கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
சக்தி ஜோதி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்: 80 விலை: ரூ 100
அன்புத்தோழியும் சகோதரியுமான சக்திஜோதி (ஜோதிக்கா) அவர்களுக்கும் எனக்குமான நட்பே நிழலும் நிஜமும் போல அத்தனை ஒற்றுமை. வாழ்வியலாகட்டும் சிந்தனையாகட்டும் சமூகப் புரிதலாகட்டும் கண்ணாடி காட்டும் பிம்பம் போல என்று அவரே சொல்வார். லௌகீக வாழ்க்கைப்பாட்டின் வேறுபாடுகள் நட்பில் அன்பில் கொள்ளப்பட மாட்டாதவை.
தன்னுரையில் அவர் கூறியிருப்பதுபோல பச்சை காணாது வறண்டிருந்த நிலம் பெண் எனும் பெரும் சக்தியால் பச்சை போர்த்தி பூத்து காய்த்து கனிந்து செழிக்குமென்பது திண்ணம்.
தலைப்பே கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைககளாதலால் பலகவிதைகள் கனவைச் சுமந்து ஒளிர்கின்றன.
பழைய கனவானாலும் கணப்பின் நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் லாவகம் பெண்ணுக்கு உண்டு. கனவுகளே தீராத ஏக்கம்தானே?!
பூமி பூத்துநிறையும் விருட்சத்தின் கனவுணர்த்தும் படிமம் அற்புதத்தேன்.
மீன்களுக்கு வலைவிரிப்பவர்கள் முத்துக்களுக்கு மூச்சடக்குவதில்லை என்பது ஆழ்கடல் அமைதிபோன்ற நிச்சலன நிதர்சனத்தை உணர்த்துகிறது.
மழைக்கான அழைப்பில் பரவசம் மிகுந்த ஒரு அணையுடைக்கும் அன்பை நிறைக்கிறார்.
உள்வெளி எனும் தலைப்பிலான கவிதையில் விட்டு விடுதலையாதல் இங்கே சுலபமில்லை என்பதை, ‘கொள்ள முடிந்ததும் தள்ள முடியாததுமானதொரு வாழ்வு’ என்பதன்மூலம் இயலாமையின் வலி கடத்துகிறார்.
இடமும் இருப்பும் பற்றிய கவிதையில் “எங்கம்மா இருக்க?” என்ற ஒற்றைக் கேள்வியின் கனபரிமாணம் நாற்பதைக்கடந்த எல்லாப் பெண்ணுக்குள்ளும் காலத்தை ஸ்மரணை செய்கிறது.
எல்லாக் கவிஞர்களுக்கும் ஓடுகின்ற நதியை ஒரு கணமேனும் நிறுத்திப் பார்க்கும் ஆசை இருக்கும்போல. இவரும் நிறுத்திவைக்கத் தவறவில்லை.
கானகத்திலிருந்து தப்பிவந்த யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்தது நாம். அதனை அரண்டோடச் செய்யும் அவலத்தைச்சுட்டிய கையோடு அதன் காலடித்தடத்தில் சுருங்கும் காட்டின் சித்திரத்தைக் காட்சிப்படுத்துகிறார். மனம் கனக்கிறது.
‘நினைவூசலி’ல் பருவத்துடிப்பை உணர்த்தும் கடிகார ஊசல் ‘காலகாலத்’தில் அனுபவமுதிர்வை ஜென்நிலையோடு உணர்த்துகிறது.
” தரிசனம்” இது அவரவர் வயதுக்கோ அனுபவத்துக்கோ திறக்கும் சாளரமாய் உள்நிறைகிறது.
அதன் வரிகள் இதோ :-
ஏதோவொன்றை
எங்கிருந்தோ தொடுகிறாய்
இங்கிருக்கும் அத்தனையும்
கண்மறைந்து
காணும் வெளியெங்கும்
நீயே காட்சியாகிறாய்.
எதையுமே நிதானமாகக் கடப்பவர்கள் கண்டடைவதுபோல,
முத்தாய்ப்பாகச் சொல்லிவிடலாம் இந்தக் கவிதையின் சிலவரிகளை..
கவிஞரே இவ்வாறு சொல்வது யதார்த்தம்.
நிதானமாக வாசிப்பவர்கள் புரிந்துகொள்கிறார்கள்
வார்த்தைகளுக்கு
அகப்படாது
நழுவிப்போகும்
வாழ்வின்
அர்த்தத்தை……
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்
சக்தி ஜோதி
டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம்: 80 விலை: ரூ 100 – அருமையான புத்தக மதிப்புரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Vijayarani Meenakshi