அட்டைப்படத்தை வைத்து இது ஏதோ சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு எதிராக பொதுவுடைமைக் கட்சிகளின் போராட்டக்களம்தான் கதையின் முழுப் பின்னணியோ என நினைத்திருந்தேன்.
நொய்யல் சார்ந்த சுற்றுப்புற சீர்கேடுகளும் விளைவுகளும் ரேகை போல ஒரு புறம் ஓடவிட்டு நாவலின் ஆரம்பத்தில் ஆங்காங்கே ஆவணப்படுத்தியிருந்தாலும் பிரதானமாக ஆதிக்க சக்தி மற்றும் முதலாளித்துவ மேட்டிமைகளையும் அடக்குமுறைகளையும் சாமானிய உழைக்கும் வர்க்கம் வாழ்வியல் சூழல் சார்ந்து எப்படி எதிர்கொண்டன, பொதுவுடைமை கட்சிகள் தத்தம் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளிலிருந்து அவைகளை வென்றெடுத்து எப்படி சீரமைக்க முனைந்தன, அதற்கு அரசியல், அதிகார மற்றும் சமூகச்சூழல் எவ்வாறெல்லாம் சவாலாக அமைந்தன என்பதை உண்மைக்கு மிகவும் நெருக்கமாக ஒரு துடிப்புமிக்க பதின்ம வயது இளைஞனின் பார்வையில் புரிதல்களில் எதிர்வினைகளில் என்னென்னவெல்லாம் எதிர்கொள்ள நேர்ந்தது, அவன் தீரா தாகத்துடன் தேடித்தேடி படித்த, பிடித்த சித்தாந்தங்களும், ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்களும் நம்பிக்கைகளும், மேற்கொண்ட முயற்சிகளும் அவனுக்கு கைக்கொடுத்தனவா? அவனுடைய வியூகங்களும் வேள்விகளும் அவனுடைய வேட்கைகளை மெய்பட செய்தனவா என்பதுதான் இந்த நாவலின் மையமும் முடிவும்.
வாசிக்கும்போது ஜமீலா, ஷேக் பரீத், உன்னிக்கிருஷ்னன், ஈஸ்வரன், முருகன், கமலக்கண்ணன், கணேசன்.. என வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம்மை கதைப்போக்கில் ஆட்கொண்டுவிடுகின்றன. இரத்தின சாமி கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் மிரட்டியிருந்தார்.
தீவிரமான கதைக்களம் என்றாலும் கவிதை போல் இளங்காற்று போல் வருடிச் செல்கிறது அனஸின் காதல் பக்கங்கள்.
எவ்வளவு போராட்டம் மற்றும் வலி நிறைந்த கதை என்றாலும் கதை நெடுக ஆசிரியர் வர்ணனைகளின் வாயிலாக அழகியலுக்கும் பஞ்சம் வைக்கவில்லை.
‘கூரையுமில்லாத கதவுமில்லாத அந்த வீட்டை ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது நிலவு’
‘நதிக்கரையில் பிறந்த நாகரீகம், நதியைத் தின்று நகரமாய் வளர்ந்து கொண்டிருந்தது’
‘ஊர் செழிப்பானது. ஆறு மலடானது’
‘உணவுக்கே வழியில்லாத வீட்டில் கல்வி ஆடம்பரம்தானே?’
‘வாரத்தில் ஒரு முறை வீட்டிற்கு வாங்கிப் போவான். குடும்பத்தோடு சாப்பிடும்போது தந்தையாய் உணர்வான்’
‘தாயின் கரங்கள், வெறும் கரங்கள் மட்டுமல்ல. அது மூன்றாம் முலை’
‘கலை இலக்கியம், துப்பாக்கிகளை விட வலிமையான அரசியல் ஆயுதம்’
இது போல பல இடங்கள் உணர்வுகளையும் எதார்த்தங்களையும் மாற்றங்களுக்கான தேவைகளையும் அடிக்கோடிட வைக்கின்றன.
கதையை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய சொற்பமான திருப்பூர் நாட்களும் நினைவுக்கு வந்து நிழலாடின. அதுவும் தண்ணீர் தேவைகளையொட்டிய அனுபவங்களை இன்றும் கூட மறக்க முடியாது.
டாலர் நகரமான திருப்பூரின் ஆரம்ப வளர்ச்சியை நேரிடியாகப் பார்க்காவிட்டாலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்வியல் படிநிலைகள் வழியாக பார்த்துணர முடிந்ததால் கதையில் வந்த பல சம்பவங்களை நினைவுக்கூர்ந்து தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது.
புத்தகம் நெடுக அரசியல் சார்ந்து வரலாற்றுத் தரவுகள் நிறைய்ய!
இந்த நூலைப்பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் துடிப்புமிக்க போர்க்குணம் மிகுந்த இளைஞனை பண்படுத்தக் கூடிய கதையாக இதன் முடிவு பாடமாக்கப்பட்டிருக்கிறது. மிகவும் பரபரப்பான விறுவிறுப்பான நாவல்.
முக்கியமாக இதை வாசித்துக் கொண்டிருக்கும்போதே சிவப்புச் சட்டை அணிந்துக்கொள்ளும் ஆர்வமும் உந்துதலும் மிகுந்துச் சென்றன என்பதனையும் இங்கே பதிவு செய்யவும் விரும்புகிறேன். எனது கண்ணோட்டத்தில் அந்த அளவிற்கு நாயகனை போல நம்மையும் கூட ஈர்த்துவிடுகிறது தோழர்கள் வட்டம்.
சிறந்த ஆக்கம். ஆசிரியருக்கு நன்றியும் பாராட்டுக்களும்!
நூலின் தகவல்
நூல் : சபக்தனி [நாவல் ]
ஆசிரியர் : சம்சுதீன் ஹீரா
வெளீயீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 272
விலை : ரூ. 270 /
எழுதியவர்
இத்ரீஸ் யாக்கோப்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

