sabakthani சபக்தனி

சம்சுதீன் ஹீராவின் “சபக்தனி” [வரலாறு]

 

இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது.

1979 சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி முதல் மாநில மாநாட்டுக்கு முன்பே திருப்பூருக்கு நான் சில முறை சென்றேன் . அப்போது தொடங்கி வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலம் வரையும் அதன் பின்னரும் திருப்பூர் எனது உணர்வோடு கலந்தது . எண்ணற்ற முறை சென்றுள்ளேன்.

இந்நாவலில் உயிரோடு உலவும் பலரோடு நான் இணைந்து பணியாற்றி இருக்கிறேன் . புனைப்பெயரில் உலவும் சிலரும் அப்போது எம்மோடு பயணித்தவர்தாம்.

இந்நாவல் என்னுள் வாலிபர் சங்க நாட்களை மீட்டுக்கொண்டுவந்தது .

அனஸ் என்கிற வளரிளம் பருவ இளைஞன் ,அவன் அம்மா ஜெமீலா அப்பா ஷேக் பரீத் தங்கை அஜிதா இவர்களே மைய கதா பாத்திரங்கள் .வறுமையில் வறுபட்ட போதும் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அரசியல் ஜீவிகள் .[ அறிவு ஜீவிகள் என்றொரு சொல் இருக்கும் போது அரசியல் ஜீவிகள் என்றொரு சொல்லும் இருக்கலாம்தானே ]

திருப்பூரின் தொழில் வளர்ச்சி , தொழிலாளர் வாழ்க்கை ,தொழிற்சங்கங்களின் எழுச்சி , போராட்டம் ,நொய்யல் ஆற்றின் சீர்கேடு ,சமூக பொருளாதார ,அரசியல் பின்புலம் இவை கதைக் களமாகி இருக்கிறது . இது ஓர் இடதுசாரி அரசியல் நாவலே !

“ ஜெமீலா அம்மா குறித்து ஆவணப்படுத்தும் முயற்சியில்தான் இதைத் தொடங்கினேன்…. புதினமாய் முடிந்திருக்கிறது.” என்கிறார் நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா . ” நானும் கடந்த காலங்களில் இடது சாகசவாதத்தால் ஈர்க்கப்பட்டுக் கொஞ்சகாலம் எட்டிப் பார்ட்த்துவிட்டு திரும்பி வந்தவன்.”என்கிற சம்சுதீன் , சிபிஐ ,சிபிஎம் , நக்சல் இவற்றுக்கிடையே அன்றைய இளைஞர்கள் மாறி மாறி ஈர்க்கப்பட்ட பின்னணியை நன்கு விவரித்திருக்கிறார் .

என் வாலிபர் சங்க வாழ்க்கையில் மிக அதிகக் கூட்டங்களில் ,போராட்டங்களில் , அமைப்புப் பணிகளில் பங்கேற்ற முதல் மூன்று மாவட்டங்களில் திருப்பூருக்கு இடம் உண்டு. முதல் நாள் என்னோடு வாலிபர் சங்கக் கூட்டத்தில் சிரிக்க சிரிக்க பேசிய ஒரு தோழரும் ,உணர்ச்சிகரமாக பாடிய தோழரும் மறுநாள் நக்சல் பக்கம் நகர்ந்ததும் நான் கண்ட காட்சி . ஆனால் அவர்களின் அரசியல் ஊசலாட்டம் குறித்து தோழர் தங்கவேலுவும் ,உன்னிகிருஷ்ணனும் இன்னும் சிலரும் கவலையோடு முன்பே உரையாடி இருந்தோம் . ஆகவே அந்த நகர்வு திடீர் அதிர்ச்சி அல்ல. அதைத் தொடர்ந்து முன்னணி ஊழியர்களுக்கு அரசியல் போதிக்க தனிக்கவனம் செலுத்தினோம். தோழர் பி.ராமச்சந்திரன் இதில் அதிக அக்கறை காட்டி ஊழியர்களை வளர்த்தெடுக்க உதவினார் .

திருமணம் செய்து கொள்ளாமல் ,ஆஸ்த்மா நோயுடன் போராடிக்கொண்டே அசைக்க முடியா தத்துவார்த்த உறுதியுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள உன்னிகிருஷ்ணன் போன்ற தோழர்கள் நாவலில் ஒரு பாத்திரம் மட்டுமல்ல . திருப்பூர் வர்க்கப் போரட்ட வரலாற்றிலும் ஓர் அங்கமாகும்.

