பாய்மரப் பாறை (Sail Rock) – ஏற்காடு இளங்கோ
ரஷ்யாவின் கிராஸ்னோடர் க்ராய் என்ற பகுதியில் கருங்கடலின் கரையில் ஒரு பிரம்மாண்டமான செங்குத்துப் பாறை கம்பீரமாக நிற்கிறது. இது இயற்கையான ஒற்றைக்கல் (Monolith) ஆகும். இது ஒரு கப்பலின் பாய்மரம் போல் தோற்றம் அளிக்கிறது. ஆகவே இது பாய்மரப் பாறை (Sail Rock) அல்லது பாரஸ் பாறை (Parus Rock) என அழைக்கப்படுகிறது.
இது கெலென்ட்ஜிக் (Gelendzhik) என்ற நகரத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பாறையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பிரஸ்கோவேவ்கா என்ற கிராமம் இருக்கிறது. இந்தப் பாறை 25 மீட்டர் (82 அடி ) உயரம், 20 மீட்டர் (66 அடி) அகலம் மற்றும் 1 மீட்டர் (4 அடி) தடிமன் கொண்டது. இது முற்றிலும் தட்டையானது. பார்ப்போரை இந்தப் பாறை பரவசம் அடையச் செய்கிறது.
இது கிரெட்டேசியஸ் (Cretaceous) என்னும் புவியியல் காலத்தின் பிற்பகுதியில் தோன்றியது. அதாவது சுமார் 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. இது மணற்கல் பாறையால் ஆனது. இந்தப் பாறை கடற்கரைக்கு செங்குத்தாக நிற்பது ஒரு தனித்துவத்தைக் காட்டுகிறது. இது கடல் அலை மற்றும் காற்றை எதிர்த்து பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக நிற்கிறது.
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய பாய்மரத்துடன் ஒரு படகு கடற்கரைக்கு வந்து இருப்பது போல் தெரியும் என்கின்றனர். இந்தப் பாறையின் அடிப்பகுதியில் ஒரு விசித்திரமான துளை காணப்படுகிறது. இது தரையில் இருந்து 8 அடி (2.5 மீட்டர்) உயரத்தில் உள்ளது. காகசஸ் போரின் போது இது ஒரு பாதுகாப்பு அரணாக இருந்தது. காகசஸ் போர் என்பது 19 ஆம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராஜ்யத்திற்கும் வடக்கு காகசஸின் பல்வேறு மக்களுக்கும் இடையேயான இராணுவ மோதலாகும்.
இந்தப் போரின் போது எதிரிகளைச் சுடுவதற்காக துளை உருவாக்கப்பட்டது என்றும் சிலர் நம்புகிறார்கள். இது சந்தேகத்திற்குரியது. ஏனென்றால் இந்தப் பாறை மெல்லியதாக இருந்தாலும், அதை துளைப்பது எளிதானது அல்ல. இது ஒரு அற்புதமான இயற்கை அதிசயம். இது ஒரு இயற்கை நினைவுச் சின்னமாக 1971 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று அறிவிக்கப்பட்டது. தற்போது இது ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.