சாதி - மூன்று நூல்களை முன்வைத்து | சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் | சாதி இன்று | சாதியும் நானும் - Saathiyatra Tamizhar Saathi Tamizhar - Saathi Indru - Saathiyum Nanum Anti Caste Based Book Review

“சாதியும் நானும்”, “சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்”, “சாதி இன்று” மூன்று நூல்களை முன்வைத்து – நூல் அறிமுகம்

சாதி – மூன்று நூல்களை முன்வைத்து

சமீபத்தில் வாசித்து முடித்த மூன்று நூல்கள் சாதி குறித்த நூல்கள் என்பது தற்செயலானது மட்டுமல்ல. அவற்றுள் எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிப்பித்த ‘சாதியும் நானும்’ என்ற அனுபவக் கட்டுரைகள் நூல் நீண்ட நாள்களாகத் தேடி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கிடைக்கப் பெற்றது. கூடவே மானுடவியல் ஆய்வறிஞர் பக்தவத்சல பாரதியின் ‘சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்‘ என்ற நூலும் வாசிக்க வேண்டிய பட்டியலில் இருந்ததால் அதையும் தேடி எடுத்தேன். இவற்றை நூலக அடுக்குகளில் தேடும் போது ‘சாதி இன்று’ என்ற தருமபுரி இளவரசனின் படுகொலையை (தற்கொலை என்று ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் விசாரணை ஆணையம் மற்றும் மாநில குற்றப்பிரிவு சிஐடி (CB-CID) விசாரணையில் உறுதி செய்யப்பட்டாலும் என்னைப் பொருத்தமட்டில் அது படுகொலையே) ஐவர் சேர்ந்து எழுதிய அறிக்கை நூல் ஒன்று கண்ணில் பட்டது. இதுவரை வாசிக்காத நூல் என்பதால் அதையும் எடுத்து வந்தேன். ஆக, திட்டமிடலும் தற்செயலும் கலந்த ஒரு தேர்வாக இம்மூன்று நூல்களும் கிடைக்கப்பெற்றன.

இம்மூன்று நூல்களையும் ஒரு சேர – அடுத்தடுத்து வாசித்து முடித்ததும், மூன்று நூல்களையும் முன்வைத்து ‘சாதி’ சார்ந்த எனது சொந்த அனுபவங்களையும் கொண்டு ஒரு விரிவான கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. அவ்வாறே முடிவும் செய்தேன். ஆனால், உடல்நிலை – மனநிலை போன்ற புற – அகக் காரணிகளால் அதற்கான சூழல் இப்போது வாய்க்கவில்லை என்பதால், இம்மூன்று நூல்களையும் முன்வைத்து ஒரு சிறு அறிமுகக் குறிப்பு மட்டும் எழுதிவிடலாம் என்று தொடங்கியுள்ளேன்.

தமிழ்ச்சமூகம் ஆதியில் ஐந்திணைகளில் வாழ்ந்த திணைக் குடியினரை நிலை குடியினராகவும் (நிலையாக ஒரே இடத்தில் வசிப்போர்), நிலைகுடிகளை அண்டி வாழந்த பாண் குடியினரை (பாணர்கள் சமூகம்) அலை குடியினராகவும் (பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து வாழ்வோர்) கொண்ட ‘குடி’ சமூகமாக இருந்தது என்றும், அது பாண் சமூகத்தை ஒரு துணைச் சமூக அமைப்பாக (para – social system) ஏற்றுக்கொண்டிருந்தது என்றும் இத்தகைய சமூக அமைப்பே அப்போதைய வீரயுகக் காலத்திற்கான தேவைகளை நிறைவு செய்வதாக இருந்தது என்கிறார் தனது நூலில் பக்தவத்சல பாரதி.

பின்னர் வேந்தர்கள் ஆட்சி வலுப்பெற்றவுடன் தமிழ்ச்சமூக அமைப்பு வேந்தரை மையமிட்டு வட்ட வடிவச் சமூகமாக (circular society – வேந்தர் மையமாக அமைந்து அவருக்குச் சேவை செய்யும் தொழில் புரிவோர் அவரைச் சுற்றி அமைவதாக) மாறியது என்றும், அதன் தொடர்ச்சியாக வேந்தனின் கட்டுப்பாட்டின் கீழுள்ள குறுநில மன்னர்கள், முதுகுடி மன்னர்கள், சீறூர் மன்னர்கள் திறை செலுத்தி வந்த காரணத்தால் தரநிலைச் சமூகம் (Rank Society) உருவானது என்றும், இந்நிலையே பின்னாளில் உருவான செங்குத்துப் படிநிலைச் சாதிமுறை சமூகத்திற்கு (hierarchical society) அடித்தளமாக விளங்கியது என்றும் பக்தவத்சல பாரதி தனது நூலில் சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் கொண்டும், அண்ணல் அம்பேத்கர், பிரஞ்சு ஆய்வாளர் ஹோகார்ட் (A.M.Hocart), பிரஞ்சு நாட்டு மானிடவியலர் துய்மோன் (Louis Dumont) ஆகியோரின் சாதி குறித்த ஆய்வுக் கோட்பாடுகளைக் கொண்டும் நுட்பமாக விளக்கிச் செல்கிறார்.