திருப்பூரில் வாலிபர் சங்கமும் தொழிற் சங்கமும் தோள் இணைந்து போராடியது மறக்க முடியாத அனுபவம் . தினசரி தெருமுனைக்கூட்டமும் பஞ்சப்படி நாடகமும் அதிலும் அன்றைய பேச்சுவார்த்தையில் நிலவரம் உட்பட நாடகத்தில் சேர்க்கப்படும் . பஞ்சப்படி நாடகத்தை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை என்கிற அளவுக்கு வீச்ச்சானது .தோழர் விழிப்பு நடராஜனும் ,மணிக்குமாரும் மறகக்கூடிய பெயரா ?யுகவிழிப்பு மாத இதழும் நினைவில் வந்து போகிறது . நானும் பல தெருமுனை போராட்டக் கூட்டங்களில் பங்கேற்றதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

அனசின் தந்தயும் நக்சலோடு தொடர்புடையவர் , அனஸ் டிங்கர் ஒர்க்ஷாப் வேலை ,கைமடியாள் ,டெய்லர் என உழைப்பவனாகவும் , வாலிபர் சங்கம் ,கட்சி , தத்துவத் தேடல் ,புரட்சி ஆர்வம் ,நக்சல் ஈடுபாடு என நகர்ந்து சிறைபட்டு கையறு நிலையில் நிற்பதோடு நாவல் முடிகிறது . அதிதீவிர அரசியல் கணக்கு பிழை என்கிறது இந்நாவல் . நல்ல செய்திதான். அனஸின் மென்மையான காதல் உணர்வு நயம்பட சொல்லப்பட்டுள்ளது . ஜெமீலா பாத்திரம் கனமானது .தாய்மையும் சமூக அக்கறையும் மிக்க வீரத்தின் வார்ப்பு . வரலாற்றில் வாழ்ந்த மனுஷி நாவலிலும் வாழ்கிறார் .

‘ஏலி ஏலி லாமா சபக்தானி’[ தேவனே தேவனே !என்னை ஏன் கைவிட்டீர் ] என்கிற பைபிள் வசனத்தோடு நாவல் முடிகிறது .சபக்தனி எனும் சொல் அதிலிருந்து பெறப்பட்டதே . ஓர் குறியீடாகவே அதனைக் கையாண்டிருக்கிறார்.

அந்த காலத்தில் தண்ணீருக்காகவும் குடியிருப்புக்காகவும் அடிப்படை வசதிகளுக்காகவும் தமிழ் நாடு முழுவதும் வாலிபர் சங்கம் நடத்திய போராட்டங்கள் நினைவில் சுழல்கிறது .

அந்த திருப்பூர் மண்ணில் மதவெறி சக்திகள் வேர்கொண்டது கவலையளிக்கிறது .இந்நாவல் வழி திருப்பூரின் வர்க்கப் போராட்ட வரலாற்றை ஒரு பருந்துப் பார்வை பார்க்க வைத்த சம்சுதீன் ஹீராவுக்கு வாழ்த்துகள் . “மெளனத்தின் சாட்சியங்கள்” நாவல் மூலம் அழுத்தமான கால்தடம் பதித்தவரின் இரண்டாவது நாவல் .ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்துள்ளது .

“ வெப்பமான காலத்தின் திருப்பூர் நகரில் வாழ்ந்த உணர்வைத் தருவதில் இந்நாவல் வெற்றி பெற்றுள்ளது.” என்கிற தமிழ்ச்செல்வன் கருத்தை வழிமொழிகிறேன். கதை போகிற போக்கில் தன் சொந்த சொந்த நிர்ணயிப்புகளை ஆங்காங்கு தெளித்துச் செல்கிறார் சம்சுதீன் என்கிற இரா.ஈஸ்வரனின் கருத்தும் மிகச்சரியானதே.

இளம் தோழர்களே இந்நாவலை வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள் !

                       

                      நூலின் தகவல்

நூல்                     : சபக்தனி [ புதினம்]

ஆசிரியர்        : சம்சுதீன் ஹீரா

வெளீயீடு        : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : [email protected] / www.thamizhbooks.com

பக்கங்கள்    : 272

விலை            : ரூ. 270 /

 

                       எழுதியவர்

                       சு.பொ.அ.

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *