எப்போது ஊருக்குச் சென்றாலும் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெரியப்பா முகம் மட்டும் எப்போதும் மனதில் நின்றதில்லை…

காரணம்… மிகவும் ஒல்லியான தேகம். யாருடனும் பேசுவதில்லை… பேசுவதற்கும் உடல் ஒத்துழைப்பதில்லை. ஆறு மாத குழந்தை போல அந்நாற்காலிக்குள் உறங்கிக் கிடப்பார்.

பல ஆண்டுகள் இப்படியே பெரியப்பாவைப் பார்த்துக்கொண்டே இருக்கும் அகல்யாவிற்கு பெரியப்பாவிடம் சென்று பேச வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் படபடக்க… தயங்கி தயங்கி அருகில் செல்கிறாள்.

உடைந்த மூக்குக்கண்ணாடியும்…
நினைவுகளுமாய் அவர் சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியப்பா.தன் விரலால் அவர் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

யார்… பிடிப்பது என நிகழ்கால நினைவுகளில் தலை சாய்த்து பார்க்கிறார்…” நான் தான் அகல்யா பெரியப்பா'” ஊருக்கு வரும் ஒவ்வொரு முறையும் உங்களைப் பார்ப்பேன்… ஆனால் நீங்க எங்கள பார்க்கவே மாட்டீங்க… அதான் பயந்து போய்டுவேன் ” என்று கூறுகிறாள்.

பொக்க வாயுடன் ஒரு சிரிப்பில் தன் அன்பை வெளிப்படுத்துகிறார் பெரியப்பா…

“ஏன்… இப்படி இந்த நாற்காலியிலே உட்கார்ந்திருக்கீங்க… கொஞ்சம் நடக்க வைக்க இருந்தா நல்லா இருக்கும்ல எனக் கேட்க… அதெல்லாம் முடியலைனு சைகை மொழியில் கையசைக்கிறார் பெரியப்பா…

சிறிது நேரம் பெரியப்பா வை உற்றுப்பார்த்தவளாய்… இருந்த அகல்யா… ஏன் இந்த நாற்காலி உங்களுக்கு அவ்ளோ பிடிச்சிருக்கா… னு குழந்தைத்தனம் நிறைந்த பேச்சுடன் கேட்க…

பெரியப்பா… மெதுவாக தன் அலமாரியில் உள்ள டைரியை எடுத்து கையில் கொடுத்து படிக்கச் சொல்லுகிறார்.

அகல்யாவும் இது என்ன டைரி என சிந்தித்தவாறே தூசி தட்டி படிக்கத் துவங்குகிறாள்… முதல் பக்கத்திலேயே கம்பீரமான தோற்றத்துடன்… ஒரு புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது… இது நீங்கள் தானா… என்று இரசித்தபடி அடுத்த பக்கத்திற்குள் நுழைகிறாள் அகல்யா…

தான் இராணுவத்தில் பணிபுரிந்த போது… எப்போதாவது ஊருக்கு வரும் போது என் அப்பா இப்படித்தான் இந்த நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருப்பார்.

எல்லாரும் அவங்ககிட்ட பேசுறதுக்கே ரொம்ப பயப்படுவாங்க.. அதுமட்டுமல்ல அந்த நாற்காலியைத் தொட்டுக்கூட பார்க்கக் கூடாது. அவ்ளோ கடுமையா தண்டனை தருவார்.

ஒருநாள்… அப்பா வெளியில் போயிருந்த தருணம் பார்த்து காத்திருந்து நாற்காலியில் உட்கார… கரெக்ட்ஆ கண்டுபிடிச்சுட்டார்… எப்படி தான் கண்டறிகிறார் என்று சிந்திப்பதற்குள் நூறு குடம் தண்ணீர் கிணற்றிலிருந்து இறைக்க வேண்டும் னு சரியான தண்டனை கொடுத்தார்.

அப்புறம்… கொஞ்ச நாள் கழித்து இராணுவத்தில் இருந்து அழைப்பு வர அங்கு சென்று விட்டேன்.அடுத்த முறை ஊருக்கு வரும் போது என் அப்பா உயிருடன் இல்லை… ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

என் அப்பாவோடு பேசி… மகிழ்ச்சியான நினைவுகள் என்று ஒன்று கூட இல்லை.இருக்கும் போது எதிர்பார்த்த அன்பின் ஏக்கம்… இல்லாதவுடன் இன்னும் அதிகமானது…

மீண்டும் இராணுவம் செல்ல விருப்பமில்லாமல்… சற்று உடல்நலக்குறைவு காரணமாகவும் இங்கேயே இருந்துவிட்டேன்… பின்பு இந்நாற்காலி தான் என் அப்பா போல உணர ஆரம்பித்தேன் என்று பெரியப்பா எழுதிய வரிகளை படித்துவிட்டு அகல்யா கண்ணீரோடு டைரியை மூடினாள்.

அகல்யாவின் அகன்ற கண்களை உற்று நோக்கியவராய்… பெரியப்பா…
புன்னகைத்து கண்ணீரைத்துடைத்து விடுகிறார்.

ஏனோ… அகல்யாவிற்கு பெரியப்பாவின் அன்பு ஏக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை.எனினும் ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்….

மனமில்லாமல்… பெரியப்பா கரம் பிடித்து” நான் ஊருக்குப் போறேன்… சீக்கிரம் வந்துடுவேன்.உங்களுக்கு யாரும் இல்லனு கவலைப்படாதீங்க” என்று கூறி முத்தம் கொடுக்கிறாள்.
கண்கள் சிவக்க… பெரியப்பா… ம்ம் என தலையசைக்கிறார்.

ஒரு வாரத்திற்குப்பின்… பெரியப்பா மாரடைப்பால் இறந்துவிட்டார் என அகல்யா வின் அம்மா கூற… விரைந்து ஊர் வந்து சேர்கின்றனர்.

முதல் முறையாக பெரியப்பா… நாற்காலியில் அமரவில்லை. கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கிறார்… மாலையுடன்.
கண்ணீர் மல்க… அகல்யா பெரியப்பாவின் கரங்கள் பற்றினாலும் அவள் எண்ணங்கள் முழுதும் சாய்வு நாற்காலியில் தான் இருந்தது.

சாய்வு நாற்காலியின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்…. பெரியப்பா அருகில் இருப்பது போல் உணர்ந்தாள்… இந்த உணர்வைத் தான் பெரியப்பா உணர்ந்திருப்பாரோ… என்று சிந்திக்கத் துவங்கினாள்.

ஓரிரு நாளில் காரியங்கள் முடிந்ததும்… மீண்டும் ஊருக்குத்திரும்பினர்.காலங்கள் ஓட ஓட வாழ்க்கைப் பாடங்கள் அதிகமாயின…

பெரியப்பாவிற்கு சாமி கும்பிடனும் என்ற அழைப்பு வந்த போது மீண்டும் வந்தனர்…. விதவிதமான படையல்கள் இருந்தாலும்… பெரியப்பாவிற்கு மிகவும் பிடித்த நாற்காலி பரண் மேல் குப்பை போல போடப்பட்டிருந்தது…

கணம் நிறைந்த மனதோடு…சாய்வு நாற்காலியை கீழிறக்கி… சுத்தம் செய்து பெரியப்பாவிற்கு உயிர் கொடுத்து வணங்கிச் சென்றாள் அகல்யா…

– சக்தி ராணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



4 thoughts on “சாய்வு நாற்காலி சிறுகதை – சக்திராணி”
  1. அருமையான கதை, தந்தையின் அன்பை நாற்காலியில் உணர்ந்தார்.

  2. சாய்வு நாற்காலி நேரில் பார்ப்பது போல இருக்கிறது

  3. மனதை வருடிய கதை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *