‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரைத் ‘தமிழ் நாடு’ என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார், 1957-ஆம் ஆண்டு, தொடர் உண்ணாவிரதம் இருந்தார். சங்கரங்கலிங்கனார் விருதுநகரை அடுத்த மண்மலை மேடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணியாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்பது அவரது பிரதான கோரிக்கை என்றாலும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.

சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தைச் சகித்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, அல்வா சாப்பிட்டு விட்டு, அந்த இலையை சங்கரனார் மீது போட்டும், உண்ணா விரதப் பந்தலைப் பிரித்தும் சங்கரலிங்கனாரை அவமரியாதை செய்தனர். அன்றைக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த எம்.வி.சுந்தரம் மற்றும் உலகநாதன் போன்ற தோழர்கள் உண்ணாவிரதப் பந்தலுக்கு விரைந்து சென்று, கலகம் செய்த காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்து விட்டு, சங்கலிங்கனாரின் உண்ணாவிரதத்திற்குப் பாதுகாப்பு அளித்தனர்.

விருதுநகரில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக் குடிசையில் அவர் உண்ணா விரதம் இருந்தார். அந்தக் குடிசையில் காங்கிரஸ் கொடி பறக்க, உண்ணாவிரதம் 76 நாட்கள் நீடித்தது. இந்த உண்ணாவிரதம் பற்றி அன்றைக்குத் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த காமராஜர், “சங்கர லிங்கனாரின் 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை” என்றதோடு முடித்துக் கொண்டார். 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் மிகவும் களைப்படைந்து மெலிந்து போனார். ஒரு கயிற்றுக் கட்டிலில் தான் படுத்திருந்தார். திமுக பொதுச்செயலாளர் அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சங்கரலிங்கனாரைச் சென்று பார்த்தனர்.  “இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே, உங்கள் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் ஏற்க மாட்டார்களே” எனத் தலைவர்கள் கூறினார்கள். “நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்க்கலாம்” என்று தழுதழுத்த குரலில் சங்கரங்கலிங்கனார் கூறினார்.

‘எனது உடலைக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படையுங்கள்’

நாளுக்கு நாள் சங்கரலிங்கனாரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின. அவரைக் காப்பாற்றும் பொருட்டு, மதுரை அரசு பொது மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பலனின்றி, உண்ணாவிரதம் தொடங்கி, 76-வது நாளில், சங்கரங்கலிங்கனார் மரணமுற்றார். தான் உண்ணாவிரதம் இருந்த காலத்திலேயே, “ஒரு வேளை நான் இறந்து விட்டால், எனது உடலைக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று சங்கர லிங்கனார் சொல்லியபடி, கம்யூனிஸ்டுத் தலைவர் கே.டி.கே.தங்கமணியும் கே.பி.ஜானகியம்மாவும் மருத்துவமனைக்குச் சென்று, பதிவேட்டில் கையெழுத்திட்டு, உடலைப் பெற்றனர். மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் சங்கரலிங்கனார் உடல் தகனம் செய்யப்பட்டது.

‘தமிழ்நாடு’ உதயம்

‘மெட்ராஸ் ஸ்டேட்’- ‘சென்னை ராஜ்யம்’ என்ற பெயரை முற்றிலும் ஒழித்து விட்டு, ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியின் போது, தமிழில் மட்டும், ‘தமிழ்நாடு’ என அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே குறிப்பிட்டனர். இந்த மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை அடியோடு ஒழித்து, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரைச் சூட்ட வேண்டும் என்று திமுகவினர் முடிவு செய்ய, கம்யூனிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர். இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்ற தீர்மானத்தைத் தமிழக சட்டசபையில் 18.07.1967 அன்று, முதலமைச்சர் அண்ணாதுரை கொண்டு வந்தார். அப்போது சபாநாயகராக சி.பா.ஆதித்தனார் இருந்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட அனைத்துக் கட்சியினரும் மகத்தான ஆதரவு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அருமைத் தோழர் ஏ.பாலசுப்பிரமனியன், இந்தத் தீர்மானத்தை மகிழ்வோடு ஆதரித்துப் பேசிய போது, “இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மைத் ‘தமிழன்’ என்று அழைக்க வேண்டும் ‘மதராசி’ என அழைக்கக் கூடாது” என்று பேசினார். சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஆதிமூலம் பேசும் போது, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றக் கோரிக்கையை வைத்து, உண்ணாவிரதம் இருந்த சங்கரங்கலிங்கனார், காங்கிரசின் அலட்சியத்தால் உயிர் துறந்தார்” என்றார். தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில், ”இந்தத் தீர்மானத்தை உணர்வுப்பூர்வமாக, உயிர்த்துவமாக ஆதரிக்கிறேன். திமுக ஆட்சியில் தான் இப்படித் தீர்மானம் வர வேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தீர்மானத்தை ஆதரித்திருந்தால், காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.

பாரதிக்குத் தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி, 3000 ஆண்டுகளாகப் புகழ் பெற்ற பெயரைத் தான் நாம் வைக்கிறோம். இதனை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால், மனம் கொதிக்காதா? முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தைப் படித்து முடித்த போது, ஓடிச் சென்று அவரைக் கட்டித் தழுவிட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக் கொண்டேன். தமிழ்நாடு என்று பெயர் வைத்த பின், தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால், பயனில்லை. இந்தக் கோட்டையின் பெயர் ‘செயிண்ட் ஜார்ஜ்’ என்று இருப்பதைத் ‘திருவள்ளுவர் கோட்டை’ என்று மாற்ற வேண்டும்” என, அவருக்கே உரித்தான பாணியில் பேசினார்.

விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் அண்ணா துரை பேசுகையில், “இந்த நாள், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் வாழ்விலும் எழுச்சியும் மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே, வந்திருக்க வேண்டிய தீர்மானம் காலம் தாழ்த்தி வந்தாலும், இங்குள்ள அனைவரின் பேராதரவுடன் வந்திருக்கிறது. இதை இந்தச் சபையில் நிறைவேற்றி, இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது பற்றி நான் மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்த போது, ‘தமிழ்நாடு’ என்னும் பெயரைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வையுங்கள். அதற்கேற்ப, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதில் தடை ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர்” என்றார். மேலும் முதலமைச்சர் பேசும் போது, “பத்து நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய சவான், இதுவரை ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும் சிரமத்துடனும் ‘டமில்நாட்’(தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே, அரசியல் சட்டத்தைத் திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி, ஒரு கட்சியின் வெற்றியல்ல, தமிழின் வெற்றி ! தமிழர் வரலாற்றின் வெற்றி ! தமிழ்நாட்டின் வெற்றி ! இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே, தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால், சர்வதேசச் சிக்கல் ஏதும் வந்து விடாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவரின் எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டிருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தரக் கூடியதாகும்.

நாம் இப்படிப் பெயர் மாற்றத்திற்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்காலச் சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால், எதிர்க்கட்சித் தலைவர் வேறேதும் ஆலோசனை சொல்லாமல், இதற்குப் பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்” என்று பேசினார் முதலமைச்சர். அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வராக இருந்தவர் பி.ஜி.கருத்திருமன். பின்னர் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், சட்டமன்றமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

‘தமிழ்நாடு வாழ்க’

முதலமைச்சர் அண்ணா எழுந்தார். “தமிழ்நாடு என்று பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நன்னாளில், ‘தமிழ்நாடு வாழ்க ! என்று வாழ்த்துவோம் எனக் கூறி, ‘தமிழ்நாடு! தமிழ்நாடு! தமிழ்நாடு! என்று மூன்று முறை உணர்ச்சிப் பொங்க உரக்கக் குரலெழுப்பினார். எல்லா உறுப்பினர்களும், “வாழ்க!” எனச் சேர்ந்து குரலெழுப்பினர். சபை முழுவதும் உணர்ச்சி மயமாய்க் காட்சியளித்தது. ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானம் வரலாற்றுப் பொன்னேட்டில் பொறித்திடத் தமிழகச் சட்டமன்றத்தில் இனிதே நிறைவேறியது.

நன்றி: தீக்கதிர்
கட்டுரையாளர் : சி.பி.ஐ.(எம்) நாகை மாலி
01/11/019

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *