சகவாசம் – சிறுகதை
கனகாவின் வருகையை எதிர்நோக்கி வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரிமளா. பரிமளா திருமணம் முடிந்து இந்த வீட்டிற்கு வரும்போது கனகாவிற்கு பதினெட்டு வயதிருக்கும். அந்த வயதுக்கே உரிய சுறுசுறுப்புடன் எல்லா வீட்டு வேலைகளையும் புன்முறுவலுடன் செய்வாள். சிறுவயதிலேயே அவள் அம்மாவுடன் வந்து சின்னச் சின்ன வேலைகளை செய்ய ஆரம்பித்தவள், அதே வீட்டில் இன்று வரை வீட்டு வேலை செய்து வருகிறாள்.
அவளுக்கு இப்பொழுது திருமணமாகி பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மகன் இருக்கிறான். ஆனால் அவள் சுறுசுறுப்பு இன்றும் குறையவில்லை. அவள் ஒருநாள் வரவில்லை என்றாலும் பரிமளாவிற்கு கை உடைந்ததுபோல் எந்த வேலையும் ஓடாது. இன்றும் அவள் வரத் தாமதம் ஆனதால் எந்த வேலையும் செய்யாமல் அவளுக்காக வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கனகா வரும்போதே “அண்ணி..” என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள். அவள் பரிமளாவின் கணவரை அண்ணன் என்று அழைத்துப் பழகியதால் அவருக்கு திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த பரிமளாவை அண்ணி என்று அழைக்கத் தொடங்கினாள்.
“என்ன கனகா என் இவ்வளவு லேட்?”
“இல்ல அண்ணி என் பையன் ராகுல் இன்னிக்கு காலைல எழுந்துக்கவே இல்ல. சோம்பேறித்தனமா படுத்துக்கிட்டு இருந்தான். ஸ்கூலுக்கு போக லேட் ஆயிட்டே இருந்துது. ஒரு வழியா அவன கெளப்பி அனுப்பிட்டு வரேன். அதான் லேட் ஆயிடுச்சு.”
“ராகுல் எப்பவும் சுறுசுறுப்பா இருப்பானே அவனுக்கு என்ன ஆச்சு. உடம்பு எதனா சரி
இல்லயானு பாத்தியா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணி. அவன் இப்போ புதுசா பெரியப் பசங்கக்கூட பழக ஆரம்பிச்சிருக்கான். எங்கத்தெரு முனைல இருக்க மேன்ஷன்ல தங்கி வேலைக்கு தேடிக்கிட்டு இருக்க பசங்ககூடதான் எப்பவும் சைக்கிள் வெச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான். ஸ்கூல் விட்டு வந்ததுமே கெளம்பிப் போய்டறான். நைட்ல ரொம்ப லேட்டா வீட்டுக்குவரான். சாப்பிடறதுக் கெடயாது. கேட்டா அவங்களோடயே சாப்டுட்டேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போய்டறான். சுத்தமா படிக்கறதே இல்ல. அவங்க அப்பாக்கிட்ட சொன்னா அவர் எதயும் காதுல போட்டுக்கறது இல்ல. இந்த வயசுல அப்பிடிதான் இருப்பாங்கனு எனக்கு சமாதானம்
சொல்றாரு என்ன செய்றதுனே தெரியல.”
“நீ சும்மாவே எல்லாத்துக்கும் பயப்படுவ. உங்க வீட்டுக்காரர் சொல்ற மாதிரி அவன் வயசுப் பசங்க வீடு தங்காமதான் இருப்பாங்க. அவன நான் சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன். அமைதியான சுபாவம். அதுந்து கூட பேச மாட்டான். நல்ல மரியாதையானப் பையன். அவனப்பத்தி நீ எதுவும் கவலப்படாத. எல்லாம் சரியாயிடும்.”
“சரிங்க அண்ணி நான் வேலைய பாக்கறேன்” என்று கூறிவிட்டு கனகா எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தாள். பரிமளாவும் உடன் இருந்து அவளுடன்
பேசிக்கொண்டே வேலைகளைப் பார்த்தாள். மதிய உணவுடன் அவளை அனுப்பி வைத்தாள். கனகாவிற்கு, அவள் கணவர் பற்றியும் மகன் ராகுல் பற்றியும் வீட்டில் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கதை போல் பரிமளாவிடம் கூறாவிட்டால் தலையே வெடித்துவிடும். பல வருடங்களாக இப்படித்தான் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
வீட்டிற்குச் சென்ற கனகா சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு ராகுலுக்காக காத்திருந்தாள். அவன் இவ்வாறு சோம்பலாக இருந்ததில்லை. நன்கு படிக்காவிட்டாலும் ஓரளவு படிப்பான். அம்மாதான் உலகமாக அவள் பின்னாலேயே சுற்றி வந்துக் கொண்டிருப்பான். இப்பொழுது அவன் அவள் அருகாமையை விரும்புவதில்லை. தன்னை அவளிடம் இருந்து விலக்கிக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். அவனது விடலைப் பருவம்தான் அதற்குக் காரணம் என்று கனகாவும் புரிந்து கொண்டாள்.
மணி நான்கைத் தொட்டதும் வீட்டிற்குள் நுழைந்தான் ராகுல். புத்தகப் பையை வைத்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு உடனே கிளம்பினான்.
“ராகுல் உனக்கு உடம்பு எப்பிடிப்பா இருக்கு. உனக்காக சூடா சமச்சு வெச்சிருக்கேன்.
சாப்பிடுறியா?“
“எனக்கு எதுவும் வேணாம். நான் ஃபிரண்ட்ஸ பாக்கப் போறேன்.” என்று கூறிவிட்டு வேகமாகசென்றுவிட்டான். அவனது செயல்கள் சற்று வித்தியாசமாக இருந்தாலும் அனைவரும் கூறுவதுபோல அவன் வயதே அதற்குக் காரணம் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டாள். நாட்கள் உருண்டோடிக்கொண்டிருந்தன. காலாண்டுத் தேர்வில் ராகுல் மூன்று பாடங்களில் ஃபெயில் ஆகி இருந்தான். இதுவரை அவன் எந்த வகுப்பிலும் ஃபெயில் ஆனதில்லை. அதைக் கேட்டதற்கு, ஆசிரியர்கள் சரியாக வகுப்பு எடுப்பதில்லை என்றும் புது சிலபஸ் ஆசிரியர்களுக்கே கடினமாக இருப்பதாகவும் டியூஷன் சென்றால் நன்கு படிக்க முடியும் என்றும் கூறினான்.
அதற்கு எவ்வளவு செலவாகும் என்றுக் கேட்டு பரிமளாவிடம் முன்பணம் வாங்கி அவனை சேர்த்துவிட்டாள் கனகா. பள்ளி முடிந்து வந்ததும் டியூஷன் செல்ல ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் சென்ற கனகா, ராகுல் டியூஷன் செல்லாமல் தெரு முனையில் மேன்ஷன் பசங்களுடன் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். அவன் அவளை பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்த ராகுலிடம் இன்று என்ன பாடம் சொல்லிக் கொடுத்தார்கள் எப்படி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று சாதாரணமாக கேட்பது போல்
கேட்டாள். அவன் இன்று கணிதப்பாடம் படித்ததாகவும் நன்றாக சொல்லித் தருவதாகவும் பதிலளித்தான். தன் மகன் தன்னிடம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறான் என்பதை உணர்ந்து தனக்குள் வருந்தினாள் கனகா. அவள் கணவரிடம் கூறியபோது அவரும் சற்று தடுமாறினார். அவனிடம் நேரடியாகக் கேட்டால் அவன் எவ்வாறு நடந்துகொள்வான் என்று தெரியாததால் அவனை எப்படி சரிப்படுத்துவது என்று இருவரும் ஆலோசித்தனர். ஆனால் விடை எதுவும்
கிடைக்காததால் பரிமளாவிடம் கூறி அவனுக்கு அறிவுரை வழங்க நினைத்தார்கள். மறுநாள் பரிமளா வீட்டிற்குச் சென்ற கனகா, அவன் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கூறினாள்.
“அண்ணி, அவன் நாங்க சொன்னா கேக்க மாட்டான். நீங்களும் அண்ணனும்தான் அவனுக்கு
புத்திமதி சொல்லிப் புரிய வெக்கனும்”
“சரி கனகா, சனிக்கிழமை அவர் வீட்ல இருப்பார். நீ ஏதாவது சொல்லி அவன இங்க கூட்டிட்டு
வா” என்றாள். அன்றிரவே தன் கணவரிடம் நடந்த எல்லாவற்றையும் கூறி அவனுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொண்டாள்.
இதற்கிடையில் ராகுல் தனக்குப் பள்ளியில் ப்ராஜக்ட் வொர்க் இருப்பதாகவும் அதை செய்வதற்கு ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டிருந்தான்.
அதை மனதில் வைத்துக்கொண்டு,
“ராகுல் உன்னோட ப்ராஜக்டுக்கு பணம் கேட்டியே நான் பரிமளா அண்ணிகிட்ட கேட்டிருக்கேன். அவங்க குடுக்கறேன்னு சொன்னாங்க. உன்னையும் பாத்து ரொம்ப நாள் ஆனதால வர சனிக்கிழமை உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க. காலைல எங்கயும் போய்டாத.” என்று கூறிய கனகாவிடம், பணம் கிடைக்கப் போவதால் சரி என்று கூறினான். சனிக்கிழமை காலை எட்டு மணிக்கு அவனை அழைத்துக் கொண்டு பரிமளா வீட்டிற்குச் சென்றாள். அங்கு பரிமளாவின் கணவர் சோபாவில் அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ராகுல் நுழைந்ததும் “மாமா எப்படி இருக்கீங்க” என்று மரியாதையாக
கேட்டான்.
“வா ராகுல் எப்படி இருக்க ஸ்டடீஸ்லாம் எப்படி போகுது” என்று விசாரித்த பரிமளாவின் கணவர் அவனிடம் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பிறகு அவன் கேட்டப் பணத்தைக் கொடுத்து நன்கு படிக்குமாறு அறிவுறுத்தி அவனை அனுப்பி வைத்தார். அவன் சென்றப் பிறகு, “எனக்கு என்னமோ கனகா சொல்றது சரினுதான் தோனுது. ராகுல் முன்ன மாதிரி இல்ல. அவன் கண்ணப் பாத்தே பேச மாட்றான். அவன் பேச்சு வெளிப்படையா இல்ல ஏதோ தப்பா இருக்கு.” என்று கூற,
“என்னங்க இப்படி சொல்றீங்க, கனகா கேட்டா ஒடஞ்சிப் போய்டுவா, இப்ப என்னங்க செய்யறது?” என்று பதட்டத்துடன் கேட்டாள் பரிமளா.
“கொஞ்சம் அவன கண்காணிக்கனும்னு தோனுது. அவங்க அப்பாக்கிட்ட சொல்லி அவனுக்குத் தெரியாம அவன் எங்க போறான் என்ன பன்றான்னு பாக்க சொல்லு. அவன் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ்கிட்டயும் பேசினா ஏதாவது தெரியும்”.
அதன்படியே மறுநாள் வேலைக்கு வந்த கனகாவிடம் கூறினாள் பரிமளா. ராகுலுடன் ஆறாம் வகுப்பு முதல் படித்து வரும் குமாரை கனகா அவன் வீட்டிற்கு சென்று பார்த்தாள். ராகுலைப் பற்றி விசாரித்த போது,
“ஆண்ட்டி ராகுல் இப்ப முன்ன மாதிரி யார்கிட்டயும் பேசரதே இல்ல. எப்பவும் சோர்வாவும் எதையோ யோசிச்சிக்கிட்டும் இருக்கான். மார்க்ஸும் இப்ப கம்மி ஆயிடுச்சு. எங்க கிளாஸ் டீச்சர் உங்கள ஸ்கூலுக்கு வந்து பாக்க சொல்லி பல முற அவன் கிட்ட சொல்லிட்டாங்க. ஆனா நீங்க வரவே இல்ல.”
“அவன் என்கிட்ட சொல்லவே இல்ல குமார்.”
“உங்களுக்கு ஏதாவது ப்ராஜக்ட் குடுத்திருக்காங்களா அதுக்கு பணம் ஏதாவது
கேட்டாங்களா?”
“இல்ல ஆண்ட்டி அப்படி எதுவும் சொல்லலியே” என்று கூற கனகாவுக்கு சற்று உதறல் எடுத்தது. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டிற்குச் சென்றவள் அழ ஆரம்பித்து விட்டாள். பிறகு சமாதானம் ஆகி அடுத்து என்ன செய்வது என்பதை யோசித்தாள். ராகுலின் அப்பா தெரு முனையில் இருக்கும் மேன்ஷனுக்கு சென்று அங்கு இருந்த வாட்ச்மேனை பார்த்துப் பேசினார். அவர் ராகுலின் அப்பாவை அதேத் தெருவில் பார்த்திருந்தாலும் இதற்கு முன் பேசியதில்லை.தன்னை அறிமுகம் செய்து கொண்டு ராகுலைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“உங்க பையன எனக்குத் தெரியும் சார். அவனுக்கு வயசுக்கு மீறின சகவாசம். நானே பலமுற அவன இங்கலாம் வரக்கூடாதுனு சொல்லி இருக்கேன். அவன் கேட்டதில்ல. இங்கத் தங்கியிருக்கவங்க எல்லாரும் நல்லவங்கஇல்ல. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு காரணத்துக்காக இங்க வந்து தங்கி இருக்கானுங்க. அதையெல்லாம் நாம கண்டுக்க முடியாது. அப்பிடி ஏதாவது கேட்டா இங்க நான் வேல செய்ய முடியாது.”
“பணத்துக்காகதான் அவனுங்க உங்க பையன சேத்துக்கிட்டு இருக்கானுங்க. ராகுல் பலமுற
அவனுங்களுக்கு பணம் குடுக்கறத நானே பாத்திருக்கேன்” என்றார்.
டியூஷன் மாஸ்டரைப் பார்த்து விவரம் கேட்கச் சென்ற கனகாவிடம், அவன் டியூஷன் ஃபீஸ் இரண்டு மாதமாக கொடுப்பதில்லை என்பதையும் அதைக் கேட்டதில் இருந்து டியூஷனுக்கு வருவதில்லை என்பதையும் கூறினார். இன்று ராகுலிடம் நேரடியாகப் பேசிவிடவேண்டும் என்ற தீர்மானத்துடன் அவன் அப்பா அவனுக்காக காத்திருந்தார். வீட்டிற்கு வந்த ராகுல் அப்பாவை அந்த நேரத்தில் பார்த்ததும் திகைத்தான். எதுவும் பேசாமல் சட்டையை மாற்றிக்கொண்டு வெளியேற முயன்ற ராகுலைப் பார்த்து,
“ராகுல், எங்க போற?” என்று கேட்டார்.
“டியூஷனுக்கு போறேன்”
“நீ டியூஷனுக்கு வந்து ரெண்டு மாசம் ஆகுதுனு உங்க மாஸ்டர் சொன்னாரே?”
“இல்லப்பா நான் போய்ட்டுதான் இருக்கேன்”
தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, “பொய் சொல்லாத ராகுல். இப்பதான் நான் உங்க மாஸ்டர பாத்துட்டு வரேன்.” என்று கூற பயத்தில் நடுங்கி மயங்கி விழுந்தான் ராகுல். உடனடியாக மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றனர். டாக்டரிடம் நடந்த அனைத்தையும் கூற அவர் சில பரிசோதனைகளை செய்து அவன் ரத்தத்தில் போதை மருந்து கலந்திருப்பதைக் கண்டறிந்து கூறினார். இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்த மருத்துவர், போதை மறுவாழ்வு மையத்திற்கு பரிந்துரைக் கடிதத்தை அளித்து அவனை அங்கு சேர்க்குமாறு அறிவுறுத்தினார். அவனுக்கு போதைப் பழக்கம் சமீபமாகதான் ஆரம்பித்திருக்கிறது என்பதால் விரைவில் அவன் குணமடைந்து இயல்பு நிலைக்கு வந்து விடுவான் என்றும் நம்பிக்கை வார்த்தைகள் கூறினார். ராகுலை அழைத்துக்கொண்டு அந்த மையத்திற்கு சென்று கடிதத்தை காண்பித்து அவனை சேர்த்தனர். பரிமளாவும் அவள் கணவரும் முன்னரே அங்கு வந்து காத்திருந்தனர். அவன் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை செலுத்தினர். ராகுலைப் போல சிறுவர்கள் பலரும் அங்கு சேர்க்கப்பட்டிருந்தனர். இது போல பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்காக தனிக் குழு அங்கு இயங்குகிறது. கனகாவையும் அவள் கணவரையும் அதில் பங்கேற்குமாறு அங்கிருந்த நர்ஸ் கூறினார். ஒரு அறையில் அமர்த்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஒரு காணொளி காண்பிக்கப்பட்டது.
“போதைப் பொருள் என்பது முன்னர் கிடைப்பதே அரிதாக இருந்தது. தற்பொழுது சாக்லேட், பவுடர், மாத்திரை போன்ற யாருக்கும் சந்தேகம் வராத வடிவங்களில் தயாரிக்கப்பட்டு சாதாரன மருந்துக் கடைகளில் சுலபமாக வாங்கிக்கொள்ளும் விதமாக கிடைக்கிறது. பள்ளி சிறுவர்களை அதற்கு பழக்கி அவர்களை படிப்படியாக அதற்கு அடிமையாக்கி சிறிய திருட்டு, கொள்ளை என்று ஆரம்பித்து பெரிய குற்றங்களையும் செய்யத்தூண்டி அதன் மூலம் சில இளைஞர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர்.
யாரிடமும் பிடிபடாமல் இருப்பதற்காகவும் அவ்வாறு பிடிபடும் சூழல் ஏற்படும் போது அப்பாவி சிறுவர்களை கைகாட்டிவிட்டு தப்பித்தும் கொள்கிறார்கள்.
பெற்றோர் எப்பொழுதும் தங்கள் குழந்தைகளை அதிக சுதந்திரம் கொடுத்து கெடுப்பதும் அதிக கண்டிப்பு கொடுத்து கட்டுப்படுத்துவதும் இல்லாமல் அவர்கள் மீது தங்கள் பார்வையை எப்பொழுதும் வைத்து அவர்கள் தவறான வழியில் செல்லும் அறிகுறி தென்பட்டால் அவர்களை நல்வழிக்கு கொண்டு வர வேண்டும்.
விடலைப் பருவம் என்பது மிகவும் எச்சரிக்கையான நுண்மையானப் பருவம். அதைக் கையாளும் விதத்தில்தான் அவர்கள் நல்லவர்களாக மாறுவதும் தீய வழியில் செல்வதும் தீர்மானிக்கப் படுகிறது. தொடர் சிகிச்சை அளிப்பதால் அவர்களை மீண்டும் ஆரோக்யமான நிலைக்கு கொண்டு வந்து
விடலாம்” என்ற அறிவுரை அளிக்கப்பட்டது.
கனகாவும் அவள் கணவரும் ராகுலை அங்கு சிகிச்சைக்கு விட்டுவிட்டு வீடு திரும்பினர். அவனை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையுடன்.
கதையாசிரியர்:
பிரியா ஜெயகாந்த்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

