இவரின் இரண்டாம் நூலான “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” குழந்தைகளுக்கானப் பாடல்களைக் கொண்டு வண்டின் ரீங்காரமாக இசைக்க வந்துள்ளது.
இந்நூலிற்கு, புதுவை அரசு தமிழ்மாமணி கலைமாமணி விருதாளர்கள் சங்கத் தலைவரான, தமிழ்மாமணி முனைவர் சு. வேல்முருகன் அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார். “அருமைக் குழந்தைகளின் அங்கன்வாடியில் பணி செய்த காரணத்தால் குழந்தைக்கு ஏற்ற பாடல்கள் புனைந்து உள்ளார். நல்ல பாடல்கள். சிறுவர்கள் பாடி களிக்கக் கூடியவை. எளிய சொற்கள் இரண்டு இரண்டாக வந்து இனிமை கூட்டுகின்றன. பாடல்களுக்கு மேலே தகுந்த படங்களைப் போட்டுள்ளார். புத்தகக்கலை வடிவுடன் நூல் வந்துள்ளது” எனத் தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை, வில்லியனூர், கல்வெட்டு ஆய்வாளர், கலைமாமணி, புலவர் ந. வெங்கடேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். அவர்தம் வாழ்த்துரையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
“படித்த பெண் நாட்டின் கண்”
“உறவுகளின் படைப்பாளியாக ஆணுக்கு நிகரான உரிமைகளைப் பெறுவதில் பெண்ணுக்கு ஏனோ ஒரு வஞ்சனை காட்டியது குமுகாயம்” என்பதனைக் குறிப்பிட்டவர், “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்ற கவிமணி அவர்களின் வரிகளையும் குறிப்பிட்டுள்ளார். “கல்வி அறிவு காரணமாக இன்று ஆணுக்கு நிகராகப் பெண்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களில் நம் தேசிய விருதாளர் திருமதி வி. மண்ணாங்கட்டி அம்மையாரும் ஒருவர். அவர் எழுதிய “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” எனும் நூல் சிறப்பாக உள்ளது” என்றும் பாராட்டியுள்ளார்.
புதுச்சேரி, பள்ளிக்கல்வி இயக்ககம், தமிழ் விரிவுரையாளர், நற்றமிழ் நாவரசி வே. பூங்குழலி பெருமாள் அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். அவரின் வாழ்த்துரையில் “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” எனும் பாரதியின் வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்து வருபவர் இந்நூலாசிரியர் எனப் பாராட்டியுள்ளார். மேலும், “ஆலயங்களுக்குச் சென்று தேவாரம், திருவாசகம் பாடிய ஆன்மிகப் பணியையும் அமிழ்தத் தமிழ் உணர்வுடன் தமிழ் இலக்கிய நிகழ்வுகளில் தொடர்ந்து ஆர்வமுடன் பங்கேற்றுப் பைந்தமிழ் பணியையும் சமூகப் பணியையும் எப்பொழுதும் செய்பவர்” எனவும் இந்நூலாசிரியரின் சிறப்பான இயல்பை எடுத்துக் காட்டியுள்ளார்.
நூல் ஆசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டவை கீழ் வருமாறு:
“அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றிய போது குழந்தைகளோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது செய்கைப் பாடல் என்று வகுப்பு உண்டு. அப்போது பயிற்சியின்போது சொல்லிக் கொடுத்ததைச் சொல்லி செய்கை செய்து காட்டுவோம் குழந்தைகள் உற்சாகமாக இருப்பர்” என்று தன் அனுபவத்தை நினைவு கூறுகிறார்.
மேலும், இந்த உரையில், “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அவர்கள் நல்லவராவதும் தீயவராவதும்… சமூகமும் நம் வளர்ப்புமே காரணம். குழந்தைகளுக்குத் தேவையான ஊக்கம், சத்துணவு, பண்பாடு இவையெல்லாம் வாயால் சொல்லுவதை விடப் பாடல்கள் மூலமாக சொல்லுவதே சிறப்பு என நினைத்ததே இப்பாடல் தொகுப்பு வெளியாகக் காரணமாக அமைந்தது. இம்முதல் முயற்சியை ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்” என்று தனது எதிர்பார்ப்பினையும் இதில் பதிவிட்டுள்ளார்.
113 பாடல்கள் கொண்ட இந்நூல், பிள்ளையார், முருகா சரணம், சக்தி என்று கடவுள்களைத் தொழுவதில் தொடங்கியுள்ளது. இயற்கையின் படைப்புகளான, சூரியன், காற்று, வானம், நெருப்பு, நீர் எனவும் பாடல்கள் தோரணங்களாக அணி செய்கின்றன. உறவின் நெருக்கத்தைக் கூட்டும் வகையில், அம்மா இங்கே வா வா, தந்தையே வா வா, அண்ணன் தங்கை எனும் சில பாடல்களைப் பிஞ்சுகளிடம் வேர் விட வைத்துள்ளார். நம் நாட்டின் பெரியோர்களான காந்தி, நேரு, தெரசா, காமராசர், பாரதிதாசன், வாணிதாசனார் என்று பலரின் முக்கியத்துவத்தைப் பிள்ளைகளுக்கு உணர்த்துவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான, காய்கள், பழங்கள், கீரைகள், சத்துணவு என பல்வகை உணவுகளையும் பாடல் வடிவில் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்கவே எழுதியுள்ளார். விலங்குகளில், யானை, சிங்கம், முயல், பறவைகளில், காகம், சிட்டுக்குருவி மற்றும் வண்ணத்துப்பூச்சி என்று நீளும் தலைப்புப் பட்டியலில், குழந்தைகளை மகிழ்விக்க பாடல்கள் இதில் நிறைய உள்ளன. நம் வாழ்வில், பயன்பாட்டில் இருக்கும் மிதிவண்டி, நாற்காலி, இரயில் வண்டி, மண்பாண்டம் என இவைகளும்ம் பாடுபொருளாக இடம் பெற்றுள்ளன.
“ஓடி விளையாடு பாப்பா” என்று கூறிய பாரதியின் வரிகளுக்கு ஏற்ப விளையாட்டுகளில் பல்லாங்குழி, நொண்டி, போன்றவற்றைப் பற்றியும் பாடல்கள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன. நடைவண்டியைப் பற்றி எழுதியவற்றில் தொடக்க வரிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன.
“நடைவண்டியாம் நடைவண்டி
நடந்து பழகும் நடைவண்டி
நகரும் மூன்று சக்கரத்தில்
நடந்து பழகும் நடைவண்டி”
எளிமையான பாடல் வரிகள் அல்லவா?
அடுத்து,
“எங்க வீட்டுப் பூனையார்
எட்டி எட்டிப் பார்க்கிறார்
எலிகள் பிடிக்க ஓடுவார்
எகிறிக் குதித்து தாண்டுவார்”
என்று பூனையாரைப் பற்றி அழகுற அமைந்தப் பாடலின் சில வரிகள் இங்குப் பகிர்ந்துள்ளேன்.
உலகத்தின் வாழ்வியலுக்குத் தேவையான அறம், பொருள், இன்பத்தை ஏழு சீர்களில் அளித்த திருவள்ளுவரின் வடிவத்தோடு இனிய பாடல் ஒன்று உள்ளது. அதிலிருந்து சில வரிகள், இதோ:
“திருக்குறள் தினம் தினம் படிப்போமே
தினமும் அதன் வழி நடப்போமே!
வள்ளுவர் சொல்லை மதிப்போமே
வாழ்க்கையில் உயர்வு அடைவோமே”
அடுத்து, மழலைகள் பள்ளிக்கு ஆர்வமுடன் செல்ல, கவிஞர் மண்ணாங்கட்டி எழுதியவற்றில் இந்த நான்கு வரிகள் மட்டுமன்றி அனைத்து வரிகளும் நலம் பயக்கும் கனிகளாகும்.
“பள்ளிக்கூடம் போகலாம்
பாடங்களைப் படிக்கலாம்
பட்டறிவு வளர்க்கலாம்
படைப்பாளி ஆகலாம்”
மேற்கண்ட வரிகள், “பள்ளிக்கூடம்” எனும் தலைப்பில், இடம்பெற்றுள்ளன.
பள்ளிப் பாடங்கள் மட்டுமன்றி, மற்ற நூல்களையும் படிக்க வேண்டும் எனவும் வளரும் தலைமுறைகளுக்கு உணர்த்தும் முழுப்பாடலினை இங்கே பார்ப்போம்.
“புத்தகம் நிறைய படியுங்கள்
புதிய கற்றுத் தெரிவியுங்கள்
புதுமைகள் பற்பல படித்து
புதுயுகம் நாளும் காணுங்கள்!
புதிய உலகச் செய்திகளும்
பழைய வரலாற்றுத் தகவல்களும்
புரிந்து கொண்டு படியுங்கள்
புதிதாய் நாளும் தேடுங்கள்!
புதுமை இலக்கியம் வாசிப்போம்
பிறந்த தாய்மொழி நேசிப்போம்!
புத்தகம் நாளும் நாம் படித்து
புத்துலகம் படைப்போம் வாருங்கள்!”
இளம் பருவத்திலேயே கண் தானம் பற்றிய விழிப்புணர்வைக் கூறும் பாடல் ஒன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
“கண் தானம் செய்வீர் !
கடமை ஒன்றே செய்வீர் !
மண்ணில் புதையும் கண்களையே
மனிதர்கள் பார்க்க உதவுவீர்!”
இங்கனம், சிறார்களுக்கான இலக்கியத்தினை, நயம்பட உரைத்திருக்கும் தேசிய விருதாளர், பாவலர் வி. மண்ணாங்கட்டி அவர்களின் எழுத்தாக்கம், ஏழிசையாய் எட்டு திக்கும் ஒலிக்கட்டும். நாளைய உலகைப் படைக்கப் போகும் வருங்கால மன்னர்களுக்கு அறிவொளியைக் காட்டட்டும்! மாண்புடனே மண்ணில் இவரின் படைப்புகள் ஒளிரட்டும்!
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
தலைப்பு: “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”
நூலாசிரியர்: தேசிய விருதாளர், பாவலர் வி. மண்ணாங்கட்டி அவர்கள்
பக்கங்கள்: 132
விலை: ரூ. 160/-
நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,
கவிஞர். மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.
நாள்: 11-01-2024

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