இறுதியாக, சாதிமுறை எவ்வாறு படிநிலை (hierarchy) வரிசைப்படுத்தப்பட்டு, ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடமிருந்தும் வேறுபடுத்திக் கொண்டும் விலகிக் கொண்டும் (separation) ஒரு சமத்துவமற்ற நிலையில் (inequality) இறுகிப் போனது என்றும் விளக்குகிறார்.

2012-ல் தருமபுரி இளவரசனின் படுகளப் பலிக்குப் பின்னர் தருமபுரி பகுதியில் வன்னியர்களால் திட்டமிட்டு தலித் குடியிருப்புகளின் மீதான வன்முறை தாக்குதல்களை ஒட்டி அதன் தொடர்ச்சியாக பா.ம.க. தலைமையில் ஆதிக்க சாதிகளை ஒருங்கிணைத்து ‘தலித் அல்லாதோர் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக சி.லட்சுமணன், ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ.பாலசுப்பிரமணியம், அ.ஜெகநாதன், அன்புசெல்வம் ஆகியோர் இணைந்து உருவாக்கி வெளியிட்ட அறிக்கையே ‘சாதி இன்று’ என்ற நூல்.

இந்நூலின் சில கருத்துகள் ஆய்வு நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் நாம் ஏற்கத்தக்க சில முக்கியமான கருத்துகளைத் (குறிப்பாக திராவிட அரசியலின் வளர்ச்சி எண்ணிக்கை பெரும்பான்மை இடைநிலை சாதிகளின் திரட்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டது உள்ளிட்டவை) தன்னகத்தே கொண்டிருந்தாலும், சில கருத்துகள் பொத்தாம் பொதுவாக எவ்வித ஆய்வுத் தரவுகளுமின்றி எடுத்துவைக்கப்படுவதால் அவற்றுடன் முரண்பட நேர்கிறது. குறிப்பாக, இடஒதுக்கீடு என்பது அம்பேத்கரால் இந்தியச் சூழலில் தலித் மேம்பாட்டுக்காக மட்டுமே முன்வைக்கப்பட்டதால், பிற்படுத்தப்பட்டோர் – மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்கிய மண்டல் பரிந்துரை மற்றும் செயலாக்கம், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை மோசடி போல நூலில் சித்தரிக்கும் போக்கு ஏற்கத்தக்கதல்ல.

நூல் நெடுக பார்ப்பனர்களைக் குறிக்கும் இடங்களிலும் அது குறித்து விளக்கும் இடங்களிலும் பிராமணர் என்ற வடமொழிச் சொல்லே குறிப்பிடப்படுகிறது – பார்ப்பனர் என்ற தமிழ்ச் சொல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இது இந்நூலின் ‘ஏற்பாட்டின்’ பேரில் அய்யத்தைத் தோற்றுவிக்கிறது.

அம்பேத்கரின் தீண்டப்படாதோர் x தீண்டப்படுவோர் என்ற சொல்லாடலே தலித்களுக்கு சரியான செயல்திட்டத்தை வழங்குவதாக இருக்கும் என்றும் திராவிட இயக்கத்தின் பிராமணர் x பிராமணரல்லாதார் சொல்லாடலானது தலித்துகளை அதில் உள்ளடக்காமல் இடைநிலை சாதிகளின் திரட்சிக்கே வழிவகுத்தது – வழி வகுக்கிறது என்கிற தொனியும் நூலில் காணக்கிடைக்கிறது.

இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், பிராமணரல்லாதார் இயக்கம் முற்றிலும் தலித்களை விலக்கி வைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. அது உண்மையில்லை. தலித்துகளையும் உள்ளடக்கிய செயல்திட்டத்தை கொண்டதே பிராமணரல்லாதார்/திராவிட இயக்கம். நடப்பில், இடைநிலை எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளின் ஆதிக்கம் ஏற்பட்டு அதுவே தலித்துகளுக்கு எதிரிடையாகவும் அமைந்துவிட்டதும் உண்மைதான்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின்னர் உருவான தலித் எழுச்சி வழியாக தலித் தனித்துவ அடையாள அரசியல் மையப்படுத்தப்பட்டு புதிய போக்குகள் உருவாகின. கூடவே, தமிழகத்தைப் பொருத்த மட்டில், அயோத்திதாசர், எம்.சி.ராஜா, மயிலை சீனி.வேங்கிடசாமி, இரட்டைமலை சீனிவாசனார் உள்ளிட்ட தலித் ஆய்வாளர்கள்/செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக திராவிட/பிராமணல்லாதார் இயக்கத்திற்கு முன்பிருந்தும் உடனும் தலித் அரசியல் செயல்பாட்டை முன்னெடுத்து வந்துள்ளனர்.

திராவிட/பிராமணரல்லாதார் இயக்கத்தை அதன் தொடர்ச்சியாகவும் உடன் விளைவாகவும்தான் பார்க்க இயலும். மாறாக, நூலில் சுட்டுவது போல, பிராமணர்கள் x வேளாளர்கள் அதிகார மோதல் முடியாட்சி காலந்தொட்டே இருந்து வருவதால், அதன் நீட்சிதான் திராவிட இயக்கம் என்ற முடிவு ஒரு பக்கச் சார்பாகத்தான் இருக்கமுடியும்.

இக்கட்டுரையில் முன்பாகக் குறிப்பிட்ட பக்தசத்சல பாரதியின் சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர் சிறு நூல் கூட சாதி குறித்த ஆய்வு நோக்கிலேயே வெளியிடப்பட்டிருக்க, இது வரை தமிழ்ப்பரப்பில் சாதி குறித்த முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை (என்று கண்ணை மூடிக்கொண்டு) ஆதங்கப்படும் ‘சாதி இன்று’ நூல் தனதளவிலேயே தனது கருத்துகளுக்கு உரிய ஆதாரங்களைக் காட்டவில்லை என்பது வருத்தமே.

இந்நூலில் குறிப்பிட்டவாறு சாதி குறித்த உருவாக்கம் தமிழ்ச்சூழலில் வட இந்தியாவைப் போல நால்வருண அடிப்படையில் உருவாகவில்லை என்பது உண்மையே. அதுபோலவே, சாதி – அதன் பரிமாணங்களை விளக்குகையில் அனைத்து விதமான தொழில், பொருளியல், மூலதனத் திரட்சி, (அதிகாரத்துடனான தொடர்பு கொண்ட) வாழ்முறை உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சொல்வதும் ஏற்கத்தக்கது.

அதே போல், திராவிட இயக்கத்தின் காரணமாக எண்ணிக்கை பெரும்பான்மை இடைநிலை சாதிகள் திரட்சி கொண்டு ஆதிக்க சாதிகளாக மாறி தலித்துகளுக்கு எதிராக நிற்கின்றன என்பதில் உள்ள உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்விடத்தில் அண்ணல் அம்பேத்கரின் ‘வாக்கு அரசியல் நடைமுறையில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தலித்துகளுக்கு எதிரிடையாகவே போய் முடியும்’ என்ற கருதுகோளையும் பா.ம.க. இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதையும் உடன்நோக்கலாம்.

மேற்சொன்ன இரண்டு நூல்களின் அடிப்படையிலும் கீழ்க்கண்டவாறு (மிக எளிமையாக) சில புள்ளிகளைக் கண்டடையலாம்.

தமிழ்ச் சமூகம் ஆதியில் ‘குடி’ சமூகமாக இருந்தது – பெரிய அளவிலான அல்லது இன்று போல் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் கொண்டதாகவும் இறுக்கமாகவும் இல்லை.

வேந்தராட்சியில் சாதியின் அடித்தளம் உருவாகிறது. குறிப்பாகப் பிற்காலச் சோழர் காலத்தில் சைவத்தின் பெயரில் பார்ப்பனீய அதிகாரமும் சாதியமைப்பும் அதன் நீர்மத்தன்மையில் இருந்து இறுகத் தொடங்குகிறது. பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம், தேவதானம் என்ற பெயரில் பெரும் நிலங்கள்/கிராமங்கள் தானங்களாக வழங்கப்படுகின்றன.

விசயநகரப் பேரரசு காலத்திலும் அதைத் தொடர்ந்த நாயக்கர்கள் ஆட்சியிலும் வடக்குக் கர்நாடகத்தில் இருந்து தேசாஸ்த பார்ப்பனர்களும், ஆந்திரப் பகுதியில் இருந்து நியோகி பார்ப்பனர்களும் தமிழகப் பகுதிக்குள் கொண்டு வரப்பட்டு பரவலாக ஆட்சி நிர்வாகத்தின் பல முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கப்படுகின்றனர்.

