சப்திகா (Sabthika) எழுதி 2024 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள "சிவப்பு சேலைக்காரி" (Sivappu Selaikari Book) சிறுகதைகள் புத்தகம்

சிவப்பு சேலைக்காரி – நூல் அறிமுகம்

சிவப்பு சேலைக்காரி – நூல் அறிமுகம்

நூல் ஆசிரியரை பற்றி

‘கடலோடிக் கதைகள்’ என்னும் நூலின் மூலம் இலக்கிய உலகில் கால் பதித்த நூலாசிரியர் இன்று ‘சிவப்பு சேலைக்காரி’ என்ற தன்னுடைய ஐந்தாவது புத்தகத்தின் மூலம் இந்த உலகிற்கு 12 அத்தியாயம் உங்களோடு படையெடுத்து இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. நூல் ஆசிரியர் அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினாலும் தமிழின் மீது கொண்ட காதலினால் தமிழை இந்த உலகிற்கு தன்னுடைய அனுபவம் என்னும் புத்தகத்தின் மூலம் பல்வேறு மக்களுக்கு பரப்பிக் கொண்டிருக்கின்றார். இது மட்டுமல்லாமல் ‘ கிராண்ட் மதர்ஸ் ஹவுஸ்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பல்வேறு கதைகளை வடிவமைத்து புத்தகமாக தந்திருக்கிறார் நமது நூலாசிரியர்.

சிவப்பு சேலைக்காரி

இந்த நூலினை படிக்கின்ற பொழுது ஒரு நூலாசிரியர் எப்படி தன்னுடைய களப்பணியை செய்திருக்கிறார், எப்படி மக்களை உற்றுக் கவனித்து இருக்கின்றார், புரிந்து கொண்டிருக்கின்றார் என்பது இங்கே புலப்படுகின்றது. இதை சுருக்கமாக மனித நூலகம் என்று சொல்லலாம் தெளிவாக சொல்லப் போனால்,

டென்மார்க்கில் “மனித நூலகம்” என்பது “மனித நூலகம்” என்பதைக் குறிக்கிறது, பார்வையாளர்கள் உரையாடல்களை நடத்தவும் தங்கள் தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி அறியவும் “கடன் வாங்கக்கூடிய” ” புத்தகங்களாக” மக்கள் செயல்படுகிறார்கள், திறந்த உரையாடல் மூலம் ஸ்டீரியோடைப்கள் மற்றும் தப்பெண்ணங்களை சவால் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு கருத்து இது ; இந்த யோசனை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உருவானது, இது அடிப்படையில் ஒரு டேனிஷ் கண்டுபிடிப்பாக அமைந்தது. இதை இந்த நூலிலும் என்னால் பார்க்க முடிந்தது.
ஆம், நாம் ஒவ்வொருவரும் ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது. மனிதர்களை சந்தித்து, மனிதர்களைப் பற்றிய அனுபவங்களையும் வேதனைகளையும் துக்கங்களையும் இன்பங்களையும் இந்த உலகிற்கு எழுத்து மூலம் கொண்டு வருவது மிகப்பெரிய வேலைப்பாடுகளாக இன்று இருந்து வருகின்றது. அதை நம் நூல் ஆசிரியர் 12 அத்தியாயங்கள் மூலம் விளக்கி இருக்கின்றார். 12 அத்தியாயத்தில் ஒன்பது அத்தியாயத்தில் நிலப்பரப்பையும் மூன்று அத்தியாயங்கள் கடலையும் சம்பந்தப்படுத்தி எழுதி இருக்கிறார்.
1. ஒரு பேருந்து பயணம்
2.மெர்சி ஊருக்கு வந்திருப்பாள்
3. தங்க வளையல்
4. சிவப்பு சேலைக்காரி
5. பலூன் பொம்மை
6. தலைப்புச் செய்தி
7. ஓராயிரம் சிறகுகள்
8. ஒரு புதுக்கவிதை
9. கடற்கரை பயணம்
10. கண்ணீர் கடல்
11. ஜெனி
12. தேர்த்திருவிழா
என்னும் அத்தியாயத்தின் மூலமாக இந்த சமூகத்தில் உளவியல் மூலமாகவும் கருத்தியல் மூலமாகவும் சமூக ரீதியாகவும் மனித இனத்திடம் பல கேள்விகளை ஆங்காங்கே பணி தூரல்களைப் போல கேட்காமல் கேட்டு இருக்கிறார் நூலாசிரியர். நூலாசிரியர் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உண்மை சம்பவங்களை எடுத்துரைத்த விதம் மிகவும் வரவேற்க வேண்டிய ஒரு அற்புதமான முறையாக இருக்கின்றது. தெள்ளத் தெளிவாக நடந்ததை அப்படியே எல்லோரும் படித்து புரியும்படி அமைத்திருக்கிறார்.

‘பேருந்து பயணம்’

எல்லா ஆண்களுக்கும் ஒரு சரியான விடையாக இருக்கும்.

‘ மெர்சி ஊருக்கு வந்திருப்பாள்’ என்ற செய்தி படிக்கும் எல்லோரையும் கலங்க செய்யும். ‘ தங்க வளையல்’ இன்று ஒரு சில நபர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுகின்றது. தங்கத்தின் மீது வந்த அமோக ஆசையினால் மற்றவர்களுடைய பொருளை எடுத்துவிட்டு இல்லை என்று சொன்னது இன்னொரு குடும்பத்தை பாதிக்கும் என்பது தெரியாமல் போய்விட்டது. ‘ சிவப்பு சேலைக்காரி ‘ இன்றும் நம்முடைய சமூகத்தில் அரங்கேறாத ஒரு இனமாக இருந்து வருகிறது.

என்னதான் அவர்களுக்கு “திருநங்கைகள்” என்று பெயர் வைத்தாலும் அவர்களை நாம் பார்க்கும் பார்வை வித்தியாசமாக தான் இருக்கிறது. சிவப்பு சேலைக்காரியாக நம்மில் இன்று பலபேர் உருவெடுத்து இருக்கிறார்கள். அது அவர்கள் விரும்பி தேடிய பட்டம் அல்ல. விரும்பி தேடிய வாழ்க்கையும் அல்ல. அது வந்து சேர்ந்த வாழ்க்கை என்று மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் போய்விட்டனர். ‘பலூன் பொம்மையை’ படிக்க படிக்க அந்த குழந்தைக்கு அப்பா வீட்டில் ஸ்டார் போடுவாரா? போட மாட்டாரா? என்ற ஏக்கம் எனக்கும் இருந்து கொண்டே இருந்தது. கடைசியில் அது ஏமாற்றத்தில் முடிந்தது. ஆனால் அதில் ஒரு சிறப்பான ஒரு செய்தி; தந்தை கனிவுள்ளவராகவும் பொறுமை உள்ளவராகவும் உண்மை உள்ளவராகவும் இருந்தார். இதுதான் ஏழை குடும்பத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று சொல்லலாம். தன்னிடம் பணம் இல்லை என்றாலும் அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத அந்த அப்பாவின் குணமும் பண்பும் நேர்மையும் ஒரு நல்ல குடும்ப தலைவனுக்கு குடும்பத்தில் கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம். ‘தலைப்புச் செய்து’ இன்று மிகப்பெரிய செய்தியாக சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. பெண்கள் என்றாலே இந்த வயதிற்குள் கல்யாணம் செய்து விட வேண்டும் என்று ஒரு நிபந்தனை இந்த சமூகத்தில் இருந்து வருகிறது.

அதனால் என்னவோ அவள் செல்கின்ற இடமெல்லாம், “உனக்கு கல்யாணம் ஆகவில்லையா? உனக்கு என்ன ஆனது? உடலில் ஏதாவது குறையா? என்ற கேள்விகள் அவளை அடுத்த நிலைக்கு தள்ளாமல் அங்கே இருக்க செய்கின்றது. இது ஒரு மன உளவியல் சார்ந்த கருத்தாக இங்கு அரங்கேறி வருகின்றது. ‘ஓராயிரம் சிறகுகள்’, ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவனை திருத்துவதற்காக ஆசிரியர் மேற்கொண்ட அந்த செயல் பாராட்டத்தக்கது. மாணவன் முத்துவின் விடாமுயற்சி ஒரு மிகப்பெரிய இமயமலையை கடந்தது என்றே சொல்லலாம். அது ஆசிரியருக்கு அவன் கொடுத்த மிகப்பெரிய பரிசாகவும் கருதப்படுகின்றது. திருமணம் ஆகாமல் ஒரு விதவை பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த அந்த ஆணின் குணம் பாராட்ட வேண்டியது. கடைசியில் அந்த பெண்ணின் மகளை தன் பெண்ணாக சொன்னது இங்கே புதுக்கவிதையாக அரங்கேறி இருக்கின்றது. அம்மு அத்தைக்கு வணக்கம் சொல்லு, “இது என்னோட மகள் அம்மு” மணி சொன்ன அந்த ஒற்றை வரியில் ஒரு ‘புதுக்கவிதை’ பிறப்பெடுத்தது.

நவீன காலத்தில் பிறப்பு எடுத்து ஆங்கும் இங்கே அலைந்து கொண்டிருக்கும் பல்வேறு நபர்களுக்கு குடும்பத்தில் தங்களுடைய குழந்தைகளோடு விளையாடாமலும் மனைவிகளோடு நேரம் ஒதுக்காமல் இருப்பது நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய குற்றச் செயலாக இருக்கின்றது. அதுதான் ‘கடற்கரை பயணத்தில்’ நடந்திருக்கின்றது. ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவனின் வாழ்க்கை நெஞ்சு வலியால் அறுந்து போய்விட்டது, என்று ‘கண்ணீர் கடல்’ அழகாக சித்தரிக்கப்படுகிறது. இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய அழிவாகவும் இருந்து வருகின்றது. தமிழக அரசிடம் மத்திய அரசிடமும் கடல் ஆம்புலன்ஸ் வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது, இன்று வரை ஒரு ஆம்புலன்ஸ் இல்லாமல் இருப்பது மிக்க வருத்தத்தை தருகின்றேன். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி இருப்பதும் கேள்வி கேட்டிருப்பதும் நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றது.

பல வருடங்கள் கழிந்து தான் காதலித்த நபரை சந்தித்து தன்னுடைய பிள்ளையின் திருமணத்திற்காக கல்யாண பத்திரிகை வைப்பதும் பழைய நினைவுகளை திரும்ப பெறுவதும் இன்றும் பல்வேறு மக்களிடம் இருந்து வருகின்றது. என்ன செய்வது! காலம் செய்த செயல்! இது இன்னாருக்கு தான் இன்று எழுதப்பட்டிருக்கின்றது, என்று ‘ ஜெனி’ தனக்குள்ளாக சொல்லிக் கொண்டது காதல் ஒரு புரிந்து கொள்ள முடியாத புதிர் என்று புலப்படுகிறது.
‘ தேர்த்திருவிழா ‘ எல்லா ஊர்களிலும் நடக்கும் ஒரு பெரிய பாரம்பரிய விழா. அது யார் நடத்துகிறார் என்ற மக்களின் மன உலக துன்பங்களை மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் நமது நூலாசிரியர்.

கடைசியாக நூலாசிரியர் பன்னிரண்டு அத்தியாயங்களையும் ஒரு வித்தியாசமான பார்வையில் எழுதி இருக்கிறார் என்பது புத்தகத்தை படிக்கின்ற பொழுது தெரிய வருகின்றது. எந்த ஒரு அத்தியாயத்திலும் முடிவுகளை அவர்கள் கொடுக்கவில்லை மாறாக முடிவுகள் என்னவாக இருந்திருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார். கதை இன்னும் நீண்டிருக்கலாமோ? என்று எனக்குள்ளாக பலமுறை கேட்டிருக்கின்றேன். ஆனால் அவருடைய ஒட்டுமொத்த கதைகளும் இப்படித்தான் இருக்கின்றது. இது சமூகத்திடம் அவர் வைக்கும் கோரிக்கைகளும் கேள்விகளும் பரிந்துரைகளும் விருப்பங்களும் அச்சங்களும் அனுதாபங்களும் என்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு கதையிலும் அவர் கையாண்டிருக்கும் விதம் தொடக்க முதல் இறுதி வரை நம் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இவருடைய இந்த 12 அத்தியாயங்களும் முற்றுப்புள்ளி அல்ல தொடர் புள்ளியாகவே இருக்கின்றது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த தொடர் புள்ளி முற்றுப்புள்ளியை நோக்கி பயணம் செய்யும் என்ற எண்ணத்தோடு நூலாசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இன்னும் பல நூல்களை இந்த உலகிற்கு மனிதர்கள் மனிதர்களைப் பற்றி தெரிய வாய்ப்பினை அளிக்க நூலாசிரியரை இன்னும் பல படைப்புகளை தர பாராட்டுகின்றேன் வாழ்த்துகிறேன்.

நூலின் விவரம்:

நூலின் பெயர் : சிவப்பு சேலைக்காரி
நூலாசிரியர்: சப்திகா
நூல் வெளிவந்த ஆண்டு : 2024
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

நூல் அறிமுகம் எழுதியவர்:-

வள்ளவிளை ஜெ. சுனில்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *