நாவலுக்கு பொருத்தமான பெயர் தான், ‘சாய்வு நாற்காலி’. மணியடித்தால் வடித்து கொட்டவும், ஆவி பறக்க சாயா நீட்டவும், ஏன் என்று கேள்வி கேட்காமல் அடுப்பாங்கரை புகையோடு கரையவும், அடிகள் உதைகளை மானியமாக பெறவும் ஒரு மனைவி. அவளை கறவை மாடாக மேய்க்க அதக பிரம்பும், அதிகாரத்தை அங்கீகரிக்க சாய்வு நாற்காலியும் கொண்ட பகலில் படி தாண்டா ஒரு கணவன். ஒரு குடும்பம் கொண்டு பல குதர்க்கங்களை நுணுக்கமான நிகழ்வுகள் ஊடாக விவரிக்கிறார் ஆசிரியர்.

மிகவும் அருமையான, உண்மைத்தன்மை நிறைந்த நாவல். வரலாற்று படிவங்களில் கறைகளாக படிந்து கிடக்கும் நிலவுடைமைச் சமூகத்தின் குடலைப் பிரட்டும் மூத்திர நெடி முட்டி நிற்கும் சவ்தா மான்ஸிலில், செடியின் மீது காரி துப்பிய சளியின் நூல் இழைகளின் இடுக்கில் கேமரா முஸ்தபாகண்ணை போக்கஸ் செய்கிறது.

இந்த கதாபாத்திரம் கால் மேல் கால் போட்டுக்கொண்டு கன்னிப் பெண்களின் மாமிச வணப்பை பகலில் கண்களிலும், இரவுகளில் காடுகளிலும் சூரையாடும் களிப்பில் மனைவியை கறவை தீர்ந்த மாடாகவும், அடுப்படிக்கு அர்ப்பணித்த ‘ஆ’ வாகவும் நடத்தும், முன்பு தோன்றிய சளிக்கும் சிகரெட் புகை கலந்த மூத்திர நெடிக்கும் சொந்தக்காரர். சவ்தா மன்ஸிலின் கடைசி காரணவர். நிலவுடைமை சமூகத்தின் கடைசி பெருமை பீத்தும் பிரபு. நம் நாவலின் ஹீரோ.

...
                                                        தோப்பில் முகமது மீரான்

இந்த ஒற்றை கதாபாத்திரம் எத்தனை எத்தனை ஆதிக்க கற்பிதத்தை, பழம் பெருமை பேசும் பகட்டுகளை, பெண்களின் உரிமைகள் மீதான வன்முறை தாக்குதல்களை, ஜாதிய அடக்குமுறைகளை, அதிகார விசுவாசிகளின் மழுங்கிய அறிவை, சுயநலத்திற்காக எதையும் செய்ய துடிக்கும் மனித மனநிலையை நிகழ் காலம், கடந்த காலம் என மாறி மாறி உணர்த்திக்கொண்டே கதையை நகர்த்துகிறது.

இந்த நாவல் கூறும் களம் இன்றைய சூழலில் கூட சிறப்பாக பொருந்தும். நம்மில் எத்தனை எத்தனை முஸ்தபாகண்கள் தங்கள் ஆதிக்க சவுக்கை எத்தனை எத்தனை மரியம், இஸ்ரயேல் என நீளும் கதாபாத்திரங்களின் மேல் வீக்கங்களையும், தழும்புகளையும் தாராளமாக பதித்துக்கொண்டிருக்கிறோம்?
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல். 1997 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்.

வாசிக்க பழகு!

நூல்: சாய்வு நாற்காலி
ஆசிரியர்: தோப்பில் முகமது மீரான்

– ஜோன் மார்ஷல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *