந்திருக்கிறது
ஒருவரிடம் கூட
முகம் காட்டிப் பேச முடியாத
வேலையில்லா நாட்களில்
எத்தனையோ வேலையற்றவரிடம்
எத்தனை முகத்தை
எப்படிக் காண்பிக்கிறாய் நீ?
உன்னைப் போன்றும்
என்னைப் போன்றும்
அவனும் வேலையற்றவனே
2)
நீளும் தூரங்கள்
—————————–
தூரங்களைக் கடக்க இயலாத
பாரங்களை
அருகிலுள்ள ஒரு நிறுத்தத்தில்
இறக்கிக் கொள்கிறேன்
எந்திரத்தால் ஆன
ஒரு மேய்ப்பாளன்
எனக்காகப் பாரம் சுமக்கட்டும்
கரங்களைச் சுமக்கும்
கழுத்தின் கம்புகள்
மேய்ப்பாளனுக்கும்
பாரம் சுமக்கும்
நேரங்களைப் பொறுத்து
பாரங்கள் மாறுபடும் உலகில்
எவை பாரங்களெனத்
தீர்மானிக்கப் படாத
செயற்கை நுண்ணறிவில்
எத்தனை தூரங்களென
மைல் கற்கள முன்னறிவிக்க
தானியங்கிக் கதவுகள் திறக்க
கடவுச் சீட்டிற்குச்
சில்லரைகள் காத்திருக்கின்றன
3)
எதையும் முதலில் இருந்து
தொடங்க முடியவில்லை
——————————————–
அந்தக் கிணறு நிறைய வேண்டும்
முதலில் கிணறு வேண்டும்
எதையுமே முதலில் இருந்து
தொடங்க முடியவில்லை
கிணறு நிறைய
மழை வேண்டும் மரங்கள் வேண்டும்
பஞ்சாயத்திற்கெல்லாம்
போக வேண்டாம்
அந்தக் கிணற்றுக்குள்
அதன் மூதாதையர்
முன்பொரு காலத்தின்
கிணறு நிறைந்த மழையில்
இடப் பெயர்ச்சியில்
தவறி விழுந்த கிணறு அது
மூதாதையர் விழுந்த கிணற்றிலிருந்து
வெளியேறத் தான்
அத்தனை சத்தமுமே அன்றி
பாம்பிற்குப் பால் வார்க்க அல்ல
இப்படிப் பட்ட
வட்டக் கிணற்றுக்குள்
வானை நிமிர்ந்து பார்க்கும்
மழைத் தவளைகளின்
அழையா விருந்தாளியாக
ஒரு பாம்பு தவறி விழுகிறது
எல்லாத் தவறுகளிலும்
ஒரு சரி இருக்கிறதென
நம்பிய பாம்பிற்கு
எல்லாத் தவளைகளையும்
விழுங்கிய பிறகு
சரியில் ஒரு தவறு இருப்பதும்
எதார்த்தமெனக்
காய்ந்து கொண்டிருக்கும் கிணறு
பாடம் நடத்துகிறது
இலவசமாக அறிவுரை
வழங்கிய கிணறு
இன்று காணாமல் போயிருக்கிறது.
4)
எதேச்சைகள்
————————
இறந்த பிறகு
அலறல்களுக்கு மத்தியில்
ஏதோ ஒரு கரம்
இமைகளை மூடி
உறங்க வைப்பது போல
வெட்டப்பட்ட ஆட்டின்
திறந்திருக்கும் கண்கள்
யாரையாவது தேடலாம்
எல்லோரின் கண்களும்
தராசை மட்டுமே பார்க்க
ஆட்டின் கண்கள்
சாலையை வெறிக்கின்றன
தராசுகளும்
இளங்கறி தேடும் முன் தொடைகளும்
வட்டமாக உறைந்த ரத்தக் கட்டிகளும்
ஆட்டின் கண்களுக்குப் பின்பே
மறைக்கப் பட்டிருப்பது
திட்டமிடப் படாத
எதேச்சையான ஒன்று என
தனியாகப் பிரித்தெடுத்த மூளைக்குத்
தகவல் அனுப்புகிறான்
கசாப்புக் கடைக்காரன்.
5)
முன்பொரு காலத்தில்
—————————————
வீட்டில் ஒரு விளக்குமாறு
வாங்கிய புதிதில்
செல்லமாகக் கிள்ளும்
முட்களை உதிர்த்துச் சென்றது
என்ன நினைத்தாளோ அம்மா
தரையில் தட்டித் தட்டி
முட்களை நீக்கி மூளியாக்கினாள்
குனிந்து பெருக்க கஷ்டப் படுவதால்
பிளாஸ்டிக் கைப்பிடியால்
கிரீடம் சூட்டி
குனியாமல் பெருக்கினாள்
உயரம் கூட்டிய விளக்குமாறால்
டிவி பார்த்துக் கொண்டே
வேலை நடந்தது
விளக்குமாறு தேய்ந்தாலும்
அம்மா நிமிர்ந்திருக்கிறாள்
என்கிறாள் கூனி
முன்பொரு காலத்தில்
எல்லோருக்கும் முட்கள் இருந்தன
6)
ஞானம்
————-
நேற்றைய மழையின்
ஈரம் காயாதிருக்க
நேற்றைய வெய்யிலையும் சேர்த்து
இன்று கொதிக்கிறது
சூரியன் ஸ்கொயட்
மழை
ஏன் நனைத்ததெனத் தெரியாமலும்
வெய்யில்
ஏன் சுடுகிறதெனத் தெரியாமலும்
ஈரம் காயும் முன்
நா வறண்ட குஞ்சுகளுக்கு
இன்னும் சிறகு முளைக்கவில்லை
மழையில் நனைந்த சிறகுகளை
உலர்த்த உதிர்த்து விட்டு
உருவம் தொலைத்த ஈசல்கள்
ஊர்ந்து செல்கின்றன
ஊர்ந்த தடமழித்த மழையிடமே
சிறகு வளர்க்கும் ஞானம் பெற்ற
எறும்புகள்