அப்போது உருவாக்கப்பட்ட பாளையப்பட்டுகள்/நாட்டுக்கரணங்களில் உள்ளூரில் அரசு நிர்வாகத்திற்கு ஏவலாளியாக இருந்த சாதிகளைச் சேர்ந்தோரும் (எ.கா. மறவர், அகமுடையோர்) நாயக்கர்களும் நிர்வாகிகளாக்கப்படுகின்றனர்.

இக்காலகட்டத்தில் சாதி அகமணமுறை, தீட்டு போன்றவை இறுக்கமடைந்து சாதியமைப்பு உறுதியானது.

பின்னர் காலனிய அரசு காலத்தில் நிர்வாக வசதிக்காக வடக்கைப் போலவே தெற்கிலும் நால்வருண மனுநீதி அடிப்படையிலான ‘இந்து’ மத உருவாக்கமும் அப்போது நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளை வகித்த பார்ப்பனர்களின் கருதுகோளின்படி மனு ஸ்மிருதி அடிப்படையிலும், ஆங்கிலேய அரசு தனது செயல்பாட்டு வசதிக்காகவும் பல குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ‘சாதி’களாக ஒன்று சேர்க்கப்படுகிறது. இதன்வழியே இன்றைய கெட்டிதட்டிப் போன சாதிமுறை நவீனமாகி நிறுவனமாகிவிடுகிறது.

பார்ப்பனர் x பார்ப்பனரல்லாதார் இயக்க வளர்ச்சியினாலும் வாக்கு எண்ணிக்கை அரசியலாலும் பார்ப்பனரல்லாத (அதில் தலித்தும் பெரும்பாலும் இல்லாத) இடைநிலைச் சாதிகள் எண்ணிக்கை பெரும்பான்மையால் அதிகாரத்துள் நிலை நிறுத்தும் வாய்ப்பு உருவாகி இன்றைய இடைநிலை ஆதிக்க சாதிகள் x தலித்துகள் என்ற நிலை உருவாகியுள்ளது.

இறுதியாக, பெருமாள் முருகன் பதிப்பித்துள்ள சாதியும் நானும் என்ற நூலில் கண்டபடி அவரவருக்கும் சாதிக்குமான உறவை/முரணை அனுபவப் பதிவுகளாக முன்வைக்கையில் சாதியின் இன்றைய நிலை குறித்தும் நவீன மனதில் சாதி ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். இந்நூலில் உள்ள பல்தரப்பட்ட மனிதர்களின் சாதி சார்ந்த சொந்த அனுபவங்களை வாசிக்கையில், அதன்வழி அவ்வாறான அறிதல் நமக்கு சாத்தியமாகிறது.

இந்நூலை வாசித்து முடிக்கையில் நமக்கும் சாதிக்குமான தொடர்பென்ன, நாம் சாதியோடு எவ்வாறு உறவு கொண்டுள்ளோம், சாதி நம்மை எவ்வாறு இயக்குகிறது என்று திறந்த மனதுடன் நேர்மையாக ஓர் உரையாடல் உள்ளத்துக்குள் உருவாகிறது. அதுவே ‘சாதியும் நானும்’ என்ற இந்நூலின் வெற்றி. நாமும் சாதி குறித்த நம் அனுபவங்களை ஒளிவு மறைவின்றி நேர்மையாக எடுத்து வைத்து அதன்வழியே விமர்சனபூர்வ அணுகுமுறையோடு அதைக் கடக்க முயல்வோம். சாதி கடந்த சமூகம் குறித்த தேவையை நம் சந்ததிக்கு அதன் வரலாற்றுக் கொடுமைகளுடன் எடுத்துரைப்போம். அதற்கு இந்நூல்கள் பேருதவி புரியும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர் – ஆய்வுக்கட்டுரைகள்
ஆசிரியர்: 
வெளியீடு:
விலை: 10% சலுகை விலையில்
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சாதி இன்று – ஆய்வுக்கட்டுரைகள்
ஆசிரியர்:ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்ட ஐவர் குழு
வெளியீடு:
நீலம் பப்ளிகேஷன்ஸ்
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

 

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சாதியும் நானும் – அனுபவக் கட்டுரைத் தொகுப்பு
ஆசிரியர்:பெருமாள்முருகன்
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்
விலை:
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 2 Comments

2 Comments

  1. முத்தழகு கவியரசன்

    சிறப்பான முன் வைப்பு. விரிவாக எழுத வேண்டும்.. நல்ல அறிமுகம்…. காத்திருக்கிறேன். மகிழ்ச்சி

    • அன்புச்செல்வன்

      நன்றி தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *