எனது ஆண்கள் (Enathu Aangal Book) புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற “எனது ஆண்கள்” – நூல் அறிமுகம்

எனது ஆண்கள் புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது

ஆசிரியர் பற்றி :

நளினி ஜமீலா – ஆவணப் பட தயாரிப்பாளாராகவும், எழுத்தாளராகவும் மாறிய ஓர் பாலியல் தொழிலாளி. மலையாளிகளின் தனி வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் நிலவும் கலாச்சார பாசாங்கையும் ஒழுக்க சார்பையும் தன் வரலாற்றின் மூலமாக கேரள பண்பாட்டு உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர். பெண்கள் மீதான ஆண்களின் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தன் சொந்த அனுபவங்களின் பின்னணியில் இந்த நூலை எடுத்துக்காட்டுகிறார். இதன் மூலம் சமூகத்தின் கோணல்களையும் கபடங்களையும் அப்பட்டமாக விவாதிக்கும் தார்மீக அறிக்கை இது என்கிறார்.

மொழிபெயர்ப்பாளர் பற்றி:

ப. விமலா – கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். தற்பொழுது சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர். சாகித்திய அகாடமி விருது பெற்றதற்கு பின்னர் பட்டி தொட்டி எங்கும் அவரும் அவரது உழைப்பும் உலகம் அறியும் செய்திருக்கிறது. மலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் , விவேகானந்தம் என்னும் புதின மொழிபெயர்ப்பு நூலும் இவரின் குறிப்பிடத்தக்க பிற நூல்கள்.

இனி சுயசரிதைக்குள்….

முதலில் புத்தகத்தின் தலைப்பை எடுத்துக் கொள்வோம். எனது ஆண்கள் என்று பொதுவெளியில் ஒரு பெண் இப்படி கூறினால் அவளுக்கு நாம் ஒரு சமுதாயப் பெயர் வைத்து அழைப்போம் அல்லவா..‌? ‘எனது ஆண்கள்’ என்று சொல்வதற்கே ஒரு பெண்ணுக்கு தனித்துவமான தைரியம் வேண்டும். ஒரு ஆண் ‘எனது மனைவிகள்’ என்று சொல்லலாம் . ஏனென்றால் அதில் ஒரு பெருமை இருக்கிறது . அவன் ஆண்மையை நிரூபிக்கிறான். ஆனால் ஒரு பெண் ‘எனது கணவன்கள்’ என்றோ ‘எனது ஆண்கள்’ என்றோ பன்மையில் சொல்ல இன்றளவும் நமது சமூக அமைப்பு இடம் கொடுக்கவில்லை.

எனது ஆண்கள் (Enathu Aangal Book) புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது

சமீபத்தில் இணையதளத்தில் ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள் என்ற ஒரு பதிவை கண்டு பல ஆண்கள் தங்கள் உள்ளக் குமுறல்கள் எல்லாம் கொட்டியிருந்ததைக் கண்டேன். பாஞ்சாலி ஐவருடன் வாழ்ந்தால் என்பதை இதிகாசமாக கண்டாலும் நடைமுறையில் சாத்தியமில்லை எனும் சமூக கட்டமைப்பு. இப்படி ஒரு பெண் தான் வாழ்ந்த கதையை சுயசரிதையாக எழுதியிருக்கிறார் என்றால் அவரின் மனோ தைரியத்தை அங்கீகரிக்கத் தான் வேண்டும்.

எடுத்து எடுப்பிலேயே ‘கேரளத்து ஆண்கள்’ என்ற முன்னுரையில் மலையாள ஆண்களில் 75 சதவீதம் பேர் பெண்களை சரிசமமாக நினைக்காதவர்கள் என்று பட்டென்று போட்டு உடைக்கின்றார். இது கேரளா மீது கேரளவாசிகள் மீது அவர்கள் கொண்ட கல்வியறிவின் மீது நாம் வைத்திருக்கின்ற கட்டமைப்பை தகர்த்தெறியும் ஒரு வாசகமாக நான் பார்த்தேன்.

நளினி ஜமீலா அவர்கள் வாழ்வில் ஒரு பாலியல் தொழிலாளியாக தான் கண்ட ஆண்களைப் பற்றி நினைவுகூர்ந்து சொல்லும் ஒரு கதை சொல்லியாக இங்கு அமர்ந்திருக்கிறார் . பொதுவாக தொலைக்காட்சி தொடர்கள் உட்பட பலவற்றிலும் பெண்களை தோற்கடிப்பதற்கான தந்திரம் கன்னித்தன்மையை அழித்தலும் கர்ப்பிணி ஆக்குதலும் தான் என்ற ஒரு பிம்பம் உள்ளது. அது எந்த நாடானால் என்ன…? எவ்வகை நாடாக இருந்தாலும் ஆண் என்ற மனிதனின் போக்கு இதுதான் என்கிறார்.

மலையாளி ஆண்களின் கள்ளத்தனத்திற்கு ஏற்ற நில அமைப்புதான் கேரளத்தினுடையது என்று சொல்லி, அங்கு வாழ்பவர்கள் எந்தெந்த பகுதியைச் சார்ந்தவர்கள் எந்த இடங்களுக்கெல்லாம் தனது கள்ளத்தனத்தைப் பிறரின் கவனத்திற்கு தெரியாமல் பாதுகாக்க செல்கிறார்கள் என்பது வரை விவரிக்கிறார். குறிப்பாக இதில் சுற்றுலா தளங்களும் தெய்வீக இடங்களும் அடங்கும். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் கல்கத்தாவிற்கும் தாய்லாந்திருக்கும் டெல்லிக்கும் எல்லாம் ஒரு பாலியல் தொழிலாளியாக பயணம் செய்த பொழுது மலையாளிகளுக்கு மட்டுமே உள்ள சில அற்பத்தனங்களையும் கொடூரங்களையும் பற்றி பின்னோக்கிப் பார்த்து எழுதியிருப்பதை தான்.

தான் வருகின்ற இடம் என்ன இடம் என்று அறிந்து வந்தாலும்…
அங்கு வந்தும் ஒரு நல்ல பெண் என்றால் என்ன என்ற விளக்கம் அளிப்பதும் , நீ இப்படிப்பட்டவள் என்றால் இது எல்லாம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் ஒரு ஆணின் வக்கிர புத்தி என்கிறார்.‌ எந்த தொழில் செய்தாலும் பார்ப்பதற்கு அழகு, குறிப்பாக வெள்ளை நிறம் வேண்டுமாம்.

துரோகங்களும் வலிகளும் ஏமாற்றங்களும் எதிர்பார்ப்புகளும் கூடவே காதலும் என பயணிக்கிறது ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை . தன் மீதான சமூக பார்வைகளையும் வக்கிரங்களையும் கொடுமைகளையும் நூலில் தோலுரித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

ஜோணி எனும் லாரி ஓட்டுபவனில் ஆரம்பிக்கும் இவருடைய முதல் காதலானது அதற்குப் பிறகு பல ஆண்களூடே விரிவாகி விட்டு இறுதியில் ஒரு மெடிக்கல் ரெப்பிடம் வந்து நினைவுகள் நிறைவுறுகிறது. நிறைவுற்றாலும் தன் மனதில் படிந்த ஆழ்ந்த காயங்களை கொண்ட ஒரு காவல் அதிகாரியின் வக்கிர புத்தியை சொல்லி, நான் ஒரு திரைப்படம் எடுப்பேன் என்றால் அவருடனான கதையைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்றும் முடித்திருக்கிறார்.

சுனில் எனும் பிராமணன் மீதும் அதே நேரத்தில் தங்கப்பன் என்னும் தோட்டியனுடான உறவை பார்க்கும் விதம் ஒரு பாலியல் தொழிலாளியாய் ஒத்தும் வேறுபட்டு இருப்பதையும் உணர முடிந்தது. பல ஆண்களோடு இருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு சுதந்திரமாக அவள் இரவில் வெளியில் இருக்க தயங்குகிற ஒரு உணர்வை புத்தகம் முழுதும் உணர முடிந்தது.

எனது ஆண்கள் (Enathu Aangal Book) புத்தகம் 2025 ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது

இரவு உறங்குவதற்கான பாதுகாப்பான இடம் கிடைப்பது என்பது தான் தினசரி அத்தியாவசியம் என்று ஒவ்வொருவரின் சந்திப்பிலும் சொல்லிச் செல்கிறார். இப்படிப்பட்ட தொழிலில் இறங்கி இருப்பதால் சுத்தம் சுகாதாரத்தில் தான் குறைந்தவள் இல்லை எனும் இடங்களிலும் , தன் அழகு குறித்தான ஒரு கர்வம் கொண்டிருப்பதிலும், நான் இன்ன குணாதிசயங்களைக் கொண்டவள் தான் என்பதை நிரூபிப்பதிலும் , தன்னை தரம் குறைவாக பேசும் ஆண்களிடத்தில் வம்படி செய்யும் பெண்ணாகவும் நளினி ஜமீலாவை நாம் பார்க்க முடிகிறது.

சுயசரிதை கூட பாலியல் தொழிலாளியின் சுயசரிதையானதனாலோ என்னவோ தனித்துவமான பொருள் என்பது போல மக்கள் எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள் . எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று ஒரு சில பத்திகையாளர்கள் என்னிடம் கேட்கின்றனர். சுயசரிதையில் உண்மையில்லாத நிலையை பற்றி அவர்கள் சிந்திக்கிறார்களே ஒழிய பாலியல் தொழிலாளி உண்மையைத்தான் பேச வேண்டும் பேசுவாளா என்று ஐயம் தான் எழுகிறது என்கிறார்.

சமுதாயத்தை மற்றொரு கண் கொண்டு பார்க்கும் ஒரு பார்வையை இந்த புத்தகம் தந்து செல்கிறது . வெளிச்சம் படும் இடத்தில் மட்டுமே பார்வையை கடத்தும் நாம் , இரவிலும் பகலிலும் கூட ஒரு உலகம் இயங்குகிறது என்பதை பாலியல் தொழிலாளியின் நிலையில் இருந்து உணர முடிகிறது. இது போன்றவர்களுக்கான மாற்றுத் தொழில் ஏற்பாட்டுக்கு என்ன திட்டம் என்று அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

நளினி ஜமீலாவாக ஆசிரியர் பா விமலா சொல்லியிருக்கும் கதை சொல்லல் தமிழ் நடை அழகு . மலையாள மொழி மூலம் என்பதால் ஒரு சில இடங்களில் மட்டும் சற்றே திணறினேன். கேரளா அருகேயுள்ள மாவட்டங்கள் எனில் அந்த இடைஞ்சல்களும் இருந்திருக்காது.

முண்டு வோடும் ஜாக்கெட்டோடும் மங்களூரிலும் திருச்சூரிலும் சற்றே கனத்த இதயத்தோடு வாழ்ந்த ஒரு உணர்வு இவ்வாசிப்பு .

நூலின் விவரம்:

புத்தகத்தின் பெயர்: எனது ஆண்கள்
மலையாள ஆசிரியர் : நளினி ஜமீலா
தமிழில்: ப. விமலா
விலை : 200
பக்கங்கள் : 159
வகைமை : சுயசரிதை
பதிப்பகம்: காலச்சுவடு

நூல் அறிமுகம் எழுதியவர்:

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *