சாய்னா நேவல் இந்திய இறகுப் பந்து விளையாட்டில் மிகச் சிறந்த வீரர்.உலக முதல் நிலை வீரராக வந்து இந்தியாவில் இறகுப் பந்து விளையாட்டின் பக்கம் கவனத்தை திருப்பியவர். அவரது வாழ்க்கையை சொல்லும் இந்த இந்திப் படம் 2020ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு கொரோனா தொற்றால் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அமோல் குப்தா எழுதி இயக்கியுள்ளார். அமல் மாலிக் என்பவர் இசையமைத்துள்ளார். பரிநிதி சோப்ரா சாய்னாவாக நடித்துள்ளார். மானவ் கவுல்,பரேஷ் ராவல்,மேக்னா மாலிக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாய்னாவின் குடும்பம் ஹரியானாவிலிருந்து ஹைதராபாத்திற்கு இடம் பெயர்கிறது. தந்தை முனைவர் பட்டம் பெற்றவர். நிதானமானவர். தாயார் மாவட்ட அளவில் இறகுப் பந்து விளையாட்டு வீரராக திகழ்ந்தவர். தன்னுடைய இளைய மகள் சாய்னாவை உலக முதல் வீரராக உயர்த்துவதில் வெறித்தனமாக இருப்பவர். மூத்த மகள் அமைதியானவர்.குடும்பம் ஒற்றுமையாகவும் பாசப் பிணைப்புடனும் இருக்கிறது. சாய்னாவிற்குப் பயிற்சி அளிப்பதற்காக காலை நான்கு மணிக்கு விளையாட்டரங்கத்திற்கு அழைத்து செல்வது, சக்தியுடன் விளையாடுவதற்காக பால், வெண்ணெய் சாப்பிட செய்வது, இறகுப் பந்து வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து கடன் வாங்குவது என(ஒரு இறகுப் பந்து டப்பா ரூ3000/) என குடும்பமே அவளின் விளையாட்டின் மீது கவனம் செலுத்துகிறது. அவளும் இளையோர் பிரிவில் பல வெற்றிகளைப் பெறுகிறாள்.
ராஜன் என்பவர் புதிய பயிற்சிக் கூடத்தை திறக்கிறார். எல்லாமே இலவசம்.ஆனால் அவர் மிகவும் கண்டிப்பானவர். அவரின் விதிகளை மீறினால் மறு கணமே பயிற்சிக்கூடத்தை விட்டு வெளியேற்றிவிடுவார். ஒரு இந்தியரை உலக முதல் வீரராக முன்னேற்றுவதே அவரது இலட்சியம். அங்கு பயிற்சி பெறும் சாய்னா இந்திய அளவிலும் பன்னாட்டு போட்டிகளிலும் வெற்றி பெறுகிறார். முதன் முதல் வெளிநாட்டு போட்டிக்கு செல்லும் தருணத்தில் தாயார் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் உயிருக்குப் போராடுகிறார். ஆனாலும் மனத்தை தேற்றிக்கொண்டு வெளிநாடு சென்று வெற்றி பெறுகிறார். தாயாரும் பிழைத்து விடுகிறார். உலக தர வரிசையில் இரண்டாவது இடம், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் என மேலே மேலே செல்கிறார். வணிக நிறுவனங்கள் அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்கின்றன. இதனால் அவருக்கும் பயிற்சியாளருக்கும் விரிசல் ஏற்படுகிறது.
இள வயது முதலே அவருடன் விளையாடும் காஷ்யப் என்பவருடன் காதல் ஏற்படுகிறது. உலக முதல் வீரராக வரவேண்டும் என்றால் காதல், திருமணம் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்கிறார் பயிற்சியாளர். மனக் குமுறலுடன் அதை ஏற்றுக்கொள்கிறார். இருந்தாலும் அவரது திறமையில் பின்னடைவு ஏற்படுகிறது. பல போட்டிகளில் தோல்வி அடைகிறார். ஒரு போட்டியில் காலில் அடிபட்டு மாதக் கணக்கில் படுக்கையில் இருக்க வேண்டி வருகிறது. குடும்பமும் காதலரும் அவருக்கு உறு துணையாக இருக்கிறார்கள்.
கால் குணமாகிறது. பெங்களூரில் உள்ள ஒரு பயிற்சியாளரிடம் சேருகிறார். அங்குள்ள வீரர்கள் அனைவரும் ‘சாய்னா’ சாய்னா’ என ஆர்ப்பரிக்கிறார்கள். அதைப் பார்த்ததும் உற்சாகமாகி மீண்டும் விளையாடத் தொடங்குகிறார். வெற்றிகள் சேருகின்றன. உலக முதல் வீராங்கனையான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். கரோலினா ஒவ்வொரு புள்ளி எடுத்ததும் கூச்சலிடுவார். இது எதிராளியை நிலைகுலைய செய்யும் மனோரீதியான உத்தி. அதை எதிர்கொண்டு அவருடன் சம நிலையில் விளையாடுகிறார். இறுதிப் புள்ளி எடுக்கும் தருணத்தில் தன்னுடைய தாய், தந்தை, பயிற்சியாளர், தன் மீது உயிரையே வைத்திருக்கும் சக வீரர்கள், தாய் நாடு ஆகியவற்றை மனக்கண் முன் கொண்டு வந்து அபாரமாக விளையாடி வெற்றி பெறுகிறார். உலகின் முதல் வீரராக ஆகிவிடுகிறார்.
சிறு வயது சாய்னாவாக நடிக்கும் குழந்தை நட்சத்திரமும் வளர்ந்த பெண்ணாக நடிக்கும் பரிநிதி சோப்ராவும் தாயாராக நடிக்கும் மேக்னா மாலிக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சாய்னாவின் ஆளுமை பெண் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது. ‘ஒரு ஆண் பிள்ளை பிறந்தால் அவனை கல்லூரிக்கு அனுப்பி ஒரு பொறியாளனாகவோ இல்லை மருத்துவரோ ஆக்குவார்கள். பெண் பிள்ளை என்றால் பதினெட்டு வயதானதும் திருமணம் முடித்து அனுப்பிவிடுவார்கள். அவ்வளவுதான்;அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது.’ என்ற வசனத்துடன் படம் தொடங்குகிறது. காதல் திருமணம் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும் என்று சொல்லும்போது ‘இதை சச்சின் 22வயதில் திருமணம் செய்தபோது ஏன் கேட்கவில்லை?’ என்று சாய்னா குமுறுவதும் ஆனால் அதையும் மற்ற பின்னடைவுகளையும் எதிர்கொள்வதும் பாராட்டப்பட வேண்டும்.
இளம் வயது சாய்னா ஒரு போட்டியில் இரண்டாவதாக வரும்போது எல்லோர் முன்னிலையிலும் அவளது தாயார் அவரை கன்னத்தில் அறைந்து விடுகிறார். இது அவரது வெறியைக் காட்டுவதுடன் விளையாட்டை எப்படிப் பார்க்க வேண்டும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. மா.அரங்கநாதனின் ‘சித்தி’ என்கிற கதையில் ஒரு விளையாட்டு வீரர் தனது மகிழ்ச்சிக்காவே விளையாடுகிறேன் என்பார். சர்வ தேசப் போட்டி என்று வரும்போது கடுமையான பயிற்சி எடுப்பதும் வெற்றிக்கான முனைப்பும் இருக்க வேண்டியதுதான். ஆனால் வெறியாக மாற வேண்டியதில்லை.
விறுவிறுப்பான இயக்கம். நல்ல நடிப்பு. இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம்.