சடவு – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூலின் பெயர் : சடவு
நூலாசிரியர் : மா.காளிதாஸ்
நூல் வெளியீடு : மௌவல் பதிப்பகம்
நூலின் விலை : 130
நூலை வாங்க : 9787709687
ஒரு நூல் கண்டை ஒரு பட்டத்தில் கட்டி பறக்கவிட்டால் அது வானத்தை தொடும்
அதே நூல் கண்டைக் கொண்டு பூவைத்தொடுத்து தோரணமாக்கி மாலையிடலாம்..
அதுபோல கவிஞர் மா. காளிதாஸ் ஐயா அவர்கள் இதுவரை 10 நூல்கள் வெளியிட்டுள்ளார் .
பெற்ற விருதுகள்
செல்வன் கார்க்கி நினைவுப் பரிசு 1999
கவிச்சுடர் விருது (படைப்பு குழுமம்) 2019
கவி ஓவிய விருது (மை கவிதை தொகுப்பிறகாக) 2022
சௌமா இலக்கிய விருது ( மென்னி கவிதைத் தொகுப்பிற்காக) 2023.
அன்மையில் புன்னகை இலக்கிய விருது பெற்ற “சடவு” கவிதை புத்தகத்தில் பல கவிதைகளை நடவு செய்துள்ளார் …
ஒவ்வொரு கவிதைகளையும் வாசிக்க வாசிக்க
விளைநிலத்தில் தினமும் திணைக்கொத்தும் பறவைகளாய்
நானிங்கே பல சொற்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் இது ஒரு கவிதை நிலம் …
“ஒரே நிறம்” கவிதையில்
நமக்கு தோதான இன்னொரு நிறத்தைத்
தெரிவு செய்யத் தொடங்கும் போது
நிறக்குருடைப் போல நம்மை நோக்கி வருகிறது
இன்றைய இரவு ..!
நிறங்களை தேடித்தேடி செல்ல கடைசியில் யாவும் ஒரே நிறம் தான் …
” இரவின் வெயில் ” கவிதையில்
மிதிபட்ட நத்தையின் பிசுபிசுப்பு
உன் பார்வை
மௌனக் குத்தூசி தைக்கிறது
சொற்களின் இடைவெளி.
உருண்டு உருண்டு
கதவுக்கு பின்னால் ஒளியும்
இரவு சட்டையென்றால்
கனவு பொத்தான்.
விளக்கை அணைத்ததும்
ஒளியைப் புணரும் இரவு
உன் காமம்.
விடிந்துவிட்டது வா, வந்து சோம்பல் முறி ..
வார்த்தைகளின் பிசுபிசுப்பு படிக்கும்போதே மனதில் ஒட்டிக்கொள்கிறது ..
“தாழப் பறக்கும் அன்பு ” கவிதையில்
நீ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தை இப்போது நினைவில் இல்லை.
ஒரு உலர்ந்த முத்தத்தால் அதை திரும்ப எடுத்துக்கொண்டாய்.
சாலையில் பெய்த மழையை வழிந்தோட விடாதபடித்
தடுக்கிறது நம் அன்பின் சகதி .
இப்போது நினைவிற்கு வருகிறது
குத்தகைப் படகில் அள்ளிச் சொல்கையில்
துள்ளிக் குதித்துத் தப்பிய மீன் தான்
நீ அடிக்கடி பயன்படுத்தும் சொல்
மீளத் திரும்பும் தாழப் பறக்கும் பறவையின்
ஈர அலகில் சொட்டுவது நம் அன்பு தான் என்கிறாய்.
தன்னியல்பாகக் காளானைப் போல விரிகிறது
செயற்கைப் புன்னகை …
நம் புன்னகையும் காளானை போல மெல்ல விரிகிறது ..
“கதவென்பது அழிக்கப்படாத புள்ளி ” கவிதையில்
அமைதி அல்லது குலைத்தலின் பொருட்டே
ஒரு கதவு திறக்கப்படுகிறது
இறுதித் தீர்ப்பு போல செவ்வக வடிவ பூட்டு சாவிகள்
மரம் இரும்பு தகரத்திடமிருந்து விடுபட முடியவில்லை .
போர்வை அல்லது நீளத்துணி கதவாகத் தொங்கும்
வீட்டில் ரகசியம் வாசல் தலைவைத்துப் படுத்திருக்கிறது ..
இரு கதவுகள் கொண்ட வாசல்
ஒளிந்து விளையாடுகின்றன
பொய்யும் மெய்யும் ..
உண்மைதான் இங்கே கதவுகள் என்பது யாது
ரகசியங்கள் கசியாத வரை அகத்தின் கதவுகள் அழகுதான் ..
” கட்டமைக்கப்பட்ட கபட நாடகம் ” கவிதையில்
பெண் உணர்கிறாள் உணர்த்துகிறாள் உணர்த்தப்படுகிறாள் தகவமைக்கப்பட்டப் பூவென மகரந்தம், மணம், நிறம், வடிவம் செயற்கைப் புன்னகைகள்
அறவே வெறுக்கிறாள்.
நாரும் விரல்களும் மட்டும் தொடுப்பதை அலசல்களுக்கு
அப்பாற்பட்டு ஆணியடித்த சொல்லாய்த்
தலையிலேயே தங்கிவிடுகிறது வாசனை …!
மண்டியிடுதல் வாழ்த்தாக விரிதல்
ஓடும் நீரில் ஒதுங்குதல் கட்டமைக்கப்பட்ட கபட நாடகத்தின்
காட்சிப் பிழைகளன்றி வேறென்ன ..!
குன்றிமணியின் கரிய மூக்கு போல
பாசாங்கு போலி நடிப்புகளுக்கு ஒரு கரும்புள்ளி வைத்திருக்கிறார் கவிஞர் ..
எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது
” நானுன் தீக்கங்கு ”
கொண்டு போய் உன் காடெரி
பூஜையில் புகையச் செய்
பஞ்சு போல் மிதித்துன்
வேண்டுதல் நிறைவேற்று
புதியனவற்றைப் பொரித்துண்
பழையனவற்றைச் சுட்டுத்திண்
உச்சியில் நிறுத்தி
உள்ளங்கால் கொதிக்கச் செய்
அந்திமப் பொழுதில் அகழ் விளக்கேற்று
வரிசையாய் மெழுகணைத்து வருடம் திரும்பு
மத்தாப்பாய் சிதறச் செய்
போகி கழி பொங்கல் வை
கொஞ்சம் சேதாரம் சேர்த்து
ஊதிஊதிப் புடம்போட்டு
உன்னையே நீ அணி
ஆசை கோபம் மோகத்தில்
அள்ளிப் பூசு உடலெங்கும்
துளியெடுத்துப் பத்திரப்படுத்து
கொள்ளிக்காகும்
நானுன் தீக்கங்கு ..!
ஒரேயொரு கவிதையில் எத்தனை எத்தனை தீக்கங்குகள் ..!
“சற்றுமுன் என் நகர்வு ” கவிதையில்
நான் இங்கிருந்து நகர்கிறேன்
முழுச்சுமையுடன் நத்தையாய்
கால்களோடு மட்டும் தொடர்புடையது அல்ல என் நகர்வு
காற்றைப் போல பெருவெளி கொண்டது
தேக்கங்களிலிருந்து விடுபடத் துடிக்கும் நதி போன்றது ..!
ஒரு நகர்வு எப்படிபட்டவை என்பதை நமக்கு நன்கு உணர்த்துகின்ற ஒரு கவிதையிது ஒரு பெரும் சுமை
கனத்த மௌனம் கொண்டது இந்தகவிதையும் ..!!
“பிசாசின் முத்தம் ” கவிதையில்
முதலில் உன் உதடுகளை நான் கவனிக்கத் தவறினேன்.
பிறககு உன் உதடுகளை மட்டும் தான் கவித்ததை
துடிப்புடன் கவனித்தன உன் உதடுகளும்.
அதன்பிறகு சீவிய நுங்கு போன்ற
உன் உதடுகளை நீ ஈரப்படுத்தவே இல்லை.
விலகல் நிகழ்ந்த பின்னும்
வரிவரியான நம் உதடுகளின் பள்ளங்களில்
தியானிக்கின்றன
நிராசைகளின் பிசாசுகள் …
ஒரு முத்தத்தில் புதைந்துகிடக்கும் பிசாசுகளை
அடையாளம் காட்டுகிறார் அதோடு
அது நிராசைகளின் பிசாசு என்கிறார் கவிஞர் ..
“நதியின் மேல் விழுந்த குருதி ” கவிதையில்
குறிவைத்து இரையைக் கொத்திச்
செல்லும் பறவையைப் படம்
பிடித்தவன்
தவறவிடுகிறான் நதியின் மேல்
விழுந்த சொட்டுக் குருதியை ..!
மீன் அழகு அதை கொத்தும் பறவையும் அழகு தான்
வடியும் குருதியை எதில் சேர்ப்பது ..
புகைப்படத்திலிருந்தும் தவறிவிட்டது அந்த சொட்டுக் குருதி ..
கவிதையில் சொல் என்பது வீரியமுள்ள விதைகள் போன்றது
அது எச்சூழலிலும் புயல் வெயில் மழை வெள்ளம் எதிலும் ஒடிந்துவிடாதபடி
கிளைத்து பூத்து நிற்கும் ..
இன்னும் பல படைப்புகள் வெளியிட வாழ்த்துகள் ஐயா ..
நூல் அறிமுகம் எழுதியவர் :
ச. இராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.