சக்தியின் கவிதைகள்

Sakthi's Poems 3 சக்தியின் கவிதைகள் 3

மனிதனும் பறவைகளும்….!!!!
……………………………………………
எங்கள்
கிராமத்தின் சாலையோரம்
ஒரு குளக்கரை,
குளக்கரையின் ஓரம்
ஓங்கி வளர்ந்த ஒரு மாமரம்,

ஓங்கி வளர்ந்த மாமரத்தின்
கிளைகளில் ஊஞ்சல்
கட்டி ஆடுகிறார்கள் அறியாத
சிறு வயது குழந்தைகள்,

ஊஞ்சலாடும் குழந்தைகளின்
பசியைப் போக்குகின்றன
மரத்தில் பழுத்துத்
தொங்கும் மாம்பழங்கள்,

சூரியனின் வெப்பத்தை
தாங்காத தவிடனும் கலியனும்
குளக்கரை மரத்தடி நிழலில்
இளைப்பாறுகிறார்கள்
கடலில் சூரியன்
கரையும் நேரம் வரை,

கிளிகளும், ஆந்தையும்,
காகமும், மரத்தின்
கிளைகளில்
அமர்ந்தவாறு மாம்பழங்களைப்
பதம் பார்க்கின்றன
கூர்மையான அலகுகளால்,

மாம்பழங்களைப் பதம்
பார்த்த பறவைகள்
மாம்பழக் கொட்டைகளை

விசிறி விடுகின்றன குளக்கரையின் ஓரமாக
செடியாக முளைப்பதற்கு,

குளக்கரை சுற்றியும்
மரங்கள் மரக்கிளைகளில்
பறவைகளும்
குழந்தைகளும்
ஊஞ்சலாடுகின்றன
சூரியனின் ஒளியில்,

நிழல் தரும்
மரங்களில் தஞ்சம்
அடைகிறார்கள்
மனிதனும் பறவைகளும்…..!!!!!!

அழுக்குதுணியும்  வண்ணானும்..!!! 
……………………………………………………..
விடியற்காலையில்  வீடு வீடாக
சென்று வாசலில் நிற்கிறான்,
அழுக்கடைந்த துணிகளை
வாங்கி மூட்டையாக கட்டி தோளில்
சுமந்து செல்பவன் வண்ணான்,

தோளில் தூக்கிய அழுக்கு
மூட்டை துணிகளை  பாரம் தாங்காமல்
கழுதையின் முதுகில் ஏற்றிவிடுவான்  வண்ணான்,

மூட்டையை சுமந்த
கழுதைகள் மலைப்பாம்புகளை
போல நகர முடியாமல்
சிரமத்துடன் நகருகின்றன
ஆற்றங்கரையை நோக்கி,

சாலையில் வீசப்பட்ட
பேப்பர்களையும்
இலைகளையும் பொருக்கி
பசியாறிக்கொண்டே
ஆடி ஆடி நகருகிறது
மூட்டையை சுமந்த கழுதைகள்,

அடுப்பை மூட்டி பானையில்
அழுக்கு துணிகளை போட்டு
வெள்ளாவி வைத்து அழுக்கை
நீக்குபவன் வண்ணான்,

ஓவ்வொரு துணிகளுக்கும்
சோப்பை போட்டு ஆற்று நீரில்
அலசி வெண்மை
படுத்துபவன் வண்ணான்,

ஆற்றங்கரையில் புல்களை
மேய்ந்து கொண்டுக்கின்றன
மூட்டையை சுமந்த கழுதைகள்,

அழுக்கு துணியின்
கரைகள் கரைந்து ஓடுகிறது
ஆற்று நீரில்
வண்ணானின் முதுகுவலியால்,

அழுக்கை நீக்கிய
துணிகளை சூரியனின்
வெயிலில் காய வைத்து
மடித்து வேட்டியில் மூட்டையாக
கட்டி கழுதையின் முதுகில் ஏற்றி
ஓவ்வொரு வீடாக இறக்கி
வைப்பவன் வண்ணான்,

அழுக்கு துணிகளை
சலவை செய்த  வண்ணான்
வீடு வீடாக நிற்கிறான்
பாத்திரத்தை கையில்
ஏந்தியவாறு
இரவு நேரத்தில்
ஒருவேளை உணவுக்காக……!!!!!! 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.