“மென்பனி படலமாய் நீராடை போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தது திருப்பூர்”
வாருங்கள் தோழர்களே திருப்பூருக்கு தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் நம்மை அழைத்துச் செல்கிறார்கள் மிகச் சிறந்த வரலாற்றோடு அவருடைய மிகச் சிறந்த எழுத்துக்களின் வழியே.
ஏற்கனவே ‘மயானக்கரையின் வெளிச்சம், மௌனத்தின் சாட்சியங்கள்’ நூல்களின் வழியே தோழரின் எழுத்துக்களை அறிந்தவர்கள் மிகவும் ஆவலுடன் இந்நூலை வாசிப்பார்கள்.
நம் வாழ்வில் நாம் விரும்பியோ, விரும்பாமலோ நம்மை கவ்வி பிடித்திருக்கும் ஆளும் அரசியல் சித்தாந்தம் எது என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கான நல்வாய்ப்பு தான் இந்நூல். ஓடி ஓடி உழைத்து ஒரு சாண் வயிற்றை சுருங்காமல் காப்பதற்காக அல்லல்பட்டு உழைக்கும் மக்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள்; யாரால் சுரண்டப்படுகிறார்கள்; நாம் அதில் சிக்கியிருக்கிறோமா இல்லையா; மனித வாழ்வு யாரை நம்பி இருக்கிறது என்று நம்மை நாமே கேள்வி கேட்டுப் பார்த்தால் நம்மைச் சுற்றி நிகழும் காட்சிகள் எல்லாம் சொற் சித்திரங்களாய் வந்து போகும். அதுதான் இந்நூல்.
நாம் இன்று அணிந்திருக்கும் உள்ளாடை உலகம் மிகவும் உச்சபட்ச பரிணாமத்துடன் இருக்கிறது என்றால் அதற்கு திருப்பூரில் ஓடும் நொய்யல் ஆற்றின் கரையோர மக்களின் உழைப்பே சாட்சி. அந்த உழைக்கும் மக்களின் வாழ்வை எது கவ்வி பிடித்திருக்கிறது வறுமையா? கதை மாந்தர்களா? கதை நாயகர்கள் நிம்மதியாக வாழ முடிந்ததா?
‘நாம் யாருடைய வம்பு தும்புக்கும் போறோமா, நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது?’ இவ்வாறு புலம்பித் தீர்க்கும் மனிதர்களை வாழ்க்கைப் பாதையில் நாம் தினம் தினம் கண்டு கொண்டே தான் பயணிக்கிறோம். அதற்கு தீர்வு சொல்வதற்கு நாம் முயற்சிக்கிறோமா; அது நம்மால் முடியுமா இப்படியெல்லாம் யோசித்துப் பார்த்தால் நம்மிடம் உணர்வு பூர்வமான சிந்தனைகள் உருவாகும்.
ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலோர் உணர்ச்சிக்கு அடிமையாக இருப்பவர்களாகவே மாறிவிடுகின்றனர்.
இந்நூலாசிரியர் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை மிக நுட்பமாக காட்சிப் படுத்தியிருப்பார். இந்நூலை வாசிக்கும்போது நாமே அந்தக் கதை மாந்தர்களாக இருக்கிறோமா என்று கூட யோசிக்க தோன்றும்.
ஆம் நாமும் பல கரடு முரடான பாதைகளைக் கடந்துதான் வந்திருக்கிறோம். இன்னும் கடந்து கொண்டிருக்கிறோம். அப்படி கடந்து கொண்டிருக்கும்போது சற்று தடுமாறினாலும் நாம் எங்கே சிதறி விழுந்து விடுவோமோ, எழுந்திருக்க முடியாமல் போகுமோ என்று யோசிக்க கூட நேரம் இல்லாமல் நம்மைச் சுற்றி இருக்கும் நெருக்கடிகள் நம்மை கவிழ்த்துப் போட்டு விடும்.
‘நம்மால் இந்த உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாதா; நாம் சொன்னவுடன் மக்கள் ஒன்று திறள மாட்டார்களா; வெவ்வேறு இடங்களில் இருக்கும் முன்மாதிரிகளை இங்கேயும் மக்களிடத்தில் அமல்படுத்த முடியாதா’ என்று மண்ணின் தன்மையை அறியாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் நுழைந்து சுழலில் சிக்கிக் கொள்ளும் கதை மாந்தர் தான் நாவலின் மையக் கருத்து. கதை மாந்தர் மீண்டாரா, அவர் குடும்பம் மீண்டதா?, அல்லது சுழலில் சிக்கிக் கொண்டார்களா? என்பதை அறிய அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
திருப்பூரின் வரலாற்றை மிக அழகாக கவிதை நயத்துடன் புனைந்து கொடுத்திருப்பார் இந்நூலாசிரியர். இந்நூலை வாசித்த பின் நம்மை, நம்மைச் சுற்றி இருப்பவர்களை, நாம் வாழும் இடத்தை, இந்த உலகை எப்படி புரிந்து கொண்டுள்ளோம் என்பது மிகத் தெளிவாகிவிடும். புதிய பரிமாணம் மனதில் ஊற்றெடுக்கும்.
நாம் தனிமரம் அல்ல தோப்பு. எக்காலத்திலும் சமூகத்தை விட்டு தனித்து இயங்க முடியாது. அப்படி இயங்கினால் காலச்சக்கரம் சுழற்றி அடித்துவிடும். எனவே உழைக்கும் மக்களாகிய நாம் எப்போதும் தோப்பாகவே இருப்போம். நாம் தனி மரமா?, தோப்பா? என்பதை அறிந்துகொள்ள அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
‘சபக்தனி’யின் பொருள் என்ன என்பது இறுதியில் விடை கிடைக்கும்.
நான் ஒருபோதும் நூலின் கதையை வழங்க மாட்டேன். ஏனெனில் வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே சினிமா பார்த்தவர்கள் புதியதாக சினிமா பார்க்க வருபவர்களுக்கு திரையரங்கில் கதை சொல்வது போல் ஆகிவிடும். புதியதாக திரைப்படம் பார்ப்பவர் நெளிந்து கொண்டிருப்பதுபோல் ஆகிவிடக் கூடாது அல்லவா. எனவே நூலை வாசித்து உணர்வு பெற வேண்டுகிறேன்.
மிகச் சிறப்பாக இந்நூலை வழங்கிய அருமைத்தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா. சண்முகசாமி
புதுச்சேரி.
நூல் : சபக்தனி
ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : ஜனவரி 2024
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/sabakthani/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
என்ன தளத்தில் கதை நிகழ்கிறது என்று யூகிக்க/ யோசிக்க வைத்த மதிப்புரை சிறப்புங்க சார்