சாதியின் குடியரசு “நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்” என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிற “சாதியின் குடியரசு” என்கிற ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியது என்பதை அவரது அறிமுகவுரையை வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்ளலாம். தமிழில் எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார் ச.சுப்பாராவ்.
“சாதி மற்றும் வர்க்கம் என்ற இருவிதமான போராட்டங்களையும் பார்த்திருப்பது, எனது கிராமத்தில் கடுமையான வறுமையை நேரடியாக உணர்ந்தது, பூர்ஷ்வா மற்றும் உழைப்பாளி என இரண்டு அங்கமாகவும் இருந்தது ஆகியவை சாதியை எதிர்கொண்டால் அன்றி இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் சாத்தியம் இல்லை என்ற முடிவிற்கு என்னை இட்டுச் சென்றன. இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகளின் இப்போதைய புரிதலுக்கு மாறாக, நான் வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்தவை என்று பார்க்கிறேன். சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது. அதே சமயம், ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது.”
“பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சாதியை நிராகரிக்கும் ஒரு குடியரசை ஏற்படுத்தியது என நாம் நினைக்கும் வேளையில், எதார்த்தத்தில் இந்தியக் குடியரசு சாதி என்ற அஸ்திவாரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. சட்டத்தை உருவாக்கியவர்கள், அரசியலமைப்பில் தீண்டாமையை சட்டவிரோதமாக ஆகிவிட்டாலும், அவர்கள் திறமையாக தீண்டாமையின் ஊற்றுக் கண்ணான சாதியை தெய்வீகமாக்கி விட்டார்கள். குடியரசோடு சேர்ந்து சாதியும் வளர்ந்து செழித்துள்ளது. இந்த நூல் அது எவ்வாறு? ஏன் ?என்று கூறுகின்றது.”
“இயக்கவியல் பொருள் முதல் வாதத்தை சமூக வாழ்விற்கு விரிவுபடுத்திய மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார். துரதிஷ்டவசமாக மார்க்சின் கோட்பாடுகள் அதீத ஆர்வம் கொண்டவர்களால் ஒரு இசமாக ஆக்கப்பட்டுவிட்டன. ஒரு மதக்கோட்பாட்டு நம்பிக்கை போல் ஆக்கப்பட்டு விட்டன.
விலக்கி வைத்துவிடும் அபாயம் இன்றி அவற்றை ஆய்வு செய்ய முடியாது. தனது கோட்பாடுகளை இவ்வாறு மாறாத கருத்தாக்கமாக மாற்றுவதற்கு 1882ல் எழுதிய கடிதத்தில் மார்க்ஸ், ‘நான் ஒரு மார்க்சியன் அல்ல’ என்பது உறுதி, என்று குறிப்பிட்டது மிகவும் புகழ்பெற்ற வாசகமாகும். அறிவியல் புதிய உண்மையை வரவேற்று, ஏற்றுக் கொள்வதைப்போல, மார்க்சியமும் மார்க்சிற்குப் பிறகான முதலாளித்துவம் மற்றும் வேறு பல முக்கிய ஆய்வுகளின் கண்டுபிடிப்பால் கிடைத்த புதிய தரவுகளின் அடிப்படையில் தன்னை செழுமைப்படுத்திக் கொள்ளும் வகையில் திறந்த மனதோடு இருந்திருக்க வேண்டும். எனினும் தங்களது கட்சி அமைப்பைக் கொண்டுள்ள மார்க்சியர்கள் இந்த செயல்முறையை தடுத்துவிட்டார்கள். ஐயம் எழுப்புபவர்களை பிற்போக்காளர், துரோகி, முதலாளித்துவப் பாதையாளர், திரிபுவாதி, என்றெல்லாம் முத்திரையிட்டு, எதிரி முகாமிற்கு தள்ள அவர்கள் தயங்கவில்லை.”
“அவர்கள் மார்க்சியத்திற்கு எதிரானதாக அம்பேத்கரியத்தை வளர்த்தனர். அம்பேத்கரும், மார்க்சும் பிறவி எதிரிகள் போல எதிரெதிரே நிறுத்தினர். அம்பேத்கர் ஒரு மார்க்சியர் அல்ல என்பதில் எந்த ஐயமும் இல்லை. மார்க்சியம் பற்றிய தனது சந்தேகங்களை அவர் மறைத்ததில்லை. ஆனால் அதற்காக அவரை அதன் எதிரியாக கருத முடியமா.?”
“கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனக்கு பேராசிரியராக இருந்த ஜான் ட்யூவேயின் தாக்கத்தால் அவர் வரலாற்றைப் பொருத்தவரை சாத்தியப்பாட்டுக் கோட்பாட்டாளராக இருந்தார். அவரது வழிமுறைகளை ஒருவர் ஆராய்ந்தால் இந்த தத்துவப்போக்கு புலனாகும். அம்பேத்கரிசம் என்று சொல்லப்படுவது உண்மையில் சாத்தியப்பாட்டுக் கோட்பாடுதான்.
குறிப்பிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க பெரும் வாதங்களையும், அரசியல் மாற்றங்களையும் நம்பி இருக்காமல், கிடைக்கும் வளங்களைக் கொண்டு தீர்த்துக்கொள்ளும் நடைமுறை.”
“அம்பேத்கர் களத்தில் இறங்குவதற்கு முன்பே ஒடுக்கப்பட்ட சாதிகளின் அமைப்புகள் இந்தியா முழுவதும் தோன்றிவிட்டன. அம்பேத்கர் தீண்டத்தகாத சாதிகள் அனைத்தையும் தலித் என்ற அரை வர்க்கமாக இணைக்க முயன்றார். அவர் 1953 ராஜ்யசபாவில் அரசியலமைப்பை எழுதுவதில் தன்னை ஒரு எழுத்தராகவே பயன்படுத்திக் கொண்டார்கள் என்று மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.அரசியலமைப்பு தன்னுடையது அல்ல என்று அம்பேத்கர் ராஜ்யசபாவில் பேசியது கோப வெளிப்பாடு அல்ல, மாறாக உண்மையின் ஒரு வேதனையான வெளிப்பாடு. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அரசியலமைப்பு என்பது பிசாசுகள் குடியேறிவிட்ட அழகிய கோவில் என்று அவர் சமாளித்தது ஒரு யுத்ததந்திர பின்வாங்கல்.”
“அசமத்துவத்தை அதிகரிக்கும் வேலையோடு கூடவே இந்துத்துவாவின் அம்பேத்கரை புனிதச் சின்னமாக்கும் வேலையும் நடக்கிறது. தலித்துகளைக் கவர்வதற்காக, அம்பேத்கர் காலடி வைத்த இடங்கள் அனைத்திலும் அவருக்கு பெரிய நினைவுச் சின்னங்கள் எழுப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இன்று புனிதச் சின்னமாகப் போற்றப்படும் அம்பேத்கர் மரணம் அடைந்து அவரது உடலை மும்பைக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியதாக இருந்தபோது (1956 டிசம்பர் 6ஆம் தேதி இரவு)மத்திய அரசாங்கம் அந்த செலவை ஏற்க தயாராக இல்லை.என்பதை நினைவு கூர்வது நல்லது. கடைசியில் பாதி போக்குவரத்து செலவை ஏற்க நேர்ந்தது. தாதாசாகேப் கெய்க்வாட் தலைவராக இருந்த ஷெட்யூல்ட் காஸ்ட் இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்ட் இச்செயலை செய்தது. கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை, அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவர் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் எழுப்பப்படவில்லை. 1967ல் சைத்திய பூமியில் எளிய நினைவுச்சின்னம் கட்டுவதற்காக அவரது புதல்வர் யஸ்வந்த்ராவ் அம்பேத்கர் மத்திய பிரதேசத்திலுள்ள அம்பேத்கரின் பிறப்பிடமான மோவ் நகரிலிருந்து மும்பை வரை பாதயாத்திரை சென்று மக்களிடம் சிறுசிறு தொகையை நன்கொடை பெற நேர்ந்தது. அது இன்றும் அவரது நினைவுச் சின்னமாக திகழ்கிறது.”
“ஆர்.எஸ்.எஸ் ஸின் முக்கியமான பிரசாரகரான நரேந்திர மோடி மத்திய அரசின் அதிகாரத்தை பிடித்தது முதல் சங்பரிவார் தனது இந்த ராஷ்ட்டிரக் கனவு விரைவில் நிறைவேறிவிடும் என்று கருதுகிறது. பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை ஈர்க்க அம்பேத்கர் மீதான பக்தியை அதிகரித்துள்ளது. மோடி அம்பேத்கருக்காக பெரிய பெரிய நினைவுச் சின்னங்கள் எழுப்புவதாக அறிவிக்கிறார்.”
“இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நமது காலத்தில் நிலை கொண்டவை.
ஒரு ஜனநாயக் குடியரசாக நாம் கூட்டாக நீடிப்பதற்கு முக்கியமான பிரச்சனைகள் பற்றிப் பேசுபவை. நாம் மிகவும் போற்றும் இந்தியா என்ற கருத்தாக்கம் அது நிறைவேறாது பற்றி நாம் வீணாக புலம்பினாலும் கூட என்றைக்குமாக அழிந்து போய் விடக் கூடிய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் இப்பிரச்சனைகள் குறியீடாக முக்கியத்துவம் பெறுகின்றன.
இன்று நமது நிறுவனங்கள் காவிமயம் ஆக்கப்படுகின்றன. நமது கலாச்சாரங்கள் இந்துமயமாக்கப்படுகின்றன. நமது பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் நாம் சாதித்த மிகக் குறைவான சாதனைகளுக்கும் இந்துத்துவ சக்திகளின் தாக்கம் ஒரு பின்னடைவு என்பதை உணர்கிறோம். அரசின் நிர்ப்பந்திக்கும் செயல்முறைகள் சாதிக்க முடியாததைச் சாதிக்க வன்முறைக் கும்பல்கள் ஏவிவிடப்படும் போது ஜனநாயக மாண்புகள் அழிக்கப்படுகின்றன. மோடியின் முதல் நான்காண்டுகள் பின்னால் வரப் போவது காட்டும் ஒரு அறிகுறியாக இருக்கக்கூடும்.” “கோல்வால்கரின்’ ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கடவுள், ஒரே மதம்’ என்ற சொல்லாடலால் விளக்குகிறார். இது ‘ஒரு மக்கள், ஒரு பேரரசு, ஒரு தலைவர்’ என்ற நாஜி ஜெர்மனி வாசகத்தின் எதிரொலிதான்.
மதச்சார்பின்மையை அரசியலமைப்பில் சேர்க்கும் துணைக் குழுவின் பரிந்துரையை சாட்சாத் நேருவின் தலைமையிலான ஆலோசனைக் குழு நிராகரித்த போதே இதற்கான விதை தூவப்பட்டுவிட்டது. மாறாக, அரசிற்கு எந்த மதமும் இருக்காது. ஆனால் அது எல்லா மதங்களையும் சமமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால் இன்று பூமி பூஜை போன்ற இந்து மதச் சடங்குகள், சர்வசாதாரணமாக அரசால் கடைப்பிடிக்கப்படுவது வெளிப்படையாக நடக்கிறது. ஆரம்பகால தலைவர்கள் தம் பார்வையை வெளிப்படைத் தம்மையறியாது பயன்படுத்திய சமஸ்கிருதத் சொல்லாடல்கள் ஒரு குறிப்பான சமிக்ஞையைக் கொடுத்திருக்கவேண்டும். நேருவின் சொந்த அரசாங்கத்திலேயே அதற்கு மாறான நடைமுறைக்குச் சாட்சியங்கள் இருந்தபோதும் கூட இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற மாயை நீடித்தது.”
“1995ல் அரசியலமைப்பின் பாதுகாவலராக, உச்சநீதிமன்றம்,’ இந்துத்துவா என்பது ஒரு மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, ஒரு மனநிலை’ என்று வெளிப்படையாகவே அறிவித்தது. 2016ல் நாங்கள் (டீஸ்டா செதல்வாட், சம்சுல் இஸ்லாம்,ஆனந்த் டெல்டும்டே) அதை எதிர்த்த போது, அதை மறுபரிசீலனை செய்ய மறுத்தது. கடந்த மூன்றாண்டுகளாக டாக்டர்.நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, டாக்டர்.எம்.எம். கல்புர்கி மிகச் சமீபகாலத்தில் கௌரி லங்கேஷ் போன்ற ஆளுமைகளை தேர்ந்தெடுத்துக் கொன்று, இந்துத்துவ குண்டர்கள் சிறுபான்மையினரை, தம்மை விமர்சிப்பவரை அச்சுறுத்துகிறார்கள். கோவாவில் இருந்து இயங்கும் சனாதன் சன்ஸ்தா வெளிப்படையாகவே இதை அசுரர்களை அழிப்பதோடு ஒப்பிட்டு, தபோல்கரின் கொலையை பாராட்டுகிறது. பன்சாரே வழக்கில் குற்றவாளிகளோடு தொடர்பு கொண்டிருக்கிறது. எனினும் அது இதுவரை தொடரப்படவில்லை. அதே சமயம் நக்ஸல் என்ற பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் ஏராளமான அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
இத்தீய சக்திகள் மிக வேகமாக கோட்டையைக் கைப்பற்றிய வரும் வேலையில் அரசியலமைப்பு ரீதியான தடை போன்றவற்றை தடுக்கும் என்று நம்புவது மிக மோசமான அப்பாவித்தனமாகும்”.
தோழர்களே, மேலே கூறியது போல இது ‘சாதியின் குடியரசு’ என்ற புத்தகத்தின் அறிமுக உரை.சுமார் முப்பது பக்கங்கள் உள்ள இந்த அறிமுக உரையிலேயே இந்தப் புத்தகத்தின் நோக்கமும் ,நாம் ஏன் வாசிக்க வேண்டிய அவசியத்தையும் ஆனந்த் டெல்டும்டே அழகாக அறிமுகம் செய்கிறார்.அறிமுக உரையை இரண்டு, மூன்று முறை படித்து அதனை சுருக்கி, அப்படியே தான் நான் மேலே எழுதியுள்ளேன்.
மொழிபெயர்ப்பு நேரடியாக தமிழில் வாசிப்பது போன்ற அனுபவம் இதுவரை படித்த நூறு பக்கங்களில் எளிமையாகவும் வாசிப்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது. இதனை தமிழில் மொழிபெயர்த்த தோழர் Subba Rao Chandrasekara Rao அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்கள்.
முழு புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும். சம்பிரதாயத்திற்காக அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் என சொல்லமாட்டேன். அரசியலமைப்பை பாதுகாக்க முன்னெடுப்பவர்கள், சமூகத்தை நேசிக்கக் கூடியவர்கள், சாதி ஒழிப்பிற்காக போராடுபவர்கள், சமூக மாற்றத்தை விரும்புபவர்கள்,சோஷலிசத்தை விரும்புவர்கள் கைகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய புத்தகம் தேவைப்படும் நேரங்களில் நாம் எடுத்து வாசிக்கலாம். ஆளுமையாளர்கள், எழுத்தாளர்கள் ‘சாதியின் குடியரசு’ நூலைப் பற்றிய சுருக்கமான முன்னுரைகளை வாசிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி எழுதினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மீண்டும் ஒருமுறை பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அமுதன் – தேவேந்திரன்
சாதியின் குடியரசு
ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: ச.சுப்பாராவ்
பாரதி புத்தகாலயம்