ஆசிரியர் சக. முத்துக்கண்ணனின் “சிலேட்டுக்குச்சி” – புதுகை சிக்கந்தர்நூலின் பெயர் : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக. முத்துக்கண்ணன்
பக்கங்கள் : 112
விலை. : ₹ 110
முதல் பதிப்பு : ஜூன் 2020
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/

ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்குமான பந்தத்தை நேர்மையான புரிந்துணர்வை பதிய வைக்கும் ஆழமான நேசத்திற்குரிய நெகிழ்வின் உரையாடல்களே இக்கட்டுரைத் தொகுப்பு..

சில சமயங்களில் நம்மீது வெறுப்பை காட்டக்கூடிய வகையில் நமது நடவடிக்கைகள் அமைந்த போதிலும் ஏதேனும் ஒரு கட்டத்தில் மனதை இதமாக்கக்கூடிய சொற்களை வழங்குகிற, செயல்களை புரிகிற மனதிற்கு நெருக்கமாய் அதே ஆசிரியர் அமைந்துவிடுவதை நினைவூட்டுகிறது முத்துவேல் சார் பற்றி படித்ததும்.
மாணவர்களை உளவியலோடு அணுகி அவர்களோடு ஒன்றி தான் நடத்த வேண்டிய பாடங்களை பக்குவமாக சேர்க்கக்கூடிய ஆசிரியர்களை கண்முன் நிறுத்துகிற பன்னீர் சார் பற்றிய கட்டுரையில் பெற்றோரிடம் காணாத வழிகாட்டல்களை அவர் மூலம் அறிந்துகொள்கிற மாணவர்கள் யார்மீதும் வன்மமற்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் எனும் நம்பிக்கை வருகிறது.

ராமரய்யாவிற்கும், முருகன் சார்க்கும் இடையிலான நட்பின் புரிதலும் ராமரய்யாவின் குழந்தைத் தனமான செயல்திறனும் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் வரம் பெற்றவர்களாக கருதுகிறேன் நான் அவர்களது தாழ்வு மனப்பான்மையை தகர்த்து அவர்களின் வாழ்வியலுக்கான விளக்காக மிளிர்தலென்பது எளிதில் எல்லோருக்கும் கைகூடுவதில்லை.

கண்தெரியாத முருகன்சார்க்கு ஜனனியின் ஒத்துழைப்பு மாணவியென்பதன் உறவை மீறி மகளென உணர்த்துகிறது. வகுப்பறையில் எதிர்பாராமல் நிகழும் இயற்கை உபாதைகளை கண்டு முகம் சுளிக்காமல் ஆறுதலாய் வார்த்தைகள் ஆசிரிய, ஆசிரியையிடமிருந்து கிடைப்பது எத்தகைய மனப்பக்குவம் உள்ளவர்களென்பதை அறிய முடிகிறது . ஒவ்வொரு பள்ளியிலும் இது போன்று ஆசிரிய, ஆசிரியை இருந்து விடுகிறார்கள் என்பதே நம்பிக்கைதான் நமக்கு..மாணவர்களின் மனக்குறைகளை கடிதத்தில் எழுதச்செய்யும் அற்புதம்மேரி ஆசிரியை அவர்களுக்காக பிரார்த்திப்பதாக கூறும்போது நிறைவேறுதலும், நிறைவேறாமல் போவதற்குமிடையில் உயர்ந்த குணங்களுடையோரில் ஒருவராய் பரிணாமம் அடைகிறார் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறே மாணவர் மன ஓட்டங்களை புரிந்து கொண்டு பாடம் நடத்தினால் அவர்கள்தான் எந்நாளும் வாழ்க்கைகான தூண்டுகோல்…

மனங்களை புரிந்து கொண்டாலே குறுக்கே நிற்கும் மதங்களும் அதனோடுள்ள சாதிய அமைப்புகளும் புலப்படாதென்பதை மாணவ பருவத்திலேயே அறிய வைத்தல் ஆகச்சிறந்தவை. மாணவ பருவத்தில் நிகழும் எல்லா மாற்றங்களுக்கும் ஆசிரியரும் பெரும் காரணமாய் அமைந்து விடுகிறாரென்பதை இந்நூலின் ஆசிரியர் அவரது மாணவர்களிடம் காட்டும் அக்கறை, அணுகுமுறையில் எளிதாக. விளங்கிக்கொள்ள முடிகிறது.

வீட்டுப்பாடமில்லாத திங்கள் கிழமைகள் எத்தகைய உன்னதமானவை வாரவிடுமுறைகளை மனஅழுத்தத்தோடு கழித்த கடந்த கால சுமைகளை இப்போதும் குழந்தைகள் மீது திணிக்காதிருக்கும் ஆசிரிய பெரு மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மாணவர்களின் மனஓட்டங்களை, பகிரமுடியாத சோகங்களை வெளிக்கொணரும் கடிதவழி செயல்பாடுகள் எல்லா பள்ளிகளிலும் தொடரவேண்டும் அது மாணவர்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் சந்திக்கின்ற அவலங்களை, அவமானங்களை பட்டியலிடும் அதன்மூலம் அவர்களை மதிப்பெண் குதிரைகளாய் மாற்றாமல் தடுக்க முடியும் மனனம் செய்து மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளுதலாகாது சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளை, அரசியல்மீதான புரிதலை கற்றுத்தர முயல்வதற்கு பேருதவியாகுமென்பதே இந்நூலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆசிரியரிடமும், மாணவ மாணவியரிடமும் இந்நூலை வாசிப்பதற்கான தேடலை உருவாக்க வேண்டும்.

– புதுகை சிக்கந்தர்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.