இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

இளங்கோவன் ராஜசேகரனின் “சாதியின் பெயரால்”

சாதி எனும் சாத்தான்!

காதலைப் போற்றிப் புகழ்ந்த பாரதி:

`காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம்; சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினாற் காதல் செய்வீர், உலகத்தீரே…..!
(பாரதி – அறுபத்தாறு, பாடல் 49)

உலகத்தினரை காதல் செய்யச் சொன்ன பாரதிதான் `சாதி இரண்டொழிய வேறில்லை…, சாதிகள் இல்லையடி பாப்பா….’ எனவும் பாடினான் ஆனால் நவீன உலகத்தில் காதலுக்கு காலானாக இருப்பதே இந்த சாதிதான் என்பது இன்று பல ஆணவக் கொலைகள் மூலம் நிரூபணமாயிருக்கிறது. இது எப்படி அந்தத் தீர்க்கதரிசிக்குத் தெரியாமல் போனது அல்லது தெரிந்தேதான் `சாதிகள் இல்லையடி பாப்பா’ என்கிற அறிவுரையை தன் கவிதை மூலம் கூறிச் சென்றானா?

நடந்து முடிந்த சென்னைப் புத்தகத் திருவிழாவில் வாசகர்களிடையே நன்கு வரவேற்பு பெற்ற நூல்களில் ஒன்று `சாதியின் பெயரால்’ என்கிற நூலாகும். இதை எழுதியிருப்பவர் பத்திரிகைத் துறையில் நாற்பதாண்டு காலம் அனுபவம் மிக்கவரும், தொழில்நிமித்தம் பல ஆணவக் கொலைகளையும், தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளையும் களத்திற்குச் சென்று பல விஷயங்களை வெளிக் கொணர்ந்து ஆவணப்படுத்திய இளங்கோவன் ராஜசேகரன் ஆவார். இந்நூலை தமிழில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்திருப்பவர்கள் எழுத்தாளர்கள் மருதன் கங்காதரன், நிவேதிதா லூயிஸ்.

சாதி என்பது எந்த அளவுக்கு சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கும், மனிதர்களை அது எந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு மிருகமாக்குகிறது என்பதற்கும் இந்நூலில் பதிவு செய்யப்பட்ட 7 ஆணவக் கொலைகள் ஒரு சான்று. ஆணவக் கொலைகள் நடந்தவுடன் அதை ஒரு இதழாளராகப் பதிவு செய்து விட்டு கடந்து விடாமல் காவல்துறை ஆவணங்கள், நீதிமன்ற தீர்ப்புகள், ஆய்வறிக்கைகள், கள அனுபவம், சம்பந்தப்பட்டவர்களுடான உரையாடல், குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்கள் வாழும் இடம் சார்ந்த அரசியல், அவர்களின் பொருளாதாரப் பின்புலம் என அரசியல், சமூகப் பொருளாதார நோக்கில் இந்நூல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் 7 ஆணவக் கொலைகளும் அவை நடந்தபோதும் அதற்குப் பிறகும் பரபரப்பாக பேசப்பட்டதோடு அரசியல் களத்திலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. சாதிகளை வைத்து அரசியல் பண்ணும் கட்சிகளுக்கு இதனால் ஆதாயம் கிடைத்தாலும் இருதரப்பைச் சேர்ந்த சாமான்யர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அளவிட முடியாத ஒன்று. இருப்பினும் சமூகம் இன்னும் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்த 7 ஆணவப்படுகொலைகளில் நான்கு நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்கள் வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமான ஒன்று திவ்யா இளவரசன் காதல் ஆகும். 3இந்நூலில் அதிகமாகப் பேசப்பட்டிருப்பதும் இந்த ஆணவப்படுகொலை பற்றிதான். சாதி அடுக்கில் இடைநிலையில் இருக்கும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர் திவ்யா. தமிழக மக்கள் தொகையில் சுமார் 13 சதவீதம் (அம்பாசங்கர் ஆணை அறிக்கை, 1985) வரை கொண்ட சமூகம் இது என நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். அப்புறமென்ன இவர்களை நம்பியே ஆரம்பிக்கப்பட்ட கட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ களத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இதை அந்தக் கட்சியைத் சேர்ந்த தலைவர் ஏற்கவில்லை. ”பாமகாவுக்கோ வன்னியர் சங்கத்துக்கோ இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்றதோடு தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும் இடையிலான கலப்பு மணத்தைத் தான் எதிர்த்ததேயில்லை’ என்றும் நூலாசிரியருடன் உரையாடும்போது கட்சித் தலைவர் விளக்கியிருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது தலைவரின் மனசாட்சிக்குத் தான் தெரியும். காரணம், இவர்தான், `தலித் இளைஞர்கள் கூலிங் கிளாஸ், டீ ஷர்ட், ஜீன்ஸ் ஆகியவற்றை அணிந்து கொண்டு தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த பெண்களை மயக்கி, காதல் வலை விரிக்கின்றனர்’ எனப் பேசியவர்.

இந்த ஆணவப்படுகொலை குறித்து காவல்துறை விசாரணை (இந்த வழக்கில் விசாரணை செய்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் மர்மான முறையில் கொல்லப்பட்டார்), மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கள ஆய்வு, நீதிபதி சிங்காரவேலு ஆணையத்தின் விசாரணை என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆண்டுகள் சில கழிந்தாலும் கொலை என்பது தற்கொலையானது. இளவரசனின் மரணத்தில் சர்ச்சைகளுக்கோ சந்தேகங்களுக்கோ இடமில்லை என சொல்லி வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தின் முடிவுதான் சிங்காரவேலர் ஆணையத்தின் முடிவாகவும் இருந்தது. ஆனால் அறிக்கை பொது வெளியில் இன்னும் சமர்க்கப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்!

இந்த வழக்கு மட்டுமல்லாமல் அரசு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கும் பெரும்பாலான ஆணையங்கள் தங்கள் விசாரணையை நடத்தி முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகும் அரசு அதை வெளியிடாமல் பூட்டி வைப்பதைப் பார்க்கிறோம். 1991 ஆம் ஆண்டு தொடங்கி 45 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான முடிவுகளையே வெளியிட்டிருக்கின்றன. சிங்காரவேலு ஆணையம் ரூ 2.17 கோடியைச் செலவழித்திருக்கிறது. இதில் ரூ 1.98 கோடி சம்பளத்துக்கு மட்டும் சென்றிருக்கிறது என எவிடென்ஸ் அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இந்தப் புள்ளிவிவரத்தைப் பெற்றிருக்கிறது.

இன்னொரு கொடூரமான கொலை ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (சுவாதி) ஆகும். இதில் சம்பந்தப்பட்ட தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் தண்டிக்கப்பட்டாலும் அதை அவர் சாதிக்காகப் போராடிய தியாகி என்பதாக நினைத்துப் பெருமிதம் அடைந்திருக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த யுவராஜ் என்பவர் சுவாதிக்கோ, கோகுல்ராஜுக்கோ முன்பின் அறிமுகமில்லாதவர். ஆனால் சாதி என்கிற போதையில் மூழ்கி தன் சாதியைச் சார்ந்த ஒரு பெண் தலித்தோடு பொதுவெளியில் உரையாடுவதைச் சகித்துக் கொள்ள முடியாததால் கோகுல்ராஜை கொலை செய்திருக்கிறார். யுவராஜைப் பொருத்தவரையில் சுவாதி என்பவர் ஒரு தனிநபர் இல்லை அவர் ஒரு கவுண்டர் சாதிப் பெண் என்பது தான் அடையாளம் என நினைத்து சாதி கெளரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தப் பாதகமான செயலைச் செய்திருக்கிறார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் ஆணவப்படுகொலைகள்: கெளசல்யா (அகமுடையார்) – சங்கர் (பள்ளர்), திவ்யா (வன்னியர்) – இளவரசன் (தலித்), கண்ணகி (வன்னியர்) – முருகேசன் (தலித்), சுவாதி (வன்னியர்) – கோகுல்ராஜ் (பறையர்), மீனா (பிற்படுத்தப்பட்ட செட்டியார்) – ஹரிஹரன் (மிகவும் பிற்படுத்தப்பட்ட மருத்துவ சாதி), ஸ்வாதி (வன்னியர்) – நந்தீஷ் (தலித்), ஜோதி (பள்ளர்) – சோலைராஜ் (பறையர்).
இந்த சாதியப் பிரச்சனை மேல்சாதி / இடைநிலை சாதிக்கும் தலித்துகளுக்கு இடையிலானது மட்டுமல்ல. தலித்துகளுக்குள்ளேயே இந்தப் பிரிவினையும் துவேஷமும் சாதிய வெறியும் இருக்கிறது என்பதற்கு உதாரணம் ஜோதி – சோலைராஜ் விவகாரம் ஆகும். இதில் பெண் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் ஆனால் ஆணோ அவரைவிடக் குறைந்த பறையர் இனத்தைச் சேர்ந்தவர். இது குறித்து பெண்ணின் தந்தை, `என் மகள் பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்ததையும் திருமணம் செய்து கொள்வதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு ஒரு குழந்தையை வேறு அவள் சுமந்து கொண்டிருந்ததை அறிந்தோம். என் மகளின் குற்றம் மன்னிக்க முடியாதது. எங்கள் குடும்பத்துகுத் தீரா அவப்பெயரை ஏற்படுத்தி விட்டாள். எனவே இருவரையும் கொன்றோம். அவ்வளவுதான்’ என மிகச் சாதாரணமாச் சொல்கிறார்.

ஆக, சாதித் தூய்மை, ஆணாதிக்க உணர்வு, பொருளாதார நிலை என்று பல அம்சங்கள் இக்கொலைகளுக்குப் பின்னால் இருக்கின்றன. இதற்குத் தூபம் போடுவதற்கென்றே காளான்கள் போல சாதிக்கொரு அரசியல் கட்சி முளைத்து வருகின்றன. இவர்கள் சாதிய வாக்குகளைப் பெற்று மாற்று சாதியினரை கொன்று குவித்து தங்களது அதிகாரச் செருக்கை அரசியல் களத்தில் நிரூபித்து வருகின்றனர்.

என்னதான் பெரியார் மண் என நெஞ்சை நிமிர்த்திக் கூறிக் கொண்டாலும் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சாதி என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத யதார்த்தம் ஆகும். கல்வியறிவு விகிதம் அதிகரித்து வரும் அதே நேரத்தில் ஆணவக் கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இதில் அதிர்ச்சியூட்டக்கூடியது என்னவெனில், பெற்றவர்களும் உறவினர்களுமே நேரடியாக தங்களது குழந்தைகளைக் கொல்வதாகும். ஆணவக் கொலை என்பது இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை உலகெங்கும் நடந்து வருகிறது என நூலாசரியர் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையொன்றை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இந்தியாவில் 2013 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை 190 ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. கொல்லப்பட்டவர்கள் 80 சதவீதம் பெண்கள், பதின் பருவத்தினர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு குற்றச்செயல் சம்பந்தப்பட்ட எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதில்லை. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முக்கியமான பல அமைப்புகளின் போக்கு இந்த நிலையில்தான் இருந்து வருகிறது. அப்படியே அறிக்கையையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட்டாலும் நம்பகத்தன்மையோடு அதை அணுக முடியவில்லை.

இந்து திருமணச் சட்டத்தின்கீழ் சுயமரியாதைத் திருமணத்தை 1960களின் இறுதியில் கொண்டுவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாநிலம் தமிழ்நாடு. ஏராளமான கலப்பு மணங்கள் நடைபெற்று இருக்கின்றன. இருந்தும் இன்றைக்குக் கலப்பு மணங்கள் கடும் எதிர்ப்பையும் சாதிய மோதல்களை கொண்டுவருவது வருத்தமளிக்கிறது என்பது நூலசிரியரின் கவலை மட்டுமல்ல சகிப்புத்தன்மையை விரும்பும் அனைவரின் கவலையும் ஆகும். இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சி சமூகத்தை மதம் கொண்டு பிரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது மேலும் வருத்தமளிக்கக்கூடிய செய்தியாகும்.
இந்நூலை வாசிக்கும் போதும், வாசித்து முடித்த பிறகும் நாம் என்ன மாதிரியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம் இனிவரும் நாட்கள் எப்படியிருக்கும் என்கிற அச்சம்தான் மோலோங்கி இருக்கிறது. பல சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் கண்டிருக்கும் தமிழ்நாட்டு நிலைமையே இப்படியிருந்தால் இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எப்படியிருக்கும் என நினைக்கும் போது அச்சம் இன்னும் அதிகமாகிறது. நூலாசிரியர், `கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களை சமூகம் அரவணைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சமத்துவச் சிந்தனை பரவுவது முக்கியம்….. அவர்கள் கொல்லப்படுவதிலிருந்து தடுப்பதே நம் முன் நிற்கும் பணி’ என்கிறார். ஆணவக் கொலைகளினால் வீணாக உயிர்கள் பலியாகின்றனவே ஒழிய யாருக்கும் எந்த ஆதாயமும் கிடைப்பதில்லை என்கிற மனப்பக்குவம் ஏற்பட்டு தங்களின் சுய லாபத்துக்காக ஆரம்பிக்கப்படும் சாதி சங்களையும், கட்சிகளையும் பொதுமக்கள் ஆதரிக்காமல் இருந்தால் மட்டுமே இந்தக் கொடுமையிலிருந்து மீள முடியும். இல்லையெனில் எத்தனை பெரியார், அம்பேத்கார் வந்தாலும் சமூகத்தைத் திருத்த முடியாது.

இக்கட்டுரையின் பின்னிணைப்பாக `தலித்துகளின் கலப்பு மணம்: ஒரு பார்வை’ என்கிற பெயரில் செளஜன்யா தமலபகுலா எழுதிய ஆய்வுக் கட்டுரையும் இருக்கிறது. சாதி எவ்வளவு நுணுக்கமாக இயங்குகிறது, அதன் வேர் எவ்வளவு ஆழத்தில் படிந்திருக்கிறது, அதன் கிளை எங்கெல்லாம் நீண்டு பரவியிருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

 

                      நூலின் தகவல் 

நூலின் பெயர்             : “சாதியின் பெயரால்”
ஆசிரியர்                       : இளங்கோவன் ராஜசேகரன்
தமிழில்                           : மருதன், நிவேதிதா லூயிஸ்
பதிப்பகம்                       : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு                : 44 2433 2924 https://thamizhbooks.com/product/saathiyin-peyaral/
பக்கங்கள்                       : 222
விலை                                 :  ரூ 260
வெளியான ஆண்டு : டிசம்பர், 2023
                         எழுதியவர்
                 
               சித்தார்த்தன் சுந்தரம்




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *